அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Monday, 28 July 2025

குப்புறப் படுப்பது நரகவாசிகள் படுக்கும் முறையா?

கேள்வி: குப்புறப் படுப்பது நரகவாசிகள் படுக்கும் முறை என்று வரக்கூடிய, இப்னு மாஜாவிலுள்ள 3724 - வது ஹதீஸ் ஸஹீஹானதா?

பதில்: இது ஸஹீஹான ஹதீஸல்ல; "ளயீஃப்" என்று சொல்லப்படும் பலவீனமான செய்தி. ஏனெனில், குப்புறப்படுக்கக் கூடாது என்ற கருத்தில் வரக்கூடிய ஹதீஸ்கள் அனைத்துமே ஆதாரப்பூர்வமானது அல்ல என்று ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறியுள்ளனர்.

அவற்றில் சில ஹதீஸ்களையும், அவை பலவீனமாக இருப்பதற்கான காரணங்களையும் கீழுள்ள விபரங்களில் காணலாம்.


கேள்வியில் குறிப்பிடப்பட்டுள்ள இப்னு மாஜா 3724 - வது ஹதீஸ் பற்றி:

அபூதர் (ஜுன்துப் பின் அப்துல்லாஹ் - ரலி) அவர்கள் கூறியதாவது:

'நான் என்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருக்கும்போது என்னருகில் கடந்து சென்ற நபி(ஸல்) அவர்கள், "என்னை அவர்களின் காலால் தட்டி, 'எனதருமை ஜுன்துபே! இவ்வாறு குப்புறப்படுப்பது நரகவாசிகள் படுக்கும் முறையாகும்" என்று கூறினார்கள்.'

அறிவிப்பவர்: இப்னு திஹ்ஃபா அல்ஃகிஃபாரீ

நூல்: இப்னுமாஜா (3724)

حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ قَالَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ نُعَيْمِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُجْمِرِ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ طِهْفَةَ الْغِفَارِيِّ، عَنْ أَبِي ذَرٍّ قَالَ:

مَرَّ بِيَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا مُضْطَجِعٌ عَلَى بَطْنِي، فَرَكَضَنِي بِرِجْلِهِ وَقَالَ: «يَا جُنَيْدِبُ، إِنَّمَا هَذِهِ ضِجْعَةُ أَهْلِ النَّارِ»

இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் (ராவீ) "முஹம்மது பின் நுஐம்" என்பவர் பற்றி இவரின் நிலை அறியப்படவில்லை என்று இமாம் அபூஹாதிம், இமாம் தஹபீ, இமாம் இப்னு ஹஜர் போன்ற அறிஞர்கள் கூறியுள்ளனர்.

(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப்-3/719, அல்காஷிஃப்-4/216)

மேலும் மிஸ்ஸீ இமாம் அவர்கள், இந்த அறிவிப்பாளர் தொடரை  நிராகரிக்கப்பட்டது என்றும், இதுபோன்று வேறு யாரும் அறிவிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

நூல்: தஹ்தீபுல் கமால் (13/375, 376)

எனவே இது பலவீனமான அறிவிப்பாளர் தொடராகும். இந்த அறிவிப்பாளர் தொடர் மறுக்கத்தக்கதாக இருப்பதால், இது ஆதாரத்திற்கு ஏற்றதல்ல.

இதே கருத்தில் அபூ ஹுரைரா (ரலி) வழியாக வரக்கூடிய் திர்மிதீ - 2768 - வது ஹதீஸ் பற்றி:

'ஒரு மனிதர் தன்னுடைய வயிற்றின் மீது (குப்புறப்) படுத்திருப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது அவர்கள், "இவ்வாறு படுப்பதை அல்லாஹ் விரும்பமாட்டான்" என்று கூறினார்கள்.'

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ (2768) 

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، وَعَبْدُ الرَّحِيمِ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو قَالَ: حَدَّثَنَا أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ

رَأَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مُضْطَجِعًا عَلَى بَطْنِهِ فَقَالَ: «إِنَّ هَذِهِ ضِجْعَةٌ لَا يُحِبُّهَا اللَّهُ»

وَفِي البَابِ عَنْ طِهْفَةَ، وَابْنِ عُمَرَ: وَرَوَى يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ، هَذَا الحَدِيثَ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ يَعِيشَ بْنِ طِهْفَةَ، عَنْ أَبِيهِ، ” وَيُقَالُ: طِخْفَةُ، وَالصَّحِيحُ طِهْفَةُ، وَقَالَ بَعْضُ الحُفَّاظِ: الصَّحِيحُ طِخْفَةُ، وَيُقَالُ: طِغْفَةُ يَعِيشُ هُوَ مِنَ الصَّحَابَةِ

இந்த அறிவிப்பாளர் தொடரில் வந்திருக்கும் இந்தச் செய்தி தவறானது என புஹாரீ இமாம் கூறியுள்ளார்.

நூல்: தாரீஹுல் கபீர் (3167)

புஹாரி இமாம் அவர்கள், இதற்கான காரணத்தைக் கூறவில்லை என்றாலும், இமாம் அபூ ஹாத்திம் அவர்கள் அதன் காரணத்தைக் கூறியுள்ளார்.

"என்னுடைய தந்தை அபூ ஹாத்திம் அவர்களிடம் (குப்புறப் படுப்பது தொடர்பாக) அபூ ஹுரைரா (ரலி) வழியாக அறிவிக்கப்படுவது பற்றி கேட்டேன். அதற்கவர்கள், (குப்புறப்படுப்பது தொடர்பாக) துஃஹ்ஃபா அவர்களிடமிருந்து அவருடைய மகன் இப்னு துஃஹ்ஃபா வழியாக முஹம்மத் பின் அம்ர் என்பவர் அறிவிப்பதுதான் சரியானது எனக் குறிப்பிட்டார்கள்."

நூல்: இலலுல் ஹதீஸ் (2186, 2187)

ஆனாலும் துஃஹ்ஃபா வழியாக வரும் செய்திகள் அறிவிப்பாளர் தொடரில் குளறுபடியாக இருப்பதால், "முள்தரிப்" என்ற வகையில் இந்த அறிவிப்பும் பலவீனமான செய்தியாக உள்ளது.

அஹ்மத் நூலில் பதிவாகியுள்ள 18654, 18639 - வது ஹதீஸ்கள் பற்றி:

இந்தச் செய்தியை அறிவிக்கின்ற "அம்ர் பின் அஸ்ஸரீத்" என்பவர் நபித் தோழர் கிடையாது. இவர் ஸஹாபாக்களுக்கு அடுத்த காலத்தைச் சார்ந்த தாபிஈ ஆவார்.

எனவே இது அறிவிப்பாளர் தொடர் முறிவடைந்த "முர்ஸல்" என்ற வகையைச் சார்ந்த செய்தியாகும். இதுவும் ஆதாரத்திற்கு ஏற்றது கிடையாது.

அபூதாவூத் - 5040 - வது ஹதீஸ் பற்றி:

இந்தக் கருத்தில் வரும் செய்திகளில் நபித்தோழர் யார் என்று அறியமுடியாத வகையில் அறிவிப்பாளர் தொடரில் குளறுபடியாக இருப்பதால் "முள்தரிப்" என்ற வகையில் இதுவும் பலவீனமானதாகும்.

மேலும் இந்தக் கருத்தில் வரும் செய்திகள் அனைத்திலும் விமர்சனங்கள் உள்ளன. இந்தப் பதிவின் நீளம் கருதி அவற்றின் விமர்சனங்களைக் கூறாமல், அவை பதிவு செய்யப்பட்டுள்ள நூல்களையும், எண்களை மட்டும் இங்கே தருகிறோம்:

அஹ்மத் (7862, 8041, 15543, 15544, 15545, 19473, 23614, 23615, 23616, 23617, 23618)

இப்னு ஹிப்பான் (5549, 5550)

இப்னு மாஜா (752, 3723, 3725)

முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா (26679, 26680)

முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (20712, 20713)

ஹாகிம் (7708, 7709)

முஸ்னத் பஸ்ஸார் (7982,7983)

அபூதாவூத் (5040)

👉 நாம் படுக்க ஆரம்பிக்கும்போது வலப்பக்கமாக ஒருக்களித்துப் படுப்பது நபிவழியாகும். இயன்றவரை அதைப் பின்பற்றுவதன் மூலம் அந்த சுன்னத்தைப் பேணிய நன்மையை அடையலாம்.

ஒருக்களித்து படுத்தப்பின் புரண்டு படுத்துவிட்டால் அதனால் அந்த நன்மை கிடைக்காமல் போய்விடாது. படுக்கும்போதே ஒருவர் குப்புறப்படுத்தால்தான்,  வலப்பக்கம் ஒருக்களித்துப் படுக்கும் சுன்னத்தை விட்டதால் அந்த நன்மை கிடைக்காமல் போகும். ஆனால் நரகத்துக்குக் கொண்டு செல்லுமளவுக்கு குற்றமாகிவிடாது!


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை