கேள்வி: என் மகன் பெரியவர்கள் பிரச்சனையில் தன் பிள்ளைகளை எங்களிடம் காட்டுவதில்லை. இஸ்லாத்தின் பார்வையில் இது சரியா?
பதில்: பெற்றோரைப் பேணும் விஷயத்தில், ஒவ்வொரு பிள்ளைகளும் சொல்லாலோ, செயலாலோ தங்கள் பெற்றோரின் மனம் புண்படும்படி நடக்கக்கூடாது என்று இஸ்லாம் பல வகைகளில் எச்சரிக்கை செய்கிறது.
இஸ்லாமிய மார்க்கம் என்பது இந்த உலக மாந்தர்களுக்கு மிகப் பெரிய அருளாகும்! அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் அடுத்த அந்தஸ்தை ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் இஸ்லாம் தந்திருக்கின்றது! அந்த வகையில் முஸ்லிம்களில் பெரும்பான்மையினர் (99% பேர்) தங்கள் பெற்றோர்களை நன்றாகவே கவனித்து வருகின்றார்கள். இஸ்லாத்தை சரியாகப் புரியாத சிலரைத் தவிர, வேறு யாரும் அவர்களை முதியோர் இல்லங்களுக்கும் அனுப்புவதில்லை, அல்ஹம்துலில்லாஹ்!
அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட இரத்த உறவுகளில், பெற்றோர்கள் மிகவும் கண்ணியப்படுத்தப்பட வேண்டியவர்கள் என இஸ்லாம் கூறுகிறது.
ஆனால், நாம் என்ன செய்கிறோம் என்பதையே பொருட்படுத்தாமல், பெற்றோர் மீதுள்ள கோபத்தினால் சில பிள்ளைகள் தனக்கு தோன்றுவதை எல்லாம் செய்யத் துணிகிறார்கள். அதன் பின்விளைவுகளை உணராமல், அவை நம்மை பாவத்தை சேர்க்குமே என்ற அச்சமோ, மன உறுத்தலோ இல்லாமல், இது ஒரு சின்ன விஷயம்தானே என்று நினைத்து ஏதோ ஒரு வகையில் தங்கள் பெற்றோரை நோகடிப்பது இன்றையகால இளைய சமுதாயத்தினர் சிலரிடம் சர்வ சாதாரணமாகிவிட்டது.
கேள்வியில் குறிப்பிட்டுள்ளதுபோல், பெற்றோர்களிடம் தன் பிள்ளைகளைக் காட்டாமல் தடுத்து வைத்துக்கொள்வதன் மூலம் தங்கள் பெற்றோரின் மனதை நோவினை செய்யமுடியும் என்று திட்டமிட்டோ அல்லது கோபத்தின் வெளிப்பாடாகவோ இவ்வாறு செய்வதும்கூட, நபி (ஸல்) அவர்கள் பட்டியலிட்ட பெரும் பாவங்களில் ஒன்றாக அமைந்துவிடும்.
2653 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ وَهْبَ بْنَ جَرِيرٍ، وَعَبْدَ الْمَلِكِ بْنَ إِبْرَاهِيمَ، قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ سُئِلَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَنِ الْكَبَائِرِ قَالَ الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ، وَقَتْلُ النَّفْسِ، وَشَهَادَةُ الزُّورِ
நபி(ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்துக் கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி); நூல்: புஹாரி (2653)
பெற்றோரை வேதனைப்படுத்துவது என்பது இஸ்லாத்தின் பார்வையில் சாதாரணமான குற்றமல்ல! பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவம்!
மேலுள்ள ஹதீஸில், அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் மன்னிக்க முடியாத அந்த பெரும்பாவத்தோடு, பெற்றோரை நோவினை செய்யும் பாவத்தையும் இணைத்துதான் நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கிறார்கள் என்றால், மறுமை வாழ்வில் கைசேதப்பட்டுவிடாமல் ஒவ்வொரு பிள்ளைகளும் தங்களுடைய தாய், தந்தை விஷயத்தில் மிகக் கவனமுடன் நடந்துக்கொள்ளக் கடமைப்பட்டுள்ளார்கள்.
2654 – حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ، حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم "أَلاَ أُنَبِّئُكُمْ بِأَكْبَرِ الْكَبَائِرِ؟" ثَلاَثًا. قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ! قَالَ "الإِشْرَاكُ بِاللَّهِ، وَعُقُوقُ الْوَالِدَيْنِ." وَجَلَسَ وَكَانَ مُتَّكِئًا فَقَالَ "أَلاَ..! وَقَوْلُ الزُّورِ" قَالَ: فَمَا زَالَ يُكَرِّرُهَا حَتَّى قُلْنَا لَيْتَهُ سَكَتَ
(ஒரு முறை) "பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?" என்று நபி(ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், "ஆம், இறைத்தூதர் அவர்களே! (அறிவியுங்கள்)" என்றார்கள்.உடனே, நபி(ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும்(தான் அவை)" என்று கூறிவிட்டு, சாய்ந்துக் கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, "அறிந்துக் கொள்ளுங்கள்; பொய் சாட்சியமும் (மிகப் பெரும்பாவம்)தான்" என்று கூறினார்கள். "நிறுத்திக் கொள்ளக் கூடாதா" என்று நாங்கள் சொல்கிற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.அறிவிப்பவர்: அபூ பக்ரா(ரலி); நூல்: புஹாரி (2654)
தாய்மார்களைத் துன்புறுத்துவது ஹராம்!
عَنِ المُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ: عُقُوقَ الأُمَّهَاتِ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"பெற்றெடுத்த தாய்மார்களுக்குத் துன்பம் தருவதை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமானதாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்."
அறிவிப்பவர்: முஃகீரா பின் ஸுஃபா (ரலி); நூல்: புஹாரி (2408)
பெற்றோர் உண்மையில் அநியாயம் செய்தாலும் நாம் அவர்களை மதிக்கவேண்டுமா?
குடும்பத்தில் என்ன பிரச்சனையாக இருந்தாலும், பெற்றோர்களுடன் பிள்ளைகள் சரிக்கு சமமாக இருக்கக் கூடாது. அதாவது, பெற்றோர் விஷயத்தில் ரோஷம், சுய கவுரவம் பார்ப்பது, தன்மானம் பார்ப்பது, பழிக்குப் பழி வாங்குதல், கோபம், குரோதம் போன்ற எந்த எதிர்மறை குணங்களுக்கும் மனதில் இனம் கொடுக்காமல் அவற்றை தூக்கியெறிந்துவிட்டு அவர்களிடம் பாசத்தை மட்டுமே காட்டி, நேசத்தோடு நடந்துக்கொள்ள வேண்டும்.
ஒருவேளை பெற்றோரால் நாம் பாதிக்கப்பட்டாலும் அதையெல்லாம் முழு மனதோடு சகித்துக் கொண்டு, ஆயுள் முழுவதும் அவர்களை அரவணைத்து வாழவேண்டும்.
وَاِنْ جَاهَدٰكَ عَلٰٓى اَنْ تُشْرِكَ بِىْ مَا لَيْسَ لَكَ بِهٖ عِلْمٌ ۙ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِى الدُّنْيَا مَعْرُوْفًا
"உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணைக்கற்பிக்க அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமைக் கொள்!" (அல்குர்ஆன் 31:15)
அழகிய முறையில் தோழமைக் கொள்வது என்பது, அவர்களால் நம்முடைய மனம் பாதிக்கப்பட்டாலும் அதைப் பொருட்படுத்தாமல், அல்லாஹ்வுக்காக பொறுமை செய்து அவர்களிடம் நட்புறவுடன் கூடிய பாசத்தோடும், உண்மையான அக்கறையோடும் நடந்துக்கொள்வது, அவர்களுக்கு வேண்டிய அத்தனை உதவிகளையும் செய்வது, அவர்களை எப்போதும் மகிழ்ச்சியோடு வைத்துக்கொள்வது போன்ற எல்லாவற்றையும் சேர்த்துதான் அழகிய முறையில் தோழமைக் கொள் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
இறை வணக்கத்துக்கு அடுத்தபடியான கடமையே பெற்றோரைப் பேணுதல்!
அல்லாஹ்வை வணங்குவதைப் பற்றிப் பேசும் திருக்குர்ஆனின் பல வசனங்களில், பெற்றோரைப் பேணுவதை அடுத்த நிலையில் வைத்துதான் அல்லாஹ் பேசுகிறான்.
وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا ؕ اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا
"என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!" என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் (தாய் தந்தை ஆகிய) அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்துவிட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக! (திருக்குர்ஆன் 17:23)
மேற்கண்ட ஆயத்தில், அல்லாஹ்வை மட்டுமே வணங்கவேண்டும்; அவனுக்கு யாரையும் இணையாக்கக் கூடாது என்று இஸ்லாத்தின் அடிப்படைக் கட்டளையை இந்த வசனத்தில் அல்லாஹுதஆலா கூறிவிட்டு, அதற்கு அடுத்தபடியாக பெற்றோருக்கு உபகாரம் செய்வதைதான் கட்டளையிடுகிறான். அத்துடன் தாய், தந்தையரிடம் எவ்வாறு நடந்துக் கொள்ளவேண்டும் என்ற முறைகளையும் சொல்லிக் காட்டுகிறான்.
அத்துடன் அதற்கு அடுத்த வசனத்திலேயே, நம் பெற்றோரை எப்படி பணிவன்புடன் பாதுகாக்கவேண்டும், அவர்களுக்காக எப்படியெல்லாம் துஆ செய்யவேண்டும் என்பதையும் அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துகிறான். இதன் மூலம் நம்முடைய சின்னஞ்சிறிய பிஞ்சுப் பருவத்தில் நம்முடன் கொஞ்சும் மொழியில் பேசி, நம்மை கனிவுடனும், பரிவுடனும், கருணையுடனும் நம் பெற்றோர்கள் நம்மை கண்ணுக்குக் கண்ணாய் வளர்த்த அந்தக் காலகட்டத்தை நம் வாழ்நாள் முழுவதும் நினைத்துப்பார்க்க வைக்கிறான்! நமக்காக செய்த அவர்களின் தியாகங்களை எண்ணிப் பார்க்கும் வகையில், இந்த துஆ மூலம் அவற்றை நமது மனத்திரையில் கொண்டு வரச்செய்கின்றான்.
وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيٰنِىْ صَغِيْرًا ؕ
அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! "சிறுவனாக இருக்கும்போது என்னை இருவரும் பராமரித்ததுபோல், இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!" என்று கேட்பீராக! (திருக்குர்ஆன் 17:24)
اُولٰٓٮِٕكَ الَّذِيْنَ نَـتَقَبَّلُ عَنْهُمْ اَحْسَنَ مَا عَمِلُوْا وَنَـتَجَاوَزُ عَنْ سَيِّاٰتِهِمْ فِىْۤ اَصْحٰبِ الْجَنَّةِ ؕ وَعْدَ الصِّدْقِ الَّذِىْ كَانُوْا يُوْعَدُوْنَ
"தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும்போது ‘என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்’ என்று கூறுகிறான். (திருக்குர்ஆன் 46:15)
இதுபோன்ற இன்னும் பல துஆக்களை நம் பெற்றோருக்காக கையேந்தும்படி அல்லாஹ் கற்றுக்கொடுக்கிறான்.
அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் காரியங்களில்....
அல்லாஹ்வுக்கு மாறுசெய்யும் விஷயங்களில் மட்டும் பெற்றோருக்கு கட்டுப்படக்கூடாதே தவிர, மற்ற எல்லா விஷயங்களிலும் பெற்றோருடன் இணக்கமாக இருந்து, அவர்களை எந்த விதத்திலும் காயப்படுத்தாமல் நடந்துக்கொள்ள வேண்டும் என்றும் அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துகிறான்.
وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا ؕ وَاِنْ جَاهَدٰكَ لِتُشْرِكَ بِىْ مَا لَـيْسَ لَـكَ بِهٖ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا ؕ اِلَىَّ مَرْجِعُكُمْ فَاُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ
"தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணைக்கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்துக்கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்." (அல்குர்ஆன் 29:8)
அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல்!
صحيح البخاري
527 - حَدَّثَنَا أَبُو الوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ المَلِكِ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ الوَلِيدُ بْنُ العَيْزَارِ: أَخْبَرَنِي قَالَ: سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ، يَقُولُ: حَدَّثَنَا صَاحِبُ - هَذِهِ الدَّارِ وَأَشَارَ إِلَى دَارِ - عَبْدِ اللَّهِ، قَالَ: سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ العَمَلِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: «الصَّلاَةُ عَلَى وَقْتِهَا»، قَالَ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «ثُمَّ بِرُّ الوَالِدَيْنِ» قَالَ: ثُمَّ أَيٌّ؟ قَالَ: «الجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ» قَالَ: حَدَّثَنِي بِهِنَّ، وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي
அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது என்றனர். பிறகு எது? என்று கேட்டேன். தாய் தந்தையருக்கு நன்மைப் புரிவது என்றார்கள். பிறகு எது? என்றேன். அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது என்று பதிலளித்தார்கள். இவற்றை மட்டுமே என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். இன்னும் அதிகமாக நான் கேட்டிருந்தால் எனக்கு இன்னும் அதிகமாக பதிலளித்திருப்பார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூது (ரலி); நூல் : புஹாரி (527)
சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது!
صحيح مسلم
138 - (85) حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عُمَرَ الْمَكِّيُّ، حَدَّثَنَا مَرْوَانُ الْفَزَارِيُّ، حَدَّثَنَا أَبُو يَعْفُورَ، عَنِ الْوَلِيدِ بْنِ الْعَيْزَارِ، عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: قُلْتُ: يَا نَبِيَّ اللهِ، أَيُّ الْأَعْمَالِ أَقْرَبُ إِلَى الْجَنَّةِ؟ قَالَ: «الصَّلَاةُ عَلَى مَوَاقِيتِهَا» قُلْتُ: وَمَاذَا يَا نَبِيَّ اللهِ؟ قَالَ: «بِرُّ الْوَالِدَيْنِ» قُلْتُ: وَمَاذَا يَا نَبِيَّ اللهِ؟ قَالَ: «الْجِهَادُ فِي سَبِيلِ اللهِ»
‘அல்லாஹ்வின் நபியே நற்செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது?’ என்று கூறினார்கள். ‘அடுத்து எது? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்டேன். அதற்கு ‘தாய் தந்தையருக்கு நன்மைப் புரிவது’ என்றார்கள். ‘அடுத்தது எது? அல்லாஹ்வின் தூதரே!’ என்று கேட்டபோது, ‘அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது’ என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி); நூல்: முஸ்லிம் (138)
ஜிஹாத் எனும் புனிதப் போரில் பங்கெடுப்பதை விட பெற்றோரைப் பேணுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள்
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا حَبِيبُ بْنُ أَبِي ثَابِتٍ، قَالَ سَمِعْتُ أَبَا الْعَبَّاسِ الشَّاعِرَ ـ وَكَانَ لاَ يُتَّهَمُ فِي حَدِيثِهِ ـ قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ـ رضى الله عنهما ـ يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَاسْتَأْذَنَهُ فِي الْجِهَادِ فَقَالَ " أَحَىٌّ وَالِدَاكَ ". قَالَ نَعَمْ. قَالَ " فَفِيهِمَا فَجَاهِدْ ".
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்துக்கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ”உன் தாயும், தந்தையும் உயிருடனிருக்கின்றார்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், "ஆம், (உயிருடனிருக்கின்றனர்)” என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடை செய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை)" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி); நூல்: புஹாரி (3004)
உயிரைக் கொடுத்துப் போராடக்கூடிய ஜிஹாத் எனும் புனிதப்போரில் பங்கெடுப்பதைவிட, பெற்றோரைப் பேணுவதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸ்களில் இருந்து அறியலாம்.
அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர்கள் பெற்றோரே!
صحيح البخاري
5971 - حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ عُمَارَةَ بْنِ القَعْقَاعِ بْنِ شُبْرُمَةَ، عَنْ أَبِي زُرْعَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَنْ أَحَقُّ النَّاسِ بِحُسْنِ صَحَابَتِي؟ قَالَ: «أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أُمُّكَ» قَالَ: ثُمَّ مَنْ؟ قَالَ: «ثُمَّ أَبُوكَ»
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உன் தாய் என்றார்கள். அவர், பிறகு யார்? என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உன் தாய் என்றார்கள். அவர், பிறகு யார்? என்றார். உன் தாய் என்றார்கள். அவர், பிறகு யார்? என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பிறகு, உன் தந்தை என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி); நூல் : புஹாரி (5971)
உண்மையான ஒரு முஸ்லிம், அனைத்து மனிதர்களை விடவும் தன் தாய் தந்தையருக்குதான் முதலிடம் கொடுக்கவேண்டும் என்று இந்த ஹதீஸிலிருந்து அறியலாம்.
பெற்றோரின் பொருளாதாரத் தேவைகளுக்குச் செலவிடுவது
يَسْـــَٔلُوْنَكَ مَاذَا يُنْفِقُوْنَ ؕ قُلْ مَآ اَنْفَقْتُمْ مِّنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْاَقْرَبِيْنَ وَالْيَتٰمٰى وَالْمَسٰكِيْنِ وَابْنِ السَّبِيْلِؕ وَمَا تَفْعَلُوْا مِنْ خَيْرٍ فَاِنَّ اللّٰهَ بِهٖ عَلِيْمٌ
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். ‘நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்’ எனக் கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:215)
பெற்றோரின் பொருளாதாரத் தேவைகளுக்குச் செலவிடுவதுதான் முதலிடத்தில் உள்ளது என்பதை இவ்வசனம் கூறுகிறது.
உலகத் தேவைகளுக்காக பெற்றோருக்கு உதவுவது மட்டுமின்றி, அவர்களின் மறுமைப் பேறுக்காகச் செய்யவேண்டிய கடமைகளையும் நபி (ஸல்) காட்டித் தந்துள்ளார்கள்.
صحيح البخاري
1953 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، حَدَّثَنَا زَائِدَةُ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ البَطِينِ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي مَاتَتْ وَعَلَيْهَا صَوْمُ شَهْرٍ، أَفَأَقْضِيهِ عَنْهَا؟ قَالَ: " نَعَمْ، قَالَ: فَدَيْنُ اللَّهِ أَحَقُّ أَنْ يُقْضَى "
ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘அல்லாஹ்வின் தூதரே என் தாயாருக்கு ஒரு மாத நோன்பு கடமையாகியிருந்த நிலையில் மரணித்து விட்டார். அவர் சார்பாக நான் அதை நிறைவேற்றலாமா? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஆம்; அல்லாஹ்வின் கடன் நிறைவேற்றுவதற்கு அதிகத் தகுதி படைத்தது’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புஹாரி (1953)
صحيح البخاري
2762 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا هِشَامُ بْنُ يُوسُفَ، أَنَّ ابْنَ جُرَيْجٍ، أَخْبَرَهُمْ قَالَ: أَخْبَرَنِي يَعْلَى، أَنَّهُ سَمِعَ عِكْرِمَةَ مَوْلَى ابْنِ عَبَّاسٍ، يَقُولُ: أَنْبَأَنَا ابْنُ عَبَّاسٍ، أَنَّ سَعْدَ بْنَ عُبَادَةَ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَخَا بَنِي سَاعِدَةَ تُوُفِّيَتْ أُمُّهُ وَهُوَ غَائِبٌ عَنْهَا، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ أُمِّي تُوُفِّيَتْ وَأَنَا غَائِبٌ عَنْهَا، فَهَلْ يَنْفَعُهَا شَيْءٌ إِنْ تَصَدَّقْتُ بِهِ عَنْهَا؟ قَالَ: «نَعَمْ»، قَالَ: فَإِنِّي أُشْهِدُكَ أَنَّ حَائِطِيَ المِخْرَافَ صَدَقَةٌ عَلَيْهَا
பனூ சாயிதா குலத்தைச் சார்ந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்தபோது அவர்களது தாயார் இறந்துவிட்டார். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ‘அல்லாஹ்வின் தூதரே! நான் வெளியே சென்றிருந்தபோது என் தாயார் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம் (பலனளிக்கும்)’ என்று கூறினார்கள். அப்போது சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், எனது மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை என் தாயாருக்காக தர்மம் செய்துவிடுகிறேன் என்பதற்குத் தங்களை நான் சாட்சியாக்குகிறேன்,’ என்று கூறினார்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புஹாரி (2762)
பெற்றோருக்கு நன்மை செய்து அதன்மூலம் சுவனம் செல்லும் வாய்ப்பு கிடைப்பது என்பது மனிதனுக்கு கிடைக்கும் பாக்கியங்களிலேயே பெரும் பாக்கியமாகும்!
صحيح مسلم
9 - (2551) حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «رَغِمَ أَنْفُ، ثُمَّ رَغِمَ أَنْفُ، ثُمَّ رَغِمَ أَنْفُ»، قِيلَ: مَنْ؟ يَا رَسُولَ اللهِ قَالَ: «مَنْ أَدْرَكَ أَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ، أَحَدَهُمَا أَوْ كِلَيْهِمَا فَلَمْ يَدْخُلِ الْجَنَّةَ»
‘அவனுடைய மூக்கு மண்ணாகட்டும், (இழிவடையட்டும்!) அவனுடைய மூக்கு மண்ணாகட்டும், அவனுடைய மூக்கு மண்ணாகட்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கூறினார்கள். ‘அல்லாஹ்வின் தூதரே அவன் யார்?’ என்று கேட்கப்பட்டது. ‘வயதான தாய் தந்தையர்களில் இருவரையுமோ, அல்லது இருவரில் ஒருவரையோ (உயிருடன்) பெற்று அவர்களுக்கு (பணிவிடை செய்வதின் மூலம்) சுவனம் புகவில்லையோ அவன்தான்’ என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி); நூல்: முஸ்லிம் (2551 - அரபி மூலத்திலுள்ள எண்)
தாய் தந்தையர்களுக்கு பணிவிடை செய்யாதவன் செல்லுமிடம் நரகம்தான் என்றும் நபி (ஸல்) அவர்கள் இதன்மூலம் எச்சரிக்கிறார்கள்!
பெற்றோர்கள் இணைவைப்போராக இருந்தாலும் இணைந்து வாழவேண்டும்!
صحيح البخاري
2620 - حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَتْ: قَدِمَتْ عَلَيَّ أُمِّي وَهِيَ مُشْرِكَةٌ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَاسْتَفْتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قُلْتُ: وَهِيَ رَاغِبَةٌ، أَفَأَصِلُ أُمِّي؟ قَالَ: «نَعَمْ صِلِي أُمَّكِ»
அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் என்னிடம் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்போராக இருந்தார்கள். ‘என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்ல முறையில் நடந்துக் கொள்ளட்டுமா?’ என்று நான் அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ‘ஆம், நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்துக் கொள்’ என்று கூறினார்கள்.
நூல்: புஹாரி (2620)
பெற்றோரை சபித்தால் அல்லாஹ்வின் சாபம்தான் கிடைக்கும்!
لَعَنَ اللهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللهِ، وَلَعَنَ اللهُ مَنْ سَرَقَ مَنَارَ الْأَرْضِ، وَلَعَنَ اللهُ مَنْ لَعَنَ وَالِدَهُ، وَلَعَنَ اللهُ مَنْ آوَى مُحْدِثًا
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"தன் பெற்றோரைச் சபிப்பவனை அல்லாஹ் சபித்துவிட்டான். அல்லாஹ் அல்லாதவருக்கு அறுத்துப் பலியிட்டவனை அல்லாஹ் சபித்துவிட்டான். பித்அத் செய்பவனுக்கு அடைக்கலம் தருபவனை அல்லாஹ் சபித்துவிட்டான். நிலத்தின் எல்லைக்காக (வைக்கப்பட்ட) அடையாளக் கல்லை மாற்றியவனை அல்லாஹ் சபித்துவிட்டான்."
அறிவிப்பவர்: அலீ (ரலி); நூல்: முஸ்லிம் (4003)
எனவே, பெற்றோர்கள் விஷயத்தில் அல்லாஹ்வைப் பயந்துக் கொள்ளும்படி ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு நல்லுபதேசம் செய்வோம்!
இதுபோன்ற பெரும்பாவங்களை விட்டும் தவிர்ந்து, மறுமையில் சொர்க்கங்களிலேயே உயர்ந்த சொர்க்கமாகிய ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸிலே நம்மோடு நம் பிள்ளைகளையும், குடும்பத்தாரையும் இணைத்து வைப்பானாக!
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!