அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, 14 December 2012

நீங்கா நினைவுகள்! (ஹ‌ஜ் ‍- 2)...... எப்போது மீகாத் (எல்லை) வரும் என்று மணிக்கொரு முறை கணக்கிட்டுக் கொண்டே வந்து... அந்த நேரமும் நெருங்கிவிட்டது.

ஜித்தா நகருக்கு மேலிருந்து வான்வழி காட்சி

  'மீகாத்' வர இன்னும் 1/2 மணி நேரம்தான் உள்ளது என அறிவித்ததும் அரைகுறை தூக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் எழுந்து உட்கார்ந்து அடுத்த அறிவிப்பை எதிர்பார்த்துக் கொண்டிருக்க, மீகாத் அறிவிக்கப்பட்டு விட்டது. எல்லோரும் இஹ்ராமுக்கான 'நிய்யத்' கூறி, தல்பியா மொழிய ஆரம்பித்த அந்த நிமிடமே.. இந்த உலகத்தையே ம‌றந்துவிட்ட உணர்வு நம்மைப் பற்றிக் கொள்கிறது! தன்னோடவே எப்போதும் ஒட்டிக் கொண்டிருந்த தன் பிள்ளைக்கு தாயாக இருப்பதையோ, (பக்கத்து சீட்டிலே இருந்தும்) தனக்கென கணவன் என்ற அன்பான‌ ஒரு ஜீவன் இருப்பதையோ, பெரியதொரு குடும்ப உறவுகளும், அருமையான பல‌ நட்பு வட்டங்களும் இருப்பதையோ அப்போது முக்கியத்துவம் கொடுத்து நினைக்கத் தோன்றவேயில்லை!! நமக்காக இவ்வுலகில் இருக்கும் சொந்த பந்தங்கள், சொத்து சுகங்களெல்லாம் நம் நினைவை விட்டும் மறந்துபோன கனவுபோல் மறைந்தே போகின்றன! ஆழத்தில் தெரியும் இறையில்லம் அமைந்துள்ள மண்ணை உற்று நோக்கியவாறே ஆனந்தக் கண்ணீருடனே ஆரம்பமாகியது அந்த முழக்கம்!
    
    "லப்பைக்.. அல்லாஹும்ம லப்பைக்
    லப்பைக்.. லா ஷரீ(க்)க ல(க்)க லப்பைக்
    இன்னல் ஹம்த.. வன்னிஃம(த்)த‌
    ல(க்)க வல் முல்க்
    லா ஷரீ(க்)க லக்"


    (வந்துவிட்டேன்... இறைவா வந்துவிட்டேன்
    உனக்கு இணை எவருமில்லை
    வந்துவிட்டேன்
    நிச்சயமாக அனைத்துக் புகழும்
    அருட்கொடையும் உன்னுடையதே
    உனக்கு இணை எவருமில்லை!)


அதன் பொருள் உணர்ந்து உச்சரிப்பதால் உடம்பெல்லாம் ஒருவித புல்லரிப்பு!! இறைவனின் காலடியில் நேரடியாகவே நெருங்கி நின்று 'ஆஜராகிவிட்டேன் என் இறைவா!' என சொல்வதைப் போன்ற ஒருவித‌ மெய்மறப்பைத் தந்து, நம்மை முழுமையாக‌ இறைவனிடம் சரணாகதி அடைய வைக்கிறது இந்த 'தல்பியா' முழக்கம், சுப்ஹானல்லாஹ்...!!!

    விமானம் முழுதும் வேறு எந்த ஓசையும் கேட்கவில்லை. இடைவிடாத, ஒன்றுபட்ட அந்த கூட்டு முழக்கம்... இறைவனுக்காக நம் அன்றாட சுகங்களைக்கூட‌ ஒறுத்து எந்த தியாகத்தையும் செய்ய நாம் தயாராக வந்துள்ளோம் என்ற எண்ணத்தை வலுவாக்கிக் கொண்டேயிருந்த‌து!! பல நாட்கள் கண்விழித்து செய்த முன்னேற்பாடுகளாலும், பல மைல் தூர பயண அசதியாலும் நம்மையும் மீறி உறக்கம் கண்களைத் தழுவ எத்தனித்தாலும், மனமோ "அந்த முழக்கத்தை சொல்..! சொல்..!" என‌ உதடுகளை எழுப்பி விட்டுக்கொண்டே இருக்கின்றன! களைப்புகள் களைந்து மீண்டும் மீண்டும் புத்துணர்ச்சியுடன்.. நினைவில் நனைந்த நாதங்களாக 'தல்பியா' முழக்கம் ஒலித்துக் கொண்டே இறை நினைவில் மனம் லயிக்கிறது!!! புதுவித உணர்வுகளைக் கொண்ட, சத்தியமான இந்த அனுபவத்தை பொருளுணர்ந்து மொழிந்த‌ ஒவ்வொரு ஹாஜிகளும் அனுபவித்தே இருப்பார்கள் என நினைக்கிறேன்.

ஜன்னலோரத்தில் அமர்ந்து, உலகின் முதல் இறை ஆலய‌ம்  அமையப் பெற்ற‌ அந்த அரேபிய பூமியை எட்டிப் பார்க்க பார்க்க.. இறையில்லத்தைக் காண நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என மனதில் சொல்ல முடியாத குதூகலம்.. கூடுதலான‌ இறையச்சத்துடன்!! இந்த வருடம் நம்மையும் தன் விருந்தாளியாக நம் இறைவன் அழைத்துள்ளானே என நினைத்து இது கனவா.. இல்லை நினைவா என்று இனம் புரியா பரவசம் உள்ளுக்குள் படர்கிறது!! விமானம் தரை இறங்க இறங்க உற்சாகம் மேலும் கூடுகிறது! சில விமானங்கள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் நம்மோடு போட்டி போட்டுக் கொண்டு வந்துக் கொண்டிருக்கின்றன.

'ஜித்தா' நகரில்தான் முத‌லில் இறங்கப் போகிறோம் என்று தெரிந்திருந்தாலும் மேலிருந்துக் கொண்டே பூமியை நோக்கி கண்கள் எதையோ ஆவலாய் தேடுகின்றன‌... இங்கிருந்தே ஒருமுறை பார்த்து விடமாட்டோமா என்று! எதைப் பார்க்க..?? பரந்து கிடக்கும் பசுமையினையோ, ஒரு சுற்றுலா தளத்தினையோ, வேறு எந்த அழகையோ கண்கள் தேடவில்லை. சின்னதாக தெரிந்தாலும் இப்போதே பார்க்கவேண்டும் அந்த இறை ஆலயத்தினை... என துள்ளும் மனம், கண்களுக்கு ஆணையிடுவதால் இந்த தேடுதல்! ம்ஹும்.. தெரியவே இல்லை :(( "கஃபாவுக்கு மேலதான் எதுவும் பறக்க அனுமதியில்லையே..!" - அப்போதுதான் சட்டென்று நினைவுக்கு வருகிறது. ஆக்கப் பொறுத்த நாம் ஆறப் பொறுப்போமே என சுய சமாதானம் செய்துக் கொண்ட சிறிது நேரத்தில், நம் அருமை நபி முஹம்மத்(ஸல்)  அவர்கள் பிறந்து.. வளர்ந்து.. வாழ்ந்து, எப்படி வாழவேண்டும் என்ற வாழ்வின் வழிமுறைகளையும் நமக்கு தந்துச்சென்ற‌ அந்த அரேபிய பூமியை விமானம் தொட்டு ஓடி நிற்கிறது. அந்த மண்ணில் காலடி வைக்கும்போது இத்தனை நாட்கள் இல்லாத கூடுதல் தெம்பு கூடிவிட்ட‌ உணர்வும் பிரயாணமே செய்யாதது போன்ற உற்சாகமும்!

    ஜித்தாவிலுள்ள‌ கிங் அப்துல் அஜீஜ் இன்டர்நேஷனல் ஏர்போர்ட்டின் ஹஜ் டெர்மினல். செகன்ட் ஃப்ளோரிலுள்ள‌ வெயிட்டிங் ஹாலில் நுழைந்ததும் அதன் கண்ணாடிச் சுவர் வழியே விமான தளத்தை திரும்பிப் பார்த்தால்... இரைதேட கூடியிருக்கும் பறவைகளைப் போல் எங்கு நோக்கினும் எண்ணிலடங்கா விமானக் கூட்டங்கள்! இன்னொரு பக்கம்... ஒன்று நகர இன்னொன்று வால் பிடித்தது போன்று வரிசையாக விமானங்கள் பின் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கின்றன உலகெங்கினுமுள்ள‌ ஹாஜிகளை சுமந்துக்கொண்டு! அநேகமாக உலகின் அத்தனை நாட்டு விமானங்களும் அங்கே ஆஜராகியிருக்க வேண்டும்!! விதிவிலக்காக எந்த நாடும் இருப்பதாக தெரியவில்லை. அதைப் பார்த்து ஆச்சரியப் பெருமூச்சுவிட்டு, 'வந்து இறங்கும் எல்லா ஹாஜிகளின் ஹஜ்ஜினையும் நீ ஏற்றுக்கொள்வாயாக ரஹ்மானே!' என துஆ செய்துவிட்டு நகர்ந்தோம். இதல்லாமல் மதீனா நகரின் விமான நிலையத்தில் வந்திறங்கியவர்களையும், கப்பல் வழி வந்தவர்களையும், தரை மார்க்கமாக வந்தவர்களையும் அந்த தேசம் வரவேற்றுக் கொண்டிருக்கும் அந்நேரம்!

ஸ்லாத்தின் இரண்டாவது கடமையான தொழுகையை பள்ளியில் மட்டும்தான் தொழவேண்டும் என்றில்லாமல்,

- எந்த இடத்திலும் தொழலாம்;
- தனியாகவோ, கூட்டாகவோ தொழலாம்;
- ஒளூ செய்ய தண்ணீர் இல்லையெனில் 'தயம்மும்' செய்து தொழலாம்;
- நின்று தொழ இயலவில்லையெனில் உட்கார்ந்தும் தொழலாம்;
- தொழுகையின் குறிப்பிட்ட‌ நேரத்தில் உறக்கமோ/மறதியோ ஏற்பட்டுவிட்டால் விழித்தவுடனோ/நினைவு வந்தவுடனோ தொழலாம்;
- பசி அதிகமாக இருந்தால் சாப்பாட்டிற்கு முதலில் முக்கியத்துவம் கொடுத்து பிறகு தொழலாம்;
- தூக்கம் நம்மை மிகுதியாக ஆட்கொண்டால் தூங்கி எழுந்து (அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள்) தொழலாம்

...... என்றெல்லாம் மனிதனின் இயலாமைக்கேற்ப சலுகையளித்துள்ள இறைவன், எந்த நேரத்திலும் எத்தகைய சூழ்நிலையிலும் அந்த 'தொழுகை' என்ற கடமையை தவறவிடவே கூடாது; ஒரு நாளைக்கு ஐவேளை தொழுதே ஆகவேண்டும் என்று கட்டளையிட்டிருப்பதால், கொடுக்கப்பட்டிருந்த வெயிட்டிங் ஹாலிலேயே லுஹர் & அஸரை சேர்த்து எல்லோரும் தொழுதாச்சு. ஒவ்வொரு விமானத்தினரும் விமான நிலையத்தின் கீழ்தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் அடுத்த விமானத்தின் ஹஜ் பயணிகள் உள்ளே வரவழைக்கப்படுகின்றனர்.கீழ்தளத்திலுள்ள இமிகிரேஷனுக்கு ஸ்லோப்பில் இறங்கிச் செல்லும் ஹாஜிகள்உயரமான, வெள்ளைநிற பெரிய பெரிய கூடாரங்களுக்குள் காத்திருந்து, இமிகிரேஷன் முடிந்துவிட்டதால் இன்னும் கொஞ்ச நேரத்தில் நம்மை மக்காவுக்கு அழைத்துச் செல்வார்கள் என ஒரு மனக்கணக்குப் போட்டு எதிர்ப்பார்த்திருந்த நேரத்தில், அழைத்துச் செல்லாமல் மிக நீண்ட நேரம் காத்திருக்க வைத்தது சற்று ஏமாற்றமாக இருந்தது. வந்திறங்கி கிட்டத்தட்ட 10 மணி நேரம் காத்திருந்தது மனதாலும் உடலாலும் எல்லோருக்கும் சோர்வாகிப் போனது. ஆனால் அங்கே யாரை சொல்லியும் குற்றமில்லை. யார் மீதும் யாரும் வருத்தப்படவுமில்லை. ஏனெனில் சோர்வு என்பது இயற்கையாக இருந்தாலும் அதையும் சகித்துக் கொள்ள வந்தவர்கள் ஹாஜிகள்! எனவே ஒரே இடத்தில் அமர்ந்து காத்திருப்பதால் சோர்வு ஏற்பட்டாலும் அத்தனை பேரும் அழகான முறையில் பொறுமைக் காத்தனர்!! வயதான/மிக பலஹீனமான‌ ஒருசிலர் மட்டுமே அமர்ந்த இடத்திலேயே அசந்து தூங்கிக் கொண்டிருக்க, அவரவரும் தங்கள் வாய்க்குள்ளே 'தல்பியா' முழங்கிக் கொண்டிருப்பதில் மட்டும் சளைக்கவில்லை!

    ர்போர்ட்டில் ஆரம்பித்து, ஒரு மாதத்திற்கு மேலாக பாதுகாத்து, இலவசமாக வசதி வாய்ப்புகள் செய்துக் கொடுத்து, மீண்டும் ஏர்போர்ட்டிலிருந்து அனுப்பி வைக்கும் வரை.. உலகின் எந்தவொரு இடத்திலும் கூடியிராத லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தினை (ஹஜ்ஜுக்காக) வருடா வருடம் சவூதி அரசாங்கம் எப்படிதான் சமாளிக்கிறதோ.. அல்லாஹ் அக்பர்!! இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் மாபெரும் உதவி அவர்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது என்பது கண்கூடாகத் தெரிகிறது. ஒவ்வொருவரையும் பாஸ்போர்ட்டுடன் சரிபார்த்து, அவர்கள் வழிதவறி விடாமல் இருப்பதற்காக‌ வாட்டர் ப்ரூஃப் வாட்ச் டேக் (Watch Tag/Waterproof Wristband) ஒன்றினை ஒவ்வொருவருக்கும் கொடுக்கச் சொல்லி அவர்களை அழைத்து வந்த கைடுகளிடம் தந்து, இயன்றவரை ஒவ்வொரு விஷயத்திலும் கூடுதல் கவனமும் சிரத்தையும் எடுத்துக் கொள்கிறது சவூதி அரசாங்கம்!

நல்ல தரமான/சுத்தமான உணவுகள், குளிர் பானங்கள், டீ - காஃபி போன்ற சூடான வகைகள், பிஸ்கட் - சாண்ட்விச் ஐட்டங்கள் மற்றும் பழ சாலட்கள் என பசி தீர போதுமான அனைத்தும் ('ஏர்போர்ட் விலை அதிகமாக இருக்குமே' என யோசிக்க‌ தேவையில்லாத அளவுக்கு) ஓரளவு நியாயமாகவே கிடைத்ததால் அனைவரும் நிம்மதியாக இரவு வேளை உணவுகளையும் முடித்துக் கொண்டனர். மதியம் (சவூதி நேரம்) 1:30 மணிக்கு இறங்கிய (ஃபிரான்ஸ்) ஹாஜிகள் மஃரிப் & இஷா தொழுகைகளையும் நிறைவேற்றிய பிறகு ஒருவழியாக இரவு 11 மணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏசி கோச் பஸ்ஸில் ஏற அனுமதிக்கப்பட்டனர். எல்லோருடைய லக்கேஜ்களையும் அதற்கான பணியாட்க‌ள் வைத்து பேருந்தில் ஏற்றி, பாதுகாப்பாக தார் ஷீட் போட்டு கட்டி முடிப்பதற்கு கூடுதலாக ஒரு மணி நேரம் ஓடிவிட்டது.

அந்த நள்ளிரவு நேரத்திலும், அதிக சோர்வடைந்த அந்த பயணத்திலும் அந்த இதமான ஏசி நம்மை தூங்கச் சொல்லி தாலாட்டினாலும் மக்காவை நோக்கி பேருந்து நகர ஆரம்பிப்பதால் எங்கிருந்தோ மீண்டும் உற்சாகம் வந்து ஒட்டிக் கொள்கிறது! கூட்டு தல்பியா முழக்கம் தொடர்கிறது! 'மக்கா நகர் வரும்வரை மட்டும்தானே 'தல்பியா' சொல்லமுடியும்... அதனால் இயன்ற மட்டும் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும்' என சபதமெடுத்த மனம் தூக்கத்தை விரட்டுகிறது! அதையும் மீறி 'நாம் பலஹீனமாக படைக்கப்பட்ட மனித இனமே; நம்மைப் படைத்த இறைவன் மாத்திரமே என்றும் உறங்காதவன்' என்பதை நினைவூட்டும் விதமாக‌ சில நொடிகள் அல்லது சில நிமிடங்க‌ளுக்கு தூக்கம் நம்மை மிகைத்து கண் அயர வைக்கதான் செய்கிறது :(
وَخُلِقَ الْإِنسَانُ ضَعِيفًا
"மனிதன் பலஹீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்." (அல்குர்ஆன் 4:28)

எப்படியோ தூக்கத்துடனும் அசதியுடனும் அவ்வப்போது போராடி விழித்து, ஜெயித்துக் கொண்டிருக்கின்றனர் ஹாஜிகள்! அகலமான ஒருவழி சாலை (one way) களில் மக்காவை நோக்கி பஸ்களும் பலவித வாகனங்களும் விரைந்துக் கொண்டிருக்கின்றன. மக்காவிற்கு இன்னும் எத்தனை கிலோ மீட்டர் என்பதை (வழக்கமான) சாலையோர‌ அறிவிப்புப் பலகைகள் தெரிவித்தாலும், மக்கா நகரின் ஆரம்ப எல்லையின் தூரத்தையும் அவ்வப்போது சொல்லிக் கொண்டே வருகின்றன சில துணைப் பலகைகள். ஜித்தா நகரிலிருந்து மக்கமா நகருக்கு 70-73 கி.மீ. தூரம் இருக்கும். சுமார் 50-55 கி.மீட்டர் தாண்டியதும் மக்காவின் எல்லை ஆரம்பமாகிறது. காட்டப்படும் கிலோ மீட்டரின் எண்ணிக்கையை கவுன்ட் டவுனில் பார்த்துக் கொண்டே மக்காவை நெருங்கிக் கொண்டு வர.. கொஞ்ச நஞ்ச தூக்கக் கலக்கமும் பற‌ந்து கண்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன! இதோ... சற்று தூரத்தில் அழகிய மின் அலங்காரத்தோடு கூடிய‌ ஆர்ச் ஒன்று மக்காவின் எல்லை வந்துவிட்டதை அடையாளம் காட்டுகிறது.

படங்கள்: இணையம்

(தொடர்ச்சி.. இன்ஷா அல்லாஹ் விரைவில்)

16 comments:

 1. 'மக்கா நகர் வரும்வரை மட்டும்தானே 'தல்பியா' சொல்லமுடியும்...

  ஏன் ஸாதிகா மக்கா நகர் வந்துட்டா “த்ல்பியா” சொல்ல முடியாதா? தல்பியாவின் அர்த்தமும் சொன்னதால நான்றாக புரிந்து ரசிக்க முடிகிரது.படங்களும் விளக்கங்களும் ரொம்ப சிறப்பாக இருக்கு.

  ReplyDelete
  Replies
  1. //ஏன் ஸாதிகா மக்கா நகர் வந்துட்டா “த்ல்பியா” சொல்ல முடியாதா?//

   லஷ்மிம்மா..! நான் ஸாதிகா அக்கா இல்ல :) சரி பரவாயில்ல, அவங்க தங்கைதானே நான்.. :‍)

   மக்கா நகர் வந்துட்டா தல்பியாவை நிறுத்திடணும் என்பது முஹம்மத் நபியவர்களின் வழிகாட்டல் லஷ்மிம்மா. பிறகு மீண்டும் ஹஜ்ஜுக்கான கிரியைகள் ஆரம்பிக்கும்போதுதான் சொல்லணும்.

   //தல்பியாவின் அர்த்தமும் சொன்னதால நான்றாக புரிந்து ரசிக்க முடிகிரது.படங்களும் விளக்கங்களும் ரொம்ப சிறப்பாக இருக்கு//

   தல்பியாவின் அர்த்தத்தை ரசித்தமைக்கு நன்றி லஷ்மிம்மா. படங்கள் இணையத்திலிருந்து எடுத்ததுதான். அந்த உணர்வு பூர்வமான நேரங்களில் க்ளிக் பண்ண நினைவு வருவது ரொம்ப அரிது! தங்களின் வருகைக்கு நன்றி லஷ்மிமா :)

   Delete
 2. அஸ்ஸலாமு அலைக்கும் அஸ்மா.ஹரத்தில் வைத்து என்ன சொன்னீர்கள்?ஸாதிகா அக்கா ஏதோ ஹஜ்ஜைபற்றி எழுதுவேன்.ஆனால் உங்கள் அளவுக்கெல்லாம் எழுத இயாலாது என்று.இப்ப நானே வாயைபிளக்கும் அளவு ஒரு கைதேர்ந்த எழுத்தாளரைப்போல் உணர்வுகளை ,மனதில் கொணர்ந்து அதனை வரிசையாக மூளைக்கு செலுத்தி அழகான வார்த்தைக்கோர்வைக‌ளுடன் எதையும் மறந்துவிடாமால் விட்டு விடாமல் உணர்வுப்பூர்வமாக எழுதி ஆச்சரிய வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.அல்ஹம்துலலில்லாஹ்.தொடர்ந்து எழுதுங்க அஸ்மா.சுஹைனா ஹஜ் விளக்கம் என்று 42 பகுதிகளாக எழுதியது போல் நீங்களும் எழுதி இனி ஹஜ்ஜுக்கு செல்லும் ஹஜ்ஜாளிகள் ஒவ்வொருவரும் உங்கள் பகிரவை படித்து விட்டு செல்லவேண்டுமதற்கு உங்கள் பகிர்வு உதவுகரமாக இருக்க வேண்டுமென்பதே என் அவா..

  தங்கைக்கு இனிய வாழ்த்துகக்ள்.

  ReplyDelete
  Replies
  1. வஅலைக்குமுஸ்ஸலாம் ஸாதிகா லாத்தா.

   //ஸாதிகா அக்கா ஏதோ ஹஜ்ஜைபற்றி எழுதுவேன்.ஆனால் உங்கள் அளவுக்கெல்லாம் எழுத இயாலாது என்று//

   ஆமா.. அக்கா சொல்லிட்டா தங்கை எழுதாம இருக்கலாமான்னு சரி எழுதுறேன்னு சொன்னேன்:) அதுக்காக உங்க அளவுக்கு எழுதணும்னா இன்னும் ட்ரைனிங் வேணும் ஸாதிகா லாத்தா, இன்ஷா அல்லாஹ். அததான் அங்க சொன்னேன் :)

   //இப்ப நானே வாயைபிளக்கும் அளவு ஒரு கைதேர்ந்த எழுத்தாளரைப்போல் உணர்வுகளை ,மனதில் கொணர்ந்து அதனை வரிசையாக மூளைக்கு செலுத்தி அழகான வார்த்தைக்கோர்வைக‌ளுடன் எதையும் மறந்துவிடாமால் விட்டு விடாமல் உணர்வுப்பூர்வமாக எழுதி ஆச்சரிய வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.அல்ஹம்துலலில்லாஹ்.தொடர்ந்து எழுதுங்க அஸ்மா//

   என் தகுதிக்கு மீறி இருக்கு ஸாதிகா லாத்தா நீங்க சொல்றது :):) இருந்தாலும் தொடர்ந்து எழுத முயற்சி செய்கிறேன், இன்ஷா அல்லாஹ்.

   //சுஹைனா ஹஜ் விளக்கம் என்று 42 பகுதிகளாக எழுதியது போல் நீங்களும் எழுதி இனி ஹஜ்ஜுக்கு செல்லும் ஹஜ்ஜாளிகள் ஒவ்வொருவரும் உங்கள் பகிரவை படித்து விட்டு செல்லவேண்டுமதற்கு உங்கள் பகிர்வு உதவுகரமாக இருக்க வேண்டுமென்பதே என் அவா..

   தங்கைக்கு இனிய வாழ்த்துகக்ள்//

   தங்களின் ஆவல்படி இன்ஷா அல்லாஹ் அனைவருக்கும் பயனுள்ளதாக இந்த பதிவுகள் அமைய இறைவன் உதவி செய்வானாக! உற்சாகமூட்டும் தங்களின் பின்னூட்டத்திற்கும், வாழ்த்துக்கும், உடன் வருகைக்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா :)

   Delete
 3. அஸ்மா ஸாதிகா ஹஜ் போய் வந்து பயணத்தொடர் எழுத ஆரம்பிச்சிருந்தா இல்லியா அதையே நினச்சுண்டு படிச்சேனா, உன் பேரு பாக்கலேம்மா ஸாரி. நல்ல விஷயங்களை யார் மூலமாக தெரிஞ்சுண்டாலும் நல்லதுதானே. உங்க பழக்க வழக்கங்களும் பத்தி நல்லா தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம்தான்.அதுவும் ஹஜ் யாத்திரை பத்தி பூரா விஷயங்களும் தெரிஞ்சுக்க ஆசை.

  ReplyDelete
  Replies
  1. //அஸ்மா ஸாதிகா ஹஜ் போய் வந்து பயணத்தொடர் எழுத ஆரம்பிச்சிருந்தா இல்லியா அதையே நினச்சுண்டு படிச்சேனா, உன் பேரு பாக்கலேம்மா ஸாரி//

   அதனால ஒண்ணும் பிரச்சனை இல்ல லஷ்மிம்மா :) அம்மா மாதிரி உள்ள நீங்க எதுக்கு ஸாரிலாம் கேட்டுட்டு? :) நீங்க கவனிக்காம பெயர்ல‌ கன்ஃப்யூஸ் ஆகிட்டீங்கன்னு புரிஞ்சுதான் உங்களுக்கு சுட்டிக்காட்டினேன். மற்றபடி உங்கள் வருகை ரொம்ப சந்தோஷமே :-)

   //நல்ல விஷயங்களை யார் மூலமாக தெரிஞ்சுண்டாலும் நல்லதுதானே. உங்க பழக்க வழக்கங்களும் பத்தி நல்லா தெரிஞ்சுக்கணும்னு ஒரு ஆர்வம்தான்.அதுவும் ஹஜ் யாத்திரை பத்தி பூரா விஷயங்களும் தெரிஞ்சுக்க ஆசை//

   உங்கள் ஆர்வமே எங்கள் உற்சாகம் :-) உங்களுக்கு நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க லஷ்மிமா. இயன்றவரை எல்லா விஷயங்களையும் நீங்க எல்லோரும் தெரிஞ்சிக்கிற மாதிரி கொடுக்க முயற்சி செய்கிறேன். (இறைவன் நாடினால்) :)

   Delete
 4. சலாம்! அழகாக கோர்வையாக உங்களின் பயண அனுபவத்தை மாற்று மதத்தவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் தருவது மகிழ்ச்சியளிக்கிறது. தொடருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. சலாம் சகோ!

   //அழகாக கோர்வையாக உங்களின் பயண அனுபவத்தை மாற்று மதத்தவரும் விளங்கிக் கொள்ளும் வகையில் தருவது மகிழ்ச்சியளிக்கிறது. தொடருங்கள்//

   உங்களின் தொடர்ச்சியான ஊக்கத்திற்கு ஜஸாகல்லாஹ் ஹைரா! :)

   Delete
 5. மாஷா அல்ல்லாஹ்... முக்கிய நிகழ்வுகளை மட்டுமே எழுதுவீங்கன்னு நினைத்தேன்.... ஒவ்வொரு நிமிடத்தில் நடந்ததையும் அதற்கேற்ற உங்களின் உணர்வுகளையும் படிக்கும்போது ஹஜ் பயணத்தின்பொது நடப்பவற்றை நன்கு virtual modeல் அழகாக உணர முடிகிறது. நன்றிக்கா.

  ReplyDelete
  Replies
  1. //ஒவ்வொரு நிமிடத்தில் நடந்ததையும் அதற்கேற்ற உங்களின் உணர்வுகளையும் படிக்கும்போது ஹஜ் பயணத்தின்பொது நடப்பவற்றை நன்கு virtual modeல் அழகாக உணர முடிகிறது. நன்றிக்கா//

   அல்ஹம்துலில்லாஹ். முடிந்தவரை இன்ஷா அல்லாஹ் எழுதுகிறேன். உங்கள் ஆர்வத்திற்கும் வருகைக்கும் ஜஸாகல்லாஹ் பானு :)

   Delete
 6. அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹ்......
  அல்ஹம்துலில்லாஹ் இந்த தொடரை வாசிக்கும் பொது
  நானும் சேர்ந்தே பயணிப்பதுபோல் உணருகிறேன்...
  சஜாக்கல்லாஹ் ஹைர்...

  ReplyDelete
  Replies
  1. வ‌அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்.

   //அல்ஹம்துலில்லாஹ் இந்த தொடரை வாசிக்கும் பொது
   நானும் சேர்ந்தே பயணிப்பதுபோல் உணருகிறேன்...//

   தொடர்ந்து படிங்க சகோ. உங்கள் முதல் வருகைக்கும் கருத்திற்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா.

   Delete
 7. ஒரு கைதேர்ந்த எழுத்தாளரைப்போல் உணர்வுகளை ,மனதில் கொணர்ந்து அதனை வரிசையாக மூளைக்கு செலுத்தி அழகான வார்த்தைக்கோர்வைக‌ளுடன் எதையும் மறந்துவிடாமால் விட்டு விடாமல் உணர்வுப்பூர்வமாக எழுதி ஆச்சரிய வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டீர்கள்.அல்ஹம்துலலில்லாஹ்/ அஸ்மாக்கா சிறந்த உஸ்தாதும் கூட ஸாதிக்காக்கா.. அவங்க கைதேர்ந்து எழுதுவதில் ஆச்சர்யமேயில்லை. ஏன்னா அவங்க டீச்சரம்மாவுல்ல அதானலாதான்க்கா..

  மாசா அல்லாஹ் அக்கா வெகு அருமையான எழுதுறீங்க ஹஜ்ஜுக்கு போகாதவங்களையும் போகதூண்டும் எழுத்துக்களக்கா.

  தொடர்ந்து எழுதுங்கள் அடுத்த பதிவை பஃஹ்ரைனில் இருந்து படிக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

  ReplyDelete
  Replies
  1. //ஏன்னா அவங்க டீச்சரம்மாவுல்ல அதானலாதான்க்கா..//

   அப்படியா..?? :)))

   //ஹஜ்ஜுக்கு போகாதவங்களையும் போகதூண்டும் எழுத்துக்களக்கா//

   போகாத அனைவருக்கும் அந்த பாக்கியம் கிடைக்கட்டும், இன்ஷா அல்லாஹ். இதன் மூலம் ஒருசிலர் பயனடைந்தாலும் (அல்ஹம்துலில்லாஹ்) சந்தோஷமே!

   நல்லபடியாக பஃஹ்ரைன் சேர்ந்து பொறுமையா படி மலிக்கா. பயண நேரத்திலும் வந்து படித்து கருத்திட்டதற்கு ஜஸாகல்லாஹ் ஹைரா :)

   Delete
 8. அஸ்ஸலாமு அழைக்கும் வர்ஹமதுல்லாஹ்,

  மாஷா அல்லாஹ் அருமையான தொடர் சகோ.

  உங்களுடன் சேர்ந்து நாங்களும் மக்காவிற்கு பயணித்தது போல் ஓர் மெய்சிலிர்க்கும் உணர்வு ஏற்படுகிறது அல்ஹம்துலில்லாஹ். அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறேன் சகோ.

  ReplyDelete
  Replies
  1. வஅலைக்குமுஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹ்.

   //உங்களுடன் சேர்ந்து நாங்களும் மக்காவிற்கு பயணித்தது போல் ஓர் மெய்சிலிர்க்கும் உணர்வு ஏற்படுகிறது//

   அல்ஹம்துலில்லாஹ்! :)

   //அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்ப் பார்க்கிறேன் சகோ.//

   நிச்சயம் வந்து படிங்க சகோ, இன்ஷா அல்லாஹ். வருகைக்கும் கருத்திற்கும் ஜஸாகல்லாஹ் ஹைரா.

   Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!