கேள்வி: மணப்பெண் அலங்காரம் (Bridal Mack up), மருதாணி இடுவது (Mehandhi) போன்ற (Beautician Course) துறைச் சார்ந்த கல்வியைக் கற்பதற்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
பதில்:
இஸ்லாமிய வாழ்க்கை முறை என்பது மறுமை வெற்றிக்கானது. நம் வாழ்வில் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று மார்க்கம் தடுத்திருக்கிறதோ, எவையெல்லாம் மனித குலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று எச்சரித்து இருக்கிறதோ, அவை சார்ந்த எந்தக் கல்வியையும் நாம் கற்கக் கூடாது. அதேசமயம் இவ்வுலக வாழ்வில் மனிதனுக்கு தேவையான அனைத்து துறைகளிலும், அவரவர் தேர்ந்தெடுக்கும் கல்வியைக் கற்றுத் தேர்வதற்கு முழு சுதந்திரமும் அளித்திருக்கிறது!
எந்த ஒரு விஷயத்திலும் நம் மார்க்கம் சொல்லும் ஹலால், ஹராமை நாம் தெளிவாகப் புரிந்துக் கொண்டால், அதன்மூலம் தீர்வுகளும் நமக்கு எளிமையாகக் கிடைத்துவிடும்.
❂ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"அனுமதிக்கப்பட்டதும் (ஹலால்) தெளிவானது; தடை செய்யப்பட்டதும் (ஹராம்) தெளிவானது. இவ்விரண்டிற்கும் இடையில் சந்தேகத்திற்குரியவையும் (முஷ்தபிஹாத்) இருக்கின்றன. மக்களில் பெரும்பாலோர் அவற்றை அறியமாட்டார்கள்.
எனவே, யார் சந்தேகத்திற்குரியவற்றைத் தவிர்த்துக்கொள்கிறாரோ அவர் தமது மார்க்கத்தையும் தமது மானத்தையும் காப்பாற்றிக்கொள்கிறார். யார் சந்தேகத்திற்குரியவற்றில் தலையிடுகிறாரோ அவர் அனுமதிக்கபடாதவற்றில் தலையிடுகிறார்."
(ஹதீஸின் ஒரு பகுதி)
அறிவிப்பாளர்: நுஃமான் இப்னு பஷீர் (ரலி)
நூற்கள்: புஹாரி (2051); முஸ்லிம் (3259/தமிழ் மொழிபெயர்ப்பு எண்)
عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: سَمِعْتُهُ يَقُولُ
سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: – وَأَهْوَى النُّعْمَانُ بِإِصْبَعَيْهِ إِلَى أُذُنَيْهِ – «إِنَّ الْحَلَالَ بَيِّنٌ، وَإِنَّ الْحَرَامَ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لَا يَعْلَمُهُنَّ كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ، وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ [صحيح مسلم: 1599 - Shamila N°]
மேலுள்ள ஹதீஸில் கூறப்பட்ட இந்த அடிப்படையை கவனத்தில் கொண்டு கூடுதல் விளக்கங்களைப் பார்ப்போம்.
மார்க்கம் தடை செய்த கல்விகள்
★ வட்டித் தொழில் சம்பந்தப்பட்ட வங்கிகளில் பணியாற்றவோ, வட்டி அடிப்படையிலான விஷயங்களுக்கு துணைபுரியவோ கற்கப்படும் கல்வி★ ஆடல் பயிற்சிக் கலை
★ இசைக் கருவிகளோடு கற்றுக்கொடுக்கப்படும் இசைக் கல்வி
★ புகையிலை, மது மற்றும் அனைத்து போதைப் பொருட்கள் தயாரிப்பது பற்றிய கல்வி
★ Boxing, Rugby போன்ற ஒருவருக்கொருவர் தீங்கு விளைவித்துக் கொள்ளும் விளையாட்டுகளைக் கற்பது
★ பீடி, சிகரெட், பட்டாசு போன்ற மக்களின் உடல் நலன்களைப் பாதிக்கக்கூடியவற்றை தயாரிக்கக் கற்பது
★ ஹராமான உணவுப் பொருட்களைப் பதப்படுத்துவது அல்லது தயாரிப்பது, அது சம்பந்தமான எல்லா வகைக் கல்விகள்
✿ தனக்காகவோ, பிறருக்காகவோ அழகுபடுத்துவதற்காக புருவ முடிகளை மழிப்பதற்கும், பற்களின் வரிசைகளைப் பிரித்து இடைவெளி ஏற்படுத்திக் கொள்வதற்கும் கற்றுக்கொள்வது
✿ செயற்கைப் பொருட்களால் அல்லாமல், மனித முடிகளைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒட்டுமுடி செய்யக் கற்பது
✿ பச்சைக் குத்திவிடுவதற்கு (Tattoo) கற்கப்படும் கல்வி
✿ மருத்துவத்துக்காக அல்லாமல், இறைவன் அளித்த உருவத்தை மாற்றிக் கொள்வதற்காக ப்ளாஸ்டிக் சர்ஜரி போன்றவற்றைக் கற்பது
அல்லாஹ்வுக்கு இணைக் கற்பிக்கும் வகையில் அமைந்த,
✽ தட்டு, தகடு, தாயத்துகள் தயாரிக்கக் கற்றுக் கொள்வது
✽ ஜோசியம் (உண்மை இல்லை என்றாலும்) கற்பது
✽ சூனியத்தால் பிறருக்கு பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் சூனியம் (Black Magic) கற்பது
✽ பிறமத வணக்கங்களுக்கு பயன்படுத்தும் சிலைகள், மற்றும் அவை சம்பந்தப்பட்டவற்றை தயாரிப்பதைக் கற்பது
இன்னும் இதுபோன்று எவற்றையெல்லாம் மார்க்கம் தடைசெய்துள்ளதோ அந்த அனைத்து கல்விகளைக் கற்பதற்கும் இஸ்லாத்தில் அனுமதி கிடையாது. அதுபோல், மேலே நாம் குறிப்பிட்டவற்றுக்கு துணைப்போகும் வகையில் அமைந்துள்ள எந்த ஒன்றைக் கற்பதற்கும் அனுமதி கிடையாது. இதற்கான அடிப்படை இதுதான்!
நீங்கள் கேட்டுள்ள மணப்பெண் அலங்காரங்கள் (Bridal Mack up) போன்ற அழகுக்கலைச் சார்ந்த கல்வியைப் பொறுத்தவரை, அவற்றைக் கற்பதற்கு அனுமதியில்லை என்று பொதுவாக சொல்லிவிட முடியாது. அதாவது, மார்க்க வரம்புகளை மீறாமல் அலங்கரிப்பது சம்பந்தமானவை தவறாகாது.
மற்றபடி நாம் மேலே குறிப்பிட்டுள்ள உதாரணங்களில் எவையெல்லாம் இந்த அழகுக் கலையோடு பொருந்திப் போகிறதோ, அவை மட்டும் தடுக்கப்பட்டவை என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.
உதாரணமாக, புருவ முடிகளை மழித்தல், அழகிற்காக பல் வரிசைகளை விலக்கி இடைவெளி விடுதல், பச்சைக் குத்திவிடுதல், இன்னும் இதுபோன்ற எவையெல்லாம் ஹராமக்கப்பட்டுள்ளதோ அவற்றை மட்டும் தவிர்ந்துக் கொண்டால் போதுமானது.
❂ அல்கமா (ரஹ்) அறிவித்தார்:
“பச்சைக் குத்திவிடும் பெண்கள், பச்சைக் குத்திக் கொள்ளும் பெண்கள், (அழகிற்காக) முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றிவிடும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக்கோரும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன்பற்களைப் பிரித்துக்கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ்வின் (இயற்கைப்) படைப்பு முறையை மாற்றிக்கொள்ளும் பெண்கள்மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!" என்று அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி) கூறிவிட்டு, "இறைத்தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர்களை நான் ஏன் சபிக்கக் கூடாது? இச்செயல் அல்லாஹ்வின் வேதத்திலும் சபிக்கப்பட்டதே" என்று கூறினார்கள்.
நூல்: புஹாரி (5931, 5943, 5948); முஸ்லிம் (4311 - தமிழ் மொழிபெயர்ப்பு எண்; 2125 - Shamila N°)
❂ இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒட்டுமுடி வைத்துவிடும் பெண்கள், ஒட்டுமுடி வைத்துக்கொள்ளும் பெண்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக்கொள்ளும் பெண்கள் ஆகியோரை அல்லாஹ் சபிக்கிறான். (தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துகிறான்.)"
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி); நூல்: புஹாரி (5933)
குறிப்பு: இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ள 'ஒட்டுமுடி' என்பது, ஒரு பெண்ணிடமிருந்து கிடைத்த தலைமுடியை இன்னொரு பெண்ணின் தலைமுடியில் இணைப்பது. (இதுபற்றிய விபரங்களை இன்ஷா அல்லாஹ் பின்னர் பார்ப்போம்.)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!