கேள்வி:
இதை ஓதினால் மலையளவு கடன் இருந்தாலும் அந்தக் கடனை அல்லாஹ் நீக்குவான் என்பதாக ஒரு துஆவை சொல்கிறார்கள். அந்த துஆ இடம்பெறும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?
பதில்:
நீங்கள் குறிப்பிடும் அந்தச் செய்தி இதுதான்:
அலீ (ரலி) அவர்களிடம், முகாதப் (விடுதலைப் பத்திரம் எழுதித் தரப்பட்ட அடிமை) ஒருவர் வந்து, "நான் உரிமைப்பெற செலுத்தும் கடன் தொகையை செலுத்தமுடியாமல் ஆகிவிட்டேன். எனக்கு உதவி செய்யுங்கள்!" என்று கூறினார்.
அதற்கு அலீ (ரலி) அவர்கள், "எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு கற்றுத்தந்த சில வார்த்தைகளை உனக்கு கற்றுத்தருகிறேன். (அதனை நீ அல்லாஹ்விடம் கேட்டால்) தய்யி கூட்டத்தின் (ஸீர்) மலையளவு கடன் இருந்தாலும் அந்தக் கடனை அல்லாஹ் நீக்குவான்" என்று கூறிவிட்டு,
"அல்லாஹும் மக்ஃபினீ பி ஹலாலிக்க அன் ஹராமிக்க, வஅஃக்னினீ பி-ஃபள்லிக்க அம்மன் ஸிவாக்க - என்பதைக் கூறு" என்று கூறினார்கள்.
[பொருள் : யா அல்லாஹ்! நீ விலக்கியதை விட்டும், நீ ஆகுமாக்கியதை கொண்டும் எனக்கு போதுமாக்குவயாக! மேலும் உனது கிருபையைக் கொண்டு உன்னைத் தவிர உள்ள அனைத்தைவிட்டும் என்னை தேவையற்றவனாக ஆக்குவாயாக!]
அறிவிப்பவர்: அபூவாயில் (ரஹ்)
நூல்: திர்மிதீ (3563)
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا يَحْيَى بْنُ حَسَّانَ قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَاقَ، عَنْ سَيَّارٍ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَلِيٍّ، أَنَّ مُكَاتَبًا جَاءَهُ فَقَالَ: إِنِّي قَدْ عَجَزْتُ عَنْ مُكَاتَبَتِي فَأَعِنِّي، قَالَ: أَلَا أُعَلِّمُكَ كَلِمَاتٍ عَلَّمَنِيهِنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَوْ كَانَ عَلَيْكَ مِثْلُ جَبَلِ صِيرٍ دَيْنًا أَدَّاهُ اللَّهُ عَنْكَ، قَالَ: ” قُلْ: اللَّهُمَّ اكْفِنِي بِحَلَالِكَ عَنْ حَرَامِكَ، وَأَغْنِنِي بِفَضْلِكَ عَمَّنْ سِوَاكَ
இதன் அறிவிப்பாளர் தொடரில் வரும் "அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக்" என்ற அறிவிப்பாளர் பற்றி, இப்னு மயீன், அஹ்மத், அபூ ஹாத்திம், ஸாஜீ போன்றவர்கள், "இவர் ஹதீஸில் நிராகரிக்கப்பட்டவர்" என்றும்,
இஜ்லீ, உகைலீ போன்ற பல அறிஞர்கள் "இவர் பலவீனமானவர்" என்றும் விமர்சித்துள்ளனர்.
(நூல்: தஹ்தீபுத் தஹ்தீப் 2/486, தக்ரீபுத் தஹ்தீப்-1/570)
எனவே, இது பலவீனமான அறிவிப்பாளர் தொடரைக் கொண்ட செய்தியாகும்.
இந்தச் செய்தி அஹ்மத் (1319), முஸ்னத் பஸ்ஸார் (563), ஹாகிம் (1973) போன்ற நூல்களிலும் இடம்பெற்றுள்ளது. அவை அனைத்திலும் "அப்துர் ரஹ்மான் பின் இஸ்ஹாக்" என்ற பலவீனமான அந்த அறிவிப்பாளர் வருவதால், அவை அனைத்துமே ஆதாரப்பூர்வமானவை அல்ல.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!