அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Tuesday, 17 April 2012

ஃபிரான்ஸ் மக்களின் உணர்வுகள் தேர்தலில் பிரதிபலிக்குமா?


மேற்கத்திய நாடுகளிலேயே சக்தி வாய்ந்த நாடாக கருதப்படுவது ஃபிரான்ஸ் நாடு. இங்கு 2012 ம் ஆண்டிற்கான‌ ஜனாதிபதி தேர்தலின் முதல் சுற்று ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் நெருங்கிவிட்ட இந்நிலையில், இந்த மாதம் 9 ந்தேதி ஆரம்பித்த அதிகாரப்பூர்வமான தேர்தல் பிரச்சாரம் 21 ந்தேதி இரவு 12 மணி வரை தொடரும் என்பதால் பிரச்சாரங்கள் அனல் பறந்துக் கொண்டிருக்கின்றன.

இங்கு தேர்தல் பிரச்சாரமென்றால் நம்ம நாட்டைப்போல தெருக்களிலும், மக்க‌ள் நெரிசல் அதிகமான இடங்களிலும் ட்ராஃபிக்கை நிறுத்தி வைத்து, ரோட்டை டைவர்ஷன் பண்ணிவிட்டு, ஆங்காங்கே ஆளுக்கொரு மேடைப் போட்டு, இல்லாத இடைஞ்சல்கள் எல்லாம் மக்களுக்கு கொடுக்க முடியாது. அதுபோல கூலிக்கு ஆட்களைக் கொண்டுவந்து "போடுங்கம்மா ஓட்டு..! கைச் சின்னத்தப் பார்த்து!" போன்ற கோஷமெல்லாம் கிடையாது. மைக் செட்டிங் வைத்து காதைக் கிழிக்கும் ஆரவாரங்கள் இருக்காது. பணத்தைப் பட்டுவாடா பண்ணி ஓட்டுக் கேட்பதெல்லாம் இங்கே பலிக்காது. போட்டிப் போட்டு நிற்கும் கட்அவுட்டுகள் வைக்கவும், கண்ட இடங்களில் எல்லாம் போஸ்டர்கள் ஒட்டவும், பேனர்கள் க‌ட்டவும் அனுமதி கிடையாது. அதனால் நடக்கும் பல அசம்பாவிதங்களும் இங்கே கிடையவே கிடையாது!!


வீதிகளில் பிரச்சாரச் சுவரொட்டிகள் ஒட்டுவதற்காக‌ மாநகராட்சியினால் நம்பர் போடப்பட்ட  அறிவிப்புப் பலகைகளில் மட்டுமே, ஒவ்வொரு வேட்பாளரும் அதிகபட்சம் 2 போஸ்டர்கள் வீதம் ஒட்டலாம். அத்துடன் தொலைக் காட்சிகளில் காரசாரமான, (அதே சமயம் மரியாதையுடன் கூடிய) தேர்தல் பிரச்சாரங்களை தினமும் பார்க்கலாம். எல்லோர் வீட்டின் போஸ்ட் பாக்ஸ்களுக்கும் தேர்தல் பிரச்சார நோட்டீஸ்கள் வந்து விழுந்துக் கொண்டிருக்கும். இவற்றை வைத்துதான் தேர்தல் நடக்கப்போவ‌தை அறிந்துக்கொள்ள முடியும். ஓரிரு நாட்களை மட்டும் அறிவித்து, பொது மக்களுக்கு இடைஞ்சல் இல்லாத இடத்தில் நேரடி பிரச்சார(யுத்த)ம் :) செய்வார்கள்.
குறிப்பிட்ட இடத்தில் தேர்தல் பிரச்சாரம்

அதுபோல் ஃபிரான்ஸின் தேர்தல் முறையும் நம் நாட்டு தேர்தலைவிட ரொம்பவே வித்தியாசமானது. (வாய்ப்பு கிடைத்தால் அதைப்பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.)

இங்கு 'ஜனாதிபதி' பொறுப்பிற்குதான் அதிக‌மான பவர் உண்டு! இங்குள்ள பிரதமர் (5 ஆண்டு பதவி காலத்துடன்) ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவரே! அதனால் அதிபர் விரும்பினால் பிரதமரை எப்போது வேண்டுமானாலும் தூக்கி ஓரங்கட்டி விடலாம்! ஆனாலும் பிரதமர் பதவி, மந்திரிசபைக்கு தலைமையான பதவியாகவும் நாட்டின் இரண்டாவது முக்கிய பதவியுமாகும். மேலும் இப்பதவியை வகிப்பவருக்கு அடுத்த முறை அதிபர் போட்டியில் பங்குபெறும் வாய்ப்புகளும், வெற்றிபெறும் சாத்தியங்களும் அதிகம் என்பது நிதர்சனமான‌ உண்மை!

இந்த வருட தேர்தலில் தற்போதைய அதிபர் UMP (Union for Popular Movement) கட்சியின் நிக்கோலா சர்கோஸிக்கும், எதிர்க்கட்சியான சோஸ‌லிஸ்ட் (PS) கட்சி வேட்பாளர் ஃப்ரான்சுவா ஹொலாந்துக்கும் கடுமையான போட்டி நிலவுகிறது. ஃபிரான்ஸின் இந்தத் தேர்தலானது ஐரோப்பாவில் மட்டுமல்லாமல் உலக அளவிலான அரசியல் அரங்கிலும்  குறிப்பிட்ட‌ சில‌ தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய ஒரு முக்கிய நிகழ்வு என்று கூறலாம்.

ஃப்ரான்சுவா ஹொலாந்த் & நிக்கோலா சர்கோஸி

சர்கோஸி, அராஜக‌ அமெரிக்காவின் ஆதரவாளர் என ஃப்ரான்ஸ் நாட்டுப் பத்திரிகைகள் ஒருபக்கம் கூறிக்கொண்டிருக்க,

- மருத்துவ/சுகாதாரத்துக்கான அரசின் ஒதுக்கீடுகள் மேலும் கூடுதலாக நீக்க‌ப்பட‌ வேண்டும் என்றும்,

- பிரான்ஸில் அளவுக்கதிகமான வெளிநாட்டுக்காரர்கள் இருப்பதால் தேர்தலில் மீண்டும் தான் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், ஃபிரான்ஸில் குடியேறுகின்ற வெளிநாட்டினரின் எண்ணிக்கையை தற்போதைய அளவுகளைவிட பாதியாகக் குறைக்க திட்டங்கள் வைத்துள்ளதாக அவர் கூறுவதும்,

- அவர் தனது பதவிக் காலத்தின்போது புதிய குடியேற்ற‌ விதிகளைக் கடுமையாக்கியிருந்ததும்,

- ஃபிரான்ஸுக்குள் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக‌ வசித்துவரும் குடியேறிகளுக்கு (அவரே ஹங்கேரியில் இருந்து ஃபிரான்ஸில் குடியேறியவரின் மகன்தான்) அரசாங்கம் வழங்குகின்ற உதவித் தொகைகள் குறைக்கப்பட வேண்டும் என்றும்

இதுவரை அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் மக்களிடம் சர்ச்சைகளையும், மாற்று முடிவுகள் கிடைக்கவேண்டும் என்ற ஆவலையும் ஏற்படுத்தியுள்ளன. அவரை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர் ஃப்ரான்சுவா ஹொலாந்தைவிட சர்கோஸிக்கு மக்களின் ஆதரவு குறைவாக இருப்பதாகவும் கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.

ஆக, இந்த வருட அதிபர் தேர்தல் முடிவுகள் சராசரி ஃப்ரெஞ்ச் மக்களின் உணர்வுகளை மிகத் துல்லியமாக பிரதிபலிக்கலாம். இறைவன் மிக அறிந்தவன்! அவன் நலவையே நாடட்டும்!

கொசுறு படம் :)

என்னதான் இருந்தாலும் எதிரெதிர் கட்சித் தலைவர்களை நம்ம நாட்டில இப்படி பார்த்ததுண்டா...?!! :)



6 comments:

  1. என்ன சகோ, பிரான்ஸ் நாட்டு அரசியலை ரொம்ப உன்னிப்பா கவனிக்கிறீங்க போலிருக்கு. போற போக்க பார்த்தா, நீங்களும் ஒரு நாள் அதில குதிச்சிட போறீங்க :))
    பதிவு நல்லாயிருக்கு.
    ஆனாலும் சர்க்கோஸிதான் தற்போதைய ஜனாதிபதி ன்னு சுட்டியிருக்கலாம்
    அதே போல மரீன் லெப்பன் பத்தியும் இரண்டொரு வார்த்தை சொல்லியிருந்தால் பதிவு ஒரு முழுமை அடைஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. @ kari kalan

      //பிரான்ஸ் நாட்டு அரசியலை ரொம்ப உன்னிப்பா கவனிக்கிறீங்க போலிருக்கு. போற போக்க பார்த்தா, நீங்களும் ஒரு நாள் அதில குதிச்சிட போறீங்க :))//

      ஆரம்பத்தில் ஃபிரான்ஸ் அதிபரை(Mr.Jacques Chirac)தெரியும், எங்க ஊர் மேயரைத் தெரியும். வேறெதுவும் இங்குள்ள அரசியலில் தெரியாது :) அப்படியே இருக்கக் கூடாதுன்னுதான் கொஞ்சம் கவனிக்க ஆரம்பிச்சாச்சு :-)

      //ஆனாலும் சர்க்கோஸிதான் தற்போதைய ஜனாதிபதி ன்னு சுட்டியிருக்கலாம்
      அதே போல மரீன் லெப்பன் பத்தியும் இரண்டொரு வார்த்தை சொல்லியிருந்தால் பதிவு ஒரு முழுமை அடைஞ்சிருக்கும்னு நினைக்கிறேன்//

      சொல்லியிருக்கேனே சகோ.. கவனிக்கலயா? 4 வது படத்திற்கும் மேலே உள்ள பேராவில் பாருங்க. "தற்போதைய அதிபர் UMP (Union for Popular Movement) கட்சியின் நிக்கோலா சர்கோஸிக்கும்...." என்று குறிப்பிட்டுள்ளேனே? மரீன் லப்பன் பற்றியெல்லாம் எழுதினால் அத்துடன் இன்னும் சில தகவல்களையும் சேர்த்து எழுதவேண்டிவரும். பதிவு நீளமாகும் என்பதால் கட் பண்ணியாச்சு. ஃபிரெஞ்சு தேர்தல் நிலைப் பற்றிய ஒரு ஷார்ட் இன்ட்ரோதான் இது :)

      Delete
  2. //என்னதான் இருந்தாலும் எதிரெதிர் கட்சித் தலைவர்களை நம்ம நாட்டில இப்படி பார்த்ததுண்டா...?!! :)//
    ஒரு சிறு திருத்தம் சகோ
    நம் மாநிலத்தில் என்று சொல்லுங்கள். ஏனென்றால் டில்லியில் எல்லாம் எதிர்கட்சி தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்தால் இப்படித்தான் ஒருவருக்கு ஒருவர் குசலம் விசாரித்து கொள்வார்கள். நம் சென்னையில் தான் எதிர்கட்சி தலைவர் எதிரி கட்சி தலைவர் ஆகி விடுவார்

    ReplyDelete
    Replies
    1. @ kari kalan

      //ஒரு சிறு திருத்தம் சகோ
      நம் மாநிலத்தில் என்று சொல்லுங்கள். ஏனென்றால் டில்லியில் எல்லாம் எதிர்கட்சி தலைவர்கள் நேருக்கு நேர் சந்தித்தால் இப்படித்தான் ஒருவருக்கு ஒருவர் குசலம் விசாரித்து கொள்வார்கள்//

      தேர்தல் சமயத்தில் கூடவா அப்படி இருப்பார்கள்?! கவனிச்சதில்லையே..!

      //நம் சென்னையில் தான் எதிர்கட்சி தலைவர் எதிரி கட்சி தலைவர் ஆகி விடுவார்//

      :))))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ.

      Delete
  3. More Entertainment said...

    hii.. Nice Post Thanks for sharing

    ReplyDelete
  4. சகோ அஸ்மா,

    இன்னைக்கி ப்ரான்ஸில் ஜனாதிபதி தேர்தலின் இரண்டாவது சுற்று, இதைப் பத்தி ஏதாவது எழுதியிருப்பீங்கன்னு வந்து ஏமாந்தேன். ரொம்ப பிஸியாய் இருக்கீங்க போல...
    :(

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை