அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Saturday 25 March 2023

பசியை அடக்கிக் கொண்டு தொழுவது அனுமதிக்கப்பட்டதா?

நோன்பு துறக்க தண்ணீரை மட்டும் குடித்துவிட்டு எதையும் சாப்பிடாமல் உடனே தொழுகையில் கலந்துக் கொள்வது, நம் இஸ்லாமிய மக்களில் பெரும்பானவர்களிடம் உள்ள  அறியாமையாகும். தமிழக முஸ்லிம்களிடம் மட்டுமின்றி வெளிநாட்டிலுள்ள பலதரப்பட்ட மக்களிடமும் இந்தப் பழக்கம் காணப்படுகிறது. இது சரியானதா என்றால், நிச்சயமாக இல்லை. ஏனெனில் நபி(ஸல்) அவர்களின் அறிவுரைக்கும், வழிகாட்டலுக்கும் இது மாற்றமானதாகும்.

நோன்பு துறப்பதற்காக தண்ணீர் குடித்தவுடன் மஃக்ரிப் தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விடுவதால், மக்கள் தண்ணீரைக் குடித்தவுடனே மஃக்ரிப் தொழுகைக்குச் சென்றுவிடுவார்கள். ஆனால் உடலும், மனமும் உணவின் பக்கம் நாட்டம் கொண்டிருக்கும். இவ்வாறு செய்வது பேணுதல் என்ற எண்ணம் பலரிடம் உள்ளது. உண்மையில் இது பேணுதல் அல்ல! மாறாக மார்க்கத்தில் இது கண்டிக்கப்பட்டுள்ள ஒரு செயலாகும்.

صحيح البخاري
5465 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا أُقِيمَتِ الصَّلاَةُ وَحَضَرَ العَشَاءُ، فَابْدَءُوا بِالعَشَاءِ»

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"தொழுகைக்கு 'இகாமத்' சொல்லப்பட்டுக் கொண்டிருக்க இரவு உணவு வந்துவிட்டால் முதலில் உணவை அருந்துங்கள். (பின்னர் தொழுங்கள்.)"

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புஹாரி (5465)

صحيح البخاري
673 – إذَا وُضِعَ عَشَاءُ أحَدِكُمْ وأُقِيمَتِ الصَّلَاةُ، فَابْدَؤُوا بالعَشَاءِ ولَا يَعْجَلْ حتَّى يَفْرُغَ منه

''உங்களில் ஒருவரின் இரவு உணவை வைக்கப்பட்டு (மஃக்ரிப்) தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டு விடுமானால் முதலில் உணவை அருந்துங்கள். உணவை உண்டு முடிக்கும்வரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம்.

அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி)
நூல்: புஹாரி(673)

صحيح مسلم
1274 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَّادٍ حَدَّثَنَا حَاتِمٌ – هُوَ ابْنُ إِسْمَاعِيلَ – عَنْ يَعْقُوبَ بْنِ مُجَاهِدٍ عَنِ ابْنِ أَبِى عَتِيقٍ قَالَ تَحَدَّثْتُ أَنَا وَالْقَاسِمُ عِنْدَ عَائِشَةَ – رضى الله عنها – حَدِيثًا وَكَانَ الْقَاسِمُ رَجُلاً لَحَّانَةً وَكَانَ لأُمِّ وَلَدٍ فَقَالَتْ لَهُ عَائِشَةُ مَا لَكَ لاَ تَحَدَّثُ كَمَا يَتَحَدَّثُ ابْنُ أَخِى هَذَا أَمَا إِنِّى قَدْ عَلِمْتُ مِنْ أَيْنَ أُتِيتَ. هَذَا أَدَّبَتْهُ أُمُّهُ وَأَنْتَ أَدَّبَتْكَ أُمُّكَ – قَالَ – فَغَضِبَ الْقَاسِمُ وَأَضَبَّ عَلَيْهَا فَلَمَّا رَأَى مَائِدَةَ عَائِشَةَ قَدْ أُتِىَ بِهَا قَامَ. قَالَتْ أَيْنَ قَالَ أُصَلِّى. قَالَتِ اجْلِسْ. قَالَ إِنِّى أُصَلِّى. قَالَتِ اجْلِسْ غُدَرُ إِنِّى سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ « لاَ صَلاَةَ بِحَضْرَةِ الطَّعَامِ وَلاَ وَهُوَ يُدَافِعُهُ الأَخْبَثَانِ ».

"மல ஜலத்தை அடக்கிய நிலையிலும், உணவு முன்னே இருக்கும்போதும் எந்தத் தொழுகையும் இல்லை" என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம்

இந்த நபிமொழிகளிலிருந்து ஜமாஅத் தொழுகையை விட, பசியைப் போக்குவது முதன்மையானது என்பதை அறிந்துக் கொள்ளலாம். சாதாரண நாட்களிலேயே இந்த நிலை என்றால் நோன்பின்போது மஃக்ரிப் நேரத்தில் அதிகமான பசியும், உணவின்மீது அதிக நாட்டமும் இருக்கும். இந்த நேரத்தில் மனதை உணவில் வைத்துக் கொண்டு, உடலை மட்டும் தொழுகையில் நிறுத்துவது அல்லாஹ்வுக்கு விருப்பமானது அல்ல என்பதால்தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இவ்வாறு நமக்கு அழகிய முறையில் வழி காட்டியுள்ளார்கள். அந்தந்த பள்ளி நிர்வாகத்தினர் இதை உணர்ந்து, நோன்பாளிகள் அமைதியான முறையில் நிதானமாக நோன்பைத் துறந்துவிட்டு மஃக்ரிப் தொழுகையை அனைவரும் ஜமாஅத்துடன் நிறைவேற்றும் வகையில் ஏற்பாடு செய்வது, "உணவை உண்டு முடிக்கும்வரை தொழுகைக்காக அவசரப்பட வேண்டாம்" என்ற நபி(ஸல்) அவர்களின் இந்தக் கட்டளையை நாம் நிறைவேற்றக்கூடிய வாய்ப்பாக அமையும்.

அதேசமயம் இன்னொன்றையும் நாம் மறந்து விடக்கூடாது. ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு ஆரம்ப நேரமும், ஒரு முடிவு நேரமும் உள்ளது. முடிவு நேரத்துக்குள் தொழுகையை நிறைவேற்றி விடவேண்டும். பசியின் காரணமாக ஜமாஅத்தைதான் விடலாமே தவிர தொழுகையை குறிப்பிட்ட நேரத்துக்குள் நிறைவேற்றாமல் தவற விட்டுவிடக் கூடாது.

மஃக்ரிப் தொழுகையைப் பொறுத்தவரை, சூரியன் மறைந்தது முதல், (ஒவ்வொரு நாட்டிற்கு ஏற்றார்போல்) சுமார் 60-80 நிமிடங்கள் வரை தொழுகை நேரம் நீடிக்கும். இகாமத் சொல்லப்பட்டாலும் சாப்பிட்டுவிட்டு தொழுவதற்குதான் முதலிடம் கொடுக்கவேண்டும் என்றாலும், தொழுகை நேரம் முடிவதற்குள் நாம் அந்தத் தொழுகையை நிறைவேற்றி விடவேண்டும்.

ஏனெனில், "தொழுகை முஃமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது" என்று (4:103 வசனத்தில்) அல்லாஹ் கூறுகிறான்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை