அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, 6 December 2019

சொத்துப் பங்கீட்டின் காலகட்டமும் அன்பளிப்பு செய்வதின் மார்க்க சட்டமும்

ஒருவரின் சொத்துக்களை பங்கீடு செய்யக்கூடிய காலகட்டத்தையும் அவற்றைப் பங்கிடாமல் தன் மரணத்திற்கு முன்பே அன்பளிப்பு செய்வதின் சட்டங்களையும் இஸ்லாம் தெளிவாக வரையறுத்துள்ளது. அதனடிப்படையில் எப்போது ஒருவரின் சொத்துக்கள் பங்கீடு செய்யும் நிலையை அடையும்?

இஸ்லாமிய மார்க்கத்தைப் பொறுத்தவரை, ஒருவர் வாழும் காலத்தில் வைத்திருக்கும் அவரின் உடமைகளில் அவருடைய வாரிசுகள் எவரும் உரிமைக் கோருவதற்கோ அல்லது தானே முன்வந்து பங்கிட்டுக் கொடுப்பதற்கோ மார்க்கம் அனுமதிக்கவில்லை. இஸ்லாம் கூறும் முறைப்படி அளவுகளைப் பிரித்துக் கொடுத்தாலும் சரியே, தான் உயிருடன் இருக்கும்போதே சொத்துக்களை பங்கிடக் கூடாது. அவர் மரணித்த பிறகுதான் அவருடைய சொத்துக்கள் பங்கிடப்பட வேண்டும் என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.


குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை. (அல்குர்ஆன் 4:7)

இந்த வசனத்தில் அல்லாஹுதஆலா குறிப்பிடும் "விட்டுச் சென்றவற்றில்" என்ற வார்த்தையை கவனித்தாலே, ஒருவர் மரணித்த பிறகுதான் அவருடைய சொத்தில் வாரிசுகளுக்கு உரிமை ஏற்படும் என்ற இறைக்கட்டளை நமக்கு விளங்கும். இதேபோன்று இன்னும் பல வசனங்களிலும் (☛ 2:180; 2:248; 4:11; 4:12; 4:33; 4:176; 2:180 ☚) இதே வார்த்தையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பயன்படுத்துவதை நாம் காணலாம்.

ஆனால் வாரிசுகள் அல்லாத பிறரால் சொத்துக்கள் அபகரிக்கப்படும் என்ற சூழ்நிலைக்கு அஞ்சியோ, வாரிசுகள் பொருளாதார கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்பதாலோ அல்லது அதைப்போன்ற ஏதோ ஒரு நியாயமான காரணத்தாலோ அல்லது எந்த காரணமுமின்றி விருப்பப்பட்டு அன்பளிப்பு செய்வதற்காகவோ தன் மரணத்திற்கு முன்பே தன் சொத்துக்களை ஒருவர் கொடுக்க நினைப்பாரேயானால், பிற வாரிசுதாரர்கள் பாதிக்கப்படாத வண்ணம் அந்த சொத்துக்களை அன்பளிப்பு செய்ய இயலும். இந்த அனுமதியும்கூட சமமான அளவில் எந்த பாரபட்சமுமின்றி அன்பளிப்பு செய்வதற்கு அவரால் இயன்றால் மட்டுமே!

நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

'என்னை என் தந்தையார் (பஷீர் இப்னு ஸஅத்(ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று, "நான் எனது இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்திருக்கின்றேன்" என்று சொன்னார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "உங்கள் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் இதைப் போன்றே அன்பளிப்புச் செய்துள்ளீரா?" என்று கேட்டார்கள். என் தந்தை, "இல்லை" என்று பதிலளித்தார்கள். நபி(ஸல்) அவர்கள், "அப்படியென்றால் அதை (உங்கள் அன்பளிப்பைத்) திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.'
நூல்: புஹாரி (2586)

அதே சம்பவத்தின் மற்றொரு அறிவிப்பு:

'என் தாயார் என் தந்தையிடம் அவரின் செல்வத்திலிருந்து எனக்கு சிறிது அன்பளிப்பு வழங்கும்படி கேட்டார்கள். பிறகு, அவருக்கு (இதுவரை கொடுக்காமலிருந்து விட்டோமே என்ற வருத்தம் மனதில்) தோன்றி எனக்கு அதை அன்பளிப்புச் செய்தார். என் தாயார், "நீங்கள் நபி(ஸல்) அவர்களை சாட்சியாக்காவரை நான் திருப்திகொள்ள மாட்டேன்" என்று கூறினார்கள். எனவே, என் தந்தை நான் சிறுவனாயிருந்ததால் என் கையைப் பிடித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் சென்று, "இவனுடைய தாயாரான (அம்ர்) பின்த்து ரவாஹா இவனுக்கு சிறிது அன்பளிப்புத் தரும்படி என்னிடம் கேட்டாள்" என்று கூறினார்.

