அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday 18 March 2023

ரமலான் மாதத்தை ஆரம்பிக்கவும், முடிக்கவும் மிக அடிப்படையானதும், அவசியமானதும் எது?

 அல்லாஹ்வுடைய மார்க்கமான இஸ்லாம் முக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஓர் அழகிய வாழ்வியல் வழிகாட்டியாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு விஷயங்களையும் எப்படி அணுகவேண்டும் என்று நமக்கு கற்றுக் கொடுத்துள்ள இஸ்லாம், தினசரி நேரக் கணக்குகளை சூரியனை அடிப்படையாக வைத்தும், மாதக் கணக்குகளை சந்திரனை அடிப்படையாக வைத்தும் தீர்மானிப்பதை நமக்கு சொல்லித் தருகிறது. 

இதில் சூரியக் கணக்கு என்பது ஒரு நாளின் ஐவேளைத் தொழுகை நேரங்களை வரையறுப்பதற்கு நேரங்காட்டியாகவும், சந்திரக் கணக்கு என்பது நோன்பின் நாட்கள், ஹஜ்ஜுடைய நாட்கள், இத்தாவின் நாட்கள் மற்றும் சில இபாதத்துகளின் நாட்களைக் கணக்கிட்டுக் கொள்வதற்கு காலங்காட்டியாகவும் பயன்படுத்த இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ளது.

அதனடிப்படையில்.. ரமலானை ஆரம்பிப்பதற்கும்,  ரமலான் மாதம் முடிந்து ஷவ்வாலின் முதல் நாள் ஆரம்பித்துவிட்டது என்பதை (அதாவது நோன்புப் பெருநாளை) அறிந்துக் கொள்வதற்கும் பிறைப் பார்ப்பது மிக அவசியம். ஏனெனில், 'ஒவ்வொரு பகுதியிலும் பிறைக் காணப்பட வேண்டும்; பிறை தென்பட்டால் அடுத்த மாதம் ஆரம்பமாகிவிட்டது; தென்படாவிட்டால் அம்மாதத்தின் நாட்களை முப்பது என்று நிறைவு செய்துக்கொள்ள வேண்டும்' என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ள மிகத் தெளிவான சட்டமாகும்.

'உலகில் எங்காவது ஒரு இடத்திலிருந்து பிறைப் பார்த்த தகவல் வந்தாலே போதும்; அதைவைத்து உலகின் எந்த மூலையில் உள்ளவர்களும் ரமலானை ஆரம்பிக்கவும், ரமலானை முடித்துக்கொள்ளவும் செய்யலாம்' என்று சொல்லிக் கொண்டு, அண்ணல் நபி(ஸல்) அவர்களின் அழகிய இந்த வழிமுறையை அலட்சியம் செய்பவர்களுக்கும், 'பிறைப் பார்க்கவே தேவையில்லை' என்று சொல்லிக் கொண்டு, 'வானியல் அறிவின் துணைக் கொண்டு பிறையை கணித்துவிடலாம்' என்று வாதிடக் கூடியவர்களுக்கும் பின்வரும் ஹதீஸ்கள் மறுப்பாக அமைந்துள்ளன.

"பிறையைப் பார்க்காமல் நோன்பு பிடிக்காதீர்கள். பிறையைப் பார்க்காமல் நோன்பை விடாதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் (முப்பது நாட்களாக) எண்ணிக் கொள்ளுங்கள்'' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி); நூல்: புஹாரி(1906)

"மாதத்திற்கு 29 நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை 30 என முழுமைப்படுத்துங்கள்'' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி); நூல்: புஹாரி (1907)

"அதை (பிறையை) நீங்கள் காணும்போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு  பிறையைக்) காணும்போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்."

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புஹாரி (1909)

"நீங்கள் பிறையைக் காணும்போது நோன்பு பிடியுங்கள். பிறையைக் காணும்போது நோன்புவிடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்கள் நோன்பு பிடியுங்கள்'' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம்

இருவித கருத்துக்களுக்கு இடமின்றி மிகத் தெளிவாக அமைந்துள்ள இந்த ஹதீஸ்களின் பிற்பகுதியில் சொல்லப்பட்டுள்ள வாசகம்தான், 'உலகில் எங்காவது பிறைப் பார்த்து சொல்லிவிட்டால் போதும்' என்று பொருள் கொள்ளத் தடையாக நிற்கிறது. அதாவது, "நீங்கள் பிறைப் பார்க்கும் நாளில் வானம் தெளிவில்லாமல் மேகமூட்டமாக காணப்பட்டால், அந்த மாதத்தை முப்பது நாட்களாக கணக்கிட்டு நிறைவு செய்துக் கொள்ளுங்கள்" என்ற வழிகாட்டலை உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது அந்த வாசகம்!

"உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களை நிறைவு செய்யுங்கள்" என்றால் அதை எப்படி விளங்கவேண்டும்? 'உலகம் முழுவதும் மேகமூட்டமாக இருந்தால்' என்று யாராவது விளங்குவோமா? அல்லது 'அவரவர் பகுதியில் பிறைப் பார்க்கும்போது மேகமூட்டமாக இருந்தால்' என்று விளங்குவோமா? ஒரே நாளில் உலகம் முழுவதும் மேகமூட்டமாக இருக்குமா? உலகத்தின் இயற்கையில் வாய்ப்பே இல்லாத ஒன்றை அல்லாஹ்வின் தூதர் சொல்வார்களா?

உலகில் எங்காவது பிறைப் பார்த்து அறிவித்தால் போதும் என்றால், இந்த ஹதீஸின் பிற்பகுதியை நபி(ஸல்) அவர்கள் சொல்லியிருக்க மாட்டார்கள். ஏனெனில் உலகம் முழுவதும் எப்போதும் மேகமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதிகள் இருந்துக் கொண்டுதானிருக்கும். எனவே, "மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள்'' என்ற அந்த வாசகம், ஒவ்வொரு பகுதியிலும் பிறைப் பார்க்கவேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நிற்கிறது.

அப்படியானால், 'ஒவ்வொரு பகுதியினரும் அவரவரின் பகுதியில் பிறைப் பார்த்து நோன்பை ஆரம்பிக்க வேண்டும்; அவரவரின் பகுதியில் பிறைப் பார்த்து நோன்பை முடிக்கவேண்டும். மேகமூட்டம் ஏற்பட்டால், நடப்பு மாதத்தை முப்பது நாட்களாக கணக்கிட்டுக் கொள்ள வேண்டும்' என்பதுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளை என்று விளங்குகிறதா இல்லையா? இவ்வாறு, 'மேக மூட்டமாக இருந்தால் அந்த நாளை முப்பதாவது நாளாகக் கருதிக் கொள்ளுங்கள்' என்ற எளிமையான தீர்வை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறிவிட்ட பிறகு நமக்கு இதில் எவ்வித குழப்பமும் இல்லை.

ஆனால், 'பிறைப் பார்த்து நோன்பு பிடிக்குமாறு நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்றால், உலகின் எந்தப் பகுதியில் பிறைத் தென்பட்டதாகத் தகவல் கிடைத்தாலும் அது உலக மக்கள் அனைவருக்கும் அது பொருந்தும்' என்றும், 'அதன்மூலம் பிறைப் பார்த்தல் என்ற நபி(ஸல்) அவர்களின் கட்டளை நிறைவேற்றப்பட்டுவிட்டது' என்றும் தன்னிச்சையாக ஒரு புதிய நடைமுறையைக் கையில் எடுத்துக்கொண்டு குழப்பம் செய்பவர்கள், நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் இந்த தீர்வை சொல்லும் (மேலுள்ள) ஹதீஸ்களை அலட்சியம் செய்வது ஏன்?

பிறைப் பார்க்க வேண்டிய 29 - வது நாளின் முடிவில், பிறை வானத்தில் மறைந்து இருக்கிறதா, இல்லையா என்று நாம் ஆய்வு செய்யத் தேவையில்லை, அப்படி நபி(ஸல்) அவர்கள் வழிகாட்டவுமில்லை. உண்மையில் வானில் முதல் பிறை இருந்து அதை மேகம் மறைத்திருந்தால்கூட, அம்மாதத்தை முப்பது நாட்களாகக் கருதிக் கொள்ளுங்கள் என்று கூறி, அவரவர் பகுதியில்தான் பிறைப்பார்க்க வேண்டும் என்பதன் அவசியத்தைதான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.

இதை மறுப்பதற்காக சுற்றி வளைத்து ஏதேதோ விளக்கம் கூறுவதைவிட, இந்த ஹதீஸ்கள் கூறுகின்ற தெளிவான கட்டளையை நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 'இவ்வளவு காலம் தவறாக சொல்லிவிட்டதையும், தவறாக செயல்படுத்தி வந்ததையும் ஒப்புக்கொள்வதா?' என்ற ஈகோ இல்லாமல், நேர்மையான சிந்தனையுடன், இறையச்சத்தை மட்டும் முன்னிறுத்துபவர்கள் இதற்கு எந்த வியாக்கியானமும் கூறமாட்டார்கள்.

எனவே, ரமலானின் முதல் நோன்பை சரியான முறையில் அடைந்துக்கொள்வதற்கு, ஷஃஅபான் பிறை 29 நிறைவடைந்த பிறகு அவரவர் வாழும் பகுதியில் பிறைத் தேடவேண்டும். மேக மூட்டம் போன்ற காரணங்களால் அப்பகுதியிலுள்ள யாருக்குமே பிறை தென்படாமல் போனால், ரமலான் மாதம் பிறக்கவில்லை என்று முடிவு செய்துக் கொள்ளவேண்டும். அதுபோல் நோன்புப் பெருநாளை சரியான முறையில் அடைந்துக்கொள்வதற்கு ரமளான் பிறை 29 நிறைவடைந்த பிறகு அவரவர் வாழும் பகுதியில் பிறைத் தேடவேண்டும். மேக மூட்டம் போன்ற காரணங்களால் அப்பகுதியிலுள்ள யாருக்குமே பிறை தென்படாமல் போனால், ஷவ்வால் மாதம் பிறக்கவில்லை என்று முடிவு செய்துக் கொள்ளவேண்டும்.

ஆக.. பாக்கியமிக்க ரமலான் மாதத்தை ஆரம்பிக்கவும், ரமலானை முடித்து பெருநாளைக் கொண்டாடவும் அவரவர் பகுதியில் பிறைப் பார்ப்பது என்பதே இறைத்தூதர்(ஸல்) அவர்களின் காட்டித் தந்த சரியான அடிப்படையும், அவர்கள் கட்டளையிட்ட அவசியமான ஒரு அமலும் என்பதை இனியாவது அனைவரும் உணர்ந்து அதன்படி ரமளானின் அமல்களை அமைத்துக்கொள்ள முயற்சி செய்வது, இந்த பிறைக் குழப்பங்களுக்கு மிகச் சிறந்த தீர்வைத் தரும், இன்ஷா அல்லாஹ்!

4 comments:

  1. Unga pakuthiyala pakkanum solrathukkum atharame illa

    ReplyDelete
    Replies
    1. முதலில் உங்களின் சிந்தனையில் தப்பும் தவறுமாக ஆல்ரெடி பதிவு செய்திருப்பதை ஒருபக்கம் வைத்துவிட்டு, கட்டுரையில் சொல்லப்பட்டவற்றை நேர்மையான சிந்தனையுடன், நன்கு விளங்கிப் படித்த பிறகு கமெண்ட் செய்யுங்கள். உங்களுக்கு தெளிவைக் கொடுப்பதற்கு அல்லாஹ் போதுமானவன்

      Delete
    2. https://payanikkumpaathai.blogspot.com/2010/08/blog-post.html

      Delete
    3. https://payanikkumpaathai.blogspot.com/2010/08/blog-post_08.html

      Delete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை