அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Wednesday 26 July 2023

ஆஷூரா நோன்பை எந்த நாட்களில் நோற்கவேண்டும்?

ஆஷூரா நோன்பை முஹர்ரம் பிறை 9, 10 இந்த இரண்டு நாட்களில் மட்டும்தான் நோற்க வேண்டுமா? அல்லது பிறை 10 & 11 - வது நாட்களிலும் நோற்கலாமா?

ஆஷூரா நோன்பை எந்த நாட்களில் நோற்கவேண்டும் என்ற விஷயத்தில் நம்மில் சிலர் ஆதாரமற்ற, தவறான கருத்துக்களைக் கூறி வருகின்றனர். அதாவது, முஹர்ரம் பிறை 9 & 10 அல்லது 10 & 11 - வது நாட்களிலும் ஆஷூரா நோன்பை நோற்கலாம் எனக் கூறுகின்றனர்.

"ஆஷூரா" என்ற அரபிச் சொல்லுக்கு தமிழில் "பத்தாவது" என்று பொருள். "அல்லாஹ்வுடைய மாதம்" என்று சொல்லப்பட்ட புனிதமிக்க இந்த முஹர்ரம் மாதத்தில், பத்தாவது நாள் இந்நோன்பு நோற்கப்படுவதால் இதற்கு "ஆஷூரா நோன்பு" (அதாவது பத்தாவது நாள் நோன்பு) என்று பெயர் சொல்லப்படுகிறது.

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அல்குர்ஆன் 9:36)

புனிதமான அந்த நான்கு மாதங்கள் எவை என்பதை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருபவை. அவை துல்கஃஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜமாத்துல் ஆஹிர், ஷஃஅபான் ஆகிய மாதங்களுக்கு இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.

நூல்: புஹாரி (3197, 4406, 4662, 5550, 7447)

ஹிஜ்ரி ஆண்டுக் கணக்கின் முதல் மாதமாகிய 'முஹர்ரம் மாதம்' புனிதமிக்க நான்கு மாதங்களில் ஒன்றாகும். இந்த ஆஷூரா மாதத்தில் நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் நமக்கு சுன்னத்தான நோன்புகளில் மிக சிறப்பிற்குரிய நோன்பாக ஆக்கியுள்ளார்கள்.

ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அதுதான் கஃஅபாவுக்குப் புதிய திரைப் போடப்படும் நாளாகவும் இருந்தது. அல்லாஹ் ரமலானுடைய நோன்பைக் கடமையாக்கியபோது, 'யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டுவிடட்டும்' என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புஹாரி (1592)

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அறியாமைக்கால (குறைஷி) மக்கள் ஆஷூராவுடைய நாளன்று நோன்பு நோற்கக் கூடியவர்களாக இருந்தார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டபோது நபி(ஸல்) அவர்கள், "நிச்சயமாக ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டுவிடலாம்" எனக் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (1901)

மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும், சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

இவ்வளவு சிறப்புமிக்க இந்த ஆஷூரா நோன்பை நபி(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் நோற்றால்தான் அதற்குரிய நன்மைகளை நாம் அடைய முடியும். அப்படியானால், முஹர்ரம் மாதத்தின் எந்த நாட்களில் இந்த நோன்பை நாம் நோற்க வேண்டும்?

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், 'அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?' என்று வினவினர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், 'இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் (சேர்த்து) நோன்பு நோற்போம்' என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.

நூல்: முஸ்லிம் (2088)

அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில் (சேர்த்து) நோன்பு நோற்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் (2089)

நபி(ஸல்) அவர்கள் மறுவருடம் 10 - வது நாளுடன் 9- வது நாளையும் சேர்த்து நோன்பு நோற்காமல் அதற்கு முன்பே மரணித்துவிட்டாலும் யூத, கிறிஸ்தவர்களுக்கு மாறுசெய்யும் வகையில், "அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் (சேர்த்து) நோன்பு நோற்போம்" என்று அவர்கள் கூறிவிட்டதால், நாம் முஹர்ரம் பிறை 9 மற்றும் 10 ஆகிய இரண்டு நாட்களும் ஆஷூரா நோன்பு நோற்கவேண்டும். அதுதான் நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழிமுறையாகும்!

ஆனால், சிலர் ஆஷூரா 9 & 10 - வது நாளுடன் 11 - வது நாளும் சேர்த்து மூன்று நோன்புகளாகவோ அல்லது 9 & 10 இரண்டு நாட்களில் நோன்பு நோற்பதுபோல், 10 & 11 இரண்டு நாட்களில் நோன்பு நோற்கலாம் என்றும் கூறுகின்றனர். அதற்கு பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"ஆஷூரா நோன்பு வையுங்கள். அதில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் மாற்றம் செய்யுங்கள். அதற்கு முந்திய நாளோ அல்லது அதற்கு பிந்திய நாளோ நோன்பு நோற்றுக் கொள்ளுங்கள்."

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)நூல்: அஹ்மத் (2047, 2154), குப்ரா பைஹகீ (8405, 8406), முஸ்னத் பஸ்ஸார் (5238), இப்னு ஹுஸைமா (2095)

இது தொடர்பான அனைத்து அறிவிப்புகளிலும் இப்னு அபீ லைலா (محمد بن عبد الرحمن الأنصاري ) என்பவர் இடம் பெறுகிறார். இவர்  மனன சக்தியில் மிக மோசமானவர் ஆவார். இவரை பல அறிஞர்கள் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். மேலும் இதில் வரும் தாவூத் பின் அலி (داود بن علي) என்பவரும் பலவீனமானவர். எனவே, இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

முஹர்ரம் 9 & 10 - வது நாட்களில் நோன்பு நோற்க வேண்டும் என்று வரக்கூடிய செய்திகள் மட்டும்தான் ஆதாரப்பூர்வமானவை ஆகும். எனவே 9,10 ஆகிய இரண்டு நாட்கள் தவிர, 11 - வது நாளையும் சேர்த்தோ அல்லது 9 - க்கு பதிலாக 10 & 11 - வது நாட்களில் நோன்பு நோற்பதோ கூடாது. அவை நபிவழிக்கு மாற்றமானவையாகும்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை