கேள்வி:
மனிதர்கள் மற்றும் அனைத்து படைப்பினங்கள் ஸஜ்தா செய்வது அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது.
அல்லாஹ்வுக்கு அடுத்து ஸஜ்தா செய்ய, ஒருவேளை அனுமதி கிடைத்து இருந்தால், அது கணவனுக்காகதான் என்று நபி (ஸல்) கூறியதாக சொல்வது உண்மையா?
தயவுசெய்து விளக்கம் தரவும்.
பதில்:
நீங்கள் குறிப்பிட்டுள்ள செய்தி நபி (ஸல்) அவர்கள் கூறியதாக, சில ஹதீஸ் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது.
அவற்றில் இப்னு ஹிப்பான் (4171), பைஹகீ - குப்ரா (14711), இப்னுமாஜா (1853), முஸ்னது அஹ்மத் (21986) போன்ற பல அறிவிப்புகள் பலவீனமானவை என்றாலும், இதே கருத்தில் ஏற்கத் தகுந்த சில ஹதீஸ்களும் உள்ளன.
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا النَّضْرُ بْنُ شُمَيْلٍ قَالَ: أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ
«لَوْ كُنْتُ آمِرًا أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ المَرْأَةَ أَنْ تَسْجُدَ لِزَوْجِهَا»
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவர் இன்னொருவருக்கு ஸஜ்தா செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால், ஒரு பெண் தனது கணவனுக்கு ஸஜ்தா செய்வதை அனுமதித்திருப்பேன். (ஆனால் அதையும்கூட நான் அனுமதிக்கவில்லை)"
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதீ (1159)
முஹம்மத் பின் அம்ர் —> அபூ ஸலமா —> அபூ ஹுரைரா (ரலி) என்ற இந்த அறிவிப்பாளர் தொடரில், அபூ ஹுரைரா (ரலி) வழியாக வந்துள்ள மேற்கண்ட இந்த ஹதீஸ், "ஹஸன் ஃகரீப்" என்ற நடுத்தரமான தரத்திலுள்ள செய்தியாகும். (இதுபோன்ற தரத்தில் இன்னும் சில அறிவிப்புகளும் உள்ளன.)
அடுத்து இந்த ஹதீஸின் விளக்கத்தைக் கேட்டுள்ளீர்கள்.
உங்கள் கேள்வியில் குறிப்பிட்டுள்ளதுபோல், "அல்லாஹ்வுக்கு அடுத்து ஸஜ்தா செய்ய ஒருவேளை அனுமதி கிடைத்து இருந்தால்..." என்ற வாசகம் எந்த ஹதீஸிலும் கிடையாது. அந்த ஹதீஸை விளங்கிக்கொள்ளாத சிலரின் தவறான புரிதல்தான் அது.
அத்துடன் பிற மதத்தினரில் சிலர், இஸ்லாமில் ஆணாதிக்கம், பெண்ணடிமைத்தனம், அடக்குமுறை போன்றவை மேலோங்கியுள்ளது என்ற குதர்க்கமான, உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுக்கு மேற்கண்ட நபிவழிச் செய்தியில் எவ்விதச் சான்றும் இல்லை என்று தெரிந்தும், இஸ்லாமை மாசுப்படுத்த வேண்டும் என்று நினைத்து, கணவனுக்கு மனைவி "சிரவணக்கம்" செய்யவேண்டும் என இஸ்லாம் கூறுவதாக, வேண்டுமென்றே தவறான அர்த்தம் கற்பித்து இஸ்லாமை விமர்சிக்கின்றனர்.
மனிதப் படைப்பு உட்பட இறைவனால் படைக்கப்பட்ட எந்த படைப்பினங்களுக்கும் இன்னொரு மனிதன் "ஸஜ்தா" (சிரம் பணிதல்) செய்யக்கூடாது; உலகம், மற்றும் உலகிலுள்ள அனைத்தையும், இன்னும் நம் புலன்களுக்கு அப்பாற்பட்ட கோடானு கோடி படைப்புகளையும் படைத்த அந்த ஏக இறைவனுக்கு மட்டுமே நாம் "ஸஜ்தா" (என்ற (சிரம் பணிதல்) செய்யவேண்டும் என்பதே நமக்கான இறைக்கட்டளை!
"இரவு, பகல், சூரியன், சந்திரன் ஆகியவை அவனது சான்றுகளில் உள்ளவை. சூரியனுக்கோ, சந்திரனுக்கோ ஸஜ்தாச் செய்யாதீர்கள்! அவனையே நீங்கள் வணங்குவோராக இருந்தால், அவற்றைப் படைத்த அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்யுங்கள்!"
(திருக்குர்ஆன் 41:37)
அதாவது அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்கு முக்கிய அடையாளமே, அவனுக்கு மட்டும் ஸஜ்தாச் செய்வதுதான். யாருக்காவது ஒருவர் ஸஜ்தாச் செய்தால் அவரை வணங்கியதாகவே அது அமையும் என்றெல்லாம் இந்த இறைவசனம் பிரகடனம் செய்கிறது.
மேலே சொல்லப்பட்ட ஹதீஸில், "ஒருவர் இன்னொருவருக்கு ஸஜ்தா செய்வதை நான் அனுமதிப்பதாக இருந்தால்..." என்றுதான் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதற்கு அனுமதி இல்லை என்றுதான் அதன் அர்த்தமே தவிர, ஸஜ்தா செய்ய வேண்டும் என்று அவர்கள் கட்டளையிடவில்லை.
அன்றைய உலகில் கணவன் காலில் மனைவியர் விழுந்து, சிரம் பணிவது வழக்கமாக இருந்தது. சில நபித்தோழர்கள், நபி(ஸல்) அவர்களின் காலில் விழுவதற்கு அனுமதி கேட்டபோது, எந்த மனிதரும் இன்னொரு எந்த மனிதரின் காலிலும் விழக்கூடாது என்ற பொதுவான விதியைக் காரணம் காட்டி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தடுக்கிறார்கள். காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள்தான் என்று கூறி, (ஸஜ்தா) "சிரம் பணிதல்" இறைவனுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள். "கணவனுக்கு ஸஜ்தா செய்வதையே நான் அனுமதிக்காதபோது என் காலில் எப்படி விழலாம்?" என்றும் அவர்கள் கண்டிக்கிறார்கள்.
மார்க்கத்திற்கு முரணில்லாத விஷயங்களில் கணவனுக்கு எல்லா வகையிலும் கட்டுப்பட்டு நடப்பது ஒவ்வொரு மனைவியின் கடமையாகும் என்பதால்தான் இங்கு கணவனை உதாரணமாக சொல்கிறார்கள்.
இஸ்லாமியக் குடும்பவியலின் ஒரு பகுதியப் பற்றி அல்லாஹ் கூறும்போது,
فَالصّٰلِحٰتُ قٰنِتٰتٌ حٰفِظٰتٌ لِّلْغَيْبِ بِمَا حَفِظَ اللّٰهُ
"கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்லப் பெண்கள்." (அல்குர்ஆன் 4:34) என்று கூறுகிறான்.
இத்துடன் நீங்கள் குறிப்பிடும் அந்த நபிமொழியை இணைத்துப் பார்த்தால், கணவனுக்குக் கட்டுப்படுதலின் உச்சக்கட்டத்தை தெரிவிக்கும் செய்தியாகதான் அந்த ஹதீஸ் அமைந்துள்ளது. இதன் சரியான அர்த்ததைப் புரிந்துக் கொள்பவர்கள், ஒரு பெண் தன் கணவனுக்குக் கட்டுப்படுதலும், கணவனுக்குச் செய்யவேண்டிய கடமைகள் எவ்வளவு முக்கியம் என்பதையும்தான் புரிந்துக்கொள்வார்களே தவிர, கணவனுக்கு ஸஜ்தா செய்யவேண்டும் என்று இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைக்கு நேர்முரணாகப் புரிந்துக்கொள்ள மாட்டார்கள். அப்படி புரிந்துக்கொள்ளும்படியும் அந்த ஹதீஸ் இல்லை.
மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ள விளக்கத்தின் சுருக்கம்:
"அல்லாஹ் அல்லாத ஒருவருக்குச் சிரவணக்கம் (ஸஜ்தா) செய்யுமாறு நான் கட்டளையிடுவதாக இருந்தால், கணவருக்குச் ஸஜ்தா செய்யுமாறு மனைவிக்குக் கட்டளையிட்டிருப்பேன்" என்ற நபி (ஸல்) அவர்களின் கூற்றில், அல்லாஹ்வையன்றி எவருக்கும், எதற்கும் ஸஜ்தா செய்தல் கூடாது; கணவனாகவே இருந்தாலும் சரிதான் என்ற செய்திதான் அங்கே வலியுறுத்தப்படுகின்றது. எனவே , ஒரு மனைவி எந்த அளவுக்கு தனது கணவனுக்கு கட்டுப்படுவது என்ற அதன் உச்சக்கட்டத்தையே நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களே தவிர, கணவனுக்கு (ஸஜ்தா என்ற) சிரம் பணியவேண்டும் என்று சொல்லவே இல்லை என்பது தெளிவான விஷயம்.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!