நபி(ஸல்) அவர்கள், "இவனைத் தவிர வேறு குழந்தை ஏதும் உங்களுக்கு உண்டா?" என்று கேட்டார்கள். என் தந்தை, "ஆம் (உண்டு)" என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், "என்னை அக்கிரமத்துக்கு சாட்சியாக்காதீர்கள்" என்று கூறினார்கள் எனக் கருதுகிறேன்'
அறிவிப்பவர்: நுஃமான் இப்னு பஷீர்(ரலி)
நூல்: புஹாரி (2650) 

இன்னொரு அறிவிப்பில், "நான் அக்கிரமத்துக்கு சாட்சியாக இருக்கமாட்டேன்" என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது. "ஹிபத்" என்று சொல்லப்படும் அன்பளிப்பு செய்வதுகூட தன் சொத்திலிருந்து கொடுக்கப்படும்போது எப்படி நாம் செயல்படவேண்டும் என்பதையும், எல்லா பிள்ளைகளையும் சமமாக நடத்த வேண்டும் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.

▶ நீதமாக நடந்துக் கொள்ளுங்கள்!
▶ நீதம் தவறினால் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!
▶ அநீதியான இந்த பாவத்திற்கு என்னை சாட்சியாக்காதீர்கள்

என்ற நபி(ஸல்) அவர்களின் இந்த எச்சரிக்கை வார்த்தைகள், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் வழங்கும் அன்பளிப்புகளில் எவ்வளவு கவனமாக நடக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன!

ஆனால் நடைமுறையில் பார்த்தோமானால், பிள்ளைகளுக்கு மத்தியில் பெற்றோர்கள் அன்பளிப்பு செய்யும்போது பெரிய அளவில் பாரபட்சம் காட்டுகின்றனர். குறிப்பாக, பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்யும்போது ஊர் வழக்கம் என்ற பெயரில் நகைளாக வழங்குகின்ற அன்பளிப்பைப் போன்று ஆண் மக்களுக்கு வழங்குவதில்லை. பெண்மக்களுக்கு மத்தியிலேயே மூத்த மகளுக்கு ஒருவிதமாகவும், மற்ற மகள்களுக்கு வேறொரு விதமாகவும் அவர்களுக்கு அளிக்கும் வீடு, நகை, நிலம், சீர்வரிசைகள் (இவை மார்க்க அடிப்படையில் தவிர்க்க வேண்டியவை என்பது ஒருபக்கமிருந்தாலும்) அவற்றில் வேறுபாடுகள் காட்டப்படுகின்றது.

அதைப் பெற்றுக்கொள்ளும் பெண் பிள்ளைகளும், தனக்கு சொத்து கிடைத்தால் போதும் என்ற பேராசையாலும், சொத்து கொடுத்தால்தான் இன்னவனை மணமுடிக்க முடியும் என்பன போன்ற மற்ற சுயநல நோக்கங்களுக்காகவும் அந்த அநீதியை எதிர்க்காமல், கொடுப்பதை மறுக்காமல் வாங்கிக் கொள்வதைப் பார்க்கிறோம். இதுசம்பந்தமான மார்க்கத்தின் எச்சரிக்கைகள் தெரிந்த பின்பும்கூட, மறுமை தண்டனையை அஞ்சி அதற்கான பரிகாரங்களை செய்துக்கொள்ளவும் முன்வராமல் சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறார்கள். இந்த அநியாயங்களை பெற்றோர்கள் தாங்களாகவும் செய்கின்றார்கள், வரக்கூடிய மாப்பிள்ளையோ மாப்பிள்ளையின் குடும்பத்தினரோ வைக்கும் கோரிக்கைக்கு ஏற்றமாதிரியும் இவை நடக்கின்றன. இங்குதான் வரதட்சணையின் முதல் விபரீதத்தை, மோசமான விளைவுகளை நாம் பார்க்கிறோம்.

பிள்ளைகளுக்கு மத்தியில் தாங்களாக வேறுபாடு காட்டினாலும், மாப்பிள்ளை அல்லது குடும்பத்தாரின் நிர்பந்தத்தால் வேறுபாடு காட்டினாலும் சரிதான்.. அவர்கள் அத்தகைய அநியாயத்துக்கு அடிபணிந்ததாலும், தன் பிள்ளைக்கு வேறு மணமகனே கிடைக்காததைப் போன்ற கற்பனையில் அல்லது வேறு ஏதாவது காரணங்களை சொல்லிக் கொண்டு, தான் விரும்பிய இடத்தில் சம்பந்தம் செய்யவேண்டும் என்ற சுயநலத்தாலும் மார்க்க முரணாக நடந்த அந்தப் பெற்றோர்கள் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக குற்றவாளிகளே! பிள்ளைகளுக்கிடையில் தாங்களாகவே வேறுபாடு காட்டினால் பெற்றோர்கள் அப்பாவத்திற்கு முழுப் பொறுப்பாளி ஆகின்றார்கள். மாப்பிள்ளை மற்றும் மற்றவர்களின் நிர்பந்தத்தால் வேறுபாடு காட்டினால் அந்த பெற்றோருடன் சேர்ந்து அவர்களும் அல்லாஹ்விடம் பதில்சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும் என்பதை மறந்துவிடக் கூடாது!

சில குடும்பங்களில் பிணக்குகள் மூலம் ஏற்படும் பிளவுகளால் அந்த குரோதங்களை மனதில் வைத்துக்கொண்டு,  தங்களின் பிள்ளைகளில் சிலரின் மீது வெறுப்பைக் காட்டுவதற்காக குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் சொத்துக்களை கொடுத்துவிடுகின்றனர். இன்னும் சில இடங்களில் ஆண்கள் மட்டுமே பெற்றோரின் சொத்துக்களை எடுத்துக் கொண்டு பெண்களுக்கு எதுவும் கொடுப்பதில்லை. பெண்களைத் திருமணம் செய்துக் கொடுக்கும்போதே வரதட்சணையாக வீடு, தோட்டம், நிலம், சீர்வரிசை, நகை நட்டுகள் என அதிகமாகச் செலவு செய்துவிட்டோம் என்று அதற்கு காரணம் கூறிவிடுகின்றனர். மார்க்கம் தடுத்துள்ள வரதட்சணைப் பட்டியல்களின் தீய விளைவுகளில் ஒன்றுதான் இது!  சில பகுதிகளில் தாயின் சொத்துக்கள் பெண்களுக்கு உரியவை என்றும், தந்தையின் சொத்துக்கள் ஆண்களுக்கு உரியவை என்றும் தாங்களாக ஒன்றை ஏற்படுத்திக்கொண்டு மார்க்கம் சொல்லாத வழியில் சொத்துக்களைப் பிரித்துவிடுகின்றனர்.

இன்னும் சிலர் தங்கள் மனதிற்குப் பிடித்த பிள்ளைக்கு மட்டும் தங்களின் சொத்து முழுவதையும் எழுதிவைத்துவிட்டு மற்ற பிள்ளைகளுக்கு ஒன்றும் கொடுக்காமல் அப்படியே விட்டுவிடுகின்றனர். ஆனால் மற்ற பிள்ளைகளுக்கும் சமமான அளவில் கொடுக்காமல், சீதனம் என்ற பெயரில் ஒருவருக்கே தன் சொத்தை பத்திரப்பதிவு செய்யும் நம் முஸ்லிம் மக்களின் செயல், இறைக் கட்டளைகளுக்கு மாறுசெய்வதாகிவிடும் என்பதை நம்மில் அதிகமானோர் இன்னும் உணர்ந்துக்கொண்டதாக தெரியவில்லை. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எந்த வகையில் மாறுசெய்வதாக அமைந்தாலும் அதைவிட்டும் நம்மனைவரையும் அல்லாஹ் பாதுகாப்பானாக! ஊர் வழக்கத்துக்கு ஆட்பட்டு நம் பெற்றோர்களோ முன்னோர்களோ அறியாமல் இதுபோன்ற குற்றங்கள் செய்து மரணித்திருந்தால் அல்லாஹ் அவர்களை மன்னிப்பானாக!

நாம் யாராவது அநீதியான இந்தக் குற்றத்தை செய்திருந்து இப்போது தவறென்று தெரிந்த பிறகும் வாழ்ந்துக் கொண்டிருந்தால், தான் வாழும் காலத்திலேயே அதற்கான பரிகாரங்களை செய்துக்கொள்ள வேண்டும். அதாவது மேலே சொன்ன புஹாரி (2586) ஹதீஸில், "உங்கள் அன்பளிப்பைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டதைப் போன்று, பிறருக்கு அநீதி இழைக்கும் வகையில் ஒருவருக்கு கொடுத்ததை திரும்பப் பெற்றுக் கொள்ளவேண்டும். அல்லது ஒருவருக்கு கொடுத்ததைப் போன்றே மற்றவர்களுக்கும் சமஅளவில் கொடுத்துவிட முடியும் என்ற நிலை இருந்தால் உடனே அதைப்போன்றே கொடுத்துவிடவேண்டும்.

அன்பளிப்புச் செய்யும்போது சாட்சிகள் ஏற்படுத்த வேண்டுமா?

ஆம். வாரிசுதாரர்கள் பாதிக்கப்படாத வகையில் அப்படி அன்பளிப்புச் செய்ய இயன்றவர்கள், அதற்கு சாட்சிகளையும் வைத்துக்கொள்ள வேண்டும் என்பதும் நபி(ஸல்)  அவர்கள் காட்டிய வழியாகும்.

'நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்றுக் கொண்டு பின்வருமாறு அறிவித்தார்கள்:

என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா(ரலி) அவர்கள் என் தந்தையிடம், "நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக்கொள்ள மாட்டேன்" என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த் ரவாஹாவின் வாயிலாக எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன். அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும்படி எனக்குக் கட்டளையிட்டாள்'' என்று கூறினார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், "உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதேபோன்று கொடுத்துள்ளீர்களா?" என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, "இல்லை" என்று பதிலளித்தார். அப்போது நபி(ஸல்) அவர்கள், "அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! உங்கள் பிள்ளைகளிடையே நீதம் செலுத்துங்கள்" என்று கூறினார்கள். இதைக்கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, அன்பளிப்பை ரத்து செய்தார்.'

அறிவிப்பவர்: ஆமிர் பின் ஷர்ஹபீல் (ரஹ்)
நூல்: புஹாரி (2587)

நாம் விரும்பி செய்யும் அன்பளிப்புதானே என்று சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் அலட்சியமாக இருந்தால், அது பாரதூரமான விளைவுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்திவிடும். எவ்வளவு அன்பளிப்பு செய்தோம், எதை அன்பளிப்பு செய்தோம், எப்போது செய்தோம், யார் யாருக்கு செய்தோம் போன்ற எல்லா விபரங்களும், நாம் யாரையெல்லாம் சாட்சிகளாக்கினோமோ அவர்களுக்கு தெரிந்திருக்கவேண்டும்.

அதேசமயம், சொத்துக்களை பாகப்பிரிவினை செய்வதற்கு இஸ்லாம் தெளிவான வழிகாட்டுதல்களைக் காட்டியிருக்கும்போது இனிமேலாவது நாம் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் இருக்கவேண்டும். "என்னுடைய மௌத்துக்கு பிறகு என் சொத்துக்களை இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தின்படி பிரித்துக் கொள்ளுங்கள்" என்று நம் குடும்பத்தினருக்கு அறிவுரை கூறுவதுதான் மிகச் சிறப்பானதாக அமையும்! ஏனெனில், யாருக்கு எப்போது மரணம் வரும் என்று தெரியாத நிலையில்தான் நாம் ஒவ்வொருவரும் படைக்கப்பட்டிருக்கிறோம். ஒருவேளை நாம் யாருக்கு சொத்தை அன்பளிப்பாக எழுதி வைத்தோமோ அவர்கூட நமக்கு முன்பாகவே மௌத்தாக நேரிடும் என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும்! அதுமட்டுமில்லாமல் நம்முடைய வாரிசுகளில் என்னதான் நம்மீது அதீத பாசத்துடன் நடந்துக்கொள்பவர்கள் இருந்தாலும், நமக்கு உண்மையிலேயே பயன் தரக்கூடியவர் யார் என்பதை நம்மைவிட நம்மையும் நம் வாரிசுகளையும் படைத்த இறைவனே நன்கறிந்தவன்!

அல்லாஹ் கூறுகின்றான்:

“உங்கள் பெற்றோரிலும் பிள்ளைகளிலும் உங்களுக்கு அதிகமாகப் பயன்தருபவர் யார் என்பதை அறியமாட்டீர்கள். (இது) அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.” (அல்குர்ஆன் 4:11)

ஆக, ஒருவர் மரணித்த பிறகு அவருடைய சொத்துக்கள் பங்கிடப்பட வேண்டும் என்பதுதான் மிகச் சிறந்தது என்பதையும், முற்கூட்டி அன்பளிப்பு செய்ய விரும்பினால் பிற வாரிசுதாரர்கள் பாதிக்கப்படாத வண்ணம் எவ்வாறெல்லாம் அதை செயல்படுத்தவேண்டும் என்பதையும் நாம் இதுவரை புரிந்திருப்போம். அடுத்து, மரணித்தவரின் சொத்துக்களை அப்படி பங்கிடுவதற்கு நாம் செய்யவேண்டிய ஏற்பாடுகளை உடனே செய்யவேண்டுமா அல்லது தாமதிக்கலாமா? அதனால் பின்விளைவுகள் ஏதும் உண்டாகுமா? என்பதையெல்லாம் இன்ஷா அல்லாஹ் அடுத்த ஆக்கத்தில் பார்ப்போம்.

இஸ்லாமிய சொத்துரிமைக் கல்வியைக் கற்றுக் கொள்வதின் அவசியம் என்ன? என்பதைக் காண இதை க்ளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை