கேள்வி:
"அல்லாஹ்வுடைய படைப்பை (மனிதர்கள்) மாற்றி அமைப்பார்கள்" என்று ஷைத்தான் கூறுவதை வைத்து, பல்லுக்கு கம்பி கட்டக்கூடாது என்று கூறுகிறார்கள். அப்படியானால் உடல் எடையைக் குறைப்பது, கூட்டுவது போன்றவையும் கூடாதுதானே?
பதில்:
உங்கள் கேள்வியில் இரண்டு விஷயங்களைக் குறிப்பிட்டுள்ளீர்கள். முதலில், "பற்களுக்கு க்ளிப் போடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?" என்பதைப் பற்றி பார்ப்போம்.
பற்கள் நேர்மாறாகவோ, குறுகலாகவோ, வளைந்தோ அல்லது அதிக இடைவெளியில் இருந்தாலோ அதை சரிசெய்யும் சிகிச்சையே (Braces Treatment) ப்ரேஸ் சிகிச்சையாகும். அதாவது, பற்களுக்கு க்ளிப் போடுவதாகும்.
பற்களை சீரமைக்க செய்யப்படும் இந்த க்ளிப் சிகிச்சை மூலம் பற்களின் மேல் கம்பிகள் வழியாக அந்த பற்களுக்கு சிறிது சிறிதாக அழுத்தம் கொடுத்து, சரியான அமைப்புக்கு கொண்டுவரும் முறை ஆகும்.
மருத்துவர் குறிப்பிடும் காலகட்டம்வரை அதை அணிந்திருந்துவிட்டு, பிறகு அவ்வப்போது கழற்றி, மாட்டக்கூடிய க்ளிப்பை ஒரு வருடத்துக்கு அணிந்திருக்க வேண்டியிருக்கும். இது இயற்கையான அமைப்புக்கு மாற்றமாக உள்ள குறைபாடுகளைச் சரிசெய்வதற்காக செய்யப்படும் சிகிச்சைதான் தவிர, இதில் எந்தவித உருவ மாற்றமும் ஏற்படாது.
பொதுவாகவே மனிதத் தோற்றத்தில் ஏதாவது ஒன்று மாற்றமாகவோ, சரியில்லாமலோ அமைந்திருந்தால் அல்லது இடையில் ஏற்பட்ட மாற்றமாக இருந்தால், அப்படிப்பட்ட உடலியல் ரீதியான குறைபாடுகளைச் சரிசெய்வதற்காக சர்ஜரி செய்துக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. இதற்கான ஆதாரத்தை ஹதீஸ்களில் காணலாம்.
4232 حدَّثنا موسى بنُ إسماعيلَ ومحمدُ بنُ عبد الله الخُزاعيُّ -المعنى- قالا: حدَّثنا أبو الأشْهبِ، عن عبدِ الرحمن بن طرَفَةَ أن جده عَرْفَجَةَ بن أسعدٍ قُطِعَ أنفُه يوم الكُلاب فاتخذ أنفاً من وَرِقٍ، فأنتنَ عليه، فأمرَهُ النبي – صلَّى الله عليه وسلم – فاتخذ أنفاً من ذهب
"அறியாமைக் காலத்தில் நடந்த 'குலாப்' போரின்போது என்னுடைய மூக்கு வெட்டுபட்டுவிட்டது. எனவே நான் வெள்ளியினால் மூக்கு செய்து பொருத்திக் கொண்டேன். அதில் எனக்குக் கெட்ட வாடை ஏற்பட்டது. அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்குத் தங்கத்தால் ஆன மூக்கு பொருத்தும்படி உத்தரவிட்டார்கள்."
அறிவிப்பவர் : அர்ஃபஜா பின் அஸ்அத் (ரலி)
நூல்கள் : அபூதாவூத் (4232), திர்மிதீ (1770)
இப்படி உடலின் தோற்றத்தில் ஏற்படும் குறைபாடுகளை சரிசெய்துக் கொள்வதற்கு நபி (ஸல்) அவர்களே நேரடியாக உத்தரவிட்டுள்ளார்கள். எனவே பற்களுக்கு க்ளிப் போடுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டதுதான். அதில் எந்தத் தடையுமில்லை. பற்களுக்கு கம்பி கட்டுவது கூடாது என்று சொல்பவர்கள், 'உருவ அமைப்பை மாற்றுவது' என்றால் என்ன என்பதில் சரியான புரிதல் இல்லாதவர்களாகதான் இருக்கமுடியும்.
ஆனால், சிலர் பற்களை அழகுபடுத்தும் முறைகளில் ஒன்றாக, பற்களுக்கு இடையில் ரம்பத்தால் தேய்த்துக் கொள்வார்கள். இதன்மூலம் பற்களுடைய உருவ அமைப்பு மாற்றமடைகிறது. இப்படியான விஷயங்கள் நபியவர்கள் காலத்தில் நடைமுறையில் இருந்ததால்தான் நபி (ஸல்) அவர்கள் அவற்றைத் தடை செய்கிறார்கள்.
நபியவர்கள் சிலரை சபிக்கும்போது இறைவனின் படைப்பை மாற்றுபவர்களையும் சேர்த்து சபிக்கிறார்கள்.
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ مَنْصُورٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَعَنَ اللَّهُ الْوَاشِمَاتِ وَالْمُسْتَوْشِمَاتِ وَالْمُتَنَمِّصَاتِ وَالْمُتَفَلِّجَاتِ لِلْحُسْنِ الْمُغَيِّرَاتِ خَلْقَ اللَّهِ مَا لِي لَا أَلْعَنُ مَنْ لَعَنَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ فِي كِتَابِ اللَّهِ
அல்கமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
"பச்சைக் குத்திவிடும் பெண்கள், பச்சைக் குத்திக்கொள்ளும் பெண்கள், முகத்திலுள்ள முடிகளை அகற்றிக்கொள்ளும் பெண்கள், அழகிற்காகப் பல்வரிசையை அரத்தால் தேய்த்துக்கொள்ளும் பெண்கள், அல்லாஹ்வின் படைப்பை மாற்றிக்கொள்ளும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!" என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறிவிட்டு, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? இச்செயல் அல்லாஹ்வின் வேதத்திலும் சபிக்கப்பட்டதே!" என்று சொன்னார்கள்.
நூல்: புஹாரி (5943, 5948)
இத்துடன் சம்பந்தப்படுத்தி அடுத்த கேள்வியாக, உடல் எடையைக் குறைப்பது, கூட்டுவது போன்றவையும் கூடாதுதானே?" என்று கேட்டுள்ளீர்கள்.
அல்லாஹ்வின் படைப்பை மாற்றிக்கொள்வது என்பதில் உடல் எடையைக் குறைப்பதோ, கூட்டுவதோ அடங்காது. ஒருவர் மிகவும் மெலிந்துக் காணப்பட்டால் அவர் உடல் எடையைக் கூட்டும் சத்தான உணவுப்பொருட்கள் மற்றும் இயற்கையான சிகிச்சை முறைகள் எடுத்துக் கொள்ளுபோது, ஆரோக்கியமான உடல் எடைக்கு வருவார்.
அதுபோல் ஒருவர் அளவுக்கு அதிகமான உடல் எடையில் இருக்கும்போது, ஆரோக்கியமான உடல் எடையைப் பெறுவதற்காக, இயற்கை மருந்துகள் மூலமாகவோ, உடற்பயிற்சி, நடைபயிற்சிகள் மூலமோ போதுமான அளவுக்கு எடையைக் குறைத்து இயல்பான உடல் எடைக்கு வருவார்.
இவ்வாறு உடல் எடையைக் குறைப்பதாலோ, கூட்டுவதாலோ அல்லாஹ் படைத்த உருவ அமைப்பில் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை. எனவே இவற்றிற்கு மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை. அதேசமயம், உடல் எடை குறைப்பு மற்றும் கூட்டுவதன் மூலம் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் கவனமாக இருக்க வேண்டும். அல்லாஹ் தன திருமறையில் கூறுகிறான்:
"உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்!"
(அல்குர்ஆன் 2:195)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!