அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, 13 December 2019

பாகப்பிரிவினைகளின் தாமதங்களும் பாதிக்கப்படுவோரின் பரிதாபங்களும்!

மரணித்துவிட்ட ஒருவரின் சொத்துக்களை பங்கீடு செய்வதுபற்றி இஸ்லாம் மார்க்கம் வழிகாட்டுவதன் அடிப்படையில், ஒருவர் மரணித்த பிறகுதான் அவருடைய சொத்துக்கள் பங்கிடப்பட வேண்டும் என்பதை இதற்கு முந்திய பதிவில் பார்த்தோம். அவ்வாறு சொத்துக்களை அதன் உரியவர்களுக்கு பிரிக்கும் சூழ்நிலை வரும்போது யாரும் அவற்றை உடனுக்குடன் பங்கிடுவதில்லை.

அதற்கு முதல் காரணம், நம் குடும்பத்தில் ஒருவரை இழந்துவிட்டோமே என்ற சோகமும் கவலையும் மரணித்தவரின் சொத்துக்களைப் பற்றி பேசவே ஒருவித தயக்கத்தை ஏற்படுத்தும் என்பது எல்லோருக்கும் பொதுவான ஒரு உண்மைதான். அதுபோன்று, மரணித்தவரின் மனைவி அந்த பிரிவின் துயரத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும்போது அவரின் சொத்துக்களை உடனே பிரிப்பதன் மூலம் மனைவியின் துக்கம் இன்னும் அதிகரிக்கலாம் என்று அஞ்சுவதாலும் பாகப்பிரிவினை செய்யும் முயற்சிகளில் ஈடுபடுவதற்குகூட தயக்கம் காட்டுகின்றோம். மனைவி உயிருடன் இருக்கும்போது கணவனின் சொத்தைப் பிரிக்கக் கூடாது என்ற இல்லாத ஒரு சட்டத்தையும் சில இடங்களில் கடைபிடிக்கிறார்கள். இது மார்க்கத்திற்கு முரணானது என்பதை உணர வேண்டும்! ஆனால் இவை மட்டும்தான் சொத்துப் பங்கீட்டில் தாமதங்களை உண்டாக்குகிறதா என்றால், இல்லை.


உலக நடைமுறையில் ஒரு சொத்தின் மீதுள்ள அனைவரின் பார்வையையும் பற்றி பொதுவாக சொல்லவேண்டுமானால், திருமணத்திற்கு முன் - திருமணத்திற்குப் பின் என வகைப்படுத்தலாம். தாய், தந்தை, சகோதர, சகோதரிகளோடு வாழும்போது ஒரு நிலையிலும், மனைவி, மக்கள் என்றான பிறகு நம் இரத்த உறவுகளுடன் சொத்துக்களைப் பிரித்துக்கொள்வதில் வேறு நிலையிலும் என்று நம் பார்வை மாறுபடத்தான் செய்கிறது. ஒருசிலர் விதிவிலக்காக இருந்தாலும், என் சகோதரன், என் சகோதரி என்பதைவிட்டு சற்று நகர்ந்து... என் மனைவி, என் மக்கள் என்ற சிறிய வட்டத்தைப் போட்டுக் கொள்ளும் சுயநலங்களைதான் ஒவ்வொருவரின் வாழ்க்கைப் பாதையும் உருவாக்கியிருக்கிறது என்பதை பலரும் சிந்திப்பதில்லை. இது சரியா, தவறா என்று ஆராய்ந்தால் அது வேறொரு தலைப்புக்குள் சென்றுவிடும் என்பதால், நம் தலைப்புக்குள் மீண்டும் வருவோம்.

பாகப்பிரிவினைகளில் ஏற்படும் தாமதங்களுக்கான மேலே சொன்ன காரணங்கள் அல்லாமல் மற்ற காரணங்கள் ஒவ்வொரு குடும்ப சூழ்நிலைக்கேற்ப பலவிதங்களில் அமையலாம். நமக்கு சேரவேண்டிய சொத்துக்களை நம் பெயருக்கு மாற்றும்போது உள்ள வரி சிக்கல்கள் கூட பல நேரங்களில் சொத்துப் பங்கீட்டைத் தள்ளிப்போடும். ஆனால் வரி கட்டுவதை எண்ணி அஞ்சிக்கொண்டு சொத்தைப் பிரிக்காமல் தேவையுடைய வாரிசுகளும் சேர்ந்து சிரமப்படுவதைவிட சொத்தை முறையாக பிரித்து வரி கட்டுவது எவ்வளவோ சிறந்ததாக அமையும். ஆனால் இதையெல்லாம் தாண்டி, நமக்கு வழிவழியாக வரக்கூடிய நம் சொத்துக்கள் மீது நமக்கு இருக்கும் உணர்வுப் பூர்வமான ஆசையுடன், அந்த பரம்பரை சொத்துக்கு நம்முடன் சேர்ந்து பலரும் சொந்தம் கொண்டாடும்போது தோன்றும் எதிர்மறை சிந்தனைகளாலும், அவை சார்ந்த பிரச்சனைகளாலும் சொத்துக்களைப் பிரிப்பதில் காலதாமதங்களை உண்டாக்கிவிடுகின்றன.

"செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியாகும். நிலையான நல்லறங்களே உமது இறைவனிடம் கூலியில் சிறந்ததும், எதிர்பார்க்கப்படுவதில் சிறந்ததுமாகும்". (அல்குர்ஆன் 18:46) 

அல்லாஹ் குறிப்பிடும் இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சிகளில் ஒன்றாகிய செல்வத்தில் மதிமயங்கியவர்கள் பல வருடங்களைக் கடந்து இரண்டு, மூன்று தலைமுறைகளாகக் கூட சொத்துக்களைப் பிரிக்காமலே தள்ளிப்போட்டு வைத்திருப்பதையும் பல இடங்களில் கண்கூடாக காணலாம். ஒருகட்டத்தில் அந்த சொத்துக்கள் பல வாரிசுகளுக்குரியதாக மாறிவிடும்போது பங்கீட்டில் பிரச்சனைகள் ஏற்பட்டு அக்குடும்பம் சார்ந்த கட்டமைப்பும் உறவுகளும் சிதறிப்போகின்றன. பிரிக்கவேண்டிய நேரத்தில் பிரிக்கப்படாத அந்த சொத்துக்களின் சந்தை மதிப்பு பலமடங்காக உயரும்போதும் அதனைப் பிரித்துக்கொள்வதில் பிரச்சனைகள் ஏற்பட்டுவிடுகிறது.

அதேபோல, தந்தைக்கு சொந்தமான இடத்தில் தந்தையும் தன் பிள்ளைகளில் ஒரு மகனும் மட்டும் சேர்ந்து வீட்டைக் கட்டும்போது அதைப்பற்றி தெளிவான முறையில் குடும்ப உறுப்பினர்களுக்கு மத்தியில் பேசிக்கொள்ளாததால், தந்தையின் இறப்புக்குப் பிறகு அந்த வீட்டை மற்ற பிள்ளைகளுக்குப் பிரித்துக்கொடுக்கும் நிலை வரும்போதும் பிரச்சனைகள் ஏற்பட்டு அதனாலும் காலதாமதங்கள் ஆகின்றன. இப்படி வகை வகையான பிரச்சனைகள், ஒரு சொத்தை ஒருவருக்கு அடுத்து யாரெல்லாம் அனுபவிக்க உரிமையுள்ளவர்கள் என்பதில் செய்யும் குழப்பம், தயக்கம் மற்றும் சரியான முடிவுகளைப் பத்திரப் பதிவு செய்யாதது போன்றவற்றால் பல லட்சம் சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. அதில் இஸ்லாமியர்களின் சில வழக்குகளும் அடங்கும் என்பது வருத்தமான விஷயம்!

அந்த வழக்குக்காகவே தங்கள் பொருளாதாரத்தை அதிகளவில் செலவு செய்து நாட்களைக் கடத்துபவர்களும் உண்டு. அப்படிப்பட்டவர்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்கலாம். ஆனால் பிரிக்கப்படவேண்டிய சொத்தில் வாரிசாக இருக்கக்கூடிய இன்னொரு உறவினர் தன்னைவிட ஏழ்மையில் இருந்தால், இவர் ஏற்படுத்தும் கால தாமதத்தால் நிச்சயம் அவர் பாதிக்கப்படுவார். இப்படி வழக்குகள் மூலமாக இழுத்தடிப்பதோ வேறு காரணங்களை முன்வைத்து காலம் தாழ்த்துவதோ, நமக்கு பிரிந்துவரும் சொத்தின் மூலம் இன்னின்ன வாழ்க்கைத் தேவைகளை நிறைவேற்றலாம் என்ற எதிர்ப்பார்ப்போடு உள்ள ஏழ்மையான அந்த வாரிசுதாரருக்கு இழைக்கப்படும் அநீதியாகும்!

இன்னும் சொல்லப் போனால் தனக்கு சேரவேண்டிய சொத்து கிடைக்கப்பெறும் முன்பே அந்த வாரிசுதாரர் மரணித்துவிடும் நிலையும்கூட ஏற்படலாம். எனவே ஒருவர் மரணித்துவிட்டால் எவ்வளவு சீக்கிரம் அவருடைய சொத்தைப் பிரித்து அவரின் வாரிசுகளுக்கு கொடுக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுத்தாக வேண்டும்! அவ்வாறு பிரித்துக் கொடுக்காமல் ஏதோ ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டு வாரிசுகளில் சிலர் மட்டுமே அவற்றை அனுபவிப்பது இறைக் கட்டளைக்கு மாற்றமானதும் தனக்கு உரிமையில்லாத ஒன்றை அனுபவிக்கும் மாபெரும் குற்றமும் ஆகும் என்பதை உணரவேண்டும்! அதன் காரணமாக இம்மையில் தப்பித்தாலும் மறுமையில் கடும் தண்டனையையும் அடைய நேரிடும்!

இதைப்பற்றி அல்லாஹ் தன் திருமறையில் கடுமையாக எச்சரிக்கிறான்:

"இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்து அவனது வரம்புகளை மீறுபவனை (அல்லாஹ்) நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு". (அல்குர்ஆன் 4:13,14)  

இத்தகைய பாவத்தில் நாமும் பங்குதாரர்களாகிவிடாமல் நமக்குரிய சொத்துக்கு மட்டும் பங்குதாரர்களாக வேண்டுமென்றால், தங்களோடு வாரிசில் கூட்டாகும் பிற வாரிசுகள் தங்களுக்கு உரிமையானதைதான் எதிர்ப்பார்க்கிறார்கள் என்ற நியாய உணர்வோடு அவரவர்களுக்கு கிடைக்கவேண்டிய சொத்துக்களை கிடைக்கச்செய்வதுதான் இஸ்லாத்தின் கட்டளைக்கு அடிபணிவதும் இறைவனின் உவப்பைப் பெற்றுத் தருவதுமாகும்!

எனவே தவிர்க்கமுடியாத சில குடும்ப சூழ்நிலையைப் பொறுத்து சொத்துப் பிரிவினையிலும் அதைப் பிரிக்கும் காலகட்டத்திலும் ஏதாவது சிறுசிறு சிக்கல்கள் வருமானால், அதற்கு தீர்வுகாண சில நாட்களோ சில மாதங்களோ எடுத்துக் கொண்டாலும், அதற்கான மாற்றங்களை சரியாகப் புரிந்துகொண்டு அறிவார்ந்த முறையில் அவற்றை எதிர்கொண்டு, அல்லாஹ்வின் இந்தக் கட்டளையை துரிதமாக செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டாமல் இறையச்சத்தை முன்னிறுத்திக் கொள்வது அவசியம். அந்த சொத்து சொற்ப அளவில் இருந்தாலும் சரியே! அவை குறைவான சொத்துக்கள் என்பதாலோ வேறு காரணங்களினாலோ வாரிசுதாரர்கள் ஒருவருக்கொருவர் மனமுவந்து விட்டுக்கொடுத்தால் மட்டுமே சொத்துப் பிரிவினையில் குற்றவாளியாகிவிடாமல் தப்பிக்க இயலும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

"குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை". (அல்குர்ஆன் 4:7)

பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் இவர்களுக்கு பங்குண்டு என்று அல்லாஹ் குறிப்பிடும் அந்த ஆண், பெண் வாரிசுகள் யார்? அவர்களுக்குரிய பங்குகள் எவை? என்பது பற்றியெல்லாம் ஒவ்வொருவரும் அறிந்துக் கொள்ள வேண்டியதும் அதன்படிதான் பிரித்தளிக்க வேண்டியதும் அவசியமாதலால், அதைப்பற்றி இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த பதிவுகளில் பார்ப்போம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை