அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday, 10 October 2025

போட்டியில் பங்கு பெறுபவர்களிடம் கட்டணம் பெற்று, அந்தத் தொகையிலிருந்தே வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் கொடுக்கப்படுவது இஸ்லாத்தில் கூடுமா?

கேள்வி:

போட்டியில் பங்கு பெறுபவர்களிடம் நுழைவுக் கட்டணம்போல் ஒரு தொகையை வாங்கிக்கொண்டு, அந்தத் தொகையிலிருந்தே வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் கொடுக்கப்படுகிறது. இது இஸ்லாத்தில் கூடுமா?

'இஸ்லாமியக் கேள்வி பதில் போட்டி' என்ற பெயரில் இப்படி நடத்தப்பட்டாலும், இது ஒரு சூதாட்டம் போன்ற தோற்றம் தருகிறது. இதற்கு விளக்கம் தாருங்கள்.

பதில்:

அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகிறான்:

"நம்பிக்கைக் கொண்டோரே! மது, சூதாட்டம், பலிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!" (திருக்குர்ஆன் 5:90)

மது மற்றும் சூதாட்டம் பற்றி உம்மிடம் கேட்கின்றனர். "அவ்விரண்டிலும் பெரும் கேடும், மக்களுக்குச் சில பயன்களும் உள்ளன. அவ்விரண்டின் பயனைவிட கேடு இவ்வுலகிலும், மறுமையிலும் மிகப் பெரியது" எனக் கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:219)

திருக்குர்ஆனில் அல்லாஹ் சூதாட்டத்தைத் தடை செய்துள்ளான் என்பதால் சூதாட்டம் ஒரு தீயச் செயல் என்பதை அதிகமான இஸ்லாமிய மக்கள் அறிந்து வைத்துள்ளனர். முஸ்லிமல்லாத மக்களும்கூட சூதாட்டம் ஒரு பாவச்செயல் என்று புரிந்துள்ளனர். ஆனால் "சூதாட்டம்" என்றால் என்ன என்பது குறித்த சரியான விளக்கம் பெரும்பாலான மக்களிடம் இல்லை.


சூதாட்டத்திற்கும், விளையாட்டுக்கும் நேரடியாக எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை முதலில் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும். எந்த விளையாட்டையும் சூதாட்டமாகவும் ஆக்கமுடியும்; சூது கலக்காமலும் விளையாடமுடியும். தாயக்கட்டை, சீட்டாட்டம் (Rummy Card Game) ஆகியவைதான் சூதாட்டம் என்ற அளவில் மட்டுமே சூதாட்டம் பற்றிய மக்களின் புரிதல் அமைந்துள்ளது. ஏனெனில் இதுபோன்ற ஆட்டங்களில்தான் அதிகமாக பணத்தைக் கட்டி விளையாடுவது மக்கள் மத்தியில் பிரபல்யமாக உள்ளது. ஆனால், குறிப்பிட்ட இந்த விளையாட்டுகளில் மட்டும்தான் சூது உள்ளது என்று கருதுவது அறியாமையாகும்.

சூது என்றால் என்ன? சிலர் கூட்டு சேர்ந்து ஒரு நபருக்கு இவ்வளவு என்று பணத்தைப் போட்டு, குறிப்பிட்ட விளையாட்டில் யார் வெல்கிறார்களோ அவர்கள் அனைவரின் பணத்தையும் எடுத்துக் கொள்வதுதான் (Gambling) சூதாட்டமாகும்.

இந்தப் போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு இன்ன தொகை அல்லது இன்ன தொகைக்குரிய பொருள் தரப்படும் என்று அந்தப் போட்டியில் பங்கேற்காதவர்கள், அதாவது அந்த விளையாட்டில் சம்பந்தப்படாத மூன்றாம் தரப்பு நபர்கள் அறிவித்தால் அது "பரிசு" எனப்படும். இதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. இவ்வாறு எந்த விளையாட்டையும் விளையாடுவது சூதாட்டமாகாது.

அப்படி இல்லாமல், போட்டியில் பங்கு பெறுபவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி, யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்களுக்கு மட்டும் மொத்த தொகையிலிருந்து பரிசாகக் கொடுப்பது என்ற அடிப்படையில் விளையாடினால் அது "சூதாட்டம்" ஆகிவிடும்.

இந்த அம்சம் எந்த விளையாட்டில் இருந்தாலும் அது சூதாட்டத்தில்தான் சேரும். உதாரணமாக, பத்து பேர் சேர்ந்து, ஒரு நபருக்கு நூறு ரூபாய் வீதம் கட்டி ஓட்டப்பந்தயம் நடத்துகின்றனர். அதில் ஜெயிப்பவர் மட்டும் அனைவரது பணத்தையும் எடுத்துக் கொண்டால் அது சூதாட்டத்தில் சேரும். இதுபோல் எந்த விளையாட்டில் வேண்டுமானாலும் பணம் கட்டி, பந்தயம் வைத்து விளையாடுவார்கள். பணம் மட்டுமில்லாமல், பந்தயத்துக்காக சில விலை உயர்ந்த பொருட்களையும் பணயமாக வைத்து விளையாடுவார்கள். அவை அத்தனையும் "சூதாட்டம்" என்று சொல்லக்கூடிய ஹராமானவையே!

சாதாரண கபடிப் போட்டியைக் கூட இந்த முறையில் நடத்தும்போது அது சூதாட்டமாகிவிடுகின்றது. அதுபோல்தான் செஸ் போட்டியானாலும், மல் யுத்தமானாலும், வேறு எந்த விளையாட்டானாலும் இந்த அடிப்படையில் நடத்தும்போது அது சூதாட்டமாகும். சிலர் நினைப்பதுபோல் செஸ் விளையாட்டு என்பதே சூதாட்டம் என்பது தவறு. ஆனால் அதை பணம் கட்டி விளையாடுவதன் மூலம் சூதாட்டமாகவும் ஆடமுடியும். பயனற்ற முறையில் நேரம் பாழாவதால் செஸ் விளையாடுவது கூடாது என்றுதான் சிலர் கூறுகிறார்களே தவிர, சூது என்னும் காரணத்தை அவர்களும் கூறவில்லை. ஆனாலும் சூது கலக்காத வகையில் விளையாடுவதை மார்க்கம் தடுக்காததால் செஸ் விளையாடுவதைத் தடுக்கவும் நம் யாருக்கும் அதிகாரமில்லை.

இப்படி பணமோ, பொருளோ பணயமாக வைக்காமல், சாதாரணமாக போட்டி வைத்து விளையாடுவதுதான் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது. அதுபோல், சீட்டுக்கட்டு விளையாடினால் அது நேர விரயம் செய்யக்கூடிய வீணான ஒரு காரியம் என்பதற்காக கூடாது என்று கூறலாமே தவிர, பணம் கட்டி விளையாடாதவரை அது சூதாட்டமாகாது. ஏனெனில் அங்கே எந்தப் பணப்பரிவர்த்தனையும், பணயப் பொருட்களும் இல்லை.

மேலும், மற்றவர்கள் ஆடும் ஆட்டத்தில் யார் ஜெயிப்பார்கள் என்பதற்காக, பார்வையாளர்கள் தங்களுக்குள் பணம் கட்டினால், பொருட்களை பணயம் வைத்தால், அதுவும் கூட சூதாட்டத்தில் சேரும்.

அதுபோல் தாயக்கட்டையை உருட்டி, ’டைமண்ட் விழுந்தால் உன் பணம் எனக்கு, க்ளாவர் விழுந்தால் என் பணம் உனக்கு’ என்ற அடிப்படையில் இருவரும் பணத்தை வைத்து, அதில் வென்றவர் அதை எடுத்துக் கொள்வதால் அதுவும் சூதாகிவிடும்.

விழாக்கள் நடக்கும் சில இடங்களிலும், மக்கள் கூடும் இடங்களிலும் இன்னொரு வகை சூதாட்டம் நடத்துவார்கள். அங்கு பரிசுப் பொருட்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அதைப் பெற்றுக்கொள்வதற்கு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்து, தங்கள் பெயரை பதிவுசெய்து அதில் கலந்துக் கொள்ளவேண்டும். 

இப்படி பல நூறு பேர் அதில் இணைந்தப் பிறகு, அந்தப் பெயர்களை குலுக்கிப் போட்டு முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் பரிசு என்று அறிவித்து அவர்களுக்கு மட்டும் பரிசுகளை கொடுப்பார்கள். அதற்குப் பிறகு இருக்கும் மீதமுள்ள தொகையை அவர்களே எடுத்துக் கொள்வார்கள். குலுக்கலில் தேர்வு செய்யப்படாதவர்கள் தோல்வி அடைந்தவர்களாக திரும்பிவிடுவார்கள். இதுவும் பகிரங்கமான ஒரு சூதாட்டமாகும்.

இன்னொரு சூது இருக்கின்றது. சில பொருட்களைக் காட்சிப்படுத்தி வைத்திருப்பார்கள். அத்துடன் சுற்றக்கூடிய விதமாக நம்பர்கள் போடப்பட்ட சக்கரம் ஒன்றை வைத்திருப்பார்கள். அங்கு வரக்கூடிய மக்களை "வை ராஜா வை" என்று சொல்லி, கூவிக் கூவி அழைப்பார்கள். குறிப்பிட்ட பணம் செலுத்திவிட்டு, அங்குள்ள ஏதாவது ஒரு நம்பரில் நாம் அந்தப் பொருளை வைத்த பிறகு சக்கரத்தை சுற்றுவார்கள். அந்த சக்கரம் சுற்றி முடியும்போது நாம் வைத்த நம்பரில் நின்றுவிட்டால் நமக்கு அந்தப் பொருள் கிடைக்கும். வேறொரு நம்பரில் நின்றால் கிடைக்காது. நாம் கட்டிய பணமும் கிடைக்காது. இதுவும் சூதில் ஒரு வகைதான்.

இதுபோல் அதிர்ஷ்டத்தை வைத்து ஒருவர் பொருளை மற்றவர் அடைவதும், ஏதேனும் ஒரு துறையில் ஒருவருக்கு இருக்கும் திறமை அடிப்படையில் ஒருவரின் பொருளை மற்றவர் அடைவதும் சூதாட்டத்தில் அடங்கும்.

ஆக, "சூதாட்டம்" என்பது ஒரு குறிப்பிட்ட விளையாட்டு அல்ல. குறுக்குவழியில் பணம் சம்பாதிக்கும் குறிப்பிட்ட மோசடிதான் சூதாட்டமாகும் என்பதை இதிலிருந்து அறிந்துக் கொள்ளலாம்.

இப்போது உங்கள் கேள்விக்கு வருவோம்:

பொதுவாக எந்த விளையாட்டாக இருந்தாலும் அதில் நடத்தப்படும் போட்டிகளுக்கு பரிசளிப்பது என்பது சூதாட்டத்தில் சேராது. ஏனெனில், குறிப்பிட்ட போட்டியில் வெற்றி பெற்றவருக்கு பத்தாயிரம் ரூபாய் அல்லது அதற்கு பெறுமானமான ஒரு பொருளைத் தருவேன் என்று ஒருவர் அறிவிக்கிறார். ஆனால், விளையாடுபவர் யாரும் இதில் எந்த முதலீடும் செய்யவில்லை. இதனால் விளையாட்டில் கலந்துக் கொள்பவருக்கு, போட்டியை நடத்துபவர் பரிசு கொடுத்தால் அந்தப் போட்டியில் உள்ள மற்றவர்களுக்கு எந்த இழப்பும் இல்லை.

அதாவது, போட்டியில் இல்லாத ஒருவர் தனது பணத்தைப் பரிசாக அளிப்பதால் இதில் விளையாடுபவர் சார்பாக பணத்தைப் போட்டு, பணத்தை எடுத்தல் இல்லை. போட்டியாளர்கள் பணம் செலுத்தும்படி இருந்தால்தான் அது சூதாட்டமாகும். எனவே அப்படி இல்லாத வகையில் உள்ள போட்டிகளில் இவ்வாறான பரிசுகள் பெறுவதும், வாங்குவதும் சூதாட்டமாகாது.

கேள்வியில் நீங்கள் குறிப்பிட்டிருப்பதுபோல், 'இஸ்லாமியக் கேள்வி பதில் போட்டி' என்ற பெயரில் இப்படி நடத்தப்பட்டாலும், அதுவும் நிச்சயமாக ஒரு சூதாட்டம்தான். ஆனால், அதை சூதாட்டம் (Gambling) என்று குறிப்பிடாமல், 'திறமையை அடிப்படையாகக் கொண்ட போட்டி'யை (Skill Based Games) நடத்துவதாகவே தங்களை விளம்பரப்படுத்திக் கொள்கின்றனர். இவை சில WhatsApp, Telegram போன்ற க்ரூப்களிலும், முகநூலிலும் சிலரால் நடத்தப்படுகிறது.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒருவரின் பணத்தை நாம் எடுப்பது என்றால்,

- வியாபாரத்தின் மூலம் எடுக்கலாம்

- அன்பளிப்பு என்ற வகையில் பெறலாம்

- வாரிசு முறையில் எடுக்கலாம்

- உழைத்து சம்பாதிப்பதன் மூலம் லாபமாக பெறலாம்; ஊதியமாக பெற்றுக் கொள்ளலாம்

ஆனால் ஒரு விளையாட்டிலோ, குலுக்கலிலோ, எந்தவிதமான போட்டியிலோ வெல்வதன் மூலம் ஒருவர் அடுத்தவரின் பொருளைப் பெறுவதில் எந்தவொரு நியாயமும் இல்லை. இதில் தோற்றவர் தன்னுடைய பணத்தை எந்தப் பிரதிபலனையும் பெறாமல் இழப்பதால்தான் இஸ்லாம் மார்க்கத்தில் சூதாட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில், நீங்கள் கூறியிருக்கும் அந்தக் கேள்வி பதில் போட்டியில் பரிசு என்ற பெயரில் கொடுக்கப்பட்டாலும், அந்தப் பரிசுக்கான தொகை சகப் போட்டியாளர்களிடமிருந்து பெறப்பட்டு கொடுக்கப்படுவதால் அது ஹராமானது, சூதாட்டம் என்பதில் சந்தேகமே இல்லை.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை