அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, 14 April 2023

ஸஹர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஃபஜ்ரு பாங்கு சொல்லப்பட்டால்...?

ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஃபஜ்ரு பாங்கு சொல்லப்பட்டுவிட்டால் என்ன செய்வது? அதை அப்படியே வைத்துவிட்டு உணவு உட்கொள்வதை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டுமா? அல்லது நமது உணவுத் தட்டில் வைத்துள்ள உணவு முழுவதையும் சாப்பிட்டு முடியும்வரை தொடர்ந்து சாப்பிடலாமா?

இதில் சிலர் தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுசம்பந்தமாக வரக்கூடிய ஒரு செய்தி முறையாக ஆய்வு செய்யப்படாமல், Facebook, YouTube, WhatsApp போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதை சரியென்று நம்பி நடைமுறைப்படுத்தும் மக்களின் நோன்பும் இதனால் பாழாகக்கூடிய நிலை ஏற்படும் என்பதால், அதன் உண்மைத் தன்மையை அவசியம் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

அதாவது, 'ஸஹர் நேர உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஃபஜ்ருக்கான பாங்கு சொல்லப்பட்டால், தட்டில் வைக்கப்பட்ட உணவை அப்படியே வைத்துவிடாமல், அதை முழுவதும் சாப்பிடலாம்' என்று கூறி, அதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாக காட்டுகிறார்கள்:

بَابٌ فِي الرَّجُلِ يَسْمَعُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ
حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا سَمِعَ أَحَدُكُمُ النِّدَاءَ وَالْإِنَاءُ عَلَى يَدِهِ، فَلَا يَضَعْهُ حَتَّى يَقْضِيَ حَاجَتَهُ مِنْهُ»

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"உங்களில் ஒருவர் தனது கையில் உணவுத் தட்டை வைத்திருக்கும் நிலையில் பாங்கு சொல்லப்படுவதை செவியுற்றால், அதிலிருந்து தனது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை அந்தப் பாத்திரத்தை கீழே வைக்கவேண்டாம்."

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூற்கள்: அஹ்மத் (9474, 10629), அபூதாவூத் (2350), தாரகுத்னீ (2182) , ஹாகிம் (729, 740, 1552), குப்ரா பைஹகீ (8019)

இந்த செய்தியின்படி, ஃபஜ்ருடைய நேரம் ஆரம்பிக்கும்போது பாங்கு கூறப்பட்டாலும் அப்போது உணவுத் தட்டில் இருப்பதை உண்பது தவறல்ல என்றும், உணவை நிறுத்துவதிலிருந்து இது விதிவிலக்கு தரும் சட்டம் என்றும் கூறுகின்றனர்.

இங்கே முதலில் நாம் ஒன்றை கவனிக்கவேண்டும். அவர்கள் சொல்வதுபோல் இந்த செய்தியில், "ஸஹர் நேர உணவை சாப்பிடும்போது" என்ற வார்த்தை அறவே இல்லை. பொதுவாக, "கையில் உணவுத் தட்டை வைத்திருக்கும் நிலையில்" என்று சாதாரண நேரத்தில் சாப்பிடுவது குறித்து சொல்லப்பட்ட செய்தியாகதான் அதன் வார்த்தை அமைப்புகள் உள்ளன. ஆனால், 'நோன்பு வைக்க ஸஹர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது' என்று, அதில் இல்லாத ஒரு கூடுதல் தகவலை அவர்களாகவே சேர்த்து தவறான கருத்தை கூறுவதால், அதைப் பின்பற்றுபவர்களின் நோன்புகளையும் இவரகள் வீணடிக்கின்றனர் என்பது வேதனையான விஷயம்!

அதுமட்டுமின்றி, இந்த ஹதீஸ் ஆதாரபூர்வமானதும் அல்ல. இந்த ஹதீஸின் மூன்றாவது அறிவிப்பாளராக இடம் பெற்றுள்ள 'முஹம்மது பின் அம்ரு பின் அல்கமா' என்பவர், மனனத் திறன் இல்லாதவர் என்று இமாம் அபூ அஹ்மத் பின் அதீ அல்ஜுர்ஜானீ அவர்களும், உறுதியானவர் அல்ல என்று இமாம் அபுல் ஃபத்ஹு அஸ்தீ மற்றும் இமாம் இப்ராஹீம் பின் யஃகூப் அல்ஜவ்ஸஜானீ அவர்களும், தவறிழைப்பவர் என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும், பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும்,  நம்பகமானவர் அல்ல என்று இமாம் யஹ்யா பின் முயீன் அவர்களும் கூறியுள்ளார்கள்.

அத்துடன், இந்த செய்தி சரியானதல்ல என்று அபூ ஹாதிம் அவர்கள் விமர்சித்துள்ளார். (நூல்: இலலுல் ஹதீஸ் - 759). அப்துர்ரஹ்மான் பின் முஹம்மத் (இப்னு அபூஹாதிம்) கூறுகிறார்:

ரவ்ஹு பின் உபாதா அவர்கள், ஹம்மாத் பின் ஸலமா  முஹம்மது பின் அம்ர்  அபூஸலமா அபூஹுரைரா (ரலி)  நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் அறிவிக்கும் “உங்களில் ஒருவர் (நோன்பு வைக்க ஸஹர் உணவு உண்ணும் போது) தமது கையில் உணவுத் தட்டு வைத்திருக்கும் நிலையில் தொழுகை அறிவிப்பை செவியுற்றால் அதிலிருந்து தமது தேவைக்கேற்ப உண்டு முடிக்கும்வரை பாத்திரத்தை கீழே வைக்க வேண்டாம்” என்ற செய்தி பற்றியும்,

ஹம்மாத் பின் ஸலமா  அம்மார் பின் அபூஅம்மார்  அபூஹுரைரா (ரலி)  நபி (ஸல்) என்ற அறிவிப்பாளர்தொடரில் மேற்கண்ட செய்தியுடன் “தொழுகை அறிவிப்பாளர் ஃபஜ்ர் உதயமாகும் போது பாங்கு கூறுவார்” என்று அறிவிக்கும் செய்தி பற்றியும் எனது தந்தை அபூஹாதிம் அவர்களிடம் கேட்டேன்.

அதற்கவர்கள், “இந்த இரண்டு செய்திகளும் சரியானவை அல்ல; அம்மார் பின் அபூஅம்மார் அறிவிக்கும் செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்களின் கூற்று என்பதே உண்மையாகும். அம்மார் பலமானவர் ஆவார். (முஹம்மது பின் அம்ர் இடம்பெறும்) மற்றொரு செய்தி சரியானதல்ல” என்று பதிலளித்தார்கள்.

இதற்கு அபூ ஹாதிம் அவர்கள் இன்னும் கூடுதலான விளக்கத்தைக் கூறாவிட்டாலும், ஆய்வுசெய்து பார்க்கும்போது இந்த செய்தியை (இதன் நான்காவது அறிவிப்பாளர்) 'ஹம்மாத் பின் ஸலமா' என்பவர் மட்டுமே தனித்து அறிவித்துள்ளார் என்பது தெரிய வருகிறது. இவர் நம்பகமான அறிவிப்பாளர்தான் என்றாலும், தனது இறுதி காலத்தில் நினைவு தடுமாற்றத்திற்கு உள்ளானவர் என்ற விமர்சனமும் உண்டு. அதனால்தான் இவர் இந்த செய்தியை சரியாக மனனமிடாமல், பலதரப்பட்ட அறிவிப்பாளர்தொடரில் இதை அறிவித்துள்ளார். அத்துடன், அம்மார் வழியாக நபித்தோழரின் கூற்றாகவே இந்த செய்தி வந்திருக்கும்போது சிலர் நபியின் கூற்றாக அறிவித்திருப்பது இதில் மேலும் குறையை ஏற்படுத்துகிறது. 

எனவே, இந்த ஹதீஸில் 'ஸஹர் உணவு சாப்பிடும்போது' என்ற வார்த்தை குறிப்பிடப்படவில்லை என்பது மட்டுமின்றி, பலவீனமானதாகவும் உள்ளது.

அத்துடன் இன்னொரு முக்கியமான விஷயத்தையும் நாம் இங்கே கவனிக்கவேண்டும். இந்த செய்தியின் கருத்து குர்ஆனின் வசனத்திற்கும், மற்ற பலமான ஹதீஸ்களுக்கும் மாற்றமாக இருப்பதால் நஸாயீ போன்ற பலர் இதை 'முன்கர்' என்று விமர்சித்துள்ளனர்.

كُلُوْا وَاشْرَبُوْا حَتّٰى يَتَبَيَّنَ لَـكُمُ الْخَـيْطُ الْاَبْيَضُ مِنَ الْخَـيْطِ الْاَسْوَدِ مِنَ الْفَجْرِثُمَّ اَتِمُّوا الصِّيَامَ اِلَى الَّيْلِ

"வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும்வரை உண்ணுங்கள்! பருகுங்கள்! பின்னர் இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்!" (அல்குர்ஆன் 2:187)

இந்த வசனத்தில் ஃபஜ்ரு வரை மட்டுமே உண்ணலாம், பருகலாம் என்று இறைவன் அனுமதியளிக்கிறான். ஃபஜ்ரு நேரத்தின் துவக்கமும், ஸஹர் முடிவும் ஒன்றுதான். ஸஹர் முடிந்த அதே வினாடி சுப்ஹு ஆரம்பமாகிவிடும். ஸஹர் முடிவுக்கும், சுப்ஹுக்கும் இடைப்பட்ட நேரம் எதுவுமில்லை என்ற நிலையில், ஃபஜ்ரிலிருந்து நோன்பின் நேரம் ஆரம்பித்த பிறகும் உணவை நாம் தொடர்ந்து உண்ணலாம் என்பது அல்லாஹ் நிர்ணையித்துள்ள அந்த காலவரம்பை மீறுவதாகவே அமையும்.

குறிப்பிட்ட அந்த நேர வரம்பான ஃபஜ்ரு பாங்கு சொல்லும்வரை உண்பதற்கு மட்டும்தான் நபி (ஸல்) அவர்களும் அனுமதி கொடுத்துள்ளார்கள்.

صحيح البخاري-622

حَدَّثَنَا إِسْحَاقُ، قَالَ: أَخْبَرَنَا أَبُو أُسَامَةَ، قَالَ: عُبَيْدُ اللَّهِ، حَدَّثَنَا عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، وَعَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: ح وَحَدَّثَنِي يُوسُفُ بْنُ عِيسَى المَرْوَزِيُّ، قَالَ: حَدَّثَنَا الفَضْلُ بْنُ مُوسَى، قَالَ: حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ

«إِنَّ بِلاَلًا يُؤَذِّنُ بِلَيْلٍ، فَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يُؤَذِّنَ ابْنُ أُمِّ مَكْتُومٍ»

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘பிலால் இரவி(ன் கடைசியி)ல் பாங்கு சொல்வார். அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் (ஸுப்ஹுக்கு) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள்; பருகுங்கள்’ என ஆயிஷா(ரலி) அறிவித்தார்கள். நூல்: புஹாரி (622)

இந்த ஹதீஸும் எதுவரை நாம் ஸஹர் உணவை உண்ணலாம் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. எனவே, எந்த நேரம் முதல் உண்ணக்கூடாது என்று அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டுள்ளானோ, அதன்படி நபி (ஸல்) அவர்களும் எவ்வாறு அனுமதி கொடுத்துள்ளார்களோ அந்த நேரம்வரை உண்பதற்கு மட்டுமே நமக்கு அனுமதியுள்ளது என்பது உறுதியான, தெளிவான விஷயம். ஆனால், இதற்கு முரணாக சில ஸலஃபிகளும், மதனீகளும் மக்களுக்கு தவறான வழிகாட்டக்கூடிய ஒரு ஃபத்வாவைதான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். யார் சொன்னாலும் சரிதான், அது சரியா? தவறா? என்று குர்ஆன், ஹதீஸின் அடிப்படையில் பார்க்காமல் அவர்களைக் கண்மூடிப் பின்பற்றினால், அந்த மக்களின் நோன்பு பாழாகிவிடும் என்பதில் சந்தேகமில்லை.

ஆக, ஸஹர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஃபஜ்ருடைய பாங்கு சப்தத்தைக் கேட்டால் அல்லது ஃபஜ்ரு நேரம் வந்துவிட்டதை அறிந்தால், சாப்பிடுவதை உடனே நிறுத்திவிட வேண்டும் என்பதே குர்ஆன், சுன்னாஹ்வின் கட்டளைப்படி சரியானது.

சொல்லக்கூடியவர் யார் என்று பார்த்து மார்க்கத்தைப் பின்பற்றாமல், சொல்லக்கூடிய செய்தி அல்லாஹ்வின் கட்டளைக்கும், நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டலுக்கும் முரணில்லாமல் இருக்கிறதா என்பதை இறையச்சத்தோடு உறுதிசெய்துவிட்டு மார்க்கத்தைப் பின்பற்றக்கூடியவர்களாக நாம் வாழ்வதே நம் அமல்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு மறுமை வெற்றியைத் தரும் என்பதை நம் சிந்தனையில் பதிய வைத்துக் கொள்ளவேண்டும்!

“இது அகீதா (கொள்கைச் சார்ந்த) விஷயமல்ல, மஸாயில் (சட்டதிட்டங்கள்) சார்ந்த விஷயம்தான், ஆய்வு செய்யும்போது தவறான முடிவை சொல்பவர்களுக்கு ஒரு கூலியும், சரியான முடிவை சொல்பவர்களுக்கு இரண்டு கூலியும் கிடைக்கும்” என்று கூறி மக்களைக் குழப்பி, முக்கியமான மார்க்க சட்டங்களையெல்லாம் சிலர் அலட்சியப்படுத்தும்போது நாம்தான் மிக எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். அதுபோல் அல்லாமல் எளிமையான இந்த மார்க்கத்தின் நேரான பாதையில், சரியான முறையில் அமல்களைச் செய்து மறுமை வாழ்வின் மகத்தான வெற்றியை அடைந்துக்கொள்ள அல்லாஹ் நம்மனைவருக்கும் அருள்புரிவானாக! 


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை