அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!
Showing posts with label ரமலான். Show all posts
Showing posts with label ரமலான். Show all posts

Friday, 14 April 2023

ஸஹர் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது ஃபஜ்ரு பாங்கு சொல்லப்பட்டால்...?

ஸஹர் நேரத்தில் நாம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் ஃபஜ்ரு பாங்கு சொல்லப்பட்டுவிட்டால் என்ன செய்வது? அதை அப்படியே வைத்துவிட்டு உணவு உட்கொள்வதை உடனே நிறுத்திக்கொள்ள வேண்டுமா? அல்லது நமது உணவுத் தட்டில் வைத்துள்ள உணவு முழுவதையும் சாப்பிட்டு முடியும்வரை தொடர்ந்து சாப்பிடலாமா?

இதில் சிலர் தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அதுசம்பந்தமாக வரக்கூடிய ஒரு செய்தி முறையாக ஆய்வு செய்யப்படாமல், Facebook, YouTube, WhatsApp போன்ற சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அதை சரியென்று நம்பி நடைமுறைப்படுத்தும் மக்களின் நோன்பும் இதனால் பாழாகக்கூடிய நிலை ஏற்படும் என்பதால், அதன் உண்மைத் தன்மையை அவசியம் நாம் தெரிந்துக்கொள்ள வேண்டும்.

Saturday, 1 April 2023

நோன்பு வைத்த நிலையில் இரத்த தானம் செய்தால் நோன்பு முறிந்துவிடுமா?

'இரத்த தானம்' செய்வது என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்ததில்லை. ஆனால், அவர்களின் காலத்துக்கு முன்பிருந்தே இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் ஒரு சிகிச்சை முறை அரபியர்களிடம் இருந்தது. நபி(ஸல்) அவர்களின் காலத்திலும், அதற்கடுத்த காலக் கட்டங்களிலும் அந்த வழக்கம் நோய் நிவாரணத்திற்காக நடைமுறையில் தொடர்ந்து இருந்துவந்தது.

தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு, கொம்புப் போன்ற கருவியின் மூலம் அதை உறிஞ்சி இரத்தத்தை அவர்கள் வெளியேற்றி வந்தனர். கண்ணாடிக் குவளையைப் பயன்படுத்தியும் இவ்வாறு இரத்தத்தை வெளியேற்றி வந்தனர். அப்படி செய்வது கெட்ட இரத்தத்தை வெளியேற்றும் முறை என்றும், அது உடலுக்கு ஆரோக்கியமானது என்ற நம்பிக்கையும் இருந்தது. அதற்கு அரபியில் 'ஹிஜாமா (حجامة)' என்று சொல்வார்கள். இன்றளவும் பலர் அதை மருத்துவ வழிமுறைகளில் ஒன்றாக செய்துக்கொண்டுள்ளனர்.

Blood Donation in Islam

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த இந்த நடைமுறையை வைத்து, வேறு பல சட்டங்களை நாம் அறிந்துக் கொள்ளலாம். அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا خَالِدٌ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي الْأَشْعَثِ عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ أَنَّهُ مَرَّ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ زَمَنَ الْفَتْحِ عَلَى رَجُلٍ يَحْتَجِمُ بِالْبَقِيعِ لِثَمَانِ عَشْرَةَ خَلَتْ مِنْ رَمَضَانَ وَهُوَ آخِذٌ بِيَدِي فَقَالَ أَفْطَرَ الْحَاجِمُ وَالْمَحْجُومُ

"இரத்தம் கொடுப்பவரும், எடுப்பவரும் நோன்பை முறித்துவிட்டனர்" என்று நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் கூறினார்கள். நூல்: அஹ்மத்

இந்தக் கருத்தில் இன்னும் பல ஹதீஸ்களும் உள்ளன. ஆனால், இரத்தம் கொடுப்பவரின் நோன்பு முறிந்துவிடும் என்ற இந்தச் சட்டம் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் நடைமுறையிலிருந்து பின்னர் மாற்றப்பட்டுவிட்டது.

الدارقطنى

 2283 – حَدَّثَنَا أَبُو الْقَاسِمِ عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْعَزِيزِ حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِى شَيْبَةَ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُثَنَّى عَنْ ثَابِتٍ الْبُنَانِىِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ أَوَّلُ مَا كُرِهَتِ الْحِجَامَةُ لِلصَّائِمِ أَنَّ جَعْفَرَ بْنَ أَبِى طَالِبٍ احْتَجَمَ وَهُوَ صَائِمٌ فَمَرَّ بِهِ النَّبِىُّ -صلى الله عليه وسلم- فَقَالَ « أَفْطَرَ هَذَانِ » ثُمَّ رَخَّصَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- بَعْدُ فِى الْحِجَامَةِ لِلصَّائِمِ وَكَانَ أَنَسٌ يَحْتَجِمُ وَهُوَ صَائِمٌ كُلُّهُمْ ثِقَاتٌ وَلاَ أَعْلَمُ لَهُ عِلَّةً.

ஆரம்பத்தில் ஜஅஃப‌ர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்தபோது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் கடந்துச் சென்றார்கள். அப்போது, "இரத்தம் கொடுத்தவரும், எடுத்தவரும் நோன்பை விட்டுவிட்டனர்" என்று  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினர்கள். அதற்கு (சில காலங்களுக்கு) பிறகு நோன்பாளி இரத்தம் கொடுக்க அனுமதி வழங்கினார்கள். நூல்: தாரகுத்னீ

இவ்வாறு நோன்பு நோற்றவர் உடலிலிருந்து இரத்தத்தை வெளியேற்றுவதற்கு நபி(ஸல்) அவர்கள் அனுமதித்ததை ஆதாரமாகக் கொண்டு, உயிர் காக்கும் அவசியத்தை முன்னிட்டு இரத்த தானம் செய்வதால் நோன்பு முறியாது என்பதை நாம் அறிந்துக் கொள்ளலாம்.

அதேசமயம், நோன்பு நோற்றவர் தன் உடலில் இரத்தம் ஏற்றிக் கொள்ளுதல், குளுக்கோஸ் ஏற்றிக் கொள்ளுதல், ஊசி மூலம் மருந்துகளை உடலில் ஏற்றிக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இதை ஆதாரமாகக் காட்டமுடியாது. ஏனெனில் இரத்தத்தை வெளியேற்றுவதற்கும், உள்ளே செலுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. வெளியேற்றுவற்கு அனுமதியளிக்கப்பட்டது என்பது, உள்ளே செலுத்துவதற்கு பொருந்தாது.

அதுபோல், குளுக்கோஸ் ஏற்றும் அளவுக்கு ஒருவரது நிலை பலஹீனமாக இருந்தால் அவர் நோன்பை முறித்துவிட சலுகைப் பெற்றவராக இருக்கிறார். ஆனால், உணவு உட்கொண்டு நோன்பை முறித்து அந்த பலஹீனத்தைப் போக்கிக் கொள்வதற்கு பதிலாக குளுக்கோஸ் ஏற்றிக் கொண்டாலும் உணவு உட்கொண்டது போன்ற சக்தியைப் பெற இயலும். அப்படி செய்வது, ஒரு நோன்பாளி எதையும் உண்ணக் கூடாது என்ற தடையை மீறியதாகவே ஆகும். எனவே, ஒருவர் மிகவும் பலஹீனமான நிலையில் இருந்து குளுக்கோஸ் ஏற்றிக்கொள்ளும் தேவையோ, அவசர நிலையோ ஏற்பட்டால் அவ்வாறு ஏற்றிக்கொண்டு நோன்பை முறித்த பிறகு, முறித்த நோன்பை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளலாம். குளுக்கோஸ் ஏற்றும் நிலைமை ஏற்படாமலே உடலுக்குத் தெம்பு ஏற்றும் நோக்கத்தில் குளுகோஸ் ஏற்றப்பட்டால் அதுவும் உணவுடைய நிலையில் உள்ளதால், அவ்வாறு செய்வதும் நோன்பை முறித்துவிடும்.

இதுபோலவே இரத்தம் ஏற்றும் நிலையும் சாதாரண நிலையில் நடப்பது அல்ல. உயிர் காக்கும் அசாதாரணமான நிலையில்தான் இரத்தம் ஏற்றவேண்டிய நிலை ஏற்படும். இதுபோன்ற நிலையை அடைந்தவர் நோன்பை விட்டுவிட சலுகைப் பெற்றுள்ளார். உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் நோன்பை விட்டுவிடுவது இவரைப் பொருத்தவரை கடமையாகவும் ஆகிவிடும். அப்படியொரு ஆபத்தான சூழ்நிலையிலும் நோன்பை விடாமல் ஒருவர் இரத்தம் ஏற்றிக்கொள்வார் எனில், அவ்வாறு இரத்தம் ஏற்றிக்கொள்வதன் மூலம் அவருடைய நோன்பு தானாகவே முறிந்துவிடும். ஏனெனில், நாம் ஏற்கனவே சொன்னதுபோல் இரத்தத்தை வெளியேற்றுவதற்கும், உள்ளே செலுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. மருத்துவ தேவைக்காக இரத்தத்தை வெளியேற்ற மட்டுமே நபி(ஸல்) அவர்களின் அனுமதி உள்ளது.

அதுபோல், ஊசி மூலம் மருந்து செலுத்தும் அளவுக்கு உடல்நிலை சரியில்லாதவரும் நோன்பை விட்டுவிட அனுமதி பெற்றவர்தான். உடலுக்குள் அவற்றைச் செலுத்தினால் வயிற்றுக்குள் சென்று செயல்படுவதைவிட விரைவாக இரத்தத்தில் கலப்பதால், அதுவும் உணவு உட்கொண்டது போல்தான் ஆகும். எனவே, மருந்துகளை ஊசி மூலம் உடலில் செலுத்துவதும் நோன்பை முறித்துவிடும். நோயாளியாக இருப்பவர் வேறு ஒரு நாளில் அந்த நோன்பை வைத்துக் கொள்ள இறைவன் தெளிவான வழிகாட்டியிருக்கும்போது இவர்கள் நோன்பை விட்டுவிடுவதே சிறப்பாகும்.

ஆக, நோன்பு வைத்துக்கொண்டு இரத்தம் கொடுப்பதால் பலஹீனம் ஏற்படும் என்ற நிலையிலுள்ளவர்கள் அதைத் தவிர்த்துக் கொள்ளலாமே தவிர, நீரிழிவு நோயாளிகள் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய மிகச் சிறிய அளவிலான இரத்தப் பரிசோதனை முதல், முழு இரத்தப் பரிசோதனைக்காக இரத்தம் கொடுப்பது, இரத்த தானம் செய்வது போன்ற அனைத்தும் நோன்பை முறிக்காது. 

மாறாக, குளுக்கோஸ் ஏற்றிக் கொள்வது, இன்சுலின் ஊசி மற்றும் பிற நோய்களுக்காகவோ, சத்துக்காகவோ ஊசி மூலம் மருந்து ஏற்றிக் கொள்வது, இரத்தம் ஏற்றிக் கொள்வது போன்றவைதான் நோன்பை முறிக்கும். 

இவற்றை படங்கள் மூலமாகவும் நினைவில் வைத்துக் கொள்வோம்:

மருத்துவ ரீதியாக நோன்பை முறிக்காதவை:

இரத்தப் பரிசோதனை (Simple Blood Test)

இரத்த தானம் செய்வது (Blood Transfusion)


முழு இரத்தப் பரிசோதனை செய்வது (Blood Check up)

மருத்துவ ரீதியாக நோன்பை முறிப்பவை:

குளுக்கோஸ் ஏற்றுவது (Infusion)

ஊசி மூலம் மருந்து ஏற்றுவது (Injunction)

இரத்தம் ஏற்றிக் கொள்வது (Blood Infusion)


Saturday, 25 March 2023

பசியை அடக்கிக் கொண்டு தொழுவது அனுமதிக்கப்பட்டதா?

நோன்பு துறக்க தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு எதையும் சாப்பிடாமல் உடனே தொழுகையில் கலந்துக் கொள்வது, நம் இஸ்லாமிய மக்களில் பெரும்பானவர்களிடம் உள்ள  அறியாமையாகும். தமிழக முஸ்லிம்களிடம் மட்டுமின்றி வெளிநாட்டிலுள்ள பலதரப்பட்ட மக்களிடமும் இந்தப் பழக்கம் காணப்படுகிறது. இது சரியானதா என்றால், நிச்சயமாக இல்லை. ஏனெனில் நபி(ஸல்) அவர்களின் அறிவுரைக்கும், வழிகாட்டலுக்கும் இது மாற்றமானதாகும்.

Saturday, 18 March 2023

ரமலான் மாதத்தை ஆரம்பிக்கவும், முடிக்கவும்.. மிக அடிப்படையானதும், அவசியமானதும் எது?

 அல்லாஹ்வுடைய மார்க்கமான இஸ்லாம் முக்காலத்துக்கும் பொருந்தக்கூடிய ஓர் அழகிய வாழ்வியல் வழிகாட்டியாக திகழ்ந்துக் கொண்டிருக்கிறது. வாழ்வின் ஒவ்வொரு விஷயங்களையும் எப்படி அணுகவேண்டும் என்று நமக்கு கற்றுக் கொடுத்துள்ள இஸ்லாம், தினசரி நேரக் கணக்குகளை சூரியனை அடிப்படையாக வைத்தும், மாதக் கணக்குகளை சந்திரனை அடிப்படையாக வைத்தும் தீர்மானிப்பதை நமக்கு சொல்லித் தருகிறது. 

இதில் சூரியக் கணக்கு என்பது ஒரு நாளின் ஐவேளைத் தொழுகை நேரங்களை வரையறுப்பதற்கு நேரங்காட்டியாகவும், சந்திரக் கணக்கு என்பது நோன்பின் நாட்கள், ஹஜ்ஜுடைய நாட்கள், இத்தாவின் நாட்கள் மற்றும் சில இபாதத்துகளின் நாட்களைக் கணக்கிட்டுக் கொள்வதற்கு காலங்காட்டியாகவும் பயன்படுத்த இஸ்லாம் கற்றுக் கொடுத்துள்ளது.

அதனடிப்படையில்.. ரமலானை ஆரம்பிப்பதற்கும்,  ரமலான் மாதம் முடிந்து ஷவ்வாலின் முதல் நாள் ஆரம்பித்துவிட்டது என்பதை (அதாவது நோன்புப் பெருநாளை) அறிந்துக் கொள்வதற்கும் பிறை பார்ப்பது மிக அவசியம். ஏனெனில், 'ஒவ்வொரு பகுதியிலும் பிறை காணப்பட வேண்டும்; பிறை தென்பட்டால் அடுத்த மாதம் ஆரம்பமாகிவிட்டது; தென்படாவிட்டால் அம்மாதத்தின் நாட்களை முப்பது என்று நிறைவு செய்துக்கொள்ள வேண்டும்' என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டுள்ள மிகத் தெளிவான சட்டமாகும்!

Sunday, 10 June 2018

வெளி நாடுகளில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு இடையில் தாயகம் வந்தால்..

➤ வெளி நாடுகளில் வசிப்பவர்கள் அங்கே பிறைப் பார்த்த அடிப்படையில் ரமலான் நோன்பை ஆரம்பித்துவிட்டு, ரமலான் முடிவதற்குள் தாயகம் திரும்பி வந்தால் நோன்பின் எண்ணிக்கை 31 ஆகிவிடுகிறது. இவர்கள் எவ்வாறு நோன்பு வைக்க வேண்டும்?

ஒருநாள் முன்னதாக பிறையைக் கண்டதால் ரமலான் நோன்பை ஆரம்பித்தவர்கள் ஒரு நோன்பு கூடுதலாக நோற்றுவிட்டு தாயகம் வரும்போது, அங்குள்ள நாள் கணக்கின்படி நோன்பை தொடர வேண்டும். அதாவது, தாயகத்துக்கு வந்துவிட்டால் ஏற்கனவே இருந்த பகுதியையோ, வெளி நாட்டையோ பின்பற்ற இயலாது.

ஏனெனில் குறிப்பிடப்பட்ட நேரம் மற்றும் நாட்களைக் கணக்கிட்டு நிறைவேற்றப்படும் அமல்களான தொழுகை, நோன்பு போன்ற காரியங்களை நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக் கணக்கின்படியும், பிறைக் கண்ட நாளின் அடிப்படையிலும்தான் நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நாட்டில் இருப்பவர் வேறொரு நாட்டின் நேரக் கணக்கைப் பின்பற்ற முடியாது. அதுபோன்று ஒரே நாட்டுக்குள் உள்ள தொலைதூர ஊர்களுக்கு மத்தியிலும் அதிக வித்தியாசமான நேரக் கணக்கு அமைந்திருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அப்படியானால், தங்கள் பகுதியில் முந்திய நாள் பிறைக் கண்டு ரமலானின் முதல் நோன்பை ஆரம்பித்தவர்கள், மறுநாள் ரமலானின் முதல் பிறையைக் கண்டு நோன்பை ஆரம்பித்த வேறொரு பகுதிக்கோ அல்லது நாட்டுக்கோ வந்து அங்கே தங்களின் நோன்பைத் தொடர்ந்த பிறகு, ரமலானின் இறுதியில் 30 நோன்பையும் அவர்கள் நிறைவேற்றிவிட்ட நிலையில் அந்தப் பகுதியில் பிறைக் காணாவிட்டால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

Monday, 29 May 2017

ரமலானின் மூன்று 10 நாட்களுக்கும் மூன்று விதமான துஆக்களை ஓத வேண்டுமா?

ரமலான் மாதத்தின் முதல் பத்து நாட்கள் அல்லாஹ்வின் 'ரஹ்மத்' எனும் அருட்கொடையை கேட்கும் நாட்கள் என்றும், நடுப்பத்து நாட்கள் 'மக்ஃபிரத்' எனும் பாவமன்னிப்புக்கு உரியவை என்றும், கடைசிப் பத்து நாட்கள் நரகத்திலிருந்து மீட்சியளிக்கக் கூடிய நாட்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாகவும்,

அந்த ஒவ்வொரு 10 நாட்களுக்கும் பிரத்யேகமான ஒவ்வொரு துஆ இருப்பதாகவும் மக்களிடத்திலே ஒரு செய்தி பரவலாக‌ வேரூன்றியுள்ள‌து. அதனால் மூன்று 10 நாட்களுக்கும் மூன்று விதமான துஆக்களை ஓதவேண்டும் என்று பலர் நம்பியும், நடைமுறைப்படுத்தியும் வருகிறார்கள். ரமலானின் பெயரால் நம்பப்படும் ஆதாரமற்ற செய்திகளில் இதுவும் ஒன்றாகும்.

Thursday, 19 July 2012

ரமலானுக்கு தயாராவோமா?

ஒன்றுக்கு பலமடங்கு நன்மைகளை அள்ளித் தரும் புனிதமிக்க ர‌மலான் மாதம் நம்மை நெருங்கிவிட்ட நிலையில் அந்த ரமலானின் மகத்தான நாட்களை நாம் மறுமைக்கு பயனுள்ள வகையில் அமைத்துக் கொள்ள இப்போதே நாம் தயாராக‌வேண்டும். குறிப்பாக குடும்பத் தலைவிகளாகிய பெண்கள் மற்ற நாட்களைவிட ரமலானில் செய்யவேண்டிய அமல்களையும், தவிர்ந்துக் கொள்ள வேண்டியவற்றையும், வீட்டு வேலைகளை எவ்வாறு குறைத்துக் கொள்வது என்பது பற்றியும் சில டிப்ஸ்களை இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன். மற்ற பயனுள்ள டிப்ஸ்கள் உங்களிடமிருந்தால் அவற்றைப் பின்னூட்டத்தில் நீங்களும் பகிர்ந்துக் கொள்ளலாம்.

இப்படிலாம் வகை வகையா சாப்பிடவா ரமலான்?
சாப்பிடுங்க, ஆனா நிதானமா பார்த்து சாப்பிடுங்க :)

ரமலானுக்கு முன்னால் செய்யவேண்டிய...

Saturday, 20 August 2011

கடைசிப் பத்தும் 'இஃதிகாஃப்' என்ற வணக்கமும்

ஒருசில நாட்களுக்கு முன்புதான் ரமலான் பிறையைக் கண்டதுபோல் வெகு விரைவாக ரமலானின் 2 பத்துகளும் கடந்துவிட்டன. 20 நாட்களின் நோன்புக‌ளையும் வழக்கம்போல் சிறப்பாகவும், சந்தோஷமானதாகவும், உற்சாகம் மிக்கதாகவும் ஆக்கித்தந்த வல்ல நாயன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! இந்த ரமலானிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்த (மீதியுள்ள 10 நாட்களான) கடைசிப் பத்து நாட்களையும் அதன் மகத்துவமிக்க இரவுகளையும் மேலும் அதிகமதிகமான நல்ல அமல்களோடு சிறப்பித்து, நன்மைகளை வாரிக் கொள்வதற்கு அல்லாஹுதஆலா நம்மனைவருக்கும் உதவி செய்தருள்வானாக!

கடைசிப் பத்து நாட்களின் சிறப்பையும் மகத்துவத்தையும் அறிய "ரப்புல் ஆலமீன் தரும் ரமலான் பரிசு" என்ற இடுகையைப் பார்க்கவும். இப்போது இந்த கடைசிப் பத்தில் செய்யவேண்டிய இன்னொரு சிறப்பு வணக்கமான "இஃதிகாப்" பற்றிப் பார்ப்போம்.


"இஃதிகாஃப்" என்ற பொதுவான அரபி சொல்லுக்கு "தங்குவது" என்று சொல்லப்படும். மார்க்க அடிப்படையில் நாம் சொல்வதானால், அல்லாஹ்வுக்காக சில நாட்களை ஒதுக்கி, பள்ளிவாசலில் சென்று தங்கி, இறைவனிடம் நன்மைகளை எதிர்ப்பார்த்த நிலையில் இயன்றவரை அதிகமாக வணக்கங்கள் புரிவதை "இஃதிகாஃப்" என்கிறோம்.

Saturday, 6 August 2011

நோன்பா? வெறும் பட்டினியா? (சுய பரிசோதனை)


அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சிறப்புமிக்க ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் என்றும் நிலவட்டுமாக! இந்த ரமளான் மாதம் நம் உள்ளங்களை தூய்மைப் படுத்தக்கூடியதாகவும், சிறு சிறு தவறுகளையும்கூட களைந்து உண்மையான/முழுமையான‌ இஸ்லாமியர்களாக வாழ நம்மை தயார் படுத்தக்கூடியதாகவும் உள்ளது. அது எப்போது..? ரமளானில் நோற்கும் நோன்பின் நோக்கத்தை சரியான முறையில் நாம் நிறைவேற்றும்போது! அப்படியானால் நோன்பின் நோக்கத்தை நாம் எவ்வாறு நிறைவேற்றுவது? முதலில் நோன்பின் நோக்கம் இதுதான் என்று நாம் அறிந்துக் கொண்டால்தான் அதன் நோக்கத்தை நாம் நிறைவேற்ற‌ இயலும்.

Monday, 30 August 2010

ரப்புல் ஆலமீன் தரும் ரமலான் பரிசு!


புனிதமிகு இந்த ரமலானிலே செய்யும் நல்லறங்களுக்கு நிகராக வேறு எந்த நாட்களிலும் கிடைக்காத மகத்தான பரிசுகள் இறைவனிடமிருந்து கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

நம்மில் அதிகமானோர் அதற்காக நம் ஓய்வு, உறக்கம் கூட மறந்து அல்லாஹ்வுக்காக செய்யவேண்டிய அமல்களில் ஈடுபடுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றாலும், இன்னும் சில பேர் இந்த ரமலானில்கூட இறைவழிபாடுகளின் விஷயத்தில் அலட்சியம் செய்பவர்களாக இருப்பதைக் காண்கிறோம். கடைகளில் தள்ளுபடி விலையில் பொருட்களை வாங்குவதற்கு அந்த கூட்ட நெரிசலிலும் நாம் காட்டும் ஆர்வம், அல்லாஹ்வின் இந்த மகத்தான நற்கூலியை அடைவதில் காட்டுவதில்லை.

ஒவ்வொரு நன்மையும் அது போன்ற பத்து மடங்கு முதல் எழுநூறு மடங்குகளுக்கு நிகரானது. நோன்பு எனக்குரியது. அதற்கு நானே கூலி வழங்குவேன். நோன்பு நரகிலிருந்து காக்கும் கேடயமாகும் என்று உங்கள் இறைவன் கூறுகின்றான் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம் (1945)

ஆக‌ ரமலானில் நாம் ஒரு நாள் செய்யும் நல்லறங்கள் அல்லாஹ்விடத்தில் 10 முதல் 700 நாட்கள் செய்யும் நல்லற‌ங்களுக்கு நிகரானதாக இருக்கிறது.

டிவி, இன்டர்நெட், செல் ஃபோன்கள், மற்ற பொழுது போக்குகள் மூலம் முடிந்தவரை நோன்பிருக்கும் நேரத்தை செலவழிப்பதில் முனைப்பாக‌ இருக்கும் நம் மக்கள், அல்லாஹ்வின் அளப்பரிய அருளைத் தேடுவதில் முனைப்புக் காட்டாமல், ரமலானின் நாட்களை வீணாக்கிக் கொண்டிருப்பது வேதனையான விஷயம்தான்! எனவே, கடந்த நாட்கள் கடந்ததாக இருக்கட்டும்; இனி மீதமிருக்கும் நாட்களிலாவது நம்மால் முடிந்த நல்ல அமல்களில் நம்மை ஈடுபடுத்திக்கொள்ள முயற்சி செய்வோம்.

அடுத்த நொடி என்ன நடக்கும் என்று சொல்ல முடியாத நமக்கு, அடுத்த ரமலானை நாம் அடைவோம் என்பதில் யாரும் எந்த உத்திரவாதமும் கொடுக்க இயலாது. ஆகவே தொழுகையை சரியான முறையில் கடைப்பிடிப்பது, குர்ஆன் ஓதுதல், அதிகமதிகம் பிரார்த்தனையில் ஈடுபடுவது, இஸ்லாத்தின் ஒவ்வொரு அம்சங்களையும் பயான் கேட்பதின் மூலமோ, குர்ஆன்/ஹதீஸ் சம்பந்தமான இணையங்களைப் படிப்பதின் மூலமோ (எதன் மூலமாவது) அறிந்துக் கொள்வதில் ஆர்வத்துடன் ஈடுபடுவது, அல்லாஹ் நமக்கு பெருக்கித் தருவான் என்ற எண்ணத்தில் மனமுவந்து தாராளமாக தான தர்மங்கள் செய்வது, உங்களைப் போன்ற நோன்பாளிகளுக்கு உங்களால் இயன்றளவு நோன்பு திறக்க கொடுத்து உதவுவது மற்றும் பொதுநல சேவைகள் என மறுமைக்குரிய நற்காரியங்களை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

மேலும், உலகில் எவ்வளவு பெரிய‌ வெகுமதிகள் நமக்கு கிடைத்தாலும் அவையாவும் அல்லாஹ்வுடைய பரிசுக்கு எள் முனைய‌ளவும் நிகரானது கிடையாது! அதுவும் இன்று ஆரம்பமாகும் கடைசிப் பத்தில் ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹுதஆலா நமக்கு தரக்கூடிய ஓர் உன்னத அன்பளிப்பு 'லைலத்துல் கத்ரு' என்று சொல்லப்படும் ஆயிரம் மாதங்களைவிட சிறந்த இரவாகும்! அந்த இரவை அடையக்கூடிய‌ நாளை நாம் இப்போது நெருங்கிவிட்டோம்.

அல்லாஹ் தனது திருமறையில்,

"மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது" (அல்குர்ஆன் 97 :3)

என்று கூறுகின்றான்.  

அதாவது அந்த ஓர் இரவின் நன்மைகள் ஆயிரம் மாதங்கள் செய்யும் நன்மைகளைவிட சிறந்தது என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஆயிரம் மாதங்கள் என்பது சுமார் 83 வருடங்களும் நான்கு மாதங்களும் ஆகும். அதாவது ஒரு நாளின் நன்மை சராசரி மனித ஆயுளையும் விட அதிகமான ஆண்டுகளின் நன்மைகளினைப் பெற்றுத் தரவல்லது என்பதை நினைத்துப் பார்க்கும்போதே நமக்கு அல்லாஹ்வின் இந்த மகத்தான வெகுமதியினைத் தவறவிடக் கூடாது எனும் எண்ணம் நிச்சயம் நமக்கு வரும்!

ஆனால், நமது வாழ்க்கையில் நாம் சந்தித்த கடந்த ரமலான்களில் லைலத்துல் கத்ரின் நன்மையை நாம் பெற்றுள்ளோமா என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆயினும் அதைப் பெற நாம் முழு ஆர்வத்துடன் ஈடுபட்டுள்ளோமா? அதற்காக முறையாக நபி(ஸல்) அவர்களின் வழியில் முயன்றுள்ளோமா? என்பதை நாம் சற்று சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் எந்த நாட்களில் 'லைலத்துல் கத்ரு' என்ற இரவைத் தேடிக்கொண்டார்கள்?

லைலதுல் கத்ரு (இரவு) கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்: புஹாரி (2022)
    
நபி (ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரு (இரவைப்) பற்றி அறிவிப்பதற்காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்களில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். நபி(ஸல்)அவர்கள், "லைலத்துல் கத்ரு (இரவு) பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டுவிட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம். ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெற முயற்சி செய்யுங்கள்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாமித் (ரலி)
நூல்கள்: புஹாரி (49), முவத்தா (615)

சில நபித்தோழர்கள் லைலத்துல் கத்ர், இருபத்தி ஏழாம் இரவு என்று கனவு கண்டு நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "உங்கள் கனவைப் போல் நானும் கனவு கண்டேன். அது கடைசிப் பத்து நாட்களில்தான் அமைந்துள்ளது. யார் லைலத்துல் கத்ரை அடைய முயற்சிக்கின்றாரோ அவர் கடைசிப் பத்தில் தேடட்டும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புஹாரி (1158)
    
மேலேயுள்ள‌ ஹதீஸ்கள் அனைத்தும் பொதுவாக லைலத்துல் கத்ரு என்பது கடைசிப் பத்து இரவுகளில் இருப்பதாக அறிவிக்கின்றன.

"எனக்கு லைலத்துல் கத்ரு (இரவு) காண்பிக்கப்பட்டது. பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே நீங்கள் கடைசிப் பத்து நாட்களின் ஒற்றைப்படை இரவுகளில் அதை தேடுங்கள்!"
      அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித்(ரலி); நூல்கள்:புகாரி,முஸ்லிம்

'லைலத்துல் கத்ரை ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் ஒற்றைப்படையான இரவுகளில் நீங்கள் தேடுங்கள்' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்:
அன்னை ஆயிஷா (ரலி); நூல்கள்: புஹாரி (2017), முஸ்லிம் (1997) 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு (இரவைப்) பற்றிச் சொல்லும்போது, அது ரமலான் மாதத்தில்தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இரவான 'இருபத்தி ஒன்று' அல்லது 'இருபத்தி மூன்று' அல்லது 'இருபத்தி ஐந்து' அல்லது 'இருபத்தி ஏழு' அல்லது ரமலானின் 'கடைசி இரவில் (29)' இருக்கும்'' என்று சொல்லிவிட்டு, யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி); நூல்: அஹ்மத் (20700)
    
இந்த ஹதீஸ்களிலிருந்து லைலத்துல் கத்ரு என்ற அந்த இரவு ரமலானின் கடைசிப் பத்து இரவுகளில், குறிப்பாக ஒற்றைப்படையான ஐந்து இரவுகளில் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது.

லைலத்துல் கத்ரும், இருபத்து ஏழாம் கிழமை இரவும்..!

இவ்வாறு மேலே கண்ட ஹதீஸ்களில் நபி(ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்த செய்திகள் இருக்க, லைலத்துல் கத்ரு (இரவு) ரமலான் மாதத்தின் 27 ஆம் இரவில்தான் என பெரும்பான்மையான இஸ்லாமிய‌ மக்கள் தவறாக விளங்கி வைத்துள்ளனர். இவ்வாறு தவறாக விளங்கி வைத்திருப்பதால், ரமலான் மாதத்தின் 27-ஆம் இரவில் மட்டும் பள்ளிகளில் மக்கள் நிரம்பி வழிவதைக் காண்கிறோம். அதுவரைக் கண்டிராத கூட்டம் அன்றிரவு மட்டும் பள்ளியில் அலைமோதும்! அன்றைய இரவில் பள்ளிகள் அலங்கரிக்கப்பட்டும், பண்டங்கள், பதார்த்தங்கள், நேர்ச்சைப் பொட்டலங்கள், பழங்கள் என்று குவித்து வைத்து, அந்த ஓரிரவை மட்டும் விசேஷமாக சிறப்பிக்கும் அமல்களில் ஈடுபடுவதையும் காண முடிகிறது.

இப்படி அமர்க்களப்படுத்தி, அந்த 27 ஆம் இரவில் மட்டும் தொழுதுவிட்டு மற்ற ஒன்பது இரவுகளையும் வீணாக‌ விட்டுவிடுவது சரியான‌ முறைதானா? அந்த லைலத்துல் கத்ரு (இரவு) எப்போது கிடைக்கும், எப்படி முயன்றால் கிடைக்கும் என்பதை நம் மக்கள் அறிந்திருந்தால், கடைசிப் பத்தின் எல்லா நாட்களிலும் கண்விழித்து இறைமன்னிப்பைத் தேடுவதை விட்டுவிட்டு, இப்படி ஒரே நாளில் கொண்டாடிவிட்டு, மற்ற நாட்களில் வீட்டில் குறட்டை விட மனம் இடம் கொடுக்குமா?

இந்த நிலை சரியானதுதானா என்பதை நாம் ஆய்வு செய்தோமானால், நபி(ஸல்) அவர்கள் இப்படி ரமலான் 27 எனும் ஒரே இரவை சிறப்பிக்குமாறு கூறாததாலும், அவர்கள் வாழ்க்கையில் இது 21, 23, 25, 27, 29 போன்ற வெவ்வேறு ஒற்றைப்படை இரவுகளில் வந்துள்ளதாக அறிவித்துள்ளதாலும் 27 - ஆவது இரவை மட்டுமே சிறப்பிப்பது நபிவழிக்கு மாற்றமானது என்பதை நாம் விளங்கமுடிகிறது. ஆக‌, முன்னோர்கள் செய்துவந்தார்கள் என்பதற்காக அல்லாமல், இதை நமது மறுமை வாழ்வுக்காக கவனத்தில் கொண்டு நமது அமல்களை நபிவழியில் மாற்றிக்கொண்டால் மட்டுமே மறுமையில் நாம் வெற்றிபெறமுடியும்!

-:லைலத்துல் கத்ரும், அதற்கான‌ ஸ்பெஷல் (?) தொழுகையும்:-

"ரமலானில் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?" என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள், "நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும், ரமளான் அல்லாத நாட்களிலும் பதினொரு ரக்அத்துகளைவிட அதிகமாகத் தொழுததில்லை. நான்கு ரக்அத்கள் தொழுவர்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் நான்கு ரக்அத்கள் தொழுவர்கள். அதன் அழகையும் நீளத்தையும் நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்துகள் தொழுவார்கள்" என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸலமா; நூல் : புஹாரி (1147)

மேற்படி ஹதீஸில் கூறப்பட்ட பதினொரு ரக்அத் இரவுத் தொழுகையைத்தான் நபி(ஸல்)அவர்கள் - தொழுகையின் நிலை, குர்ஆனை ஓதுதல், ருகூவு, ஸுஜுது போன்றவற்றை தகுந்த முறையில் நீட்டி, ஸஹர் நேரம் தப்பிவிடுமோ என்று கருதும் அளவுக்குத் தொழுதிருக்கின்றார்கள். இவ்வாறானத் தொழுகையைத்தான் நாமும் தொழவேண்டும்.

அதை விட்டுவிட்டு, மார்க்கத்தில் இல்லாத தஸ்பீஹ் தொழுகை, 'குல்குவல்லாஹு' சூராவை நூறு தடவை ஓதி தொழும் தொழுகை, ராத்திபுகள், குர்ஆன் ஓதி கத்தம் செய்தல், குர்ஆனில் வரும் ஸஜ்தா வசனங்கள் அனைத்தையும் அந்தந்த அத்தியாயத்தோடு ஓதி ஸஜ்தா செய்யாமல் மொத்தமாக 27 - ஆம் இரவில் ஓதி ஸஜ்தா செய்வது என நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தராத வணக்க வழிபாடுகளையெல்லாம் இஸ்லாமியர்களில் பெரும்பாலோர் செய்துவருவது எதன் அடிப்படையில் என்பதற்கு அவர்கள்தான் இறைவனிடத்தில் பதில் சொல்லவேண்டும்.

ஆக, லைலத்துல் கத்ரு (இரவு)க்கென்று எந்தவொரு பிரத்யேகத் தொழுகையையோ, மேற்கூறப்பட்டவற்றையோ நபி(ஸல்) அவர்கள் காட்டித்தரவில்லை என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இப்போது இந்த லைலத்துல் கத்ரு என்ற மகத்துவமிக்க அந்த இரவில் நம்முடைய வணக்க வழிபாடுகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதையும் நபிவழியில் நாம் பார்க்கலாம்:

நபி(ஸல்) அவர்கள் எவ்வாறு 'லைலத்துல் கத்ரு' என்ற இரவைத் தேடிக்கொண்டார்கள்?

ரமலானின் கடைசிப் பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி(ஸல்)அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள். (அல்லாஹ்வைத் தொழுது) இரவை உயிர்ப்பிப்பார்கள். தமது குடும்பத்தினரையும் (இறைவனை வணங்குவதற்காக) எழுப்பி விடுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல் : புஹாரி 2024

நபி (ஸல்) அவர்கள் மற்ற எந்த நாட்களிலும் வணக்கத்தில் ஈடுபடாத அளவுக்கு ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் அதிக அளவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவார்கள்.
      
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: முஸ்லிம்

எனவே நபி(ஸல்) அவர்கள் தாமும் தமது குடும்பத்தினரும் விழித்திருந்து லைலத்துல் கத்ரு என்ற அந்த மகத்தான இரவைப் பெற வணக்கங்களில் ஈடுபட்டதைப்போல், நாமும் முயலவேண்டும். இயன்றால் அவர்கள் கடைசிப் பத்து நாட்கள் பள்ளியில் 'இஃதிகாஃப்' இருந்ததைப்போல் இஃதிகாஃப் இருக்கவேண்டும். நமது வாழ்நாளில் நேரம் கிடைக்கும்போது ரமலானில் குறைந்தது ஒரு முறையேனும் நபிவழியான (ஸுன்னத்தான) இந்த 'இஃதிகாஃப்' இருக்கவேண்டும் என்று உள்ளத்தினால் நாட்டம் கொள்ளவேண்டும்! எத்தனையோ விஷயங்களுக்கு கண்விழித்து செயல்படும் நாம், இந்த மகத்தான கடைசிப் பத்து இரவுகளிலும் பாவமன்னிப்பு பெரும் விதத்தில் துஆ செய்யவும், லைலத்துல் கத்ரு இரவினை முறையாகப் பெற்றிடவும் முனைந்திட வேண்டும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 

"அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரு எந்த இரவு என்று நான் அறிய நேர்ந்தால் அந்த இரவில் என்ன சொல்ல வேண்டும்?" என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் பின்வருமாறு (ஒரு துஆவைக்) கற்றுத் தந்தார்கள்:

اَللَّهُمَّ اِنَّكَ عَفُوٌّ ، تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّي 

(அல்லாஹும்ம இன்ன(க்)க அஃபுவ்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஅஃபு அன்னீ)

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி); நூல் : திர்மிதீ (3435)

பொருள்: இறைவா..! நீ மன்னிப்பவன்; மன்னிப்பையே விரும்புபவன்; எனவே என்னை மன்னித் தருள்வாயாக!

மேற்கண்ட துஆவை நாம் அதிகமதிகம் ஓதி அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு தேடவேண்டும். இந்த வருடம் நம்முடைய கடைசி ரமலானாக இருக்கலாம் என்ற உள்ளச்சத்தோடு துஆ செய்வோமேயானால், அதுவே நம்முடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பதற்கு போதுமானதாக அமைந்துவிடும், இன்ஷா அல்லாஹ்!

நாம் அந்த இரவைப் பெற முடியாத துர்பாக்கியசாலிகளாக இல்லாமல், எப்படியாவது அதை அடைந்துக் கொள்ளும் பாக்கியசாலிகளாக முயற்சிக்க வேண்டும். எந்தளவுக்கு அந்த பாக்கியம் நமக்கு கிடைக்கும் என்பதை அல்லாஹ்வே நன்கறிவான். ஆனால் பரவலாக பல முஸ்லிம்கள் இதன் அருமையை மறந்தவர்களாக  வாழும் நிலையும், குறிப்பாகக் கடைசிப் பத்து நாட்களில் நமது பொன்னான நேரத்தை இவற்றைவிடவும் அதிகமாக இதர அலுவல்களிலும், பெருநாளின் தேவைகள் என்று துணிமணிகள், அணிகலன்கள், அலங்காரப் பொருட்கள் போன்ற இதர பொருட்களை வாங்கும் நிமித்தம் கடைவீதிகளில் கழித்து விடுவதும், அதிலும் தள்ளுபடி விளம்பரங்களுக்காக மாலையில் வெளியேறி கடை கடையாக அலைவதும், இரவில் தாமதமாக அசதியுடன் வீடு திரும்பி இரவு தொழுகைகள், ஃபஜ்ரு தொழுகை, லைலத்துல் கத்ரு எனும் மகத்தான இரவு போன்ற அனைத்தும் தவறிவிடும் நிலையையும் காண முடிகிறது. அவையெல்லாம் லைலத்துல் கத்ரு என்னும் இந்தப் பொன்னான வாய்ப்பை இழக்கவைக்க முஸ்லிம்களுக்கு எதிரான ஷைத்தானின் முயற்சி என்றுதான் சொல்லவேண்டும். ஆக, இவற்றைத் தவிர்த்துக் கொள்ளும் விதமாக நமது தேவையானவற்றை கடைசிப் பத்து நாட்களுக்கு முன்னரே தாமதமின்றி வாங்கி தயார் பண்ணிக்கொண்டால், நேர விரயமின்றி கடைசிப் பத்து இரவுகளில் அதிகமான வணக்கங்கள், நல்ல அமல்கள் புரிந்து கண்ணிய மிக்க இந்த லைலத்துல் கத்ரை பெற ஏதுவாக அமையும்.

-:லைலத்துல் கத்ரு இரவினால் கிடைக்கும் இன்னொரு பயன்:-

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

 அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்:
புஹாரி (35)

எனவே ரப்புல் ஆலமீன் தரும் ரமலான் பரிசான‌ லைலத்துல் கத்ரு இரவை அடைய‌ ரமலானின் கடைசிப் பத்தில் அல்லாஹ்வும், அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்)அவர்களும் அனுமதித்தவைகளை நடைமுறைப்படுத்தியும் அனுமதிக்காதவைகளை தவிர்ந்து நடந்தும், இஸ்லாம் கற்றுத்தந்த வழியில் நம் வணக்க வழிபாடுகளை அமைத்துக்கொள்வோம். அதற்குரிய அறிவையும், ஆற்றலையும், பக்குவத்தையும் தர வல்ல அல்லாஹ்வையே பிரார்த்திப்போம்.

மேலும் இத்தகைய சிறப்புவாய்ந்த லைலத்துல் கத்ருடைய இரவுகளில் நின்று வணங்கியும், குர்ஆனை அதிகமாக‌ ஓதியும், திக்ருகளை மொழிந்தும் நம்முடைய அமல்களை அதிகப்படுத்திக் கொள்ளவேண்டும். வீணான பேச்சுக்கள், சண்டை சச்சரவுகள் இவற்றை அறவே தவிர்த்துக்கொண்டு இறைவனிடம் அதிகமதிகம் பாவமன்னிப்பு கோரவேண்டும்.

சிறப்புமிகு இந்நாட்களின் அமல்களை முறையாக நிறைவேற்ற உதவிடவும், அதன் மூலம் அல்லாஹ்தஆலா நமக்கு பாவமன்னிப்பு அளித்திடவும், நமது பிராத்தனைகளை ஏற்று அருள் புரிந்திடவும், நம் அனைவரையும் நரகில் இருந்து பாதுகாத்திடவும், புனித ரமலானின் அனைத்து நன்மைகளையும் முழுமையாக பெற்றிடும் விதத்தில் அல்லாஹ்வின் ஏற்பிற்குரியதாக நமது அமல்கள் அமைந்திடவும், அதன் மூலம் நமது இம்மை/மறுமை வாழ்க்கை வெற்றி பெற்றிடவும் இந்த புனித ரமலானில் நமக்காகவும் அனைவருக்காகவும் என்றென்றும் பிரார்த்திப்போமாக!


Friday, 27 August 2010

ரமலான் எதிர்பார்க்கும் இலட்சியம்



'யார் பொய்யான பேச்சையும், பொய்யான (தீய) நடவடிக்கைகளையும் விட்டுவிடவில்லையோ, அவர் பசித்திருப்பதாலும், தாகித்திருப்பதாலும் அல்லாஹ்வுக்கு எத்தகையத் தேவையுமில்லை' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி, அஹ்மத், திர்மிதி, அபூதாவூத்

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று, அவனுக்காக நாம் நோன்பு நோற்கின்றோம். நோன்பை நோற்பதன் மூலம் நம்மிடத்தில் என்ன மாற்றங்கள் ஏற்படவேண்டுமோ, அவை ஏற்பட்டிருக்கின்றனவா? இல்லையா என்பதை நாம் சுயபரிசோதனை செய்யக் கடமைப் பட்டுள்ளோம். அல்லாஹ் எவைகளைச் செய்யச் சொன்னானோ, அவற்றை முழு மனதுடன் செய்வது போலவே, எவைகளைத் தவிர்க்கச் சொன்னானோ அவற்றையும் கண்டிப்பாகத் தவிர்ந்து நடக்கவேண்டும். அல்லாஹ்வின் கட்டளைகளை ஏற்று நடக்கும்போது அதற்கான நற்கூலிகள் வழங்கப்படும். எவைகளை அல்லாஹ் தேவையில்லை என்ற தடுத்தானோ, அவை மீறப்படும்போது தண்டனையைத் தயார் படுத்துகின்றான். ஒவ்வொரு நிமிடமும் நான் ஒரு அடிமை என்ற நன்றி உணர்வோடு நாம் வாழ வேண்டும். குறிப்பாக ரமலான் மாதத்தில் மிகுந்த பக்குவத்துடன் அதிகமான வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும். தீமைகளை விட்டும் தூரமாகி, பரிசுத்தமான வாழ்வின் பக்கம் மீளவேண்டும். இதையே அல்லாஹ் எதிர்பார்க்கிறான்.

Saturday, 14 August 2010

ரமலான் மாதத்தின் சிறப்புகள்


அருள்வாயில்கள் திறக்கப்படும் மாதம்

“ரமலான் மாதம் வந்து விட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்கள்: புகாரீ (1898), முஸ்லிம் (1956)

“ரமலான் மாதம் வந்து விட்டால் வானத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்கள்: புகாரீ (1899), முஸ்லிம் (1957)

ரமலான் மாதம் வந்துவிட்டால் சுவர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன; நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன; வானத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன; ஷைத்தான்களுக்கு விலங்கிடப் படுகின்றன என்பன போன்ற பல வாசகங்கள் ஹதீஸ்களில் காணப்படுகின்றன. இதன் கருத்து என்ன? 

Sunday, 8 August 2010

ரமலானே வருக!





புனித ரமலானே வருக!
குர்ஆனை இறக்குவதற்கு
தேர்ந்தெடுத்தான் இறைவன்
உந்தன் நாட்களை!
அதனாலல்லவோ நீ
புனிதமும் கண்ணியமும்
ஒருங்கே பெற்றாய்...?

பக்கத்தில் நீ நெருங்குவதால்
பக்தி பரவேசத்துடன் இப்போதே
ஆயத்தமாகிறோம் நாங்கள்...
அமல்களோடு உனை வரவேற்க!
முத்தான உன் முப்பத்து நாட்களையும்
முறையாக முழுமையாக எங்களுக்கு
நிறைவேற்ற வேண்டுகிறோம் இறைவனை!

வீணுக்கோ விளையாட்டுக்கோ
விளைத்திடவில்லை இறைவன் எங்களை!
வெறுமனே எதையும் தராமல்...
வீசியெறிந்திடவுமில்லை இவ்வையகத்தில்!
எண்ண எண்ணக் குறையாமல் ‍- அவன்
அள்ளிக் கொடுத்த அருட்கொடைகளில்
ஒன்றல்லவா நீயும் எங்களுக்கு...?

கத்ருடைய இரவினை - ‍இறைவனின்
கருணையால் பெற்றிட - ‍உன்
கடைசிப்பத்தின் இரவுகளில்...
கண்விழித்து அமல் செய்யவே
அன்பளிப்பாக்குகிறான் இறைவன்
ஆயிரம் மாதங்களுக்குமேல் நன்மைகளை!
அர்ரஹ்மான் அவனல்லவோ...!

நாவைப் பேணாமல் வரும்
பாவம் முதற்கொண்டு...
நரகில் தள்ளும் தீமைகளனைத்தையும்
புறந்தள்ளி நாங்கள் - சுவனத்தின்
நல்லறங்கள் செய்யும்...
நற்பயிற்சி நாட்களாக உன் மாதத்தில்
பதினோரு மாதங்களுக்கும் எங்களை
பண்படுத்தும் விதமாக...

புனித ரமலானே நீ...
வருக! வருகவே....!
பயணிக்கும் பாதை