கேள்வி: கணவனுடைய வருமானம் ஹராம் என்றால், மனைவிக்கு அவர் தரும் நகை, வீடு ஹலாலா?
பதில்:
நபி (ஸல்) அவர்கள் எந்த காலத்தை எச்சரித்தார்களோ அந்த காலத்தில் நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ لَا يُبَالِي الْمَرْءُ مَا أَخَذَ مِنْهُ أَمِنَ الْحَلَالِ أَمْ مِنْ الْحَرَامِ
"தாம் சம்பாதித்தது ஹலாலா, ஹராமா என்று மக்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்!"
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புஹாரி (2059)
இன்று வசதியற்றவர்கள், வசதிபடைத்தவர்கள் யாராக இருந்தாலும் தனக்கு வரக்கூடிய வருமானத்தின் வழியைப் பற்றிய அக்கறையோ, கவலையோ இல்லாமல், எப்படியோ பணம் வந்தால் சரி என்ற நோக்கத்தில் பலவிதமாக சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். பலதரப்பு மக்களின் நிலையும் இவ்வாறுதான் இருக்கிறது. (அல்லாஹ் பாதுகாத்தவர்களைத் தவிர!)
உங்கள் கேள்வியில், "கணவனுடைய வருமானம் ஹராம் என்றால்..." என்று பொதுவாக கேட்டுள்ளீர்கள். "ஹராமான வருமானம்" என்பது பலதரப்பட்ட வகையில் அமைந்துள்ளது. (வியாபாரம் சம்பந்தமான தனி தலைப்பில் அதை பின்னர் விளக்குவோம், இன்ஷா அல்லாஹ்)
பெரும்பாலான மக்கள் செய்யக்கூடிய ஹராமான சில வருமானங்களைப் பற்றி மட்டும் இங்கே குறிப்பிடுவது உங்கள் கேள்விக்குரிய போதுமான பதிலாக இருக்கும்.
பாவமான செயல்கள் சம்பந்தமாக இஸ்லாம் முக்கியமான ஒரு அடிப்படைக் கொள்கையைக் கூறுகிறது.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:
وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى
"ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான்." (அல்குர்ஆன் 6:164)
அதாவது, ஒருவர் பாவம் செய்தால் அந்தப் பாவம் அவரைத்தான் சாரும். ஒருவரின் பாவத்தை மற்றவர் சுமக்க முடியாது; அல்லாஹ் அப்படி சுமத்தவும் மாட்டான் என்ற அடிப்படையான விஷயம் திருக்குர்ஆனின் பல இடங்களில் கூறப்பட்டுள்ளது.
(பார்க்க:- 2:134, 2:141, 2:281, 2:286, 3:25, 3:161, 4:111, 6:31, 6:164, 7:39, 7:96, 9:82, 9:95, 10:8, 10:52, 17:15, 35:18, 39:7, 39:24, 39:48, 39:51, 40:17, 45:22, 52:21, 53:38, 74:38)
கணவன் ஹராமான வழியில் சம்பாதித்தால் அதற்காக அல்லாஹ் அவரிடமே கேள்வி கேட்பான். அந்த சம்பாத்தியத்திலிருந்து மனைவி, மக்களுக்கு உணவளித்தாலோ மற்ற செலவுகள் செய்தாலோ, நீங்கள் எப்படி அந்த ஹராமானதை சாப்பிட்டீர்கள் என்று அவரின் மனைவி, மக்களை அல்லாஹ் கேள்வி கேட்கமாட்டான்.
ஏனென்றால், ஹராம் என்பது இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை இரண்டுக்குமுள்ள வித்தியாசத்தை முதலில் நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.
-- முதல் வகை, அந்தப் பொருளே ஹராமாக இருக்கும். இது அடிப்படைக் காரணத்தால் ஹராமானது.
உதாரணமாக, உண்பதற்கு தடுக்கப்பட்ட பன்றி, நாய் போன்றவை எந்த வகையில் உங்களுக்கு வந்தாலும் அது ஹராம்தான். நீங்கள் அவற்றை விலைக்கு வாங்கியிருந்தாலும், உங்களுக்கு அன்பளிப்பாக வந்தாலும் அல்லது ஏற்கனவே பண்ணையில் வளர்க்கப்பட்டு அந்த வியாபாரப் பொருட்களோடு வாரிசு முறையில் உங்களுக்கு வந்திருந்தாலும் அது ஹராம்தான்.
ஆக, அவை எந்த வகையில் கிடைத்திருந்தாலும் ஹராம் என்ற நிலையிலிருந்து மாறப்போவதில்லை. அது நிரந்தரமான ஹராம்.
-- இரண்டாவது வகை, அந்தப் பொருள் இஸ்லாமிய சட்டப்படி உண்பதற்கோ, பயன்படுத்துவதற்கோ ஹலாலாக இருக்கும்; ஆனால் அந்தப் பொருள் ஒருவருக்கு வந்த வழி ஹராமாக இருந்திருக்கும். இப்படி ஏதாவது ஒரு புறக் காரணத்தால் அது அவருக்கு ஹராமாகிவிடுகிறது.
உதாரணமாக ஆட்டிறைச்சி ஹலால் என்றாலும், அது மற்றவரிடமிருந்து திருடப்பட்ட ஒரு ஆடாக இருந்தால் அதை உண்பது ஹராம் என்பது நமக்குத் தெரியும். ஏனெனில், அது ஒருவருக்குக் கிடைக்கும் வழி சரியாக இல்லாததால்தான் அது ஹராமாகிறது. அதுவே நேர்மையான வழியில், திருடப்படாமல் கிடைத்திருந்தால் ஹராமாகி இருக்காது.
அதுபோல், ஒருவருக்கு 10 மூட்டை அரிசியைக் கடனாகக் கொடுத்துவிட்டு சிறிது காலம் கழித்து 11 மூட்டை அரிசியை ஒருவன் வாங்குகிறான். அப்போது கூடுதலாக வாங்கிய அந்த ஒரு மூட்டை அரிசி ஹராமாகிவிடும். இங்கே அந்த உணவுப் பொருளே ஹராமானதா என்றால், மார்க்கப்படி அரிசி ஹராம் இல்லை என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒருவரிடம் கொடுத்ததற்கு மேலதிகமாக வாங்கியதால், அது வட்டி என்ற அடிப்படையில்தான் அந்தப் பொருள் ஹராமாகிவிடுகின்றது.
ஆக, அந்தப் பொருளே ஹராம் என்பது ஒரு வகை, அந்தப் பொருள் வந்தவழி சரி இல்லாததால் ஹராமாகிப் போனது மற்றொரு வகை என்பதை நாம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.
இவற்றில் முதல் வகையான ஹராமைப் புரிந்துக் கொள்வதில் மக்களுக்குக் குழப்பம் எதுவுமில்லை. இரண்டாவது வகையான ஹராமைப் புரிந்துக் கொள்வதில்தான் அதிகமான மக்களுக்குத் தெளிவு இருப்பதில்லை.
பொதுவாக "ஹராம்" என்று சொல்லப்பட்டவை, எல்லா நிலையிலும் ஹராமாகவே இருக்கும். ஒரு காரணத்துக்காக ஹராமாக்கப்பட்டவை அந்தக் காரணம் இல்லாவிட்டால் ஹராமாகாது என்பதுதான் முக்கியமாக நாம் விளங்கிக்கொள்ள வேண்டிய விஷயமாகும்.
இப்படி ஒருவர் வட்டியின் மூலமோ, வேறு ஹராமான வழியிலோ பணம் திரட்டினால் அது இரண்டாம் வகையைச் சேர்ந்ததாகும். அந்தப் பணம் அவருக்குக் கிடைத்த வழி சரியாக இல்லை என்பதால்தான் அது ஹராமாகிறது. அவர் அந்தப் பணத்தை வைத்திருப்பதும் அதன்மூலம் சாப்பிடுவதும் அவருக்கு ஹராமாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. மக்களுக்கும் இதில் குழப்பம் இல்லை.
இவ்வாறு தவறான வழியில் பொருள் திரட்டியவர் தன் குடும்பத்தினருக்காக அவற்றைக் கொடுக்கிறார் அல்லது நமக்கு அதிலிருந்து அன்பளிப்பு தருகிறார் என்றால் அந்தப் பணம் நமக்கு ஹராமாகுமா?
அல்லது தடுக்கப்பட்ட வழியில் பொருளீட்டியவர் இறந்தப் பிறகு அவரது வாரிசுகளுக்கு அந்தச் சொத்து கிடைத்தால், அதை வாரிசுகள் பெற்றுக் கொள்வது ஹலாலாகுமா?
இதுபோன்ற விஷயங்களில்தான் மக்களிடம் குழப்பம் உள்ளது.
ஹராமான வழியில் பொருளீட்டியவரின் பொருட்கள் அவருக்கு எப்படி ஹராமாக ஆகிறதோ அதுபோல், அவர் தன் குடும்பத்தினருக்காக அவற்றைக் கொடுத்தாலோ, அன்பளிப்பாக நமக்குத் தந்தாலோ அதை வாங்கியவர்களுக்கும் அது ஹராம் என்று பல பேர் நினைக்கின்றனர். ஆனால் இந்தக் கருத்துக்கு குர்ஆன், ஹதீஸில் ஆதாரமில்லை.
ஒருவன் சாராயத்தை நமக்குத் தந்தால் அதைப் பயன்படுத்துவது நமக்கு ஹராம்தான். ஏனெனில் சாராயம் என்பது அடிப்படையிலேயே ஹராமானதாகும். ஆனால் சாராயத்தை விற்றுச் சம்பாதித்த பணத்தில் நமக்கு அன்பளிப்புச் செய்தால் அது நமக்கு ஹராமாகாது என்பதே சரியான கருத்தாகும். ஏனெனில் அந்தப் பணம் அவருக்கு வந்த வழிதான் சரியில்லையே தவிர, பணம் என்ற அந்தப் பொருள் ஹராம் அல்ல.
இந்தக் கருத்துக்குதான் திருக்குர்ஆனிலும், நபிவழியிலும் ஆதாரங்கள் உள்ளன.
முதலாவது ஆதாரம், ஆரம்பத்தில் நாம் குறிப்பிட்டிருந்தபடி, "ஒருவர் சுமையை ஒருவர் சுமக்கமாட்டார்" என்ற கருத்தில் அமைந்த வசனங்கள்தான்.
تِلْكَ اُمَّةٌ قَدْ خَلَتْۚ لَهَا مَا كَسَبَتْ وَلَـكُمْ مَّا كَسَبْتُمْۚ وَلَا تُسْـَٔـلُوْنَ عَمَّا كَانُوْا يَعْمَلُوْنَ
"அவர்கள், சென்றுவிட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு; நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்." (அல்குர்ஆன் 2:134)
مَنِ اهْتَدٰى فَاِنَّمَا يَهْتَدِىْ لِنَفْسِهٖ ۚ وَمَنْ ضَلَّ فَاِنَّمَا يَضِلُّ عَلَيْهَا وَلَا تَزِرُ وَازِرَةٌ وِّزْرَ اُخْرٰى وَمَا كُنَّا مُعَذِّبِيْنَ حَتّٰى نَبْعَثَ رَسُوْلًا
"நேர்வழி பெற்றவர் தனக்காகவே நேர்வழி பெறுகிறார். வழி தவறுபவர் தனக்கெதிராகவே வழி தவறுகிறார். ஒருவன் இன்னொருவனின் சுமையைச் சுமக்க மாட்டான். ஒரு தூதரை அனுப்பாதவரை நாம் (எவரையும்) தண்டிப்பதில்லை." (அல்குர்ஆன் 17:15)
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக ஒருவர் கொடுத்தால் அது அவர்களுக்கு ஹலால் ஆகும். அவர்கள் மீது இரக்கப்பட்டு, பரிதாபப்பட்டு தர்மமாகக் கொடுத்தால் அது அவர்களுக்கு ஹலால் இல்லை. இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்!
"பரீரா என்ற அடிமைப் பெண்ணுக்குச் சிலர் தர்மமாக இறைச்சியைக் கொடுத்தனர். அந்த இறைச்சியை அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்தார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
'இது எனக்கு தர்மமாக வந்தது' என்று பரீரா கூறியபோது, 'அது உனக்கு தர்மமாக வந்திருந்தாலும் நீ எனக்கு அன்பளிப்பாகத் தந்துள்ளதால் அது எனக்கு அன்பளிப்புதான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நூல்: புஹாரி (1495, 2577)
பரீரா அவர்கள் அடிமையாகவும், பரம ஏழையாகவும் இருந்ததால் ஒருவர் அவருக்குத் தர்மம் செய்துள்ளார். அந்த தர்மத்தைப் பெற்றுக் கொண்ட பரீரா அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தர்மமாகக் கொடுக்கவில்லை. மாறாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏழ்மையைக் கருத்தில் கொள்ளாமல், அவர்களின் தகுதியைக் கருத்தில் கொண்டு அன்பளிப்பாக வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில் பொருள் கிடைக்கும் வழி மாறியபோது சட்டமும் மாறுவதைக் காணலாம். பரீராவுக்குத் தர்மம் என்ற வழியில் கிடைத்தாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தர்மம் என்ற வகையில் அது கிடைக்கவில்லை. எனவேதான் அதைச் சாப்பிட்டுள்ளார்கள்.
மேலும் முஸ்லிமல்லாதவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்கியுள்ளனர்.
முஸ்லிமல்லாத மக்கள் பொருளீட்டுவதற்கு இஸ்லாம் கூறும் நெறிமுறைகளைப் பேணமாட்டார்கள் என்றபோதும், அந்த அன்பளிப்புகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
'அய்லா' என்ற ஊரின் மன்னர் நபிகள் நயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு வெள்ளை நிறக் கோவேறுக் கழுதையை அன்பளிப்புச் செய்து, ஒரு சால்வையும் அணிவித்தார். தம் நாட்டவருக்காக (ஜிஸ்யா வரி தருகிறோம்) என்றும் அவர் எழுதிக் கொடுத்தார்.
அறிவிப்பவர்: அபூஹுமைத் (ரலி)
நூல்: புஹாரி (1482, 3161)
'தூமத்துல் ஜந்தல்' பகுதியின் மன்னர் உகைதிர் என்பவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பட்டுத்துணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கி, இதை முக்காடுகளாக வெட்டி, ஃபாத்திமாக்களிடையே (பெண்களுக்கிடையே) பங்கிட்டு விடுங்கள்” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: முஸ்லிம் (4209, 1409)
மேலேயுள்ள ஹதீஸ்களை கவனியுங்கள். இஸ்லாத்தில் இல்லாத மன்னர்கள் ஹலாலான முறையில் சம்பாதித்து வாழ்ந்தார்கள் என்று சொல்லமுடியாது. ஏனெனில் இஸ்லாமிய சட்டங்களை அறியாதவர்கள், இஸ்லாமிய நெறிமுறைகளுக்குள் வாழ்ந்திருக்க முடியாது. மக்களுடைய வரிப் பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தவர்கள்தான் மன்னர்கள். அப்படி இருந்தாலும், அந்தப் பணத்திலிருந்து வாங்கப்பட்டப் பொருட்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டபோது அதை ஏற்றுள்ளார்கள்.
ஆக, ஒருவர் தவறான முறையில் பொருளீட்டி இருந்தாலும், அவர் நமக்கு அன்பளிப்பாகத் தந்தால் அது நமக்கு ஹராமாகாது என்பதை மேற்கண்ட ஆதாரங்களில் இருந்து அறிந்துக் கொள்ளலாம்.
அதுபோல் ஒரு யூதப் பெண் கொடுத்த விருந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றார்கள். [பார்க்க - நூல் : புஹாரி (2617)]
யூதர்களின் வருமானம் வட்டி அடிப்படையில் இருந்தும் அந்த யூதப் பெண்ணின் விருந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏற்றுள்ளனர்.
மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட உணவு, உடை, இன்னபிற பொருட்களை ஒருவர் ஹராமாகத் திரட்டிய பணத்தில் வாங்கி நமக்கு அன்பளிப்பாகத் தந்தால் அதை நாம் பெற்றுக் கொள்ளலாம். அது அவருக்குதான் ஹராமான வழியில் வந்துள்ளது. எனவே அது அவருக்குதான் ஹராமாகும். நமக்கு அன்பளிப்பு என்ற முறையில் வந்துள்ளதால் அது நமக்கு ஹராம் அல்ல என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் சந்தேகத்துக்கு இடமில்லாத வகையில் தெளிவாகக் கூறுகின்றன.
எனவே ஒரு கணவரோ, தந்தையோ, குடும்பத்தை பொறுப்பேற்று நடத்தும் எந்த பொறுப்பாளிகளாக இருந்தாலும், ஹராமான முறையில் பொருளீட்டினால் அந்த சம்பாத்தியத்துக்கு அவர்தான் இறைவனிடத்தில் கேள்வி கேட்கப்படுவார். அவர்தான் மறுமையில் அல்லாஹ்வின் முன்னிலையில் பதில் சொல்ல தயாராகிக்கொள்ள வேண்டுமே தவிர, நமக்காக அவர் செலவழித்ததால் நாம் அதற்கு பதில் சொல்லப் போவதில்லை. நமக்கு குடும்ப செலவுகளுக்காக தந்திருந்தாலும், அன்பளிப்பாக தந்திருந்தாலும், வாரிசு அடிப்படையில் தந்திருந்தாலும் சரியே! ஏனெனில், மார்க்க அடிப்படையில் நமக்கு அது ஹராமானது கிடையாது.
அதேசமயம், மிக முக்கியமான ஒரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்!
கணவன் ஹராமான வழியில் சம்பாதித்துக் கொடுத்திருப்பது தெரிந்தும் மனைவி அதைத் தடுக்காமல் அதிலிருந்து உண்டால்...? அவற்றை அனுபவித்தால்...?
உதாரணமாக, பிறருடைய பணத்தையோ, பொருளையோ எந்த வழியிலாவது அபகரித்து வந்து குடும்பத்திற்காக கொடுக்கும் கணவனை கண்டிக்காமல், தடுக்காமல், அவனை ஆதரித்து, அந்த திருட்டைப் பற்றி கண்டுகொள்ளாமல், அந்த வருமானத்தை அனுபவிப்பது கூடுமா என்றால், நிச்சயமாக அதை இஸ்லாம் அனுமதிக்காது!
வட்டியின் மூலம் சம்பாதித்தப் பொருளை குடும்ப செலவுக்காகவோ அன்பளிப்பாகவோ கொண்டு வந்து கொடுப்பதற்கும், திருட்டுத்தனமாக மற்றவரின் பொருளைத் திருடிக் கொண்டு வந்து கொடுப்பதற்கும் வித்தியாசம் உள்ளது. வட்டியின் மூலம் சம்பாதித்தவன் அவனுடைய சம்பாத்தியம் ஹராமாக இருந்தாலும், அது அவனுடைய பொருளாகிவிடுகிறது. ஏனெனில் அவனுக்கு வட்டியாக கொடுத்தவர்கள் அதைக் கொடுப்பதற்கு சம்மதித்தே கொடுக்கிறார்கள்.
ஆனால் திருடப்பட்ட பொருள் அவ்வாறு இல்லை. பொருளுக்கு உரியவர்களுக்கு தெரியாமல் அல்லது தெரிந்தே ஒருவரின் பொருளை அநியாயமான முறையில் அபகரித்து, அவர்களின் சம்மதமின்றி தனக்குரியதாக்கிக் கொண்ட பொருளாகும். அது எந்த வகையிலும் அவனுடைய பொருளாக ஆகவே முடியாது என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
வட்டியைக் கொடுத்து கடன் வாங்கிய ஒருவர், என்னுடைய பணத்தை வட்டியின் மூலம் இவன் அபகரித்துவிட்டான், திருடிவிட்டான் என்று வழக்குப் போடமுடியுமா? எந்த நீதிமன்றத்தின் சட்டமாக இருந்தாலும், இது சாத்தியமற்ற விஷயம் ஆகும். ஆனால் என்னுடைய பொருளைத் திருடிவிட்டான் என்று ஒரு திருடன் மீது வழக்குப் போடமுடியும்.
ஆக, திருடப்பட்டப் பொருளை தன் குடும்பத்திற்காக செலவழித்தாலும், பிறருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தாலும் அது அவருடைய சொந்தப் பொருளாக ஆகாது. எனவே இப்படிப்பட்ட ஹராமான வருமானங்களை அந்த திருடனின் மனைவியோ, அவனுடைய குடும்பத்தாரோ தடுக்காமல் அதிலிருந்து உண்டால் அவர்களும் அதில் பொறுப்பாளிகளே!
எனவே, தன் கணவனிடமிருந்தோ, பெற்றோரிடமிருந்தோ தனக்குக் கொடுக்கப்பட்ட பொருளாதாரம் மற்றும் சொத்துக்கள் எல்லாம் ஒருவரிடமிருந்து ஏமாற்றிக் கொள்ளையடித்து அபகரித்தவைதான் என்று தெரிந்துவிட்டால், அவற்றை அதற்கு உரியவர்களிடத்தில் மீண்டும் ஒப்படைத்துவிடவேண்டும். எப்படியோ நமக்கு கிடைத்தால் சரிதான் என்று அதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது அந்த ஹராமான வருவாய்க்கு துணைப் போகும் பாவமாகும்.
அல்லாஹ் தன் திருமறையிலே கூறுகிறான்:
تَعَاوَنُوْا عَلَى الْبِرِّ وَالتَّقْوٰى وَلَا تَعَاوَنُوْا عَلَى الْاِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللّٰهَ ؕ اِنَّ اللّٰهَ شَدِيْدُ الْعِقَا
"நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்." (திருக்குர்ஆன் 5:2)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!