அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, 16 November 2012

ஆண்டு தோறும் அனுஷ்டிக்கும் துக்கம்(?!)


முஹர்ரம் மாதத்தில் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளையும், முஸ்லிமான ஒவ்வொருவரும் அவற்றை விட்டும் முழுமையாக தவிர்ந்துக் கொள்ளவேண்டும் என்பதைப் பற்றியும் முந்திய பதிவுகளில் பார்த்தோம். அப்படியானால், நபி(ஸல்) அவர்களின் அருமைப் பேரரான ஹுஸைன்(ரலி) அவர்கள் கொல்லப்பட்ட நாளை எப்படி நினைவு கூர்வது? அந்த நாளை துக்க நாளாக எந்த முறையில்தான் அனுஷ்டிக்க வேண்டும்? இப்படியாக சில கேள்விகள் நம் சகோதரர்களிடத்திலே தோன்றுகிறது. இன்னும் சிலரோ, ஹுஸைன்(ரலி) அவர்களுக்காகதான் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளில் நோன்பு நோற்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது, இஸ்லாமிய வரலாற்றில் உயிர்நீத்த இறையடியார்களுக்காக‌ (நினைவு நாளாக) துக்கம் அனுஷ்டிக்கலாமா? என்பதுதான்.

இஸ்லாமிய மார்க்கம் என்பது வெறும் சட்டங்களை மட்டும் கூறி மனிதனை ஒரு கட்டாய நிலையில் வாழவைக்கும் மார்க்கமல்ல! உளவியல் ரீதியாக மக்களின் மனதைப் பக்குவப்படுத்தி, வளைந்து கொடுக்காமல் அதில் உறுதியாக இருந்து வெற்றிக் கண்டவர்களைப் பண்பட்டவர்களாக வாழவைக்கும் மார்க்கமாகும். அதனால்தான் இஸ்லாத்தின் ஒவ்வொரு வணக்கங்களுக்கும் ஒரு உச்சவரம்பை நிர்ணயித்துள்ளது இஸ்லாம்! அதுபோல் தன் குடும்பத்திலுள்ள‌ ஒரு உறவினர் இறந்துவிட்டால் அதற்காக குடும்பத்தினர் துக்கம் அனுஷ்டிக்கும் நாட்களுக்கும்கூட‌ ஓர் உச்சவரம்பை விதித்துள்ளது. ஏனெனில் அந்தச் சோகம் ஒருவருக்கு நீடித்துக் கொண்டிருக்குமானால், அது அவரின் மனதில் ஒருவித அழுத்தத்தை ஏற்படுத்தி, அதனால் மனரீதியாக பாதிக்கப்பட்டு, இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியாத ஒரு சூழலுக்கு ஆளாக நேரிடும். அதனால் உழைக்கக் கூட மனமின்றி பொருளாதார ரீதியாகவும்கூட கஷ்டப்படும் நிலைக்கு அவர் தள்ளப்படுவார்.

இதையெல்லாம் களைந்து, மனிதன் சகஜ நிலைக்கு வரவேண்டும் என்பதற்காக‌ தான் நபி(ஸல்) அவர்கள் இதற்கும் ஒரு உச்சவரம்பை நிர்ணயித்துள்ளார்கள்.

இறந்து போனவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கத்தை வெளிப்படுத்துவதை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டுள்ளோம். ஆனால் கணவன் இறந்தப் பின், அவனது மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கத்தை அனுஷ்டிக்க‌ வேண்டும். (அதாவது) இந்த நாட்களில் நாங்கள் சுர்மா இடவோ, நறுமணப் பொருட்களைப் பூசவோ, சாயமிடப்பட்ட ஆடைகளை அணியவோ கூடாது. ஆனால் நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டு தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணியலாம். எங்களில் ஒருத்தி மாதவிடாயிலிருந்து நீங்குவதற்காகக் குளிக்கும்போது மணப் பொருட்களைப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்வதை விட்டும் நாங்கள் தடுக்கப்பட்டிருந்தோம்.

அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி); நூல்: புகாரி(313)


முக்கியமான‌ சில காரணங்களுக்காக ஒரு மனைவி மட்டுமே தன் கணவனின் இறப்பிற்கு நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க‌ வேண்டும் என்றும், மற்ற அனைவருமே தன்னைப் பெற்ற தாய், தகப்ப‌னாக இருந்தாலும், தான் பெற்று வளர்த்த பிள்ளைகளாக இருந்தாலும் 3 நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக்கூடாது என்றும் இந்த ஹதீஸ் கூறுகிறது. இதனடிப்படையில் ஒவ்வொருவரும் அதிகபட்சமாக 3 நாட்கள்தான் துக்கம் அனுஷ்டிக்கலாம்.

ஹுஸைன்(ரலி) கொல்லப்பட்டதை அவர்களது குடும்பத்தார் பொறுமையுடன் ஏற்றுக்கொண்டு, ('இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்' என்று சொல்லி) மூன்று நாட்களுக்கு பிறகு தங்களுடைய வாழ்வின் சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டனர். ஹுஸைன்(ரலி) அவர்களின் குடும்பத்தார்களே ஒவ்வொரு ஆண்டும் முஹர்ரம் பத்தாம் நாளை துக்க நாளாக‌ அனுஷ்டித்ததில்லை. மேலும் மரணித்த ஒருவருக்காக வருடா வருடம் துக்கம் அனுஷ்டிப்ப‌தற்கான எந்த ஒரு வழிகாட்டுதலையும் நபி(ஸல்)அவர்கள் நமக்கு கற்றுத் தரவுமில்லை.

1. நபி(ஸல்)அவர்களிடம் திங்கட்கிழமை நோன்பு நோற்பதுபற்றி வினவப்பட்டபோது, "அது நான் பிறந்த நாளாகும். அந்த நாளில்தான் நான் இறைத்தூதராகவும் (தேர்ந்தெடுத்து)அனுப்பப்பட்டேன்" என்று பதிலளித்தார்கள். (ஹதீஸின் சுருக்கம்)
                 அறிவிப்பவர்: அபூகதாதா(ரலி); நூல்:முஸ்லிம் (1387)

2. அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் திங்கட்கிழமை மரணித்தார்கள்.                   
ஆதாரம்: புகாரி (1387)

மேற்கூறப்பட்ட இந்த இரண்டு ஹதீஸ்களையும் கவனிக்கவேண்டும். உலக வரலாற்றிலேயே மிகுந்த‌ அருளுக்கும் ஆசிக்குமுரிய நாள் அல்லாஹ்வின் வேதம் திருக்குர்ஆன் இறங்கிய நாளாகும். அதாவது நபி(ஸல்) அவர்கள் நபியாக தேர்ந்தெடுக்கப்பட்டு, திருக்குர்ஆனின் முதல் வசனம் அருளப்பட்ட திங்கட்கிழமை! (இரண்டாவது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது போல்) அதே திங்கட்கிழமை நபி(ஸல்) அவர்கள் மரணித்தாலும், அந்த நாளின் திருக்குர்ஆன் இறங்கிய சிறப்பை நபி(ஸல்) அவர்களின் ம‌ரணம் மறைத்து விடவில்லை. உலகில் நபி(ஸல்) அவர்களை விட சிறந்த ஒரு மாமனிதர் யாரும் கிடையாது! அப்படிப்பட்ட அந்த மாநபியின் மரண நாள் துக்க நாளாக நினைவு கூரப்படுவதற்கு மிகவும் பொருத்தமான நாளாக இருக்கலாம். ஆனால் அந்த நாளைக்கூட‌ துக்க‌ நாளாக அனுஷ்டிக்க இஸ்லாத்தில் நமக்கு அனுமதியில்லாத போது, மற்ற நாளை சோக நாளாக ஒருபோதும் அனுஷ்டிக்கவே முடியாது.

அதனால் ஹுஸைன்(ரலி) கொல்லப்பட்டது ஒரு சோக சம்பவம்தான் என்றாலும் அந்த சோகம் நடந்த முஹர்ரம் பத்தாம் நாள் நமக்கு துக்கநாள் கிடையாது. ஏனெனில் அதற்கு இஸ்லாத்தில் அனுமதியும் கிடையாது. ஹுஸைன்(ரலி) அவர்கள் கொல்லப்பட்டதைப் போன்று எத்தனையோ சம்பவங்கள் இஸ்லாமிய வரலாற்றின் நெடுகிலும் நிறைந்து காணப்படுகின்றன. இப்படியே இஸ்லாத்திற்காக உயிர்த் தியாகம் செய்த‌ நல்லவர்கள் எல்லாம் மரணித்த‌ நாட்களைப் பார்த்தோமானால், நம் வாழ்நாளில் ஒவ்வொரு நாளும் துக்க நாளாகவேதான் இருக்கும். அதனால் இஸ்லாத்தில் நினைவு நாள் அனுஷ்டிப்பதோ பிறந்த நாள் கொண்டாடுவதோ கிடையாது.

அதேபோல் ஹுஸைன்(ரலி) அவர்களின் நினைவாகதான் முஹர்ரம் பத்தாம் நாள் நோன்பு நோற்கிறோம் என்பதும் தவறான ஒரு நம்பிக்கையாகும். இந்த நாளில், இஸ்லாமிய வரலாற்றில் இரு சம்பவங்கள் நடந்துள்ளன‌ என்பது நாம் கவனிக்கவேண்டிய விஷயம்!

ஹுஸைன்(ரலி) அவர்களின் இந்த நிகழ்ச்சி நடந்த இதே நாளில்தான் திருக்குர்ஆனிலே கூறப்பட்டுள்ள‌ முக்கியமான ஒரு வரலாற்று நிகழ்ச்சியும் நடக்கிறது. ஒரே நாளில் நடந்த அந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் 'இவை கொண்டாட‌த்தக்கதா?', 'எந்த வகையில் கொண்டாட‌வேண்டும்?' என்பதையெல்லாம் எப்படி நாம் தீர்மானிப்பது?

(அடுத்த பதிவில்... இன்ஷா அல்லாஹ்!)




10 comments:

  1. உங்க பதிவுகளை இண்ட்லி, மற்றும் தமிழ்மணத்தில் சேர்த்தால் இன்னும் அதிகம் பேரைச் சென்றடையும்!!

    ReplyDelete
  2. @ ஹுஸைனம்மா...

    //உங்க பதிவுகளை இண்ட்லி, மற்றும் தமிழ்மணத்தில் சேர்த்தால் இன்னும் அதிகம் பேரைச் சென்றடையும்!!//

    இன்ட்லியில் ஒன்றும் பிரச்சனையில்லை. தமிழ்மணத்தில் மட்டும் லாகின் பண்ணவே முடியவில்லை. நானும் பலமுறை முயற்சி செய்து பார்த்துவிட்டேன். அது எதனால் இருக்கும் என்று உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் மிஸஸ்.ஹுஸைன்!

    ReplyDelete
  3. உங்கள் முந்தையப்பதிவை நான் தமிழ்மணத்தில் சேற்க்க முயற்ச்சித்தேன்

    //Dear அஸ்மா,
    Your blog is Rejected by tamilmanam.net, Administrator due to follwing reason

    religious blogs are in discussion on whether to add or not

    நிர்வாகி//

    என்று பதில் வந்தது நீங்கள் நிர்வாகத்திடம் முறையிடுங்கள்


    சேர்க்கை சம்பந்தப்பட்ட கேள்விகளை admin@thamizmanam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்.

    ReplyDelete
  4. @ ராஜவம்சம்...

    அப்படியா சகோ? religious blogs னா வெயிட்டிங் லிஸ்ட்தானா? இதில் எல்லாமே கலந்துதானே இருக்கு? நீங்கள் சொன்னதுபோல் அவர்களிடம் கான்டக்ட் பண்ணி பார்க்கிறேன். accept பண்ணினால சரி. இல்லாவிட்டால் பரவாயில்லை என்று விட்டுட்டு அவர்களின் ஓட்டுப் பட்டையையும் நீக்கிட்டு இருந்துட வேண்டியதுதான். தகவல் தந்து உதவியதற்கு ரொம்ப நன்றி சகோ.

    ReplyDelete
  5. //. accept பண்ணினால சரி. இல்லாவிட்டால் பரவாயில்லை என்று விட்டுட்டு அவர்களின் ஓட்டுப் பட்டையையும் நீக்கிட்டு இருந்துட வேண்டியதுதான்.//

    நல்லது...

    அருமையான தகவல் அஸ்மா

    ReplyDelete
  6. //முக்கியமான‌ சில காரணங்களுக்காக ஒரு மனைவி மட்டுமே தன் கணவனின் இறப்பிற்கு நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் அனுஷ்டிக்க‌ வேண்டும் என்றும், //
    உண்மையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வழிமுறைகளை காரணமாக கொண்டது.....

    வாழ்த்துக்கள் அஸ்மா

    ReplyDelete
  7. @ ஆமினா...

    //நல்லது...//

    ஆமா வேற என்ன செய்ய.. அதற்காக நம்முடைய எழுத்தில் தேவையில்லாத கட்டுப்பாடுகளை விதித்துக் கொள்ள முடியுமா சொல்லுங்க..? திரட்டிகளில் நம் பதிவுகளை இணைப்பதே அனைவருக்கும் போய் சேரட்டுமே என்றுதானே தவிர வேறு எந்த நலனையும் நாம் எதிர்ப்பார்க்கவில்லையே!

    ReplyDelete
  8. @ ஆமினா...

    //உண்மையில் பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கும் வழிமுறைகளை காரணமாக கொண்டது.....//

    ரத்தினச் சுருக்கமாக, அழகா சொல்லிவிட்டீர்கள் ஆமினா :) மாஷா அல்லாஹ்! இதைப் பற்றி இன்ஷா அல்லாஹ் ஒரு பதிவு போடணும். நன்றி ஆமினா.

    ReplyDelete
  9. மாஷா அல்லாஹ்...ரொம்ப அருமையான ப்ளாக் மற்றும் பதிவுகள். வந்த ஒரே நாளில் பல பதிவுகளை ஒரே மூச்சில் படித்து விட்டேன்...ரொம்ப அருமையான விளக்கத்துடன் பொறுமையாக இஸ்லாத்தைப் பற்றி எடுத்து சொல்லியிருக்கீங்க...வாழ்த்துக்கள்.

    எனக்கு ரொம்பப் பிடித்த கைவினை பதிவுகளை ஆர்வத்தோடு எதிர்பாக்கிறேன்.

    Enrenrum16

    ReplyDelete
  10. @ enrenrum16...

    //வந்த ஒரே நாளில் பல பதிவுகளை ஒரே மூச்சில் படித்து விட்டேன்...//

    அல்ஹம்துலில்லாஹ்.. உங்களுக்கு முடியும்போதெல்லாம் தொடர்ந்து படிங்க பானு.

    //எனக்கு ரொம்பப் பிடித்த கைவினை பதிவுகளை ஆர்வத்தோடு எதிர்பாக்கிறேன்//

    எனக்கு தெரிந்த கைவேலைப்பாடுகளுக்கான சில பொருட்கள் இன்னும் கிடைக்காததால் அது கொஞ்சம் பெண்டிங் :) இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் வரும். வருகைக்கு நன்றி தோழி!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை