அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Thursday 26 October 2023

ஒரு பெண்ணுக்கு யாரெல்லாம் மஹ்ரமான உறவுகள்?

மனிதர்களிடையே இரண்டு வகையான உறவுகளை ஏற்படுத்தியிருப்பதாக அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான்.

1) இரத்த சம்பந்தப்பட்ட உறவு

2) திருமண சம்பந்தமான உறவு

"அவனே தண்ணீரால் மனிதனைப் படைத்தான். அவனுக்கு இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளையும், திருமண உறவுகளையும் ஏற்படுத்தினான். உமது இறைவன் ஆற்றலுடையவனாக இருக்கிறான்." (அல்குர்ஆன் 25:54)

முதல் வகை உறவுகளான இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளை ஏற்படுத்துவதே திருமண உறவுதான். திருமண உறவால் ஏற்படும் சந்ததிகளுக்கு தாய்/தந்தைவழி உறவுகள் இரத்த சம்பந்தப்பட்ட உறவுகளாக அமைகின்றன. தாய், தந்தை, மகன், மகள், சகோதரன், சகோதரி, சிறிய/பெரிய தந்தைகள், மாமா/மாமிகள், சின்னம்மா/பெரியம்மாக்கள், தாய்/தந்தைவழிப் பாட்டிகள் & தாத்தாக்கள் எனும் உறவுகள் ஏற்படுகின்றன.

அதுபோல் திருமண உறவின் மூலம் மாமனார், மாமியார், மைத்துனர்கள், மைத்துனிகள், கொலுந்தன், நாத்தனார் என்னும் உறவுகள் ஏற்படுகின்றன.

இந்த இரண்டு வகை உறவுகள் அல்லாமல், பால்குடி மூலம் ஏற்பட்ட உறவுகளும் சிலருக்கு அமைவதுண்டு. இரத்த பந்தத்தின் மூலம் யாரெல்லாம் திருமணம் செய்யத் தடை செய்யப்பட்டவர்களாக இருக்கிறார்களோ அதேபோல், பால்குடி உறவின் மூலம் உண்டான உறவுகளும் திருமணம் செய்யத் தடுக்கப்பட்டவர்கள். ஏனெனில் பாலூட்டிய பெண்ணும், பெற்றெடுத்த தாயும் இஸ்லாத்தின் பார்வையில் ஒரே தரத்தைப் பெறுகிறார்கள்.

இந்த உறவுகளில், யாரெல்லாம் ஒருவருக்கொருவர் *திருமணம் முடிக்கத் தடை செய்யப்பட்ட (மஹ்ரமான)வர்கள்* என்பதை 4:23 - வது வசனத்தில் அல்குர்ஆன் விவரிக்கிறது.

"உங்கள் அன்னையர், உங்கள் புதல்வியர், உங்கள் சகோதரிகள், உங்கள் தந்தையரின் சகோதரிகள், உங்கள் அன்னையின் சகோதரிகள், சகோதரனின் புதல்விகள், சகோதரியின் புதல்விகள், உங்களுக்குப் பாலூட்டிய அன்னையர், பால்குடிச் சகோதரிகள், உங்கள் மனைவியரின் அன்னையர், நீங்கள் தாம்பத்தியம் நடத்திய மனைவிக்கு (வேறு கணவர் மூலம்) பிறந்த உங்கள் பொறுப்பில் உள்ள புதல்விகள், ஆகியோர் (மணமுடிக்க) தடுக்கப்பட்டுள்ளனர். நீங்கள் உங்கள் மனைவியருடன் உடலுறவு கொள்ளா(த நிலையில் விவாகரத்துச் செய்து) விட்டால் (அவர்களின் புதல்விகளை மணப்பது) உங்களுக்குக் குற்றமில்லை. உங்களுக்குப் பிறந்த புதல்வர்களின் மனைவியரும், (தடுக்கப்பட்டுள்ளனர்.) இரு சகோதரிகளை ஒரே நேரத்தில் மணந்து கொள்வதும் (தடுக்கப்பட்டுள்ளது). நடந்து முடிந்ததைத் தவிர. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்." (அல்குர்ஆன் 4:23)

இப்போது கேள்விக்கு வருவோம். "ஒரு பெண்ணுக்கு யாரெல்லாம் மஹ்ரமான உறவுகள்?" என்று கேட்டுள்ளீர்கள். அதனால் பெண்களுக்கான ஆண்வழி உறவுகள் பற்றிப் பார்ப்போம்.

மேலே குறிப்பிட்டுள்ள வசனத்தில் ஆண்களுக்கான உறவு முறைகளைப் பற்றி சொல்லப்பட்டு இருந்தாலும், அதுவே ஆண் வழி உறவுகளில் பெண்களுக்கும் பொருந்தும். அதனடிப்படையில், ஒரு பெண் திருமணம் செய்வதற்கு தடை செய்யப்பட்ட உறவுகள்:

1) தந்தை

2) மகன்

3) சகோதரர்

4) சகோதரரின் மகன்

5) சகோதரியின் மகன்

6) தாயின் சகோதரர்

7) தந்தையின் சகோதரர்

8) மாமனார் (கணவரின் தந்தை)

9) மருமகன் (மகளின் கணவர்)

10) தாயின் (மறுமணம் மூலம் அமைந்த) கணவர்

11) தாயின் (மறுமணம் மூலம் அமைந்த) கணவரின் சகோதரர்

12) கணவரின் (மனைவிக்குப் பிறந்த) மகன்

13) பால்குடித் தாயின் கணவர்

14) பால்குடித் தாயின் சகோதரர்

15) பால்குடித் தாயின் கணவருடைய சகோதரர்

16) பால்குடித் தாயின் (சொந்த) மகன்

17) பால்குடித் தாயிடம் பால் குடித்த (அந்நிய) ஆண்பிள்ளை

இத்துடன், மேலே கூறப்பட்ட உறவுகளில் சிலரின் வழித்தோன்றல்களும் மஹ்ரமானவர்கள் ஆவார்கள். அதாவது,

18) மகனின்/மகளின் மகன் (பேரன்)

19) சகோதரர்/சகோதரியின் பேரன்

20) கணவரின் (மனைவிக்குப் பிறந்த) மகனின் மகன்

21) பால்குடித் தாயின் பேரன்

.... இதுபோன்ற அடுத்த தலைமுறையிலுள்ள மகன்கள், மற்றும்

22) தந்தையின் தந்தை (பாட்டனார்)

23) தாயின் தந்தை (பாட்டனார்)

24) மாமனாரின் தந்தை

25) தாயின் (மறுமணம் மூலம் அமைந்த) கணவரின் தந்தை

26) பால்குடித் தாயின் தந்தை

27) பால்குடித் தாயின் கணவருடைய தந்தை

.... இதுபோன்ற முந்திய தலைமுறையிலுள்ள தந்தைமார்கள் இவர்கள் அனைவரும் திருமணம் முடிக்க நிரந்தரமாகத் தடுக்கப்பட்டவர்கள்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை