அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, 4 July 2025

டயாபர் (Diaper) கட்டியிருக்கும் நபர் எப்படி தொழுவது?

கேள்வி: உடம்பு சரியில்லாமல் டயாபர் கட்டி இருக்கும் நபர் தொழுவது எப்படி?  என்பதனைப் பற்றி விளக்கம் தாருங்கள்.

பதில்: இதுபற்றி நேரடியாக எந்த ஆதாரமும் குர்ஆன், ஹதீஸ்களில் இல்லாவிட்டாலும், இதற்கு நாம் எந்த முடிவை எடுப்பது என்பதை மறைமுகமாகச் சொல்லக்கூடிய, வேறு வடிவத்திலுள்ள இதுபோன்ற ஒரு பிரச்சனைக்கு நபி(ஸல்) அவர்கள் தீர்வு சொன்ன ஆதாரம் உள்ளது.

صحيح البخاري

228 – حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ: جَاءَتْ فَاطِمَةُ بِنْتُ أَبِي حُبَيْشٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ إِنِّي امْرَأَةٌ أُسْتَحَاضُ فَلاَ أَطْهُرُ أَفَأَدَعُ الصَّلاَةَ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ، إِنَّمَا ذَلِكِ عِرْقٌ، وَلَيْسَ بِحَيْضٍ، فَإِذَا أَقْبَلَتْ حَيْضَتُكِ فَدَعِي الصَّلاَةَ، وَإِذَا أَدْبَرَتْ فَاغْسِلِي عَنْكِ الدَّمَ ثُمَّ صَلِّي» – قَالَ: وَقَالَ أَبِي: – «ثُمَّ تَوَضَّئِي لِكُلِّ صَلاَةٍ، حَتَّى يَجِيءَ ذَلِكَ الوَقْتُ»

ஃபாத்திமா பின்த் அபூ ஹுபைஷ் என்ற பெண் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அதிகமாக இரத்தப்போக்கு ஏற்படும் ஒரு பெண். நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?" என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், "இல்லை! அது ஒருவித நோயாகும்; மாதவிடாய் இரத்தமன்று. உனக்கு மாதவிடாய் வரும்போது தொழுகையை விட்டுவிடு! அது நின்றுவிட்டால் இரத்தம் பட்ட இடத்தைக் கழுவிவிட்டுத் தொழுகையை நிறைவேற்று! பின்னர் அடுத்த மாதவிடாய் வரும்வரை ஒவ்வொரு தொழுகைக்கும் நீ உளூச் செய்துக் கொள்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி (228)

இந்த ஹதீஸில், தொடர் உதிரப் போக்கு உள்ளவர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கூறும் தீர்வு, டயாபர் கட்டியிருக்கும் நபர்களுக்கும் பொருந்தும்.

அப்படிப்பட்ட நோயாளிகள், டயாபர் கட்ட முன்பு வழக்கமாகச் சுத்தம் செய்வதுபோல் சுத்தம் செய்துவிட்டு, டயாபர் கட்டிக்கொண்டு உளூ செய்துக்கொள்ள வேண்டும். (அதற்கும் இயலாவிட்டால் தயம்மும் செய்துக்கொள்ள வேண்டும்.) 

அதற்குப் பிறகு (சிறுநீர் வெளிப்பட்டாலும்) அந்த வக்துக்குரிய தொழுகையை நிறைவேற்றிவிட்டு, அது நோய் என்ற அடிப்படையில் டயாபரை மாற்றாமலே அடுத்த ஒவ்வொரு வக்து தொழுகைக்கும் உளூச் செய்துக்கொள்ள வேண்டும்.

படுக்கையிலிருந்து எழும்ப முடியாத நிலையில் உள்ளவர்கள், உளூச் செய்ய இயலாதவர்கள் தயம்மும் செய்துக்கொள்ள வேண்டும். அவர்கள் மலம் கழிப்பதும் டயாபரில்தான் என்ற நிலை இருந்தால் அப்போது அதை மாற்றிவிட்டு சுத்தம் செய்த பிறகு, மீண்டும் தயம்மும் செய்துக்கொண்டு தொழுதுக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நேர தொழுகைக்கும் உளூவோ, தயம்முமோ செய்துக்கொள்ள வேண்டும்.


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை