Tuesday, 30 November 2010

தானாக மருந்து உட்கொண்டால் சிறுநீரகம் பாதிக்கும்
"டாக்டர் ஆலோசனை இல்லாமல் மருந்து உட்கொண்டால் சிறுநீரகம் பாதிக்கும்" என மதுரை மீனாட்சி மிஷன் ஆஸ்பத்திரியில் நடந்த சிறுநீரகவியல் துறை முன்னேற்றம் குறித்த கருத்தரங்கில் சென்னை டாக்டர் முத்துசேதுபதி பேசினார்.

அவர் கூறியதாவது : இன்று அதிக மருந்து, மாத்திரைகள் விற்பனைக்கு வந்துள்ளன. டாக்டர் ஆலோசனையில்லாமல், வலி மாத்திரைகளை அதிகமாக எடுப்பதால் சிறுநீரக நோய் வரும். சர்க்கரை நோய்,ரத்த அழுத்தம் உள்ளவர்கள் முறையாக பரிசோதனை செய்து,டாக்டர் ஆலோசனைபடி மருந்துகளை எடுத்துக் கொண்டால் இந்நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். ஆறு மாதத்திற்கு ஒருமுறை சிறுநீர், ரத்தப் பரிசோதனைகளைச் செய்யவேண்டும். சிறுநீரில் புரதச்சத்து வெளியேறுகிறதா என கண்காணிக்க வேண்டும்.

குழந்தைகள் சிறுநீர் கழிக்கும்போது வலியால் அழுவர். சிலசமயம் சிறுநீரில் ரத்தம் வெளியாகும். இவ்வாறு இருந்தால் டாக்டரிடம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். கால்வீக்கம்,எழுந்தவுடன் முகம் வீங்குதல் போன்றவை சிறுநீரக நோய்க்கான‌ அறிகுறிகள் என்றார். டாக்டர்கள் ராஜசேகரன், ஜெயகுமார், முரளி, சம்பத்குமார் ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
source: dinamalar
Friday, 26 November 2010

செல்ஃபோன் திருட்டுக்கு முற்றுப்புள்ளி

ஒரு காலத்தில் ஆடம்பரப் பொருட்களாக இருந்தவை இப்போது அவசியமாகிவிட்டன. அவசியத் தேவைகளுக்கான பொருட்கள் அதிகமாகிப் போனதால், அத்துடன் அவற்றைப் பாதுகாக்கவேண்டிய சூழலும் அவசியமாகிவிட்டது. அதனால் நமக்கு அவசியமான பொருட்களை பாதுகாப்பது எப்படி என்பதை அறிந்துக் கொள்வதும் இப்போது அவசியமல்லவா..? சரி, விஷயத்திற்கு வருவோம்!

பணக்காரர்கள் மட்டுமே புழங்கும் பொருட்கள் என்று கருதப்பட்டு, இப்போது அனைவராலும் புழங்கப்படக்கூடிய பொருட்களின் பட்டியலில் இன்று செல்ஃபோன் முக்கிய இடம் பெற்றுள்ளது அனைவரும் அறிந்ததே! செல்ஃபோன் புழங்குவதை ஆச்சரியமாக வாய்பிளந்து பார்த்த காலம் மாறி, இப்போது ஏழை எளிய மக்களும் சுல‌பமாக பயன்படுத்தும் வகையில் மிகவும் நியாயமான விலைகளில், குறைவான‌ கட்டணங்களோடு கிடைப்பது சந்தோஷமான விஷய‌ம்தான். இந்தியாவில் குறைந்த சம்பளத்தில் சாலை சீரமைப்புப் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் முத‌ல், பால்காரர்கள், பஞ்சு மிட்டாய் - முறுக்கு வியாபாரிகள், தெருக்களில் வந்து மீன் விற்கும் மீன்காரம்மாக்கள் உட்பட எல்லோர் கையிலும் செல்ஃபோனைப் பார்த்தபோது ஆச்சரியமாக இருந்தது! அதே சமயம், செல்ஃபோன்கள் இவ்வளவு எளிதாகக் கிடைக்கும்போது அவற்றைத் திருடுபவர்கள் மட்டும் இன்னும் குறையவில்லை. இந்தியாவில் என்றில்லை, எல்லா நாடுகளிலும் இந்த செல்ஃபோன் திருட்டு நடந்துக் கொண்டுதான் இருக்கிறது.


'திருடனாப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது' என்ற பல்லவியை எதுவரைதான் பாடிக் கொண்டு இருப்பது? முதலில் செல்ஃபோனுக்கு மட்டுமாவது இந்த நிலை மாறட்டுமே! அதற்காகதான் 'செல்ஃபோன் திருடன் திருந்தாவிட்டால் அந்த செல்ஃபோனே அவனுக்கு ஆப்பு வைக்கும்' என்ற இந்த‌ செய்தி!

இதற்கு முன்னால் சிலர் இதைக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் மெயிலில் வந்த இந்த செய்தி எனக்கு புதியதாக இருந்ததால், இதுவரை அறிந்திராதவர்கள் பயன்பெறட்டும் என்று அந்த‌ தகவலை உங்கள் அனைவரோடும் பகிர்ந்துக் கொள்கிறேன்.

இதோ அந்த செய்தி:

உங்களின் MOBILE PHONE தொலைந்துவிட்டால் நீங்கள் கவலைப்பட வேண்டாம்.காவல் நிலையத்திற்கு செல்லவேண்டிய அவசியமும் இல்லை. உங்கள் மொபைலில் பின்புறம் IMEI என்றுஅழைக்கப்படும்(INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY) 14 இலக்க எண் மூலம் எளிதாக கண்டு அறியலாம். இந்த IMEI NO தான் நாட்டில் நிகழ்ந்து வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது.உங்களின் MOBILE ஐ எடுத்து அதில் உள்ள SIM ஐ மாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கிக் கொள்வார்கள். (இந்த முதல் பகுதி முன்னரே அனைவரும் அறிந்ததுதான். இதோ தொடர்ந்து வரும் இரண்டாவ‌து பகுதிதான் புது செய்தி)

GUARDIAN என்ற SOFTWARE ஐ உங்களின் மொபைலில் INSTALL செய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுபிடிக்க முடியும். அந்த SOTWARE ஐ UNINSTALL செய்தால் அதன் பயன்பாடு முடக்கப்படலாம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அதில் PASSWORD பயன்படுத்தப்படுகிறது. எனவே அது சிக்கலான‌ விஷயம்.

அவர் உங்களின் SIM ஐ REMOVE செய்து தன்னுடைய‌ SIM ஐ போடும்போது அவரின் MOBILE NO உங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு MESSAGE வரும். எனவே அவர் தப்பிக்க முடியாது. எத்தனை முறை அவர் SWITCH ON/OFF செய்தாலும் அவரின் MOBILE NO உங்களுக்கு குறுந்தகவலாக வந்துக்கொண்டே இருக்கும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்குச் சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துக்கொள்ளுங்கள்.

GUARDIAN software ஐ DOWNLOAD செய்ய இங்கே CLICK செய்யுங்கள்.

இதைப் பயன்படுத்திப் பார்த்து, பலன் இருந்தால் அனைவரோடும் பகிர்ந்துக் கொள்ளுங்கள். அதன் மூலம் செல்ஃபோன் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்!

Tuesday, 23 November 2010

வாழைப்பூ கீரை கடைசல்

இந்த கடைசலில் வாழைப்பூவுடன் முருங்கைக் கீரையும் சேர்ந்திருப்பதால் பல சத்துகள் கிடைக்கிறது. குழந்தைகளுக்கும் வெள்ளைச் சோறோடு சேர்த்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்:

வாழைப்பூ - 1
முருங்கைக் கீரை - 4 கப்
பாசிப் பருப்பு - 75 மில்லி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
இறால் ஸ்டோக் - பாதி (சுமார் 5 கிராம்)
எண்ணெய் - 3 ஸ்பூன்
மல்லித் தூள் - 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
உப்பு ‍- 1/2 ஸ்பூன்

Saturday, 20 November 2010

ஹஜ் 2010: ஸ்பெஷல் கவரேஜ்


இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ் கடமையை, இறைவன் உதவியால் இனிதே நிறைவேற்றிவிட்டு மக்கள் தங்கள் தாயகம் திரும்பிக் கொண்டிருப்பார்கள். அதன் சில காட்சிகள் உங்களுக்காக:

ஹாஜிகளின் வசதிக்காக இந்த வருடம் முதல் தொடங்கப்பட்ட இரயில் போக்குவரத்து
அவசர சூழ்நிலைக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்உறவுகளைப் பிரிந்து இஹ்ராம் அணிந்த நிலையில் இறையில்லம் நோக்கி பயண‌மாகும் ஹாஜிகள்ஹாஜிகளை வரவேற்க தயாரான மக்கா நகரம்ஹஜ் கடமையை நிறைவேற்ற வந்திறங்கும் ஹாஜிகள்ஹாஜிகளால் நிரம்பி வழியும் ஹரம் ஷரீஃப்தவாஃப் செய்யும் ஹாஜிகள் (ஹஜ் சமயமாக இருப்பதால் கஃஅபாவின் திரை சற்று தூக்கி கட்டப்பட்டுள்ளது)ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடும் ஹாஜிகள்மகாமு இப்ராஹீம் (இப்ராஹீம் (அலை)அவர்கள் நின்ற இடம்)
நூர் மலையின் உச்சியிலிருந்து இரவு நேர மக்கமா நகரின் தோற்றம்
வயதானவர்களுக்காகவும் உடல் ஊனமுற்றோருக்காகவும் காத்திருக்கும் பிரத்யேக‌ பேருந்துகள்ஸஃபா, மர்வாவுக்கிடையிலான தொங்கோட்டம்பிரிக்கப்பட்டுள்ள பல பாதைகள் வழியாகவும் (எட்டாவது நாள்) மினாவுக்கு புறப்பட்டு செல்லும் ஹாஜிகள்மினாவில் வந்து சேர்ந்துக் கொண்டிருக்கும் ஹாஜிகள்மினாவில் தங்கி ஓய்வெடுக்கும் ஹாஜிகள்
ஒன்பதாவது நாள் (சூரிய உதய‌த்திற்கு பிறகு) சாரை சாரையாக அரஃபா திடல் நோக்கி செல்லும் ஹாஜிகள்கூட்ட‌த்தில் தடைப்பட்டு நிற்கும் மக்களுக்கு உணவு, தண்ணீர் கொடுத்து உதவும் அணியினர்அரஃபா மைதானத்தில் கூடியுள்ள மக்கள் வெள்ளத்தின் ஒரு பகுதியினர்அரஃபாவில் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபடும் ஹாஜிகள்அரஃபாவிலுள்ள நமீரா பள்ளி நிரம்பியதால் பள்ளிக்கு வெளியிலும் தொழும் ஹாஜிகள் கூட்டத்தின் ஒரு பகுதி(அரஃபா திடலில்) சூரியன் அஸ்தமிக்கும் வரை தங்கள் இரட்சகனிடம் கையேந்தி நிற்கும் ஹாஜிகள்அரஃபாவிலிருந்து புறப்பட்டு முஸ்தலிஃபா செல்லும் ஹாஜிகள் 

ஜம்ரத்களுக்கு கல் எறியும் ஹாஜிகள்
குர்பானி கொடுத்த பிறகு மொட்டைப் போடும் ஹாஜிகள்
நான்கு பக்கங்கள் கொண்ட ராட்சச கடிகாரமும் மினாரவின் மேல் பகுதியும்மஸ்ஜிதுன் நபவியின் வெளிப்பகுதி

(படங்கள் இணையத்திலிருந்து சேகரித்து, தொகுத்தவை)
Tuesday, 16 November 2010

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் (பகுதி 3)

பெருநாள் தக்பீர் கூறுதல்

இரு பெருநாட்களிலும் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்தும் வண்ணம் அதிகமதிகம் தக்பீர்கள் கூற வேண்டும்.

பெருநாள் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்யவேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப் பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச்செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும் புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
          அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி); நூல்:புகாரி(971)

இந்த ஹதீஸில் பெருநாள் தினத்தில் ஆண்களும், பெண்களும் தக்பீர் சொல்வோம் என்று கூறப்பட்டுள்ளது. 'தக்பீர்' என்பது 'அல்லாஹு அக்பர்' என்று கூறுவது தான் என்பதை முன்னர் பார்த்தோம்.

ஆனால், '..... அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் கபீரா, வல்ஹம்து லில்லாஹி கஸீரா.....' என்ற ஒரு நீண்ட பைத்தை ஓதும் வழக்கம் நம் மக்களிடம் உள்ளது. இவ்வாறு பெருநாட்களில் ஓத வேண்டும் என்பதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. இன்ன தக்பீர் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு வரக்கூடிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகும். ஆகவே 'அல்லாஹு அக்பர்' என்பது மட்டும்தான் பெருநாளுக்கென நாம் கூறவேண்டிய தக்பீர் ஆகும். நம்மால் எவ்வளவு முடியுமோ அந்தளவு (அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் என்று) பெருநாளில் தக்பீர் கூறிக்கொண்டே இருக்கவேண்டும்.

ஒரு வழியில் சென்று மறுவழியில் திரும்புதல்

பெருநாள் வந்துவிட்டால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் (போவதற்கும், வருவதற்கும்) பாதையை மாற்றிக் கொள்வார்கள். 
             அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி); நூல்: புகாரி(986)

இந்த முறையை நபி(ஸல்)அவர்கள் காட்டித் தந்தார்கள் என்பதால் நாமும் கடைப்பிடிப்பது சுன்னத்தாகும். ஆக, இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் வீட்டை விட்டுக் கிளம்பும்போதே, மாற்று வழியைத் தீர்மானித்துக் கொண்டு பெருநாள் தொழுகைக்குப் புறப்படவேண்டும்.

சாப்பிட்டு விட்டுத்தான் செல்ல வேண்டுமா?


நோன்பு பெருநாள் தினத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உண்ணாமல்(தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ் பெருநாள் தொழுது விட்டு, தமது குர்பானிப் பிராணியை (அறுத்து அதிலிருந்து) முதலில் சாப்பிடுவார்கள்.
            அறிவிப்பவர்: புரைதா(ரலி); நூல்: தாரகுத்னீ

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் சாப்பிட்டுவிட்டுதான் செல்வார்கள் என்று வேறு பல ஹதீஸ்களிலும் நாம் காணமுடிகின்றது. ஆனால் ஹஜ் பெருநாள் அன்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுதுவிட்டுச் சாப்பிடுவார்கள் என்று வந்திருந்தாலும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுமுன் சாப்பிடுவதை அங்கீகரித்துள்ளதையும் புகாரியில் வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'யார் நமது தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோல் கொடுக்கிறாரோ அவரே உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். யார் தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறாரோ அவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்' என்று குறிப்பிட்டார்கள். அப்போது அபூபுர்தா இப்னு நியார்(ரலி), 'அல்லாஹ்வின் தூதரே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்துவிட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் எனது ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமையவேண்டும் என்றும் விரும்பி (அறுத்து)விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டுவிட்டேன் என்றார். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) 'அவர்கள் உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்' என்று கூறினார்கள். அப்போது அவர் 'அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக் குட்டி உள்ளது. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா?' என்று கேட்டார். 'ஆம்! இனி மேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விடையளித்தார்கள்.
                     அறிவிப்பவர்: பராஃ(ரலி); நூல்:புகாரி

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ஹஜ் பெருநாளில் தொழுதுவிட்டு வந்து சாப்பிட்டார்கள் என்ற அடிப்படையில் தொழுதுவிட்டு சாப்பிடலாம். சாப்பிட்டு விட்டு தொழச்சென்றால் அதுவும் தவறில்லை. காரணம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுகைக்கு முன்பு குர்பானிப் பிராணியை அறுத்ததைக் கண்டிக்கிறார்கள். ஆனால் அவர் சாப்பிட்டுவிட்டு வந்ததைக் கண்டிக்கவில்லை. எனவே, அவரது அச்செயலை அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்ற அடிப்படையில் ஒருவர் சாப்பிட்டு வருவதில் தவறில்லை.

ஒற்றைப்படை எண்ணிக்கையில் சாப்பிடுதல்

நோன்புப் பெருநாள் அன்று நபி(ஸல்) அவர்கள் காலை உணவாக பேரீத்தம் பழங்களை ஒற்றைப்படையாக உண்பார்கள். ஹஜ்ஜுப் பெருநாள் அன்று தொழுதுவிட்டு வந்த பின்னரே குர்பானி இறைச்சியிலிருந்து உண்பார்கள்.
              அறிவிப்பவர் : அனஸ்(ரலி);  நூல்: புகாரி (953)

பெருநாளின் மற்ற‌ கொண்டாட்டங்கள்:

புத்தாடை அணிதல்

தகுந்த ஆடை இல்லாத நிலையில் இருந்தால் இரவல் ஆடை வாங்கியாவது பெருநாள் கொண்டாட்டத்தில் கலந்துக் கொள்ளவேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

கடைவீதியில் விற்பனை செய்யப்பட்ட பட்டுக் குளிராடை ஒன்றை உமர் (ரலி) எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! இதை விலைக்கு வாங்கிக் கொள்ளுங்கள்; பெருநாளிலும், தூதுக் குழுவினரைச் சந்திக்கும் பொழுதும் நீங்கள் அலங்கரித்துக் கொள்ளலாம்' என்று கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'இது (மறுமைப்) பேறு அற்றவர்களின் ஆடையாகும்' எனக் கூறினார்கள். நூல்: புகாரி 948, 3054

ஆண்களுக்கு பட்டாடை மார்க்கத்தில் தடுக்கப்பட்டதால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் வாங்க மறுக்கின்றார்கள். ஆனால் இந்த ஹதீஸில் பெருநாளைக்குப் புது ஆடை அணியும் நடைமுறை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் இருந்திருக்கின்றது என்பதை இந்த ஹதீஸில் அறிய முடிகின்றது. அதே சமயம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மதீனாவில் வாழ்ந்த பத்தாண்டு காலத்தில் எந்தப் பெருநாளுக்கும் புத்தாடை வாங்கியதாக எந்தக் குறிப்பையும் நாம் பார்க்க முடியவில்லை.

பெருநாள் என்பதே சந்தோஷமாக இருக்கவேண்டிய நாள்தான் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஒவ்வொரு பெருநாளிலும் புது ஆடை வாங்கி அணிந்தால்தான் பெருநாள், இல்லையேல் அது பெருநாள் இல்லை என்ற நம்பிக்கை மக்களிடத்தில் பலமாக பதிந்துவிட்டது. அதனால் பல்லாயிரக்கணக்கான ரூபாயைக் கடன் வாங்கியாவது புத்தாடை வாங்கவேண்டும் என்று மக்கள் கஷ்டப்படுகிறார்கள். அதனால் வாங்க வசதியற்றவர்கள் கடன்பட்டு அவஸ்தைக்கு ஆளாகாமல், தன்னிடம் இருப்பதில் நல்ல ஆடையை அணிந்து கொண்டால் போதுமானது.

பெருநாளில் பொழுது போக்கு அம்சங்கள்

திரைப்படங்கள் போன்ற‌ மார்க்கத்தில் அனுமதிக்கப்படாதவற்றை பெருநாளன்று பொழுபோக்குகளாக அமைத்துக் கொள்ளக்கூடாது. வீர சாகச விளையாட்டுகள் போன்று விளையாடுவதை பெருநாளன்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அனுமதித்திருக்கின்றார்கள்.

ஒரு பெருநாளின்போது சூடான் நாட்டவர்கள் போர்க் கருவிகளையும் கேடயங்களையும் வைத்து விளையாடினார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாமாகவோ, அல்லது நான் கேட்டுக் கொண்டதற்காகவோ 'நீ பார்க்க ஆசைப்படுகிறாயா?' எனக் கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். அவர்கள் என்னைத் தமக்குப் பின் புறமாக என் கன்னம் அவர்களின் கன்னத்தில் படுமாறு நிற்க வைத்தனர். (பிறகு அவர்களை நோக்கி), 'அர்பிதாவின் மக்களே! விளையாட்டைத் தொடருங்கள்' என்று கூறினார்கள். நான் பார்த்துச் சளித்தபோது 'உனக்குப் போதுமா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்றேன். 'அப்படியானால் (உள்ளே) போ!' என்று கூறினார்கள்.
                   அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி); நூல்: புகாரி(950, 2907)

பெருநாள் தினத்தில் இது போன்ற வீர விளையாட்டுகளை ஊர்தோறும் ஏற்பாடு செய்வதன் மூலம் மக்கள் ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தடுக்க முடியும்.

அபூபக்ர்(ரலி)அவர்கள், ஆயிஷா(ரலி)அவர்களிடம் வந்தார்கள். அவர் அருகே இரண்டு சிறுமியர் 'தஃப்' அடித்துக் கொண்டிருந்தனர். அவ்விருவரையும் அபூபக்ர்(ரலி) அதட்டினார்கள். அப்போது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் 'அந்தச் சிறுமியர்களை (பாடுவ‌தற்கு) விட்டு விடுங்கள். ஏனெனில், ஒவ்வொரு சமுதாயத்திற்கும் பெருநாள் உண்டு' என்று கூறினார்கள்.
             அறிவிப்பவர்: உத்வா; நூல்: நஸாயீ (1575)

இந்த ஹதீஸில் 'தஃப்' (கொட்டு) என்று விளக்கமாக வருவதால், அந்தச் சிறுமிகள் இசைக் கருவிகளை வைத்துக் கொண்டு பாடவில்லை என்பதையும், அபூபக்ர்(ரலி) இந்தக் கொட்டையே இசைக் கருவிகள் போன்று கருதி கடுமையாகக் கண்டித்திருக்கின்றார்கள் என்பதும் நமக்குத் தெரிகின்றது. எனவே, மார்க்கத்தில் தடுக்கப்படாத இது போன்ற அனுமதிக்கப்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களைச் செயல்படுத்துவதின் மூலம் சினிமா, பாட்டுக் கச்சேரி போன்ற ஹராமான காரியங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்கலாம்.

நாமனைவரும் நபி(ஸல்)அவர்கள் காட்டித்தந்த‌ முறையில் பெருநாளைக் கொண்டாடி ஈருலக பயன்களையும் அடைந்துக் கொள்வோமாக!

(முற்றும்)


முதல் பகுதி மற்றும் இரண்டாவது பகுதிகளைப் பார்க்கவும்.
(இந்த தொகுப்புக்கு உதவியவர்களுக்கு இறைவன் அருள்புரிவானாக!)

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் (பகுதி 2)

தக்பீரின்போது கைகளை உயர்த்தவேண்டுமா?            

'தக்பீர்' என்ற சொல்லை 'தக்பீர் கட்டுதல்' என்ற அர்த்தத்தில் மக்கள் தவறாக விளங்கியிருப்பதால், ஒவ்வொரு தக்பீருக்கும் மக்கள் கைகளை அவிழ்த்துக் கட்டும் வழக்கம் இருந்து வருகின்றது. ஆனால் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவ்வாறு கைகளை உயர்த்தியதாக எந்த ஹதீசும் இல்லை.

'தஹ்லீல்' என்றால் 'லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுதல்' என்பதும், 'தஸ்பீஹ்' என்றால் 'சுப்ஹானல்லாஹ் என்று சொல்லுதல்' என்பதும், 'தஹ்மீத்' என்றால் 'அல்ஹம்துல்லாஹ் என்று சொல்லுதல்' என்பதுதான் பொருள்.

இதே போல் 'தக்பீர்' என்றால் 'அல்லாஹு அக்பர் என்று சொல்லுதல்' என்றுதான் பொருளாகும். உதாரணமாக, தொழுகைக்குப் பிறகு 33 தடவை தக்பீர் சொல்ல வேண்டும் என்றால், 33 தடவை கைகளை நெஞ்சின் மீது அவிழ்த்துக் கட்டுதல் என்று விளங்கமாட்டோம். இதுபோன்றுதான் 7+5 தக்பீர்கள் சொல்வார்கள் என்பதற்கு கைகளை அவிழ்த்துக் கட்டுதல் என்று பொருள் கொள்ளக்கூடாது. 7+5 தடவை 'அல்லாஹு அக்பர்' என்று கூற வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.  எனவே முதல் தக்பீரின் போது மட்டும் கைகளை உயர்த்தி நெஞ்சில் கட்டிக்கொள்ள வேண்டும். அதன் பிறகு கைகளைக் கட்டிய நிலையிலேயே (கைகளை உயர்த்தவோ, அவிழ்க்கவோ செய்யாமல்) 'அல்லாஹு அக்பர்' என ஏழு தடவை கூற வேண்டும். இரண்டாம் ரக்அத்திலும் கைகளைக் கட்டிய நிலையிலேயே ஐந்து தடவை 'அல்லாஹு அக்பர்' என்று கூறவேண்டும். மேலும் கைகளை உயர்த்தவோ, அவிழ்க்கவோ நபி வழியில் எந்த ஆதாரமும் இல்லை என்பதை நாம் புரிந்துக் கொள்ளவேண்டும்.

தக்பீர்களுக்கிடையில் திக்ருகள் சொல்லவேண்டுமா?

சில பகுதிகளில், பெருநாளுக்கென்று கூடுதலாக சொல்லப்படும் இந்தக் தக்பீர்களுக்கு இடையில் 'சுப்ஹானல்லாஹி வல்ஹம்துல்லாஹி வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ்' என்ற திக்ரை சொல்லவேண்டும் என்று கூறுகின்றார்கள். அவ்வாறு ஓதவேண்டும் என எந்த ஒரு திக்ரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. எனவே இடையில் எதையும் ஓதக் கூடாது.

எந்த சூராக்களை ஓதுவது சிறந்தது?

பெருநாள் தொழுகையில் தக்பீர்கள் கூறிய பின் சூரத்துல் ஃபாத்திஹா ஓதிவிட்டு ஓதக்கூடிய துணை சூராக்கள் குறித்து சில ஹதீஸ்கள் உள்ளன.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையில் 'ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா' (அத்தியாயம்: 87), 'ஹல் அதாக ஹதீசுல் காஷியா' (அத்தியாயம்: 88) ஆகிய அத்தியாயங்களை ஓதுபவர்களாக இருந்தனர். பெருநாளும், ஜும்ஆவும் ஒரே நாளில் வந்துவிட்டால் அவ்விரண்டிலுமே மேற்கண்ட அத்தியாயங்களை ஓதுவார்கள்.
        அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி); நூல்:முஸ்லிம்(1452)

அபூ வாகித் அல்லைஸி(ரலி)யிடம், நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஹஜ் பெருநாள் தொழுகையிலும், நோன்புப் பெருநாள் தொழுகையிலும் என்ன ஓதுவார்கள்? என்று உமர் இப்னு கத்தாப்(ரலி) அவர்கள் கேட்டபோது, அவ்விரு தொழுகைகளிலும் 'காஃப் வல் குர்ஆனில் மஜீத்' (அத்தியாயம்: 50) 'இக்தர பதிஸ் ஸாஅ' (அத்தியாயம்: 54) ஆகிய அத்தியாயங்களை ஓதுவார்கள் என்று பதிலளித்தார்கள்.
                         நூல்: முஸ்லிம் 1477

மேற்கண்ட ஹதீஸ்கள் என்னென்ன அத்தியாயங்களை பெருநாள் தொழுகையில் ஓதவேண்டும் என்பதைக் குறிப்பிடுகின்றன. இவ்வாறு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஓதிய சூராக்களை நபித்தோழர்கள் அறிவிப்பதிலிருந்து கிராஅத்தைச் சப்தமிட்டு ஓதவேண்டும் என்பதும் தெளிவாகின்றது.

பெருநாள் தொழுகைக்கு முன்/பின் சுன்னத் உண்டா?

சில ஊர்களில் பெருநாள் தொழுகைக்கு முன் சுன்னத் என்ற பெயரில் இரண்டு ரக்அத் தொழும் வழக்கம் இருந்து வருகின்றது. இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய, நபிவழிக்கு மாற்றமான நடைமுறையாகும்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெருநாளிலும் முஸல்லா என்ற திடலுக்குச் செல்வார்கள். அவர்கள் முதன் முதல் (பெருநாள்) தொழுகையைதான் துவக்குவார்கள்.
              அறிவிப்பவர்: அபூஸயீத் அல் குத்ரீ (ரலி); நூல்: புகாரி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளில் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்கள். அதற்கு முன்பும், பின்பும் அவர்கள் எதையும் தொழவில்லை.
                   அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்:புகாரி

முதலில் தொழுகையா? 'குத்பா' என்ற‌ உரையா?

ஜும்ஆ தொழுகையைப் போன்றே பெருநாள் தொழுகையும் இரண்டு ரக்அத்துகள் தொழுகையுட‌ன், சொற்பொழிவும் அடங்கியதாகும். ஜும்ஆவின்போது முதலில் இமாம் உரை நிகழ்த்திவிட்டுப் பின்னர் தொழுகை நடத்தவேண்டும். ஆனால் பெருநாள் தொழுகையில் முதலில் தொழுகை நடத்திவிட்டு அதன் பிறகு இமாம் உரை நிகழ்த்த வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் நான் பெருநாள் தொழுகையில் பங்கு எடுத்துள்ளேன். அவர்கள் அனைவரும் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுபவர்களாக இருந்தனர்.
            அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி); நூல்: புகாரி

நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள், அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) ஆகியோர் இரு பெருநாட்களிலும் உரை நிகழ்த்துவதற்கு முன்பு தொழுபவர்களாக இருந்தனர்.
                அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி); நூல்:புகாரி (962)

முதலில் தொழவேண்டும், அதன் பிறகுதான் உரை நிகழ்த்தவேண்டும் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறியலாம். ஆனால் இன்று சில‌ ஊர்களில் தொழுவதற்கு முன்பாக ஒரு அரை மணி நேர உரை முதலில் நடைபெறும். அதன் பிறகு தொழுகையும், அதற்குப் பிறகு இரண்டு உரைகளும் நடைபெறும். இது நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைக்கு மாற்றமான செயலாகும். எனவே, பெருநாள் தொழுகை முடிந்ததும் மக்களுக்கு இமாம் உரையாற்றுவதுதான் நபிவழியாகும்.

ஒரே உரையின் இடையில் இமாம் அமரவேண்டுமா?

இரு பெருநாட்களிலும் நிகழ்த்தப்படக்கூடிய உரையின்போது இடையில் உட்காருவதற்கு நபி வழியில் ஆதாரமில்லை. இரு உரைகளுக்கு இடையில் பிரித்துக் காட்டும் விதமாக அமர்வது நபிவழி (சுன்னத்) என்று இமாம் ஷாபி அறிவிப்பதாக ஒரு செய்தி கூறப்படுகின்றது. அந்தச் செய்தியை அறிவிக்கும் உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு உத்பா என்பவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்தவரல்ல என்பதால், இந்த ஹதீஸ் ஏற்கத்தக்க முடியாத வகை ஹதீஸ்களில் சார்ந்தவையாகிவிடுகிறது. இதுபோன்ற இன்னும் ஒரு பலகீனமான ஹதீஸும் உள்ளதே தவிர, ஆதாரப் பூர்வமான எந்த ஹதீஸும் இல்லாததால், ஜும்ஆவைப் போன்று இரண்டு உரைகள் ஆற்றக்கூடாது என்பதையும் நாம் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மிம்பர் (மேடை) உண்டா?


வழக்கமாக ஜும்ஆவின் இரு உரைகளும் பள்ளியில் உள்ள மிம்பரில் ஆற்றப்படும். ஆனால் பெருநாள் தொழுகையில் இமாம் தரையில் நின்றுதான் உரையாற்ற வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெருநாளன்று தரையில் நின்று உரையாற்றினார்கள். 
          அறிவிப்பவர்: அபூ சயீத் அல்குத்ரீ(ரலி); நூல்:இப்னு குஸைமா

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் (பெருநாள் தொழுகைக்கு) தயாராகி தொழுகையைத் துவக்கினார்கள். பிறகு மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் (உரையை) முடித்து, (அங்கிருந்து) நகர்ந்து பெண்கள் பகுதிக்குச் சென்று பிலால்(ரலி) உடைய கை மீது சாய்ந்துக் கொண்டு பெண்களுக்குப் போதனை செய்தார்கள். 
             அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி); நூல்: புகாரி(978)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தரையில் நின்று உரையாற்றியுள்ளதால் நாமும் பெருநாள் தொழுகையில் மிம்பர் பயன்படுத்தக்கூடாது.

பெண்களுக்குத் தனியாகப் பிரச்சாரம் செய்யவேண்டுமா?

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தாம் பேசியது பெண்களுக்குக் கேட்கவில்லை என்று கருதியதும் பெண்கள் பகுதிக்கு வந்தார்கள்.
           அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி); நூல்: புகாரி(98)

இமாம் பேசுவது பெண்களுக்கு எட்டிவிடுமானால் அந்த உரையே போதுமானதாகும். இல்லையேல் பெண்கள் பகுதிக்கு வந்து உரையாற்ற வேண்டும் என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம்.

பெருநாள் குத்பாவைக் கேட்பதன் அவசியம்

விரும்பினால் பெருநாள் உரையைக் கேட்கலாம்,  இல்லையேல் கேட்க வேண்டியதில்லை என்ற கருத்துப்பட வரக்கூடிய ஹதீஸ்கள் ஆதாரமற்றவையாகும்.

கன்னிப் பெண்கள், மாதவிடாய்ப் பெண்கள் உட்பட அனைவரும் வந்து இந்த பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதன் பெருநாள் உரையை கேட்பதற்காகதானே தவிர மைதானத்திற்கு வந்து பேசிக் கொண்டிருப்பதற்காக அல்ல! எனவே பெருநாள் உரையின் போது பேசிக் கொண்டிருக்காமல் நபித்தோழர்கள் எப்படி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் உரையை அமர்ந்து அமைதியாகக் கேட்டார்களோ அதுபோல் நாமும் (ஜும்ஆ உரயைப் போன்றே) அமைதியாக இமாமின் பெருநாள் உரையைக் கேட்க வேண்டும்.

பெருநாள் பிரார்த்தனை

பெருநாள் தொழுகையும், உரையும் முடிந்ததும் நாம் உடனே கலைந்து விடாமல் ஆண்களும், மாதவிடாய்ப் பெண்கள் உட்பட அனைத்துப் பெண்களும் திடலில் அவரவருக்குரிய இடத்தில் அமர்ந்து பிரார்த்தனை செய்யவேண்டும். திடலில் கேட்கும் துஆவிற்கு முக்கியத்துவமும் மகத்துவமும் உள்ளது.

பெருநாள் (தொழும் திடலுக்கு) நாங்கள் புறப்பட வேண்டும் எனவும், கூடாரத்திலுள்ள கன்னிப் பெண்களையும் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் புறப்படச் செய்ய வேண்டுமெனவும் நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம். பெண்கள் ஆண்களுக்குப் பின்னால் இருப்பார்கள். ஆண்களின் தக்பீருடன் அவர்களும் தக்பீர் கூறுவார்கள். ஆண்களின் துஆவுடன் அவர்களும் துஆச் செய்வார்கள். அந்த நாளின் பரக்கத்தையும், புனிதத்தையும் அவர்கள் எதிர்பார்ப்பார்கள்.
         அறிவிப்பவர்: உம்மு அதிய்யா(ரலி); நூல்:புகாரி(971)

இந்த ஹதீஸில் பெருநாளைக்கு என்று ஒரு பரக்கத்தும், புனிதமும் இருப்பதாக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அந்த பாக்கியத்தை நாம் இழந்து விடக்கூடாது என்பதற்காக பெருநாள் உரை முடிந்ததும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.

ஜும்ஆவும் பெருநாளும்

ஜும்ஆத் தொழுகை கடமை என்றாலும் கூட, ஜும்ஆ தினத்தில் பெருநாள் வந்தால் ஜும்ஆவிற்குப் பதிலாக பெருநாள் தொழுகையே போதுமானது என்று இஸ்லாம் கூறுகின்றது. ஆனால், அப்படி ஜும்ஆ தினத்தில் பெருநாள் வரும்போது, நாம் விரும்பினால் பெருநாள் தொழுகையைத் தொழுதுவிட்டு பிறகு ஜும்ஆத் தொழுகையையும் தொழுதுக் கொள்ளலாம். விரும்பினால் அன்றைய தினம் பெருநாள் தொழுதுவிட்டு ஜும்ஆத் தொழுகையை தொழாமலும் இருக்க‌லாம். நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இந்த இரண்டு விதமான நடைமுறைகளுக்கும் சான்றுகள் உள்ளன.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இரு பெருநாள் தொழுகையிலும், ஜும்ஆவிலும் 'ஸப்பி ஹிஸ்ம ரப்பிகல் அஃலா' என்ற அத்தியாயத்தையும், 'ஹல் அதாக ஹதீஸுல் காஷியா' என்ற அத்தியாயத்தையும் ஓதுவார்கள். ஒரே நாளில் பெருநாளும், ஜும்ஆவும் வந்துவிட்டால் இரு தொழுகைகளிலும் அந்த இரு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். 
      அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர்(ரலி); நூல்:முஸ்லிம்(1452)

இந்த ஹதீஸிலிருந்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒரே நாளில் வந்த‌ பெருநாள் தொழுகையையும், ஜும்ஆத் தொழுகையையும் தொழுது இருக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ள முடிகிறது.

'இன்றைய தினம் உங்களுக்கு இரண்டு பெருநாட்கள் வந்துள்ளன. யார் இந்தப் பெருநாள் தொழுகையைத் தொழுகிறாரோ அவர் ஜும்ஆத் தொழாமல் இருக்கலாம். ஆனால் நாம் ஜும்ஆத் தொழுகையை நடத்துவோம்' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள். 
                அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி);நூல்:அபூதாவூத்(907)

பெருநாள் தொழுதவர்கள் அன்றைய தினம் ஜும்ஆ தொழாமல் இருக்க அனுமதி வழங்கியுள்ளதால் இந்த அனுமதியையும் நாம் நடைமுறைப்படுத்தலாம்.

தொடரும்... இன்ஷா அல்லாஹ்!

முதல் பகுதி மற்றும் மூன்றாவது பகுதிகளைப் பார்க்கவும்.


Sunday, 14 November 2010

தியாகத் திருநாள் நல்வாழ்த்துக்கள்! (2010)


இறைக் கட்டளையேற்று, பல்லாண்டு கேட்டுப்பெற்ற தன் இனிய மகனை இறைவனுக்காக பலியிட தயாரான‌, அந்த மாபெரும் தியாக சரித்திரம் படைத்தார்கள் இப்ராஹீம் நபியவர்கள்!  

அவர்களின் இறையச்சத்தை சோதிக்கவே இந்த பரீட்சை, படைத்த இரட்சக‌னுக்கு நரபலி நோக்கமில்லை என்பதை உணர்த்தி, அந்த‌ தியாகத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக‌ ஒரு ஆட்டை குர்பானி கொடுக்க
ச் செய்தான் இறைவன்! ஹஜ் கிரியைகளில் ஒவ்வொன்றும் அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும், மாஷா அல்லாஹ்!

இறைவனுக்காக செய்யும் தியாகத்தில் இறைத்தூதர் இப்ராஹீம் நபி(அலை)அவர்களைப் போல் முடியாவிட்டாலும், நம்மால் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு இறைக் கட்டளைகளுக்கு அடிபணிந்து, இறைத்தூதர் காட்டிய வழியில் மட்டும் நடந்து, தன்னலமற்ற உணர்வோடும், சகிப்புத் தன்மையோடும் உலக மாந்தரில் உயர்வானவர்களாய் வாழ, இத்தியாக திருநாளாம் இந்த ஹஜ்ஜுப் பெருநாளிலே... ஏற்கனவே கொண்டுள்ள நம் நல்ல‌ எண்ணங்களைப் புதுப்பித்து வாழ்ந்து, மறுமையிலும் இறைவனின் அருளைப் பெறுவோமாக!

இந்த வருடம் ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்ற உலகத்தின் என் உறவுகள் அத்தனை பேருக்கும் அல்லாஹ்தஆலா ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கியருள்வானாக!

இதுவரை ஹஜ் செய்ய வாய்ப்பில்லாமல் போன (என்னைப் போன்ற :( )அனைவ‌ருக்கும் வெகுவிரைவில் அந்த பாக்கியம் கிடைக்கவும் வல்ல இறைவனிடம் கண்ணீரோடு இறைஞ்சி நிற்கிறேன். அதேபோல் அனைவரும் இந்நன்னாளில் பிரார்த்திக்க வேண்டுகிறேன். அல்லாஹ்தஆலா நம் பிரார்த்தனைகளை கருணையோடு ஏற்றுக்கொள்வானாக!

பெருநாள் அடைவருஷத்தில் இரண்டு முறை வரக்கூடிய நோன்புப் பெருநாள் மற்றும் ஹஜ் பெருநாள் ஆகிய இரண்டு பெருநாட்களுக்கும் இந்த அடையை தவறாமல் செய்வது வழக்கம். அதனால் இதன் பெயரே 'பெருநாள் அடை' என்றாகிவிட்டது.

Thursday, 11 November 2010

இந்திய மருந்துகள் கொண்டுவர‌ ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தடை!
அமீரகத்தின் ஷார்ஜாவில் சமீபத்தில் இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் மருந்து கொண்டு வந்து போது ஷார்ஜா விமான நிலைய காவல்துறையிடம் மாட்டிக் கொண்டார்.

இத்தனைக்கும் அவர் சில மருந்துகளை மட்டுமே தன்னுடைய நண்பருக்காக குறைந்த அளவிலேயே கொண்டு வந்ததபோதிலும் அந்த மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்ட மருந்துகள் என்ற காரணத்திற்காக கஸ்டம்ஸ் அதிகாரி, பயணியை போதை பொருள் (தடை செய்யப்பட்ட மருந்துகள்) கொண்டு வந்ததற்காக காவல்துறையிடம் ஒப்படைக்க விஷயம் விபரீதமாகிப் போனது.

அவர் கொண்டு வந்த மருந்துக்கான மருந்து சீட்டின் நகல் (Doctor’s prescription) இருந்தபோதிலும் ஒரு நாள், ஒரு பகல் காவல் நிலையத்தில் வைத்து விசாரிக்கப்பட்டுள்ளார்.

தாயகத்திலிருந்து அமீரகத்திற்கு வந்தவருடைய தகவல் தெரியாமல் அவருடைய உறவினர்களும், நண்பர்களும் அவரின் குடும்பத்தினரும் குழப்பத்திலிருக்க, பிறகு விசாரணைக்காக அழைத்து செல்லப்படிருக்கிறார் என்ற செய்தி தெரிந்தவுடன், அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகு பலகட்ட விசாரணைக்கு பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். இருந்தபோதிலும் பயணியின் கடவுச்சீட்டை (Passport) காவல்துறையினர் தரவில்லை.

மருந்துச்சீட்டை இந்தியன் கவுன்சலேட் அட்டெஸ்ட் செய்தவுடன்தான் தர முடியும் என்று சொல்லிவிட, கவுன்சலேட் அதிகாரிகள் அந்த மருந்துச் சீட்டு இந்திய உள்துறை அமைச்சகத்தால் பரிசீலிக்கப்பட்டு சர்டிஃபிகேட் கொடுக்கப்பட்ட பின்னரே அட்டெஸ்ட் செய்து தர முடியும் என்று தெரிவித்தனர். இப்படி சாதாரண மருந்தைக் கொண்டு வந்ததற்காக பலவாறாக‌ அலைக்கழிக்கப்பட்டு, பிறகு ஒருவழியாக விடுவிக்கப்பட்டார் அந்த அப்பாவி.

இதனை தொடர்ந்து மருந்து சீட்டை உள்துறை அமைச்சகத்திடமிருந்து பரிசீலிக்கப்பட்டு சர்டிஃபிகேட் வாங்கின பிறகு வெளிநாட்டிற்கு மருந்துகளைக்  கொண்டு வந்தால் பிரச்சனை இருக்காது என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.

இந்த விவரம், இந்தியாவின் மாபெரும் நகரம் ஒன்றான சென்னையில் இருப்பவருக்கே பெரிய வேலையாக இருக்கும் பட்சத்தில் கிராமங்களில் இருந்து வெளிநாட்டிற்கு, குறிப்பாக அமீரகத்திற்கு வருவோர் எப்படி கவனமாக இருக்க முடியும் என்பது தெரியவில்லை! இருந்தாலும், மருந்துப் பொருட்களை கொண்டுவர விரும்புவோர் அதற்குரிய ஃபார்மாலிட்டிகளை முன்கூட்டியே செய்து விடுவது நல்லது.

அபராதம், சிறைத் தண்டனை போன்ற பெரிய பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் அமீரகத்தில் தடை செய்யப்பட்ட மருந்துகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேவையில்லாத மருந்துகள் அதாவது காய்ச்சல், வயிற்று போக்கு மருந்துகள், குறிப்பாக இருமல்-ஜலதோஷம் தொடர்பான மருந்துகள், pain killer மருந்துகள் வாங்கி வருவதை தவிர்த்திடுங்கள்.

ACTIFED compound linctus, ACTIFED DM, ADOL cold, ADOL COLD HOT THERAPY போன்ற மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன என்பது அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருக்கிறது.

இந்தியாவில் அதிக மருந்துகள் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட போதிலும் சரியாக கவனிக்காததால் அந்த மருந்துகள் இன்றும் விற்பனையில் உள்ளன(?!) என்னென்ன மருந்துகள் அமீரகத்தில் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை அமீரகத்தின் அமெரிக்கத் தூதரகம் (American embassy of UAE) வெளியிட்டுள்ளது.

தகவல்- அபு நிஹான்

(இதை மெயிலில் அனுப்பியவருக்கு நன்றி!)

Friday, 5 November 2010

ஒப்ப‌ந்தத்தில் பணிந்துப்போனது வெற்றியா? தோல்வியா? (ஹுதைபிய்யா தொடர் 6)

ஹுதைபிய்யா தொடரின் முதல் பகுதிஇரண்டாவது பகுதி, மூன்றாவது பகுதி,நான்காவது பகுதி, மற்றும் ஐந்தாவது பகுதிகளைப் பார்க்கவும்.


ஒப்பந்தத்தின் ஒவ்வொரு நிபந்தனைகளிலும் நபி(ஸல்)அவர்கள் மிகவும் இறங்கிப் போகிறார்கள். அண்ணல் நபி(ஸ‌ல்)அவர்களின் சமாதான சொல்லுக்கு இணங்கவேண்டும் என்பதற்காகவே, மக்கா நிராகரிப்பாளர்களின் கெளரவப் பிரச்சனை காரணமாக விதிக்கப்பட்ட‌ நிபந்தனைகளில் உள்ள‌ நியாயமற்ற மூன்று நிபந்தனைகளையும் திருப்தியின்றியே ஏற்றுக்கொள்கிறார்கள் நபித்தோழர்கள்! நீண்ட காலப் பயிற்சியின் பலனாக, இறைவனுக்கும் இறைத் தூதருக்கும் முற்றிலும் கட்டுப்பட்டு வாழும் மனப்பக்குவத்தை அடைந்திருந்த‌ நபித்தோழர்கள், புகழ்பெற்ற ஹுதைபிய்யா உடன்படிக்கையைச் செய்துக்கொண்டு அந்த ஆண்டு உம்ரா செய்யாமலேயே நபி(ஸல்)அவர்களோடு மதீனா திரும்புகிறார்கள்.

Thursday, 4 November 2010

அநியாயமான‌ நிபந்தனைகளும் அண்ணலின் பணிவும்(ஹுதைபிய்யா தொடர் 5)

ஹுதைபிய்யா தொடரின் முதல் பகுதி, இரண்டாவது பகுதி, மூன்றாவது பகுதி, நான்காவது பகுதிகளைப் பார்க்கவும்.


அண்ணல் நபி(ஸல்)அவர்கள் ஒப்பந்தத்திற்காக‌ முயற்சிக்கின்ற அந்த வேளை, 'மக்கா எந்த வகையிலும் முஸ்லிம்களை ஏற்கும் நிலையில் இல்லை' என்ற வகையில் இம்முயற்சியைக் குழப்பிவிடும் நோக்கம் கொண்டதாக நிராகரிப்பவர்களின் நடவடிக்கைகள் அமைகின்றன. நபி(ஸல்)அவர்களோடு பேசுவதற்கு பொருத்தமற்றவர்களை அவர்களிடம் அனுப்பியவர்கள், இப்போது முஸ்லிம்களுக்கு வெளிப்படையாகவே பாதகமாகத் தோன்றக்கூடிய, அவர்களை ஆத்திரமூட்டக்கூடிய‌ நிபந்தனைகளை உடன்படிக்கையில் எழுதச் சொல்கிறார்கள். ஆரம்பிக்கும்போதே தகராறுக்காக‌ மறுத்துப் பேசுகிறார்கள் நிராகரிப்பளர்கள்.

Wednesday, 3 November 2010

எளிதாக‌ வழியறியும் தேனீக்கள்!


மனிதன் மற்ற எல்லாவற்றையும் விட தன்னை மிகப் பெரிதாக நினைக்கிறான். ஆனால் தன்னை விட மிகத் தாழ்ந்த உயிரினமாக கருதப்படும் பல உயிரினங்களுக்கு இறைவன் கொடுத்திருக்கும் அபரிதமான ஆற்றல்களை நாம் உணர்ந்தால்...  சுப்ஹானல்லாஹ்! அந்த இறைவனின் வல்லமையை சொல்லத்தான் வார்த்தைகளுண்டோ..?

உலகில் இதுவரை கண்டறியப்பட்ட உயிரினங்களில் ஏறக்குறைய பாதிக்கு மேல் கண்டறியப்பட்ட இனம், பூச்சி இனமாம். அவற்றில் தேனீக்கள் போன்று மனிதனுக்கு நன்மைப் தர‌க்கூடிய ஈ இனம் வேறு எதுவும் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். அந்த தேனீக்களையும் அத பலன்களையும் பற்றி மிகப் பெரிய கட்டுரையே எழுதலாம்! மேலும் திருக்குர்ஆனில் "தேனீ" என்றொரு அத்தியாயத்தையே இறைவன் இறக்கி வைத்திருப்பது நாம் அறிந்ததே. அந்த அத்தியாயத்தில், தேனீக்கள் தமது பாதையை எளிதாகக் கண்டு பிடித்து விடுகின்றன என்று திருக்குர்ஆன் கூறுவதை, இன்றைய அறிவியல் அப்படியே மெய்ப்பித்துள்ளது!

சில வகைத் தேனீக்கள் தங்கள் உணவிற்காக செல்லும் தொலைவை நாம் அறிந்தால் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாகதான் இருக்கும். ஏனென்றால் தேனீக்கள் ஏறக்குறைய‌ ஒரு லட்சம் கி.மீ. வரை பயணித்து இரண்டு மில்லியன் பூக்களிலிருந்து குளுக்கோஸை எடுத்துக் கொண்டு, பிறகு சரியாக தங்கள் கூடுகளுக்கு திரும்புகின்றன என்று சொன்னால்......

இறைவா, உன்னுடைய அற்புதம்தான் என்ன! இவ்வளவு தொலைவான தூரங்களிலிருந்து மிகச் சரியாக கூடு திரும்பும் இந்த ஆற்றல் எவ்வாறு இவற்றிற்கு சாத்தியம் ஆகிறது? இதுகுறித்து குர்ஆன் கூறுவதைப் பாருங்கள்:

மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!" என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.
(திருக்குர்ஆன் 16:68,69)

தேனீக்கள் சரியான பாதையில் திரும்பி,  தங்கள் கூடுகளுக்கு வர எல்லாம் வல்ல இறைவன் பொறுப்பேற்றுக் கொண்டான் என்பதை மேற்கண்ட இறைவசனம் தெளிவுபடுத்துகின்றது. இதில் சிந்திக்கக் கூடிய மக்களுக்கு நிச்சயமாக நிறைய அத்தாட்சிகளை ஆக்கியிருக்கின்றான் வல்ல‌ இறைவன்!

நேற்று (2 நவம்பர் 2010) தினமலர் சென்னை பதிப்பில் வந்த செய்தியில் இது குறித்து லண்டனில் வெளியான‌ ஆய்வறிக்கையையும், சுமார் 1400 வருடங்களுக்கு முன்னர் கூறிய‌ திருக்குர்ஆனின் இறைவசன‌த்திற்கு அது ஒத்துப் போவதையும் பாருங்கள்!

லண்டன் : சிக்கலான கணிதத்திற்கு, கம்ப்யூட்டரை விட தேனீக்கள் தீர்வளித்துள்ளதாக, பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளன.பிரிட்டனை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் தேனீக்கள் போக்குவரத்து குறித்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டனர்.

அதில், விற்பனை பிரதிநிதியின் சிக்கலான போக்குவரத்து வழிக்கு, கம்ப்யூட்டரை விட தேனீக்கள் எளிதாக தீர்வளித்துள்ளன என்று தெரிவித்துள்ளனர்.பல்வேறு இடங்களுக்கு விற்பனை பிரதிநிதிகள் செல்வதற்கான வழிகள் குறித்து, கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்யப்பட்டது. அதன் மூலம், அதிக இடங்களுக்கு, குறுகிய நேரத்தில், எளிதாக சென்று சேர்வதற்கான குறுக்கு வழிகளை கம்ப்யூட்டர் உருவாக்கி கொடுத்தது. ஆனால், பிரிட்டன் விஞ்ஞானிகள் நடத்திய தேனீக்கள் குறித்த ஆய்வில், கம்ப்யூட்டர் உருவாக்கிய வழிகளை விட, அதிக வழிகளை தேனீக்கள் பயன்படுத்தியது தெரிய வந்தது.தேனீக்கள் நாள்தோறும், தேனை சேகரிப்பதற்காக, பூக்களைத் தேடி அதிக தூரம் பயணம் செய்கிறது. பறப்பதற்காக, அதிக சக்தியை செலவழிக்கும் தேனீ, குறுகிய நேரத்தில், அதிக பூக்களுக்கு செல்கிறது. இதற்காக, குறுக்கு வழிகளை அதிகமாக பயன்படுத்துவது தெரிய வந்தது.இதுகுறித்து பிரிட்டனை சேர்ந்த ராயல் ஹாலோவே பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

அந்த ஆய்வறிக்கையில் அவர்கள் கூறியுள்ளதாவது: தேனைத் தேடி, தேனீக்கள் அதிக பயணம் மேற்கொள்கின்றன. ஆனால், அவை அதிக குறுக்கு வழிகளை பயன்படுத்துகின்றன. இதற்காக, கம்ப்யூட்டரின் உதவியுடன், செயற்கை பூக்களை கொண்டு, தேனீக்களின் பயண வழியை கண்காணித்தோம். அதில், தேனீக்கள் மிகக்குறைவான நேரத்தில், வெவ்வேறு பூக்களுக்கு செல்வதற்கு அதிக குறுக்கு வழிகளை பயன்படுத்துவதை கண்டறிந்தோம்.அந்த வழிகள், விற்பனை பிரதிநிதி செல்வதற்காக, கம்ப்யூட்டர் உருவாக்கி கொடுத்த வழிகளை விட, அதிக வழிகளாகும். இதன் மூலம், கம்ப்யூட்டரின் அறிவை, மிகச்சிறிய தேனீயின் மூளை மிஞ்சியுள்ளது. இவ்வாறு விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.Tuesday, 2 November 2010

தொடர்ச்சியாக வந்த தூதுவர்கள் (ஹுதைபிய்யா தொடர் 4)

ஹுதைபிய்யா தொடரின் முதல் பகுதி, இரண்டாவது பகுதி, மூன்றாவது பகுதி, ஐந்தாவது பகுதிகளைப் பார்க்கவும்.

ஹுதைபிய்யா பள்ளத்தாக்கு

உம்ரா செய்வதற்காக வந்த நபி(ஸல்)அவர்கள் ஹுதைபிய்யா பள்ளத்தாக்கின் எல்லையில் முகாமிட்ட பிறகு, குறைஷிகளின் சார்பில் ஒவ்வொருவராக ஐந்து தூதுவர்கள் நபி(ஸல்)அவர்களிடத்தில் பேச்சு வார்த்தை நடத்த வருகிறார்கள். அந்த‌ தூதுவர்களில் நேர்மையான சிலர் இருந்தாலும் குறைஷிகள், நபி(ஸல்)அவர்களோடு பேசுவதற்கு பொருத்தமற்ற சிலரையும் அவர்களிடம் தூதுவர்களாக அனுப்புகிறார்கள். ஆனால் நபி(ஸல்)அவர்கள் மீதும் அவர்களின் தோழர்கள் மீதும் மோசமான எண்ணம் கொண்டிருந்தவர்கள் கூட, நபி(ஸல்)அவர்களோடு பேசிவிட்டு திரும்பும்போது அவர்கள் ஏற்கனவே கொண்டிருந்த‌ எண்ணங்களில் தடுமாறியவர்களாகவும், அண்ணல் நபி(ஸல்)அவர்களைக் கண்டு ஆச்சரியமுற்றவர்களாகவுமே திரும்பினார்கள்.

Monday, 1 November 2010

ஒட்டகம் நகர மறுத்தது ஓர் இறை ஏற்பாடு! (ஹுதைபிய்யா தொடர் 3)

ஹுதைபிய்யா தொடரின் முதல் பகுதியைக் காண இங்கே அழுத்தவும். இரண்டாவது பகுதியைக் காண இங்கே அழுத்தவும்.
நான்காவது பகுதியைக் காண இங்கே அழுத்தவும்.
ஐந்தாவது பகுதியைக் காண இங்கே அழுத்தவும்.


இவ்வாறு நடைப்பெற்ற "பைஅத்துர் ரிள்வான்" என்ற‌ இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சிக்கு பிறகு, நபி(ஸல்)அவர்கள் மக்காவை நோக்கி பயணத்தைத் தொடர்கிறார்கள். இறைத் தூதரையும் அவர்களின் தோழரையும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லாத மக்காவிலிருந்த நிராகரிப்பாளர்களுக்கு இருந்த ஒரே வழி யுத்தம் செய்வது மட்டுமே. எனவே, இடையிலேயே இறைத்தூதரையும் முஸ்லிம்களையும் தடுத்து நிறுத்திப் போராட மக்காவாசிகள் காலித் பின் வலீதின் கீழ் ஒரு படைப்பிரிவை அனுப்புகிறார்கள்.

அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!