அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!
Showing posts with label முஹர்ரம். Show all posts
Showing posts with label முஹர்ரம். Show all posts

Wednesday, 26 July 2023

ஆஷூரா நோன்பை எந்த நாட்களில் நோற்கவேண்டும்?

ஆஷூரா நோன்பை முஹர்ரம் பிறை 9, 10 இந்த இரண்டு நாட்களில் மட்டும்தான் நோற்க வேண்டுமா? அல்லது பிறை 10 & 11 - வது நாட்களிலும் நோற்கலாமா?

ஆஷூரா நோன்பை எந்த நாட்களில் நோற்கவேண்டும் என்ற விஷயத்தில் நம்மில் சிலர் ஆதாரமற்ற, தவறான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அதாவது, முஹர்ரம் பிறை 9 & 10 அல்லது 10 & 11 - வது நாட்களிலும் ஆஷூரா நோன்பை நோற்கலாம் எனக் கூறுகின்றனர்.

"ஆஷூரா" என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் "பத்தாவது" என்று பொருள். "அல்லாஹ்வுடைய மாதம்" என்று சொல்லப்பட்ட புனிதமிக்க இந்த முஹர்ரம் மாதத்தில், பத்தாவது நாள் இந்நோன்பு நோற்கப்படுவதால் இதற்கு "ஆஷூரா நோன்பு" (அதாவது பத்தாவது நாள் நோன்பு) என்று பெயர் சொல்லப்படுகிறது.

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அல்குர்ஆன் 9:36)

புனிதமான அந்த நான்கு மாதங்கள் எவை என்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருபவை. அவை துல்கஃஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாத்துல் ஆஹிர், ஷஃஅபான் ஆகிய மாதங்களுக்கு இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.

நூல்: புஹாரி (3197, 4406, 4662, 5550, 7447)

ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கின் முதல் மாதமாகிய 'முஹர்ரம் மாதம்' புனிதமிக்க நான்கு மாதங்களில் ஒன்றாகும். இந்த ஆஷூரா மாதத்தில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் நமக்கு சுன்னத்தான நோன்புகளில் மிக சிறப்பிற்குரிய நோன்பாக ஆக்கியுள்ளார்கள்.

ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஃஅபாவுக்குப் புதிய திரைப் போடப்படும் நாளாகவும் இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, 'யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டுவிடட்டும்' என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புஹாரி (1592)

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அறியாமைக்கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், "நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டுவிடலாம்" எனக் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (1901)

மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும், சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

இவ்வளவு சிறப்புமிக்க இந்த ஆஷூரா நோன்பை நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் நோற்றால்தான் அதற்குரிய நன்மைகளை நாம் அடைய முடியும். அப்படியானால், முஹர்ரம் மாதத்தின் எந்த நாட்களில் இந்த நோன்பை நாம் நோற்க வேண்டும்?

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், 'அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?' என்று வினவினர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் (சேர்த்து) நோன்பு நோற்போம்' என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் (2088)

அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில் (சேர்த்து) நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (2089)

நபி(ஸல்) அவர்கள் மறுவருடம் 10 - வது நாளுடன் 9- வது நாளையும் சேர்த்து நோன்பு நோற்காமல் அதற்கு முன்பே மரணித்துவிட்டாலும் யூத, கிறிஸ்தவர்களுக்கு மாறுசெய்யும் வகையில், "அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் (சேர்த்து) நோன்பு நோற்போம்" என்று அவர்கள் கூறிவிட்டதால், நாம் முஹர்ரம் பிறை 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களும் ஆஷூரா நோன்பு நோற்கவேண்டும். அதுதான் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும்!

ஆனால், சிலர் ஆஷூரா 9 & 10 - வது நாளுடன் 11 - வது நாளும் சேர்த்து மூன்று நோன்புகளாகவோ அல்லது 9 & 10 இரண்டு நாட்களில் நோன்பு நோற்பதுபோல், 10 & 11 இரண்டு நாட்களில் நோன்பு நோற்கலாம் என்றும் கூறுகின்றனர். அதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்."

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)நூல்: அஹ்மத் (2047, 2154), குப்ரா பைஹகீ (8405, 8406), முஸ்னத் பஸ்ஸார் (5238), இப்னு ஹுஸைமா (2095)

இது தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு அபீ லைலா (محمد بن عبد الرحمن الأنصاري ) என்பவர் இடம் பெறுகிறார். இவர்  மனன சக்தியில் மிக மோசமானவர் ஆவார். இவரை பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். மேலும் இதில் வரும் தாவூத் பின் அலி (داود بن علي) என்பவரும் பலவீனமானவர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

முஹர்ரம் 9 & 10 - வது நாட்களில் நோன்பு நோற்க வேண்டும் என்று வரக்கூடிய செய்திகள் மட்டும்தான் ஆதாரப்பூர்வமானவை ஆகும். எனவே 9,10 ஆகிய இரண்டு நாட்கள் தவிர, 11 - வது நாளையும் சேர்த்தோ அல்லது 9 - க்கு பதிலாக 10 & 11 - வது நாட்களில் நோன்பு நோற்பதோ கூடாது. அவை நபிவழிக்கு மாற்றமானவையாகும்.

Friday, 16 November 2012

முஹர்ரம் (பத்தாவது நாள்) ஆஷூரா நோன்பு


முந்திய பதிவைப் பார்க்கவும்.

ஹுஸைன்(ரலி) அவர்களின் நினைவாகதான் முஹர்ரம் பத்தாம் நாள் நோன்பு நோற்கிறோம் என்ற ஒரு தவறான நம்பிக்கை சில இஸ்லாமியர்களிடத்தில் உள்ளது. ஆனால் இந்த நாளில், இஸ்லாமிய வரலாற்றில் இரண்டு விதமான சம்பவங்கள் நடந்துள்ளன. ஒரே நாளில் நடந்த அந்த இரண்டு நிகழ்ச்சிகளையும் எந்த அடிப்படையில் நாம் தீர்மானிக்க‌வேண்டும்?

ஆண்டு தோறும் அனுஷ்டிக்கும் துக்கம்(?!)


முஹர்ரம் மாதத்தில் இஸ்லாத்தின் பெயரால் நடக்கும் மூட நம்பிக்கைகளையும், முஸ்லிமான ஒவ்வொருவரும் அவற்றை விட்டும் முழுமையாக தவிர்ந்துக் கொள்ளவேண்டும் என்பதைப் பற்றியும் முந்திய பதிவுகளில் பார்த்தோம். அப்படியானால், நபி(ஸல்) அவர்களின் அருமைப் பேரரான ஹுஸைன்(ரலி) அவர்கள் கொல்லப்பட்ட நாளை எப்படி நினைவு கூர்வது? அந்த நாளை துக்க நாளாக எந்த முறையில்தான் அனுஷ்டிக்க வேண்டும்? இப்படியாக சில கேள்விகள் நம் சகோதரர்களிடத்திலே தோன்றுகிறது. இன்னும் சிலரோ, ஹுஸைன்(ரலி) அவர்களுக்காகதான் முஹர்ரம் மாதத்தின் பத்தாவது நாளில் நோன்பு நோற்கிறோம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது, இஸ்லாமிய வரலாற்றில் உயிர்நீத்த இறையடியார்களுக்காக‌ (நினைவு நாளாக) துக்கம் அனுஷ்டிக்கலாமா? என்பதுதான்.

முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும் (பகுதி 3)

முதல் பாகத்தைக் காண‌இரண்டாம் பாகத்தைக் காண‌

முந்திய இரண்டு பகுதிகளில் நாம் கண்ட மூடத்தனங்களும், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் எல்லாம் தெளிவான வழிகேடும் இணை வைப்புமாகும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆக, ஹுஸைன் (ரலி)அவர்களின் நினைவாக செய்வதாகக் கூறி இந்த முஹர்ரம் மாதத்தில் ஷியாக்கள் செய்யும் அட்டூழியங்களினால், அல்லாஹ்வின் கணக்கிலே அவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெகுதூரம் சென்றவர்களாக ஆகிவிடுகிறார்கள். (அல்லாஹ் நம்மனைவரையும் காப்பானாக!) இது ஒருபுறமிருக்க, 'சுன்னத் வல் ஜமாஅத்' அமைப்பினர் இதுவரை நாம் கூறிய‌ ஷியாக்களின் சடங்குகளை தவிர்ந்துக் கொண்டாலும், வேறுவிதமான பெயர்களில் வழிகேடான‌ காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவற்றில் தமிழக அளவில் பிரசித்திப் பெற்றது 'ஹஸனார் ஹுஸைனார் ஃபாத்திஹா' வாகும்.


முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும் (பகுதி 2)

முதல் பாகத்தை இங்கே பார்க்கவும்.

தொடர்ந்து ஐந்தாவது ஆறாவது நாட்களில் கர்பலா சம்பவங்கள் பற்றி கூறும் நிகழ்ச்சியும், சோக பாடல்கள் மூலம் அந்த துக்கங்களைப் புதுப்பித்துக் கொள்வதும் நடைபெறும். வளரும் பருவத்திலுள்ள சின்னஞ்சிறிய பாலகர்களிடம் கூட இவற்றை மனதில் பதிய வைத்து, அன்றைய தினம் மேடையேறி பாடி அழவைக்கும் கோலங்கள் நடைபெறும்.

பத்தாம் நாளுக்கு முன்னதாக ஏழு, எட்டு மற்றும் ஒன்பதாவ‌து நாட்களிலும் ஊர்வலம் புறப்படும். இந்த ஏழாம் நாள் பஞ்சாவில் ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) நினைவாக அலங்கரிக்கப்பட்ட இரண்டு குதிரைகளைக் கொண்டு வந்து, அவ்லியாக்களுக்கு மிகவும் பிடித்த நிறம் என்று நம்பப்படும் பச்சை நிறத் துணியால் போர்த்தப்பட்டு அதில் இரண்டு இளைஞர்கள் அமர்த்தப்படுவார்கள்.


முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும் (பகுதி 1)

புது வருடத்தை அடைந்திருக்கும் நாம், இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான இந்த முஹர்ரம் மாதத்தைப் பற்றியும் அந்த மாதத்தில் இஸ்லாமிய மக்களில் சிலர் செய்துவரும் மூடப் பழக்கங்களையும் பற்றியும் இப்போது பார்ப்போம்.

இஸ்லாத்தில் (போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட) நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும். இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்தான், இந்த மாதத்திற்கு மெருகூட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆனால், முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டால் மார்க்கத்தின் பெயரால் பல்வேறு அனாச்சாரங்கள் நம் மக்களிடையே அரங்கேறுவதைப் பார்க்கிறோம். அந்த பத்தாம் நாளுக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ அதை விடுத்து, இந்த மாதத்தில் இஸ்லாம் கூறாத பல்வேறு அனுஷ்டானங்கள் உலகின் பல பகுதிகளிலும் மக்களிடையே கடைப்பிடிக்கப்படுகின்றன.

                                                   

பயணிக்கும் பாதை