கேள்வி:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விற்பனைப் பொருட்களை வாங்கலாமா?
சென்ற வாரம் ஒரு குத்பா உரையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விற்பனைப் பொருட்களை வாங்கக்கூடாது என்றும், அது நாம் அந்தக் கொண்டாட்டங்களை ஆதரிப்பது போலாகும் என்றும் அந்த இமாம் கூறியதாகக் கேள்விப்பட்டேன். ஆனால் எங்களுக்கு அந்தக் கொண்டாட்டம் பற்றிய எண்ணம் இல்லை; எப்போதும் அதுபோன்ற விற்பனைகள் வரும்போது குறைந்த விலையில் வாங்கும் எண்ணம்தான்.
எனது கேள்வி என்னவென்றால், அந்த விற்பனைப் பொருட்களை நாம் வாங்கலாமா? அல்லது அப்படி வாங்கினால் அந்தக் கொண்டாட்டங்களை ஆதரிப்பதாக ஆகுமா?
Can we buy Christmas New Year's sale items?
Last week, I've heard in khutbah's speech that Imam said we shouldn't buy Christmas and New Year's sale items. It's like we are supporting those celebrations. But we don't think about it, anytime when it comes sale we think about low prices to buy it.
My question is, can we buy those sale items, or are they considered supporting those celebrations?
பதில்:
உலகெங்கிலும் உள்ள பெரிய வியாபாரத் தளங்கள், வணிக வளாகங்கள் முதல் சிறு தெருக் கடைகள் வரை, எல்லா மதக் கொண்டாட்ட காலகட்டங்களிலும் பலவிதமான விற்பனைகள் நடப்பதுண்டு. அவற்றில் தங்கள் வியாபாரத்தை அதிகளவில் பெருக்கிக் கொள்ளும் விதமாக, தங்கள் பொருட்களுக்கு வழக்கத்திற்கு மாற்றமான விசேஷ காலத் தள்ளுபடிகளைச் செய்து மக்களை ஊக்குவித்து, 'வியாபார விழா' போன்றும் நடத்துகிறார்கள்.
இப்படியான வியாபாரங்கள் பிறமத திருவிழாக்களில் நடந்தாலும், அவை மத அடிப்படையில் இல்லாமல் எல்லா மக்களுக்கும் பொதுவாக, வணிக நோக்கத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டுதான் நடத்தப்படுகின்றன. இதில் இஸ்லாமிய மக்களால் நடத்தப்படும் வியாபாரங்களும் அடங்கும். ரமலான் சிறப்புத் தள்ளுபடி வியாபாரங்கள் மட்டுமின்றி, கந்தூரி (உரூஸ்), சந்தனக்கூடு போன்ற மார்க்கத்திற்கு முரணான கொண்டாட்டங்களின்போதும் இதுபோன்று பிரத்யேகமான வியாபாரங்கள் நடக்கும்.
அந்த சமயங்களில் நாம் அந்த வியாபாரத் தளங்களுக்குச் சென்று அங்குள்ள பொருட்களை வாங்கினால், நாமும் அந்தக் கொண்டாட்டங்களை ஆதரிப்பது போலாகிவிடுமா என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் உள்ளது. இத்தகைய கொண்டாட்டங்களை அடிப்படையாக வைத்து விற்கப்படும் பொருட்களை வாங்கக்கூடாது என்று சிலர் கூறினாலும், அதற்கு நாம் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் மட்டுமே தீர்வு காணவேண்டும்.
ஒரு முஸ்லிம் எத்தகைய தீமையான காரியத்திற்கும், வரம்பு மீறும் விஷயங்களிலும் துணைப்போகக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.
"நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்!" (அல்குர்ஆன் 5:2)
பாவமான காரியங்களுக்கு உதவக்கூடாது என்பதில் யாருக்கும், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் தீமையான காரியங்களுக்கு உதவுவது என்பதைப் புரிந்து கொள்வதில்தான் கருத்து வேறுபாடும், சிலரிடத்தில் தெளிவின்மையும் உள்ளது.
'தீமைக்குத் துணை போகக்கூடாது' என்று கூறும் மேற்கண்ட இறைவசனத்தில், நன்மைக்கு உதவுமாறும் கூறப்படுகிறது. 'நன்மைக்கு உதவுதல்' என்பதை எவ்வாறு நாம் புரிந்துக் கொள்கிறோமோ அவ்வாறுதான் 'தீமைக்குத் துணை செய்தல்' என்பதையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
உதாரணமாக, மார்க்க விளக்க மாநாடுகள், மத்ரஸா பட்டமளிப்பு விழாக்கள் போன்று நன்மையான காரியங்களுக்காக மக்கள் கூடும் இடங்களில் பல வியாபாரிகள் கடை போடுவார்கள்.
இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்களுடைய வருமானத்திற்காக, இலாப நோக்கத்தில் கடை போடுவார்களே தவிர, மார்க்க நிகழ்ச்சியின் நன்மையைத் நாடி வியாபாரம் செய்கிறார்கள் என்ற அடிப்படையில் நாம் புரிந்துக் கொள்ளமாட்டோம்.
அதேபோல்தான், பிற மதக் கொண்டாட்டங்கள் மற்றும் மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கும் இடங்களில் ஒருவர் ஹலாலான முறையில் வியாபாரம் செய்தால் அல்லது அங்கு போடப்படும் கடைகளில் ஒரு பொருளை வாங்கினால், அவர் அந்தத் கொண்டாட்டங்களை ஆதரித்தவராக ஆகமாட்டார்.
நன்மையை நாடி ஒன்றை செய்வது என்பதை நாம் எப்படி விளங்கிக் கொள்கிறோமோ அதுபோன்றுதான், எவையெல்லாம் தீமைக்கு துணைப் போவது, மார்க்க முரணானவற்றை ஆதரிப்பது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில், மக்காவில் உகாள், துல்மஜாஸ் போன்ற சந்தைகள் குறிப்பிட்ட நாட்களில் திறக்கப்படும். அவை சந்தைகளாக மட்டும் இல்லாமல், அங்கு சிலை வணக்கம் உட்பட கூத்து, கும்மாளங்கள் அனைத்தும் நடைபெறும் இடமாகவும் இருந்தது.
அந்தச் சந்தைகளில் ஸஹாபாக்கள் வியாபாரம் செய்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை. அங்குச் சென்று முஸ்லிம்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும் தடை விதிக்கவில்லை.
صحيح البخاري (2/ 181)
1770 – حَدَّثَنَا عُثْمَانُ بْنُ الهَيْثَمِ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ، قَالَ عَمْرُو بْنُ دِينَارٍ قَالَ: ابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: "كَانَ ذُو المَجَازِ، وَعُكَاظٌ مَتْجَرَ النَّاسِ فِي الجَاهِلِيَّةِ، فَلَمَّا جَاءَ الإِسْلاَمُ كَأَنَّهُمْ كَرِهُوا ذَلِكَ، حَتَّى نَزَلَتْ: {لَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَنْ تَبْتَغُوا فَضْلًا مِنْ رَبِّكُمْ} [البقرة: 198] فِي مَوَاسِمِ الحَجِّ"
"துல்மஜாஸ், உக்காள் ஆகியவை அறியாமைக்கால வியாபாரத் தலங்களாகும். இஸ்லாம் தோன்றியதும் மக்கள் அவ்வியாபாரத் தலங்களை வெறுக்கலானார்கள். அப்போது (ஹஜ்ஜின்போது) 'உங்கள் இறைவனுடைய அருளை நாடுதல் (அதாவது வியாபாரம் போன்றவற்றின் மூலமாக நேர்மையான பலன்களை அடைதல்) உங்கள் மீது குற்றமாகாது' என்ற 2:198 - ஆவது வசனம் அருளப்பெற்றது. இது ஹஜ்ஜுக் காலங்களில் வியாபாரம் செய்வதைக் குறிக்கின்றது."
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புஹாரி (1770)
உகாள், துல்மஜாஸ் போன்ற வியாபாரத் தலங்களில் பலவிதமான பாவ காரியங்கள் நடைபெற்றிருந்தும்கூட, அங்கு வாங்குவதற்கும் விற்பதற்கும் மார்க்க அனுமதி இருந்தது என்பதை மேற்கண்ட செய்தி கூறுகிறது.
எனவே இஸ்லாம் தடுத்துள்ள வகையிலான நிகழ்ச்சிகள், அனுமதிக்கப்படாத கொண்டாட்டங்கள் போன்றவை நடக்கும் இடங்களில் நாம் ஹலாலான முறையில் வியாபாரம் செய்தாலோ அல்லது அதுபோன்ற இடங்களுக்குச் சென்று ஒரு பொருளை வாங்கினாலோ, அங்கு நடப்பவற்றை நாம் ஆதரித்ததாக ஆகாது என்பதை நாம் மிகத் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.
அதேசமயம், 'அனுமதிக்கப்பட்டது' என்றால் கட்டாயம் அதை செய்துதான் ஆகவேண்டும் என்பது கிடையாது. எனவே, தீமையான காரியங்கள் நடக்கும் இடத்தில் ஒருவர் வாங்குவதும், விற்பதும் தவறில்லை என்றாலும், அங்கு நடக்கும் தீமையானவற்றில் தானும் வீழ்ந்துவிடாமல் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
நம்முடைய ஈமானுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றால் அதுபோன்ற நிலைகளில் நாம் அவற்றை விட்டும் விலகிக் கொள்வதே சிறந்ததாகும். எந்த வகையிலும் அந்தக் கொண்டாட்டங்கள் நம்மைப் பாதிக்காது, அவர்களுடன் நாமும் கலக்கமாட்டோம் என்ற உறுதியான நிலையில் இருக்கிறோமா என்பதை யோசித்துக் கொள்ள வேண்டும்.
صحيح البخاري (1/ 20)
52 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: ” الحَلاَلُ بَيِّنٌ، وَالحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشَبَّهَاتٌ لاَ يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى المُشَبَّهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ: كَرَاعٍ يَرْعَى حَوْلَ الحِمَى، يُوشِكُ أَنْ يُوَاقِعَهُ، أَلاَ وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمًى، أَلاَ إِنَّ حِمَى اللَّهِ فِي أَرْضِهِ مَحَارِمُهُ، أَلاَ وَإِنَّ فِي الجَسَدِ مُضْغَةً: إِذَا صَلَحَتْ صَلَحَ الجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ فَسَدَ الجَسَدُ كُلُّهُ، أَلاَ وَهِيَ القَلْبُ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அனுமதிக்கப்பட்டவையும் மிகத் தெளிவானவை. மேலும் அனுமதிக்கப்படாதவையும் தெளிவானவையாய் இருக்கின்றன. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்கு இடமானவையும் இருக்கின்றன. அவற்றை மக்களில் அதிகம் பேர் அறியமாட்டார்கள். எனவே, எவர் சந்தேகத்திற்கு இடமானவற்றைத் தவிர்த்துக் கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார்; மானத்தையும் காப்பாற்றிக் கொள்கிறார். எவர் சந்தேகத்திற்கிடமானவைகளில் தலையிடுகிறாரோ அவர், (அனுமதிக்கப்படாதவைகளில் தலையிடுகிறார்.) வேலியோரங்களில் (கால்நடைகளை) மேய்ப்பவர் வேலிக்குள்ளேயே (கால்நடைகளை) மேயவிட நேரும். எச்சரிக்கை! ஒவ்வொரு மன்னனுக்கும் ஓர் எல்லை இருக்கின்றது. அல்லாஹ்வின் நாட்டில் அவனது எல்லை (வேலி) அவனால் தடைவிதிக்கப்பட்டவையே. அறிக: உடலில் ஒரு சதைத் துண்டு இருக்கிறது. அது சீர்பெற்றுவிட்டால் உடல் முழுவதும் சீர்பெற்றுவிடும். அது சீர்குலைந்துவிட்டால் முழு உடலும் சீர்குலைந்துவிடும். அறிந்துக் கொள்ளுங்கள்! அதுதான் உள்ளம்."
அறிவிப்பவர்: நுஅமான் பின் பஷீர் (ரலி)
நூல்: புஹாரி (52)
நம்முடைய கால்நடை பிறருடைய வேலிக்குள் சென்று மேய்வது ஹராமானதாகும். அதேநேரத்தில் வேலிக்கு அருகில் மேய்ந்தால் அது ஹராமானது கிடையாது.
வேலிக்குள் செல்லாமல் அருகில்தான் மேயும் என்று நாம் பாராமுகமாக இருந்தால் நம் கால்நடை பிறரின் வேலியைத் தாண்டியும் சென்றுவிடும்.
அதுபோன்றுதான் பிற மதக் கொண்டாட்டங்கள், ஹராமான தர்ஹா வழிபாடு, அநாச்சாரங்கள் போன்ற பாவமான காரியங்கள் நடக்கும் இடங்களில் நாம் எந்தத் தவறிலும் பங்கேற்காமல் வியாபாரம் செய்தால் அல்லது அங்குள்ள கடைகளில் ஒரு பொருள் வாங்கினால் அது தவறு கிடையாது. ஆனால் இது வேலிக்கு அருகில் மேய்கின்ற கால்நடையின் நிலையைப் போன்றதுதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்!
வேலிக்குள் நுழையவே முடியாத இடத்தில் நம்முடைய கால்நடையை மேயவிட்டால் அது நுழைந்துவிடும் என்பதைப் பற்றி நாம் கவலைப்படவேண்டிய அவசியமில்லை.
அதுபோன்று பாவமான காரியங்கள் நடக்கும் இடங்களை விட்டும் நாம் முடிந்தவரை தூர விலகி, அந்த இடங்களைத் தவிர்ந்துக் கொண்டால், அவர்களுடைய கொண்டாட்டங்களில் நாம் கலப்பதை விட்டும், நம்முடைய ஈமானுக்கு பாதிப்பு ஏற்படுவதை விட்டும் நம்மை நாம் தற்காத்துக் கொள்ளலாம்.
அல்லாஹுதஆலா தனது திருமறையிலே கூறுகிறான்:
"அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும்வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான்." (அல்குர்ஆன் 4:140)
இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த இடங்களுக்குச் சென்று வாங்கும் பொருட்களில் சிலர் அலட்சியம் செய்கின்றனர். அதாவது,
தடை செய்யப்பட்ட பொருட்களைப் பயன்படுத்துவது எவ்வாறு தடை செய்யப்பட்டுள்ளதோ அதுபோல் அதை வாங்குவதும், விற்பதும் மார்க்கத்தில் தடுக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, பிற மதம் சார்ந்த விளையாட்டுப் பொருட்கள், அவர்கள் கடவுள் தன்மை இருப்பதாக நினைக்கும் பொருட்கள் போன்றவற்றை விற்பதோ, குழந்தைகளுக்காக அல்லது பிற மதத்தவர்களுக்கு அன்பளிப்பு செய்வதற்காக என்று சொல்லி வாங்குவதோ கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, "நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!" என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம்,
"அல்லாஹ்வின் தூதரே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன; தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகின்றது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; ஆகவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!" எனக் கேட்கப்பட்டது.
அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கூடாது! அது ஹராம்!" எனக் கூறினார்கள். மேலும் தொடர்ந்து,
"அல்லாஹ் யூதர்களைத் தனது கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அல்லாஹ் யூதர்களுக்குக் கொழுப்பை ஹராமாக்கியபோது, அவர்கள் அதை உருக்கி, விற்று, அதன் கிரயத்தைச் சாப்பிட்டார்கள்!" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: புஹாரி (2236)
Jazakillah khair 👍
ReplyDeleteவஅன்த்தி ஃபஜஸாக்கில்லாஹு ஹைரா 🙂
DeleteJazakillah khair 👍
ReplyDelete