அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday 27 December 2019

சொத்துரிமையில் முன்னுரிமை

இறைவேதமான அல்குர்ஆனின் கட்டளைப்படி இஸ்லாமிய சொத்துரிமை சட்டத்தில் வாரிசுகளாக வரக்கூடியவர்களையும், அவர்களில் முதல்வகை பங்குதாரர்களுக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுகள் பற்றியும், அளவு நிர்ணயிக்கப்படாத பங்குதாரராக வரக்கூடிய ஒரு வாரிசு மரணித்தவரின் மகன் என்பதையும் முந்திய பதிவில் குறிப்பிட்டிருந்தோம்.

இறந்தவரின் மகனுக்கு பங்குகள் நிர்ணயிக்கப்படவில்லை என்பதால் அவர் இரண்டாம் வகை பங்குதாரர்களில் இடம்பெறுவார் என்றாலும், அவர்தான் முதல்வகை பங்குதாரர்களைவிட முன்னுரிமை பெற்றவராவார். அதாவது, நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுகளின்படி பங்குகளை உரியவர்களுக்கு பிரித்துக் கொடுத்தப்பின் மீதியுள்ள அனைத்தும் மகனுக்கு சேர வேண்டும் என்று மரணித்தவரின் மகனுக்கு ஒரு முக்கியத்துவத்தை இஸ்லாம் கொடுக்கிறது. எல்லோருக்கும் கொடுத்ததுபோக மீதியைக் கொடுப்பது எப்படி முன்னுரிமையாகும் என்று இங்கே நினைக்கத் தோன்றலாம். மகனுக்கு கொடுப்பது மீதி பங்குகள் என்றாலும் சதவிகித அடிப்படையில் பார்த்தோமானால், பெரும்பாலான நேரங்களில் மற்ற வாரிசுகளைவிட கூடுதல் சதவிகித பங்கைதான் மகன் அடைவார்.


அதுமட்டுமில்லாமல், பங்குகள் நிர்ணயிக்கப்பட்ட முதல்வகை வாரிசுகள் அறவே இல்லாமல் மற்ற உறவினர்கள் இருந்தால் ஒட்டுமொத்த சொத்துக்களும் மகனுக்கே சேரும். மூன்றாம் வகை பங்குதாரர்களுக்கு எதுவும் கொடுக்கப்படமட்டாது. ஏனெனில், மௌத்தானவரின் உறவினர்களில் மிக நெருக்கமான முதலிடம் மகனுக்குதான். அவருடன் பிறந்த பெண் பிள்ளைகள் இருப்பார்களானால், மீதியுள்ள சொத்துக்களில் அவர்களுக்கும் பங்குண்டு என்றாலும், மகனுக்குரிய பங்கின் அளவில் பாதியை மட்டுமே அவர்கள் அடைவார்கள்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பாகப் பிரிவினை தொடர்பாகக் குர்ஆனில்) நிர்ணயிக்கப்பட்டுள்ள பாகங்களை, (முதலில்) அவற்றுக்கு உரியவர்களிடம் சேர்த்துவிடுங்கள். பாகம் நிர்ணயிக்கப்பட்டவர்கள் (எடுத்தது போக) விட்டுவைப்பது, (இறந்தவரின்) மிக நெருக்கமான ஆண் உறவினருக்கு உரியதாகும்.

அறிவிப்பவர்: அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (3297, 3298, 3299)

இப்படி மீதமுள்ள சொத்துக்களை முழுமையாக பெறுபவர்களுக்கு "அஸபா" என்று கூறப்படும். இரண்டாம் வகை பங்குதாரர்களாக இருக்கக்கூடிய இந்த அஸபா (عصبة) உறவினர்கள்:

மரணித்தவரின்..

1) மகன்

2) மகனுடன் உள்ள மகள். அதாவது,
 மரணித்தவருக்கு மகன் இருந்தால்தான் மரணித்தவரின் மகளுக்கும் அஸபா அந்தஸ்து கிடைக்கும். மகன் இல்லாமல் மகள் மட்டுமிருந்தால் அப்போது அந்த மகள் அஸபாவாக வரமாட்டார்.
மகனுடன் உள்ள நிலையில் 4:11 வது வசனத்தின்படி ஆணுக்கு 2 பாகங்கள், பெண்ணுக்கு 1 பாகம் என்ற விகிதத்தில் பிரிக்கப்படும்.

3) தந்தை (மரணித்தவருக்கு மகன் இல்லாவிட்டால்)

4) சகோதரன் (மரணித்தவருக்கு மகனோ தந்தையோ இல்லாதபோது)

5) சகோதரனுடன் உள்ள சகோதரி. அதாவது,
 மரணித்தவருக்கு சகோதரன் இருந்தால்தான் மரணித்தவரின் சகோதரிக்கும் அஸபா அந்தஸ்து கிடைக்கும். சகோதரன் இல்லாமல் சகோதரி மட்டுமிருந்தால் அப்போது அந்த சகோதரி அஸபாவாக வரமாட்டார். (மரணித்தவருக்கு மகனோ தந்தையோ இல்லாத நிலையாகவும் இருக்க வேண்டும்.)
சகோதரனும் சகோதரியும் இருந்தால், குர்ஆனின் 4:11 வது வசனத்தின்படி ஆணுக்கு 2 பாகங்கள், பெண்ணுக்கு 1 பாகம் என்ற விகிதத்தில் பிரிக்கப்படும்.

6) தந்தையுடன் பிறந்த ஆண் ➜ பெரிய தந்தை/சிறிய தந்தை (மரணித்தவருக்கு மகன், தந்தை, சகோதரன் இல்லாவிட்டால்)

7) தந்தையுடன் பிறந்த பெண் (மாமி) தன் சகோதரனுடன் இருக்கும்போது மட்டும். அதாவது,
 மரணித்தவருக்கு தந்தையுடன் பிறந்த சகோதரன் (பெரிய தந்தை அல்லது சிறிய தந்தை) இருந்தால்தான் அவர்களின் சகோதரிக்கும் அஸபா அந்தஸ்து கிடைக்கும்.  தந்தையுடன் பிறந்த பெண்ணுக்கு சகோதரன் இல்லாமலிருந்தால் அப்போது அவர் அஸபாவாக வரமுடியாது. (மரணித்தவருக்கு மகன், தந்தை, சகோதரன் இல்லாத நிலையாகவும் இருக்க வேண்டும்.)
தந்தையுடன் பிறந்த ஆணும் பெண்ணும் இருந்தால், 4:11 வது வசனத்தின்படி ஆணுக்கு 2 பாகங்கள், பெண்ணுக்கு 1 பாகம் என்ற விகிதத்தில் பிரிக்கப்படும்.

இந்த அஸபா உறவினர்கள் இரண்டாம் வகையினராக இருந்தாலும், மகனைத் தவிர மற்ற அனைவரும் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவை அடையக்கூடிய முதல்வகை பங்குதாரர்களின் ஸ்தானத்திலும் (சூழ்நிலைகளைப் பொறுத்து) பங்கின் அளவை மாற்றிப் பெறுவார்கள். இதற்கு முந்திய பதிவில் அதன் விபரங்களை பார்த்துக் கொள்ளலாம்.

இவர்களில் மகன் மட்டுமே எல்லா சூழ்நிலைகளிலும் அஸபாவாக (மீதமுள்ள சொத்துக்களை முழுமையாக அடையக் கூடியவராக) இருப்பார். அதை சில உதாரணங்களின் மூலமாக தெரிந்துக் கொள்வோம்.
 
தந்தை - 1/6 (16.67%)
மனைவி - 1/8 (12.50%)
மகன் - மீதியில் 2 மடங்கு (47.22%)
மகள் - மீதியில் 1 மடங்கு (23.61%)


இங்கே கொடுக்கப்பட்டுள்ள உதாரணத்தில், மரணித்தவரின் தந்தையும் மனைவியும் அளவுகள் நிர்ணயிக்கப்பட்டவர்கள். அதாவது, முந்திய பதிவில் விளக்கியிருந்ததுபோல், மரணித்தவருக்கு மகனோ மகளோ இருந்தால் மரணித்தவரின் தந்தைக்கு 1/6 பங்கும், மனைவிக்கு 1/8 பங்கும் கொடுக்கப்படவேண்டும். (மேலுள்ள விளக்கப்படங்களில் முதல் படத்தை கவனிக்கவும்.)

மீதியுள்ள பாகத்தில் 2 மடங்கு பங்குகள் மகனுக்கும் 1 மடங்கு பங்கு மகளுக்கும் சேரவேண்டிய பங்குகளாகும். (மேலுள்ள விளக்கப்படங்களில் இரண்டாம் படத்தை கவனிக்கவும்.)

தாய் - 1/6 (16.67%)
தந்தை - 1/6 (16.67%)
கணவன் - 1/4 (25%)
மகன்  - மீதியில் 2 மடங்கு (27.78%)
மகள் - மீதியில் 1 மடங்கு (13.89%)


இந்த உதாரணத்தில், மரணித்தவரின் தாய், தந்தை, கணவன் மூவரும் அவர்களுக்குரிய பங்கின் அளவுகள் நிர்ணயிக்கப்பட்டவர்கள். அதன்படி, மரணித்தவருக்கு மகனோ மகளோ இருந்தால், மரணித்தவரின் தாய்க்கு 1/6 பங்கும், மரணித்தவரின் தந்தைக்கு 1/6 பங்கும், கணவனுக்கு 1/4 பங்கும் கொடுக்கப்படவேண்டும். (மேலுள்ள விளக்கப்படங்களில் முதல் படத்தை கவனிக்கவும்.)

மீதியுள்ள பாகத்தில் 2 மடங்கு பங்குகள் மகனுக்கும் 1 மடங்கு பங்கு மகளுக்கும் கொடுக்கப்படவேண்டும். (மேலுள்ள விளக்கப்படங்களில் இரண்டாம் படத்தை கவனிக்கவும்.)

தந்தை - 1/6 (16.67%)
கணவன் - 1/4 (25%) 
மகன் - மீதியில் 2 மடங்கு (38.89%)
மகள் - மீதியில் 1 மடங்கு (19.44%)


மரணித்தவரின் தந்தை, கணவன் இருவருக்கும் நிர்ணயிக்கப்பட்ட பங்கின் அளவுகள் இந்த உதாரணத்தில் காட்டப்பட்டுள்ளது. மரணித்தவருக்கு மகனும் மகளும் இருப்பதால் மரணித்தவரின் தந்தைக்கு 1/6 பங்கும், கணவனுக்கு 1/4 பங்கும் மேலுள்ள விளக்கப்படங்களின் முதல் படத்தில் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கவும்.

மீதியுள்ள பாகத்தில் 2:1 என்ற விகிதத்தில் மகனுக்கும் மகளுக்கும் பங்குகள் பிரிக்கப்பட்டுள்ளதை இந்த விளக்கப்படங்களின் இரண்டாம் படத்தில் கவனிக்கவும்.  

தாய் - 1/6 (16.67%)
தந்தை - 1/6 (16.67%)
கணவன் - 1/4 (25%)
மகள் - மீதியில் 1 மடங்கு (8.33%)
மகன் 2 - மீதியில் 2 மடங்கு (33.33%)


மேலேயுள்ள விளக்கப்படங்களை நன்கு கவனிக்கவும். மரணித்தவருக்கு பிள்ளைகள் இருப்பதால், மரணித்தவரின் தாய், தந்தை, கணவன் மூவருக்கும் அவர்களுக்குரிய பங்கின் அளவுகள் பிரிக்கப்பட்ட பிறகு, மீதியுள்ள பங்கில் 2 மகன்களுக்கும் 1 மகளுக்கும் பிரித்துக் கொடுப்பதற்காக 5 பங்குகளாக பிரிக்கப்பட்டுள்ளது. (மேலே கொடுக்கப்பட்டுள்ள விளக்கப்படங்களில் முதல் இரண்டு படங்களையும் கவனிக்கவும்.)

இங்கு மொத்த பிள்ளைகள் 3 பேர்தான் என்றாலும், ஆண் பிள்ளைகள் இருவர் இருப்பதால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் பெண் பிள்ளையின் பங்கைவிட இரண்டு மடங்குகள் இருக்கவேண்டும். அப்படியானால், 5 சம பங்குகளாக பிரித்தால் மட்டுமே 2:1 என்ற விகிதத்தில் 2 மகன்களுக்குரிய (2 x 2 =4) பங்குகளும், மகளுக்கு 1 பங்கும் பிரிக்க முடியும். (மேலே கொடுக்கப்பட்டுள்ள விளக்கப்படங்களில் இரண்டாவது மற்றும் மூன்றாவது படங்களை கவனிக்கவும்.)
கணவன் - 1/4 (25%)
தந்தை - 1/6 (16.67%)
தாய் - 1/6 (16.67%)
மகன் - மீதி முழுவதும் (41.67%)


இந்த உதாரணம் சற்று வித்தியாசமாக கொடுக்கப்பட்டுள்ளது. இதுவரை கொடுக்கப்பட்ட நான்கு உதாரணங்களிலும் மகனும் மகளும் இருந்ததால், நிர்ணயிக்கப்பட்ட அளவுகளை பிரித்துக் கொடுத்த பிறகு அஸபாவாக வரக்கூடிய ஆண், பெண் பிள்ளைகளுக்கு மீதி சொத்தில் (முறையே 2:1 என்ற விகிதத்தில்) பிரித்துக் கொடுக்கப்பட்டது.

ஆனால் இங்கு அஸபாவாக மகன் மட்டுமே இருப்பதால், மீதமுள்ள சொத்து முழுவதும் மகனுக்கே சேர்க்கப்படுகிறது.

மேலே கொடுக்கப்பட்டுள்ள இந்த உதாரணங்கள் அனைத்திலும் மற்ற எல்லா வாரிசுகளையும்விட மகன்தான் கூடுதல் சதவிகிதப் பங்குகள் பெறுவதைக் காணலாம். அத்துடன் அதிலுள்ள முதல் நான்கு உதாரணங்களை கவனித்தால் அவற்றில், மகனுடன் இருக்கக்கூடிய மகளுக்கும் மீதமுள்ள சொத்தில் (அஸபாவாக) பங்கு கொடுக்கப்படுகிறது. அதேசமயம், மகளின் பங்கைவிட இரண்டு மடங்கு பங்கு மகனுக்கு கொடுக்கப்படுகிறது. ஏனெனில்,

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:

"இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான். (அல்குர்ஆன் 4:11)

அடுத்து மூன்றாம் வகை பங்குதாரர்களைப் பற்றி பார்க்கும் முன், நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவுகளின்படி சொத்துக்களைப் பிரிக்கும் முறைகளைப் பற்றி சற்று கூடுதல் விளக்கங்களோடு பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை