அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, 5 November 2010

ஒப்ப‌ந்தத்தில் பணிந்துப்போனது வெற்றியா? தோல்வியா? (ஹுதைபிய்யா தொடர் 6)

ஹுதைபிய்யா தொடரின் முதல் பகுதிஇரண்டாவது பகுதி, மூன்றாவது பகுதி,நான்காவது பகுதி, மற்றும் ஐந்தாவது பகுதிகளைப் பார்க்கவும்.


ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நிபந்தனைகளிலும் நபி(ஸல்)அவர்கள் மிகவும் இறங்கிப் போகிறார்கள். அண்ணல் நபி(ஸ‌ல்)அவர்களின் சமாதான சொல்லுக்கு இணங்கவேண்டும் என்பதற்காகவே, மக்கா நிராகரிப்பாளர்களின் கெளரவப் பிரச்சனை காரணமாக விதிக்கப்பட்ட‌ நிபந்தனைகளில் உள்ள‌ நியாயமற்ற மூன்று நிபந்தனைகளையும் திருப்தியின்றியே ஏற்றுக்கொள்கிறார்கள் நபித்தோழர்கள்! நீண்ட காலப் பயிற்சியின் பலனாக, இறைவனுக்கும் இறைத் தூதருக்கும் முற்றிலும் கட்டுப்பட்டு வாழும் மனப்பக்குவத்தை அடைந்திருந்த‌ நபித்தோழர்கள், புகழ்பெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கையைச் செய்துக்கொண்டு அந்த ஆண்டு உம்ரா செய்யாமலேயே நபி(ஸல்)அவர்களோடு மதீனா திரும்புகிறார்கள்.

நபித்தோழர்கள் அனைவரும் இது தோல்விதான் என்று எண்ணிக்கொண்டு திரும்பும்போது, எல்லாம் வல்ல அல்லாஹ்தஆலா அதை "வெற்றி" என்று கூறி, ஒரு வெற்றி அத்தியாயத்தையே அருளுகிறான்.

(முஹம்மதே!) உமது பாவத்தில் முந்தியதையும் பிந்தியதையும் உமக்காக அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், தனது அருட்கொடையை உமக்கு முழுமைப்படுத்திடவும், உமக்கு நேரான பாதையைக் காட்டுவதற்காகவும், அல்லாஹ் மகத்தான உதவியை உமக்குச் செய்வதற்காகவும், தெளிவான ஒரு வெற்றியை உமக்கு நாம் அளித்தோம். (அல்குர்ஆன் 48:1-3)

இந்த அத்தியாயத்தை நபி(ஸல்)அவர்கள் உமர்(ரலி)அவர்களிடம் ஓதிக்காட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்!

அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார்கள்:

ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி)கூறினார்கள், "நாங்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது நபி(ஸல்)அவர்களுடன் இருந்தோம். போர் புரிவது உசிதமானதென்று நாங்கள் கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் அவர்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டோம்.) அப்போது உமர் அவர்கள் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! நாம் சத்தியத்திலும் அவர்கள் அசத்தியத்திலும் இல்லையா?' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள். உமர் அவர்கள், 'போரில் கொலையுண்டு விடும்போது நமது வீரர்கள் சொர்க்கத்திலும் அவர்களுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்)அவர்கள், 'ஆம்' என்று பதிலளித்தார்கள்.


அதற்கு உமர் (ரலி) அவர்கள், 'அப்படியிருக்க, நாம் ஏன் நமது மார்க்க விஷயத்தில் பணிந்து போகவேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையே தீர்ப்பளிக்காமலிருக்கும் நிலையில் நாம் திரும்பி விடுவதா?' என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்)அவர்கள், 'கத்தாபின் மகனே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்க மாட்டான்' என்று பதிலளித்தார்கள்.


உமர்(ரலி)அவர்கள் அபூபக்ர்(ரலி)அவர்களிடம் சென்று நபி(ஸல்)அவர்களிடம் தாம் சொன்னதைப் போன்றே சொன்னார்கள். அப்போது அபூபக்ர் அவர்கள், 'அவர்கள் அல்லாஹ்வின் தூதர். அவர்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்கமாட்டான்' என்று கூறினார்கள்.


அப்போது "அல் ஃபத்ஹ்" ("உமக்கு நாம் பகிரங்கமான வெற்றியை அளித்து விட்டோம்" என்று தொடங்கும்) அத்தியாயம் அருளப்பட்டது. அதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் உமருக்கு இறுதி வரை ஓதிக் காட்டினார்கள். அப்போது உமர் அவர்கள், 'அல்லாஹ்வின் தூதரே! (அப்படியானால்)அது வெற்றிதானா?' என்று கேட்டார்கள். நபி(ஸல்)அவர்கள், 'ஆம் (வெற்றி தான்)' என்று பதிலளித்தார்கள். நூல்:புகாரி (3182)


நபி(ஸல்)அவர்கள் கூறியது போன்று ஹுதைபிய்யா உடன்படிக்கை எப்படியெல்லாம் வெற்றியாக அமைந்தது என்பதை இப்போது பார்ப்போம்.

உம்ரத்துல் களா

ஒப்பந்த நிபந்தனைப்படி நபி(ஸல்)அவர்கள் அடுத்த ஆண்டு, அதாவது ஹிஜ்ரி 7 ஆம் ஆண்டு துல்கஃஅதா மாதத்தில், ஹுதைபிய்யாவில் விட்ட உம்ராவை களாச் செய்தார்கள்.

குறைஷிகளிடம் செய்துக் கொண்ட சமாதான ஒப்பந்தத்தின்படியே அடுத்த ஆண்டு உம்ரா செய்ய நாடி, மக்கா நகரினுள் நுழைந்தார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்கி (முடித்து)விட்ட போது, குறைஷிகள் நபி(ஸல்)அவர்களை (மக்காவை விட்டு)வெளியேறும்படி உத்தரவிட, நபி(ஸல்)அவர்களும் (நிபந்தனைப்படி) வெளியேறிவிட்டார்கள்.
                          அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி); நூல்: புகாரி (4252)

அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் ஒப்பந்த விதிகளுக்குக் கொஞ்சமும் மாறு செய்யாமல் மிகக் கண்ணியமான முறையில் தமது உம்ராவை நிறைவேற்றி விட்டு, மூன்று நாட்களில் திரும்பச் சென்றார்கள். 

                                     நூல்: புகாரி (2701)

நபி(ஸல்)அவர்களுக்கு உண்மையில் இது மகத்தான வெற்றியாகும். "கஃஅபா எங்கள் கைவசம் உள்ளது; இங்கு முஹம்மது வருவதற்கு உரிமை கிடையாது" என்று வீராப்பு விட்டுக் கொண்டிருந்தவர்களிடம், தங்களுடைய உரிமையை நிலைநாட்டிவிட்டுப் போய்விட்டார்கள் அண்ணலெம் பெருமானார்(ஸல்)! இனிமேல் எப்போதும் ஹஜ் செய்யலாம், உம்ரா செய்யலாம் என்பதையும் நிலைநாட்டினார்கள். இது நபி(ஸல்)அவர்களுக்கு ஹுதைபிய்யா ஒப்பந்தத்தின் மூலம் கிடைத்த முதல் வெற்றியாகும். ஆக, க‌ஃஅபா ஆலயத்திற்குள் வரவிடாமல் தடுத்திருந்ததன் மூலம், தாங்கள் சாதித்து விட்டதாக‌ குறைஷிகள் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்த‌ ஒரே நிபந்தனையும் அவர்களுக்கு தோல்வியாகவே அமைந்தது.

மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள இதர கிளையினர் நபி(ஸல்)அவர்களுடனோ, அல்லது குறைஷிகளுடனோ இணைந்துக் கொள்ளலாம் என்பது ஒப்பந்த நிபந்தனைகளில் ஒன்று என்பதை முந்திய தொடரில் பார்த்தோம். இந்த நிபந்தனையும் குறைஷிகளுக்குச் சாதகமாக அமையவில்லை. இந்த நிபந்தனைப்படி பனூகுஸாஆ கிளையினர் நபி(ஸல்)அவர்களுடன் இணைந்தனர். பனூபக்ர் கிளையினர் குறைஷிகளுடன் இணைந்தனர்.

இவ்விரு குலத்தாரிடையே நெடுங்காலமாக முன்விரோதம் இருந்து வந்தது. ஹுதைபிய்யா ஒப்பந்தத்தில் இணைந்த பிறகு பனூபக்ர் குலத்தைச் சேர்ந்த நவ்ஃபல் இப்னு முஆவியா என்பவர், பனூகுஸாஆ குலத்தைச் சேர்ந்த முனப்பிஹ் என்பவரை ஒரு நீர் நிலை தொடர்பான தகராறில் கொன்று விட்டார். இது இரு குலத்தாருக்கிடையில் மோதலாக அமைந்தது. இச்சமயத்தில் மக்கா குறைஷிகள் ஹுதைபிய்யா ஒப்பந்தத்தை மீறி, பனூபக்ர் குலத்தாருக்கு ஆயுத உதவி செய்ததுடன் அவர்களுடன் சேர்ந்து, இரவு நேரங்களில் பனூகுஸாஆ குலத்தாரைத் தாக்கியும் வந்தனர்.


இதனால் பனூகுஸாஆ குலத்தார் நபி(ஸல்)அவர்களிடம் உதவி கேட்டு வந்தனர். எனவே நபி(ஸல்)அவர்கள் குறைஷிகளைத் தட்டிக்கேட்க தமது தோழர்களைத் தயார்படுத்தினார்கள். (ஆதாரம்: ஃபத்ஹுல் பாரி)


இந்த ஒப்பந்தமும் குறைஷிகளுக்குப் பாதகமாக அமைந்தது மட்டுமல்லாமல், இதுதான் வரலாற்றில் மறக்க முடியாத மாபெரும் வெற்றியான மக்கா வெற்றிக்கு அஸ்திவாரமாக அமைந்தது!

இதைத் தான் எல்லாம் வல்ல அல்லாஹ், "உமக்குத் தெளிவான ஒரு வெற்றியை அளித்தோம்" என்று 48:1 வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

ஹுதைபிய்யா ஒப்பந்தத்தின்போது நிராகரிப்பளர்களின் நியாயமற்ற நிபந்தனைகளைக் கண்டு கொதித்துப் போயிருந்த உமர்(ரலி)அவர்களிடம் இந்த அத்தியாயத்தைதான் நபி(ஸல்)அவர்கள் மிகப் பொருத்தமாகவே ஓதிக் காட்டினார்கள். பின்னால் வெற்றியாக அமைந்த இந்த ஒப்பந்தம் நடைபெற்ற சமயம், நபி(ஸல்)அவர்களிடம் நாம் கடுமையாக பேசிவிட்டோமே என்று வருந்தி உமர்(ரலி)அவர்கள் பல வணக்கங்களைச் செய்கிறார்கள்.

நான் இப்படி (அதிருப்தியுடன் நபியவர்களிடம்) பேசியதற்குப் பரிகாரமாக பல வணக்கங்களைப் புரிந்தேன்.
                        அறிவிப்பவர்: உமர்(ரலி); நூல்: புகாரி(2731)

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்குத் திரும்பி வந்த பிறகு, (சமாதான ஒப்பந்தம் அமுலில் இருந்த காலக்கட்டத்தில்),

குறைஷிகளில் ஒருவரான அபூபஸீர் என்பவர் முஸ்லிமாக இருக்கும் நிலையில் (மதீனாவுக்கு) வருகை தந்தார். உடனே, அவரைத் தேடி(ப் பிடிக்க) குறைஷிகள் இரண்டு பேரை அனுப்பி வைத்தனர். அவர்கள் (நபி(ஸல்)அவர்களிடம் வந்து), "நீங்கள் எங்களுக்குக் கொடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுங்கள்" என்று கேட்டனர். உடனே, அவரை (ஒப்பந்தப்படி)அந்த இருவரிடமும் நபி(ஸல்)அவர்கள் ஒப்படைத்தார்கள். அவர்கள் இருவரும் அபூபஸீர் அவர்களை அழைத்துக் கொண்டு துல்ஹுலைஃபாவை அடைந்தனர். அவர்கள், தம்முடைய பேரீச்சம் பழங்களைத் தின்றுக் கொண்டே (ஒரு மரத் தடியில்) தங்கினார்கள்.


அபூபஸீர்(ரலி)அவர்கள் அவ்விரு நபர்களில் ஒருவரிடம், "அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னானே! உன்னுடைய இந்த வாளை நான் மிக நல்லதாகக் காண்கிறேன்" என்றார். உடனே மற்றொருவர் வாளை உருவி, "ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! இது மிக நல்ல வாள்தான். நான் இதைப் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன், மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன், மீண்டும் பயன்படுத்திப் பார்த்திருக்கிறேன்" என்று சொன்னார்.


அபூபஸீர் அவர்கள், "எனக்குக் காட்டு. அதை நான் பார்க்கிறேன்" என்று கேட்டு அவரைத் தன் வசத்தில் கொண்டு வந்து (அந்த வாளால்) குத்திக் கொன்று விட்டார். மற்றொருவர் விரண்டோடி மதீனா வரை சென்று விட்டார். ஓடிக் கொண்டே பள்ளிவாசலுக்குள் புகுந்தார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் அவரைக் கண்டபோது, "இவர் ஏதோ பீதியேற்படுத்தும் விஷயத்தைக் கண்டு விட்டிருக்கிறார்" என்று கூறினார்கள்.


அவர் நபி(ஸல்)அவர்களிடம் சென்று நின்றபோது, "அல்லாஹ்வின் மீதாணையாக! என் சகோதரர் கொல்லப்பட்டு விட்டார். (நீங்கள் அபூபஸீரைத் தடுக்கா விட்டால்) நானும் கொல்லப்பட்டு விடுவேன்" என்று கூறினார்.


உடனே அபூபஸீர் அவர்கள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் தங்கள் பொறுப்பை நிறைவேற்றிவிட்டான். தாங்கள் என்னை அவர்களிடம் திருப்பியனுப்பிவிட்டீர்கள். பிறகு அல்லாஹ், என்னை அவர்களிடமிருந்து காப்பாற்றிவிட்டான்" என்று கூறினார்கள்.


நபி(ஸல்)அவர்கள், "கேடுண்டாகட்டும்! உதவுபவர் எவராவது இவருக்குக் கிடைத்தால் இவர் போர்த்தீயை மறுபடியும் மூட்டி விடுவார்" என்று கூறினார்கள். இதைச் செவியுற்றவுடன் அபூபஸீர் அவர்கள், நபி(ஸல்)அவர்கள் தம்மை (ஒப்பந்தப்படி மீண்டும்) குறைஷிகளிடம் திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்பதைப் புரிந்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென்றார்கள்.


சுஹைலின் மகன் அபூ ஜந்தல்(ரலி)அவர்களும் குறைஷிகளிடமிருந்து தப்பியோடி அபூபஸீர் அவர்களுடன் சேர்ந்துக் கொண்டார்கள். பிறகு, குறைஷிகளில் எவர் இஸ்லாத்தைத் தழுவினாலும் அவர் (தப்பிச் சென்று) அபூபஸீர் அவர்களுடன் சேர்ந்து கொள்ளத் தொடங்கினார்கள். இறுதியில், (இப்படி இஸ்லாத்தை ஏற்றவர்கள் அனைவரும் மக்காவிலிருந்து தப்பியோடி வந்து) ஒரு குழுவினராக ஒன்று திரண்டுவிட்டனர்.

                                      நூல்:புகாரி (2731)                    

ஷாம் நாட்டை நோக்கி குறைஷிகளின் ஒரு (வியாபாரப்) பயணக் குழு புறப்பட்டிருப்பதாகக் கேள்விப்படும் போதெல்லாம் அதை அவர்கள் இடைமறித்து, அவர்களைக் கொன்று அவர்களுடைய செல்வங்களை (வியாபாரப் பொருட்களை)ப் பறித்துக் கொள்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.


ஆகவே, (அபூபஸீரும் அபூஜன்தலும் தங்களுக்குத் தொல்லை தராமல் இருக்க) இருவருக்கும் ஆளனுப்பி உத்தரவிடும்படி அல்லாஹ்வின் பெயராலும் உறவு முறையின் பெயராலும் நபி (ஸல்) அவர்க
ளிடம் குறைஷிகள் கேட்டுத் தூதனுப்பினார்கள்.

மேலும், "குறைஷிகளில் எவர் முஸ்லிமாக நபி (ஸல்) அவர்களிடம் வருகின்றாரோ அவர் அச்சமின்றி இருக்கலாம் (அவரை எங்களிடம் திருப்பியனுப்ப வேண்டாம்)" என்று கூறிவிட்டனர்.


அப்போது தான் அல்லாஹ்,
"மக்காவின் மையப் பகுதியில் அவர்களுக்கு எதிராக அவன் உங்களுக்கு வெற்றி அளித்தப் பின் உங்கள் கைகளை அவர்களை விட்டும், அவர்கள் கைகளை உங்களை விட்டும் அவனே தடுத்தான். நீங்கள் செய்து கொண்டிருப்பதை அல்லாஹ் பார்ப்பவனாக இருக்கிறான்....... (ஏக இறைவனை) மறுத்தோர் தமது உள்ளங்களில் வைராக்கியத்தை, மூடத்தனமான வைராக்கியத்தை ஏற்படுத்திய போது, அல்லாஹ் தனது நிம்மதியைத் தனது தூதர் மீதும், நம்பிக்கை கொண்டோர் மீதும் அருளினான். (இறை) அச்சத்திற்கான வார்த்தையை அவர்கள் பற்றிப் பிடிக்குமாறு செய்தான். அவர்கள் அதற்கு உரிமை படைத்து, தகுதியுடையோராகவும் இருந்தனர். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்" என்னும் (48:24-26) வசனத்தை அருளினான். 

                    நூல்: புகாரி (2731, 2732)

மக்காவிலிருந்து முஸ்லிமாக யார் மதீனாவுக்கு வந்தாலும் திருப்பி அனுப்ப வேண்டும் என்ற குறைஷிகளின் அடுத்த‌ நிபந்தனையும் சமாதியாகிப் போனது. தாங்கள் போட்ட‌ நிபந்தனையை தாங்களே முன்வந்து மாற்றி, மக்காவிலிருந்து மதீனாவுக்கு வரும் முஸ்லிம்களைத் திருப்பி அனுப்பவேண்டாம் என்று கூறும‌ளவுக்கு நிலைமை தலைகீழானது. இந்த அடிப்படையில் இது முஸ்லிம்களுக்கு மாபெரும் வெற்றியாக அமைந்தது!  எல்லாப் புகழும் வல்ல‌ அல்லாஹ்வுக்கே!!


ஹுதைபிய்யா தொடர் நிறைவடைந்தது, அல்ஹம்துலில்லாஹ்!
(இந்த தொகுப்பிற்கு உதவியாக இருந்தவர்களுக்கு அல்லாஹ்தஆலா நற்கூலி வழங்குவானாக!)4 comments:

 1. அஸ்லாமு அலைக்கும் அஸ்மா!!!

  தெரியாத விஷயங்கள் பல இதில் தெரிந்துக்கொண்டேன். 6 பகுதிகளும் அருமையாக அதைவிட பொறுமையாக சொல்லியுள்ளீர்கள்! வாழ்த்துக்கள்!

  அல்லாஹ் உங்கலுக்கு நற்கூலி கொடுப்பானாக ஆமீன்

  ReplyDelete
 2. @ ஆமினா...

  //அஸ்லாமு அலைக்கும் அஸ்மா!!!

  தெரியாத விஷயங்கள் பல இதில் தெரிந்துக்கொண்டேன். 6 பகுதிகளும் அருமையாக... அல்லாஹ் உங்கலுக்கு நற்கூலி கொடுப்பானாக ஆமீன்//

  வ அலைக்குமுஸ்ஸலாம்! ஆறு பகுதிகளையும் படித்து முடித்தது சந்தோஷம், நன்றி! மேலும் துஆ செய்யுங்கள். மற்றதும் தொடர்ந்து படிங்க ஆமினா.

  ReplyDelete
 3. //அபூபஸீர் அவர்கள், நபி(ஸல்)அவர்கள் தம்மை (ஒப்பந்தப்படி மீண்டும்) குறைஷிகளிடம் திருப்பி அனுப்பிவிடுவார்கள் என்பதைப் புரிந்துக் கொண்டு அங்கிருந்து தப்பியோடி கடலோரத்திற்குச் சென்றார்கள். //

  இதற்கு பிற்கு அங்கு அதிக எண்ணிக்கையில் மக்காவிலிருந்து தப்பி வந்த முஸ்லீம்கள் குடியேறினார்கள். இது மக்கா கஃபிர்களுக்கு மிகப்பெரிய அடியாக இருந்தது வரலாற்றில்.

  ஹுதைபியா உடன்படிக்கையில் இது மிகப்பெரிய திருப்பம் .இஸ்லாம் வேகமாக வளர இதுவும் ஒரு முக்கிய காரணம்..!!

  ஜஸாக்கால்லாஹ் க்கைர்

  ReplyDelete
 4. @ ஜெய்லானி...

  //இதற்கு பிற்கு அங்கு அதிக எண்ணிக்கையில் மக்காவிலிருந்து தப்பி வந்த முஸ்லீம்கள் குடியேறினார்கள். இது மக்கா கஃபிர்களுக்கு மிகப்பெரிய அடியாக இருந்தது வரலாற்றில்.

  ஹுதைபியா உடன்படிக்கையில் இது மிகப்பெரிய திருப்பம் .இஸ்லாம் வேகமாக வளர இதுவும் ஒரு முக்கிய காரணம்..!! //

  நேரமின்மை காரணமாக முக்கியமான ஹதீஸை மட்டும் கொடுத்துவிட்டு, அது சம்பந்தமான மற்ற தகவல்கள் கொண்ட ஹதீஸ்களைக் கொடுக்க முடியாமல் விட்டிருந்தேன். நீங்கள் எடுத்து வைத்த செய்தியும் முக்கியமானதுதான். ஜஸாகல்லாஹு ஹைரா, ஜெய்லானி நானா!

  ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!