அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday, 13 July 2025

இஷா தொழுகையின் இறுதி நேரம் எது?

கேள்வி: இஷா தொழுகை எத்தனை மணி வரை தொழலாம்? இஷா தொழுகையின் வக்து எப்போது முடிவடைகிறது?

பதில்: இஷா தொழுகையின் இறுதி நேரம் பற்றி இரண்டு விதமான ஆதாரங்கள் உள்ளன. அவற்றை சற்று விரிவாகப் பார்ப்போம்,

«« மூன்றில் ஒரு பகுதி வரை »»

صحيح مسلم

عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّ رَجُلًا سَأَلَهُ عَنْ وَقْتِ الصَّلَاةِ، فَقَالَ لَهُ: «صَلِّ مَعَنَا هَذَيْنِ - يَعْنِي الْيَوْمَيْنِ - ثُمَّ أَمَرَهُ فَأَقَامَ الْعِشَاءَ حِينَ غَابَ الشَّفَقُ،… وَصَلَّى الْعِشَاءَ بَعْدَمَا ذَهَبَ ثُلُثُ اللَّيْلِ.. ثُمَّ قَالَ: «أَيْنَ السَّائِلُ عَنْ وَقْتِ الصَّلَاةِ؟» فَقَالَ الرَّجُلُ: أَنَا، يَا رَسُولَ اللهِ، قَالَ: 

«وَقْتُ صَلَاتِكُمْ بَيْنَ مَا رَأَيْتُمْ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து தொழுகை நேரங்கள் பற்றி வினவினார். (அவரிடம்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "நம்முடன் தொழுகையில் கலந்துக் கொள்வீராக!" என்று கூறினார்கள்.

இதையடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிலால் (ரலி) அவர்களிடம், (மேற்கு வானத்தின்) செம்மை மறைந்ததும் இஷாத் தொழுகைக்காகக் கட்டளையிட்டார்கள். மறுநாள் பிலால் (ரலி) அவர்களிடம், இரவின் மூன்றில் ஒரு பகுதி கடந்தப் பின் இஷாத் தொழுகைக்குக் கட்டளையிட்டார்கள்.

பின்னர், "கேள்வி கேட்டவர் எங்கே? இவ்விரண்டுக்கும் இடைப்பட்ட நேரமே தொழுகையின் நேரமாகும்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)

நூல்: முஸ்லிம் (1078, 1079)

       «« இரவின் பாதிவரை »»

"وَقْتُ الْعِشَاءِ إِلَى نِصْفِ اللَّيْلِ"

"இஷா தொழுகையின் நேரம் இரவின் பாதிவரை உண்டு" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி)

நூல்: முஸ்லிம் (1074, 1075, 1076)


இஷாத் தொழுகையின் ஆரம்ப நேரத்தில் கருத்து வேறுபாடுகள் எதுவுமில்லை. 

- 'ஃபஜ்ரு வரை இஷாவின் நேரம் நீடிக்கிறதா?'

- 'இரவின் பாதிவரை நீடிக்கிறதா?'

- 'இரவின் மூன்றில் ஒரு பகுதிவரை நீடிக்கிறதா?' 

என இஷா தொழுகையின் முடிவு நேரத்தில்தான் கருத்து வேறுபாடு உள்ளது.

இவற்றில், 'இரவின் பாதி வரை இஷா நீடிக்கிறது' என்பதற்கும், 'இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை இஷா நீடிக்கிறது' என்பதற்கும் நேரடியான ஆதாரங்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. அந்த இரண்டு ஹதீஸ்களுமே ஆதாரப்பூர்வமானவை. அப்படியென்றால் இதை நாம் எவ்வாறு புரிந்துக்கொள்ள வேண்டும் என்ற கேள்வி வரும். 

ஆதாரப்பூர்வமான இந்த இரண்டு ஹதீஸ்களிலும் சொல்லப்பட்டுள்ள கால அளவுகள் வேறுபட்டாலும், அவை ஒன்றுக்கொன்று நேர்முரணான கருத்துக்கள் கிடையாது. இஷா தொழுகையின் முடிவு நேரத்திற்கு, நபி (ஸல்) அவர்கள் இரண்டு விதமான நேர முடிவுகளைக் குறிப்பிட்டு, இரண்டுக்கும் அனுமதியளித்து வழிகாட்டியுள்ளார்கள். இவ்வாறு அந்த இரண்டு ஹதீஸ்களையும் இணைத்து புரிந்துக்கொள்வதே சரியானது.

எனவே, ஒருவர் இரவின் பாதியளவு நேரத்தையும் இஷாவின் இறுதி நேரமாக எடுத்துக் கொள்ளலாம். அல்லது மூன்றில் ஒரு பகுதி வரையும் கணக்கிட்டுக் கொள்ளலாம். இரண்டில் அதிகபட்ச நேரம் இரவின் பாதியளவு என்பதால், அந்த நேரத்திற்குள் இஷாவைத் தொழுது முடித்துவிட வேண்டும்.

இரவின் பாதியளவு நேரத்தை எவ்வாறு கணக்கிடுவது?

பருவ நிலை மாற்றங்களுக்கு ஏற்ப, சூரிய உதயமும், அஸ்தமனமும் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாக அதன் கால அளவுகளில் அவ்வப்போது மாறுபட்டுக் கொண்டிருக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை அந்த கால அளவுகளில் பெரிய வித்தியாசம் இருக்காது. எனவே, உதாரணத்திற்கு ஏதாவது ஒரு கால அளவை வைத்து, இந்திய நேரப்படி இஷாவின் நேரத்தை எவ்வாறு கணக்கிடுவது என்று பார்ப்போம்.

இஸ்லாமியக் கணக்கின்படி, சூரியன் மறைந்தது முதல் இரவு ஆரம்பமாகிறது.

உதாரணமாக, சூரியன் 6:40 மணிக்கு மறைகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது மஃக்ரிப் தொழுகைக்கான நேரம் மட்டுமல்லாமல், அதிலிருந்து இரவுப் பொழுதும் ஆரம்பமாகிவிடுகிறது. ஃபஜ்ரு தொழுகைக்கான நேரம் 4:30 மணிக்கு வருகிறது என்றால், அதிலிருந்து இரவு முடிவடைந்து அதிகாலைப் பொழுதுக்கான நேரம் வந்துவிட்டது என்று பொருள்.

இப்படி இரவு ஆரம்பித்தது முதல் அதிகாலைவரை உள்ள கால அளவுதான் ஒரு முழு இரவின் நேரம் ஆகும். அதாவது மேலே சொன்ன உதாரணத்தின்படி, மாலை 6:40 மணி முதல், ஃபஜ்ரு தொழுகையின் ஆரம்ப நேரம் 4:30 மணி வரையுள்ள (முழு இரவின்) கால அளவு என்பது, 9 மணி நேரங்களும், 50 நிமிடங்களும் ஆகும். 

இதில் இரவின் பாதியைக் கணக்கிடும்போது (9:50 ÷ 2 = 4:55) 4 மணி நேரங்களும், 55 நிமிடங்களும் கிடைக்கின்றன. இப்போது சூரியன் மறைந்து, இரவுப் பொழுது ஆரம்பமாகக்கூடிய 6:40 மணி நேரத்துடன், இரவின் பாதி அளவான 4:55 என்ற இந்த கால அளவை சேர்த்தால் எத்தனை மணியைக் காட்டுகிறதோ அதுதான் இரவின் பாதியளவு நேரம். அப்படியானால் நாம் எடுத்துக் கொண்ட உதாரண நேரத்தின்படி, இரவின் பாதியளவு நேரம் என்பது இரவு 11.35 மணியாகும். இப்படி கணக்கிட்டு வரக்கூடியதுதான் இஷா தொழுகைக்கான இறுதி நேரம். இந்த நேரத்திற்குள் இஷாவைத் தொழுது முடித்துவிட வேண்டும்.

இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்வதற்காக கீழே நாம் கொடுத்துள்ள விளக்கப்படத்தை இப்போது கவனிக்கவும்.

இதுபோல் சூரிய அஸ்தமனம் மற்றும் ஃபஜ்ரு நேரம் ஆகியவற்றைக் கொண்டு இரவின் பாதியைக் கணக்கிட்டு அதற்குள் இஷாவைத் தொழுதுவிட வேண்டும்.

இரவின் மூன்றில் ஒரு பகுதி நேரத்தை எவ்வாறு கணக்கிடுவது?

மேலே சொன்னதுபோல் மஃக்ரிப் ஆரம்பித்த நேரத்துக்கும், ஃபஜ்ரு தொழுகையின் ஆரம்ப நேரத்துக்கும் இடைப்பட்ட நேரத்திலுள்ள மணி அளவுகளைக் கணக்கிட்டு அதை மூன்றாகப் பிரித்து, அந்த மூன்றில் முதல் பகுதி முடியும் நேரம்வரை இஷா தொழுகையின் இறுதி நேரமாக எடுத்துக் கொள்ளலாம். இந்த கால அளவில் இஷாவை நாம் சற்று விரைவாக தொழுது முடிக்க வாய்ப்பிருப்பதால், இதுவே சிறந்ததாக இருக்கும். இயலாதபட்சத்தில் இரவின் பாதிவரை இஷாவை நாம் தொழுதுக் கொள்ளலாம்.

உதாரணத்துக்கு கீழே நாம் கொடுத்துள்ள விளக்கப்படத்தை இப்போது கவனிக்கவும்.

குறிப்பு:

1) இஷா தொழுகைக்கான கால அளவு முடியும் நேரம், ஃபஜ்ரு வரை நீடிக்கிறது என்று சிலர் கூறுவதற்கு ஆதாரமாக நேரடியாக எந்த ஹதீஸும் இல்லை.

2) ஒருவர் இரவின் பாதியைத் தாண்டும் வரை இஷா தொழுகையை மறந்துவிட்டார் என்றாலோ, அவரை அறியாமல் தூங்கிவிட்டாலோ அவர் இஷாவை அப்போது தொழலாமா என்றால், தொழலாம். ஏனெனில் அந்த இஷா தொழுகையை அதன் நேரம் முடிவடையும்வரை அவர் வேண்டுமென்றே பிற்படுத்தவில்லை. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஒருவர் ஒரு தொழுகையைத் தொழ மறந்துவிட்டால், அல்லது தொழாமல் உறங்கிவிட்டால் அதன் நினைவு வந்ததும் அதைத் தொழுதுக் கொள்வதே அதற்குரிய பரிகாரமாகும்."

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் (1217)

தொழுகையை வேண்டுமென்றே அலட்சியப்படுத்தாத ஒருவர், இந்த ஹதீஸின் அடிப்படையில் மறதி, உறக்கம் போன்ற காரணங்களுக்காக நபி(ஸல்) அவர்கள் கொடுத்துள்ள எல்லா தொழுகை நேரத்துக்குமான பொதுவான சலுகையின்படி, இரவின் பாதியைத் தாண்டி இஷாவுடைய நேரம் முடிவடைந்தாலும் தொழுதுக் கொள்ளலாம்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை