அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday 8 August 2010

சுற்றுவட்டாரப் பிறைத் தகவல்



ஒரு பகுதியில் கண்ட பிறை இன்னொரு பகுதியைக் கட்டுப்படுத்தாது என்பதை முந்தைய பதிவில் குர்ஆன் ஹதீஸின் ஆதாரங்களோடு பார்த்தோம். அதே சமயம், பிறைக்கண்டதாக‌ வரக்கூடிய தகவல், அருகிலுள்ள பகுதியிலிருந்து வந்தால் அதை நாம் ஏற்றுக்கொள்ள‌லாமா என்பதையும் குர்ஆன் சுன்னாவின் ஒளியில் இப்போது பார்ப்போம்!

ரமலானின் கடைசி நாள் பற்றி மக்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு கிராமவாசிகள் வந்து நேற்று மாலை பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டனர். பெருநாள் தொழுகை தொழும் திடலுக்குச் செல்லுமாறும் கட்டளையிட்டனர்.

அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்; நூல்: அபூதாவூத்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலான் மாதம் முப்பதாம் நாள் சுப்ஹ் வேளையை அடைந்தார்கள். அப்போது இரு கிராமவாசிகள் வந்து வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்று உறுதி கூறி, நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சாட்சி கூறினார்கள். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பை விடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: ரிப்யீ பின் கிராஷ்; நூல்: தாரகுத்னீ

இந்த இரண்டு ஹதீஸ்களிலுமே, முந்திய நாள் பிறைப்பார்த்த செய்தியை மறுநாள் இரண்டு கிராமவாசிகள் வந்து நபி(ஸல்)அவர்களிடம் அறிவிக்கும்போது, நபி(ஸல்) அவர்களும் சஹாபாக்களும் நோன்பு வைத்திருந்தனர். அப்போது நபி(ஸல்)உடனே நோன்பை விட்டுவிட்டு, அன்றே பெருநாள் தொழுகையை நிறைவேற்றவும் மக்களுக்குக் கட்டளையிடுகிறார்கள்.

ஆனால் நாம் முந்தைய பதிவில் பார்த்த 'வாகனக் கூட்டத்தினர்' வந்து சொன்ன தகவல் கேட்டபோது, நபி(ஸல்)அவர்களும் அவர்களுடன் இருந்த சஹாபாக்களும் நோன்பு வைத்திருந்தும், அந்த தகவலை அவர்கள் ஏற்று நோன்பை விடாமல், பிறைப் பார்த்துவிட்டு வந்த வாகனக் கூட்டத்தினரை மட்டும் நோன்பைவிடச் சொல்கிறார்கள். நபி(ஸல்) அவர்களின் இந்த வித்தியாசமான இரண்டு நடைமுறைகளிலிருந்தும் நமக்கு கிடைக்கும் செய்திகளை நன்கு கவனித்துப் பார்த்தோமானால், பிறைத் தகவலை எவ்வாறு ஏற்றுக்கொள்வது என்ற சட்டங்கள் நமக்கு தெளிவாகிவிடும்.

அதாவது, மதீனாவைச் சுற்றிய புறநகர் பகுதிகளில் பல கிராமங்கள் இருந்தன‌. மேலே கூறப்பட்ட ஹதீஸ்களில் 'இரு கிராமவாசிகள்' வந்து பிறையைப் பார்த்து சாட்சி கூறியதாக அறிவிக்கப்படுகிற‌து. மேலும் சுப்ஹ் நேரத்தில் வந்து தகவல் கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதிலிருந்து இவர்கள் வாகனக் கூட்டத்தினர் போன்று தொலை தூரத்திலிருந்து வரவில்லை, அருகிலிருந்துதான் வந்தனர் என்பதை புரிய முடிகிறது. அப்படியானால், ஊரைச் சுற்றியுள்ள பகுதிகளின் பிறைத் தகவல் நபி(ஸல்)அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், அந்தந்த ஊரின் சுற்றுவட்டாரங்களில் காணப்படும் பிறைத் தகவலை நபி(ஸல்)அவர்களின் இந்த வழிகாட்டுதலின்படி நாமும் ஏற்றுக்கொள்ளலாம் என்ற சட்டம் இங்கு நமக்கு கிடைக்கிறது.

இப்போது ஊரின் சுற்றுவட்டாரங்கள் என்றால், அதன் வரையறை எவ்வளவு தூரம் என்ற கேள்வி நமக்கு பிறக்கும். இதற்கு அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ இவ்வளவு தூரம் என்ற ஒரு வரம்பை விதிக்கவில்லை. அதை நிர்ணயிக்கும் பொறுப்பை நம்மிடம் கொடுத்து நமக்கு உரிமை வழங்கியுள்ளார்கள்.

"நோன்புப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் நோன்புப் பெருநாள் ஆகும். ஹஜ்ஜுப் பெருநாள் என நீங்கள் முடிவு செய்யும் நாள் தான் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: திர்மிதீ

இந்த ஊரில் பார்த்த பிறை, நமக்கும் அது பெருநாள் பிறையாகுமா அதாவது, அங்கு தெரியும் பிறை நம்முடைய பகுதியிலும் தெரிய வாய்ப்புள்ளதா என்பதை சுயநலமோ, உலக லாபம் வேறு எதுவுமில்லாமல், அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற அச்ச உணர்வோடு முடிவு செய்துக்கொள்ளும் உரிமை மட்டுமே நமக்கு உள்ளது என்பதை இந்த ஹதீஸ் நமக்கு கூறுகிறது. மற்ற அனைத்தும் நபியவர்களால் முடிவு செய்யப்பட்டவையே!

'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே; உங்கள் பொறுப்புகளைப் பற்றி விசாரிக்கப்படுவீர்கள்' நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர்(ரலி); நூல்: புகாரி (2554)

ஆக, நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள இந்த தீர்மானத்தை நேர்மையான முறையில் எடுக்கும் பொறுப்பு, அந்தந்த ஜமாஅத்தினருக்குதான். அவர்கள்தான் இதற்கான பொறுப்பாளிகள் ஆவார்கள்.

‘இரு சாட்சிகள் (பிறைக் கண்டதாக) சாட்சி சொன்னால் நோன்பு வையுங்கள். நோன்பை விடுங்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான்(ரலி); நூல்: நஸயி ‍(2116)

இரண்டு பேர் வந்து தங்கள் பகுதியில் பிறை பார்த்ததாக சாட்சி கூறினால், தலைப் பிறையைப் பார்க்க சாத்தியமுள்ள நாளாகவும், நேரமாகவும் உள்ளதா என்ப‌தை அந்த ஜமாஅத்தார்கள் பரிசீலித்து ஏற்க வேண்டும். பிறை கண்ணுக்கு தென்பட வாய்ப்பில்லாத சமயத்தில் வரும் சாட்சிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் கவனிக்கத் தவறிவிடக்கூடாது.

எனவே அல்லாஹ்வின் கட்டளைப்படியும், நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதலின்படியும் பிறைப்பார்த்து , நோன்பையும் பெருநாளையும் முடிவுசெய்வோம், இன்ஷா அல்லாஹ்!

அல்லாஹ் மிகவும் அறிந்தவன்.

2 comments:

  1. ஜஸாக்கல்லாஹ் க்கைர்..அருமையான விளக்கம்.

    ReplyDelete
  2. எல்லாப் புகழும் வல்ல இறைவனுக்கே! முந்தைய பதிவில் உங்களுக்கு பதில் பார்த்தீர்களா, ஜெய்லானி நானா?

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை