அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday, 8 April 2023

அமல்களுக்கான 'நிய்யத்'தை வாயால் மொழிய வேண்டுமா?

"நிய்யத்" என்றால் 'எண்ணம்' (மனதால் நினைப்பது) என்று பொருள். முஸ்லிம்கள் எந்த வணக்கத்தைச் செய்வதாக இருந்தாலும் 'இந்த வணக்கத்தை செய்கின்றோம்' என்ற எண்ணத்துடன்தான் செய்யவேண்டும். எந்த எண்ணமும் இல்லாமல் ஒரு வணக்கத்தின் அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்தாலும் அது வணக்கமாக அமையாது. எனவே ஒவ்வொரு வணக்கத்துக்கும் "நிய்யத்" என்னும் எண்ணம் அவசியமாகிறது.

நிய்யத்

இதற்கு பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது:

صحيح البخاري 

1 - حَدَّثَنَا الحُمَيْدِيُّ عَبْدُ اللَّهِ بْنُ الزُّبَيْرِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الأَنْصَارِيُّ، قَالَ: أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ التَّيْمِيُّ، أَنَّهُ سَمِعَ عَلْقَمَةَ بْنَ وَقَّاصٍ اللَّيْثِيَّ، يَقُولُ: سَمِعْتُ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَلَى المِنْبَرِ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ، وَإِنَّمَا لِكُلِّ امْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى دُنْيَا يُصِيبُهَا، أَوْ إِلَى امْرَأَةٍ يَنْكِحُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ»

"அமல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்ததே"  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி); நூல்கள்: புஹாரீ (1), முஸ்லிம் (3530)

அதாவது, நம் எண்ணங்களின் அடிப்படையில்தான் செயல்களும் அமையும் என்பது இதன் பொருள். நாம் எந்த ஒரு செயலை செய்வதாக இருந்தாலும் முதலில் அந்த செயல் நம் எண்ணத்தில் உதிக்க வேண்டும். தண்ணீர் குடிக்கவேண்டும் என்ற எண்ணம் வந்தால்தான் நாம் தண்ணீர் குடிப்போம். இதுதான் அரபியில் நிய்யத் எனப்படும். எந்த எண்ணமும் இல்லாமல் தன்னிச்சையாக யாரும் தண்ணீர் குடிக்கமாட்டோம். தண்ணீர் குடிக்கவேண்டும் என்று தோன்றும்போது 'நான் இப்போது தண்ணீர் குடிக்கப்போகிறேன்' என்று வாயால் சொல்லிவிட்டு யாரும் தண்ணீர் குடிப்பதுமில்லை. இப்படி நம் ஒவ்வொரு செயலும், குடிப்பது, நடப்பது, தூங்குவது, பார்ப்பது என்ற அனைத்துமே எண்ணங்களின் (நிய்யத்களின்) அடிப்படையிலேயே அமைகின்றன. வணக்க வழிபாடுகளுக்கான நிய்யத்தின் நிலையும் இதுதான்.

உளூ செய்யும் எண்ணமின்றி குளத்தில் இறங்கி ஒருவர் குளித்துவிட்டு வரும்போது, உளூ செய்வதற்கான உறுப்புக்கள் அனைத்தும் நனைந்திருந்தாலும் அவர் உளூ செய்தவராகமாட்டார். அதுபோல், உடற்பயிற்சி என்ற எண்ணத்திலோ அல்லது வேறு ஏதோ ஒரு காரணத்துக்காகவோ தொழுகையில் செய்யக்கூடிய அனைத்துக் காரியங்களையும் ஒருவர் செய்கின்றார்; ஆனால் தொழுகிறோம் என்ற எண்ணம் அவருக்கு அறவே இல்லை என்றால் இவர் தொழுகையை நிறைவேற்றியவராகமாட்டார். இதுதான் "நிய்யத்" என்பதன் இலக்கணமாகும்.

அதேசமயம், நிய்யத் என்பதை முஸ்லிம்களில் சிலர் தவறாக விளங்கி வைத்துள்ளனர். நிய்யத் என்றால் என்னவென்று சரியாக விளங்காததால்தான், குறிப்பிட்ட வார்த்தைகளை அரபு மொழியில் வாயால் மொழிவதே நிய்யத் என்று எண்ணுகின்றனர். இதனால் உளூ, தொழுகை, நோன்பு போன்ற வணக்கங்களை நிறைவேற்றும்போது சில அரபிச் சொற்களைக் கூறிவிட்டு, அதுதான் நிய்யத் என்று நினைத்துக் கொள்கின்றனர்.

உதாரணமாக, சுப்ஹுத் தொழுகையைத் தொழுவதற்கு அந்தத் தொழுகையை நிறைவேற்றப் போகிறேன் என்ற எண்ணத்தை மனதில் கொண்டுவர வேண்டும். ஆனால் தொழ ஆரம்பிக்கும் முன், "உஸல்லீ ஸலாத்தஸ் ஸுப்ஹி..." (நான் சுப்ஹுத் தொழுகையைத் தொழுகிறேன்...) என்று தொடங்கும் சில அரபிச் சொற்களையோ, அல்லது "நவைத்து அன் உஸல்லிய லில்லாஹி" (இந்தத் தொழுகையை அல்லாஹ்வுக்காக தொழுவதற்கு நிய்யத் வைக்கிறேன்) போன்றவற்றைக் கூறுவதுதான் நிய்யத் என்று கருதி அதை வாயால் மொழிந்துவிட்டு ஆரம்பிக்கின்றனர். இதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை.

அதுமட்டுமின்றி நாம் ஏற்கனவே சொன்னதுபோல், நிய்யத் என்ற சொல்லுக்கு வாயால் மொழிதல் என்று பொருள் இல்லை; மனதால் நினைத்தல் என்பதே அதன் பொருளாகும். எனவே எந்த நேரத் தொழுகையை, எத்தனை ரக்அத்கள் தொழ நாடுகிறோமோ அவற்றை மனதில் நினைத்து (நிய்யத் வைத்து)க் கொள்ளவேண்டும்.

தொழும்போது மட்டுமின்றி உளூச் செய்யும்போதோ, நோன்பு நோற்கும்போதோ கூட நபி(ஸல்) அவர்கள் எதையும் வாயால் மொழிந்துவிட்டுச் செய்ததில்லை. ஹஜ் கடமையை நிறைவேற்றும் சமயத்தில் இஹ்ராமை ஆரம்பிக்கும்போது மட்டுமே மனதால் எண்ணம் (நிய்யத்) வைத்து வாயாலும் மொழிந்துள்ளார்கள். மற்ற எந்த வணக்கத்திற்கும் வாயால் மொழிந்ததில்லை.

ஒருவர் உளூ செய்யப்போகிறார் என்றால், 'நான் இப்போது உளூச் செய்யப் போகின்றேன்' என்ற எண்ணம் உள்ளத்தில் இருக்குமானால் அதுவே நிய்யத் ஆகும். வாயால் எந்தச் சொல்லையும் மொழியக் கூடாது. எல்லா அமல்களுக்கும் அப்படி மொழிவது அவசியம் என்றால் நபி (ஸல்) அவர்கள் வாயால் மொழிந்து நமக்கு வழிகாட்டியிருப்பார்கள். நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு காட்டித் தராததால் நிய்யத்தை வாயால் மொழிவது பித்அத் ஆகிவிடும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

பல காலங்களாக பழக்கப்பட்டுவிட்டதால் மன திருப்திக்காக தொழுகை, நோன்பு போன்றவற்றிற்கான நிய்யத்தை தமிழில் சொல்லிக் கொள்ளலாமா?

தொழவேண்டும் என்ற 'எண்ணம்' – நிய்யத்' இருந்தால்தான் உளூ செய்யமுடியும், தொழுகைக்கு தயாராக முடியும். இப்படி தயாரான பிறகு மீண்டும் 'நிய்யத்' செய்கிறேன் என்பது அறிவுக்குப் பொருந்தாதது மட்டுமில்லை, அது மார்க்கத்தில் இல்லாத காரியமாகும். 'நிய்யத் செய்கிறேன்' என்று அரபியிலோ, தமிழிலோ சில வார்த்தைகளைக் கூறுவது நபிவழிக்கு மாற்றமான, கட்டாயம் விட்டுத்தொலைக்க வேண்டிய ஒரு தவறான நடைமுறை. மன திருப்திக்காக செய்யலாமா? என்பது ஷைத்தானுக்கு இடம் கொடுக்கும் எண்ணமே. தவறாக செய்துவந்த ஒன்றுக்காக, பல காலங்களாக பழக்கப்பட்டுவிட்டது போன்ற காரணங்களைக் கூறுவதெல்லாம், மார்க்கத்தில் தெளிவாக்கப்பட்ட ஒரு காரியத்திற்கு எதிராக மன ஊசலாட்டங்களுக்கு இடம் கொடுப்பதாகிவிடும். மார்க்கத்தில் ஒரு விஷயம் 'கூடாது' என்றால் எந்த நிலையிலும் அதை செய்யக்கூடாது.

அதுபோல், நோன்பை பொருத்தவரை ஃபஜ்ருக்கு முன்னால் நோன்பு வைக்கவேண்டும் என்ற எண்ணம் வந்துவிடவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 

2292 أَخْبَرَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمٍ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ حَفْصَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ لَمْ يُبَيِّتْ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ رواه النسائي

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஃபஜ்ருக்கு முன்பாக இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ (நினைக்கவில்லையோ) அவருக்கு நோன்பு கிடையாது."

அறிவிப்பவர்: ஹஃப்ஸா (ரலி); நூல்: நஸாயீ (2292)

'யார் வாயால் மொழியவில்லையோ' என்று நபி (ஸல்) அவர்கள் இங்கே கூறவில்லை. நோன்பு நோற்க வேண்டும் என்ற எண்ணம் ஃபஜ்ருக்கு முன்பே வந்துவிடுவதுதான் நோன்பு நோற்பதற்கு தேவையான நிய்யத்தாக குறிப்பிடுகிறார்கள்.

அதாவது, ஒருவர் ரமளான் மாதத்தில் வழக்கத்திற்கு மாறாக ஃபஜ்ருக்கு முன்பு எழுகிறார். வழக்கத்திற்கு மாறாக அந்த நேரத்தில் சாப்பிடுகிறார். அன்றைய தினம் சூரியன் மறையும் வரை எதையும் உண்ணாமல், பருகாமல், நோன்பில் தடை செய்யப்பட்ட எதையும் செய்யாமல் இருக்கிறார் என்றால், நோன்பு நோற்கும் எண்ணம் அவரது உள்ளத்தில் இருப்பதால்தான் அவர் இப்படி நடந்துக்கொள்கிறார். எனவே இவர் நிய்யத் செய்துவிட்டு நோன்பு நோற்றிருக்கிறார். இதுதான் நிய்யத்! இதற்கு மேல் வேறு ஒன்றும் தேவையில்லை. ஏனெனில் நோன்பு நோற்பதாக மனதால் உறுதி செய்ய வேண்டும் என்பதே மார்க்கம் கட்டளையிட்டபடி சரியானதாகும். ஆனால் நோன்பு நோற்பதற்கென்று ஒரு குறிப்பிட்ட வாசகத்தைக் கூறுவதுதான் நிய்யத் என்ற நம்பிக்கை சிலரிடம் இன்னும் நடைமுறையில் உள்ளது.

"நவைத்து ஸவ்ம ஃகதின் அன்அதாஇ ஃபர்ளி ரமளானி ஹாதிஹிஸ் ஸனத்தி லில்லாஹிதஆலா" என்பதுதான் அந்தக் குறிப்பிட்ட வாசகம். அத்துடன், "இந்த வருடத்தின் ரமளான் மாதத்தின் ஃபர்ளான நோன்பை 'அதா'வாக நாளைப் பிடிக்க நிய்யத் செய்கிறேன்" என்று அதன் தமிழாக்கத்தையும் சேர்த்து கூறவேண்டும் என்று நினைத்து நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வாசகத்தைக் கூற வேண்டுமென்று அல்லாஹ் கூறினானா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதைக் கூறினார்களா? அல்லாஹ்வோ, அவனுடைய ரஸூலோ சொல்லாதவை மார்க்கமாகுமா? மார்க்கத்தில் இல்லாதவை அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படுமா? இதுபற்றி நபி(ஸல்) அவர்கள் என்ன கூறியுள்ளார்கள் என்பதைப் பாருங்கள்:

صحيح مسلم

4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».

யாரேனும் நமது கட்டளை இல்லாமல் ஒரு அமலைச் செய்வாரேயானால் அது நிராகரிக்கப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: முஸ்லிம்

எனவே அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ சொல்லாத எந்த அமலாக இருந்தாலும், அது நமக்கு பல காலங்களாக பழக்கப்பட்டுவிட்டது என்பதாலோ, மாற்றிக் கொள்வதற்கு மனம் இடமளிக்கவில்லை என்பதாலோ அதையே தொடர்ந்து அமுல்படுத்தி வந்தால் அது மறுமையில் எந்த பயனையும் தராது என்பதைப் புரிந்து நம் வாழ்வை குர்ஆனின் கட்டளைப்படியும் , நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழியிலும் அமைத்துக்கொண்டு மறுமை வெற்றியை அடைவோமாக!

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை