Saturday, 24 December 2011

பவர்ஃபுல் ஆன்டி கேன்சர் - "காட்டு ஆத்தா"!

இன்றைய உலகில் எவ்வளவோ நவீன மருத்துவ முறைகள் இருந்தாலும், அவற்றையெல்லாம் மிஞ்சுமளவுக்கு புதுப்புது வகை நோய்களும் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படிப்பட்ட நோய்களில் 'உயிர்க்கொல்லி நோய்' என அஞ்சப்படும் சில வகைகளில் எல்லா தரப்பு மக்களிடையேயும், வயது வித்தியாசமின்றி பரவி வருவது புற்றுநோயே! ஆரம்ப கட்ட‌த்திலேயே கண்டுபிடித்து தகுந்த சிகிச்சையை உடனுக்குடன் அளித்தால் ஓரளவுக்கு காப்பாற்றிவிடலாம் என்பது ஆறுதலான விஷயமாக இருந்தாலும், அவ்வாறு தப்பிப் பிழைத்த ஒருசிலரின் நிகழ்வுகளைத் தவிர பல பேருக்கு உயிரைப் பறித்துவிடும் அளவுக்குதான் இதன் தாக்கம் அதிகமாக உள்ள‌து. இதனால் மக்கள் மத்தியில் புற்றுநோய் பற்றிய பயம் என்றுமே மனதில் குடிகொண்டுள்ளது. மேலும் மருத்துவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் இந்த நோய் கடுமையான ஒரு சவாலாகவும் உள்ளது. ஒரு குறிப்பிட்ட நிலைக்குப் பிறகு அதற்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பயனற்று போய்விடுவதால் மருத்துவர்களால் ஒன்றும் செய்யமுடியாமல் கை விரித்து விடுகிறார்கள்.

பல‌ வகைகளில் உருவாகி மக்களை ஒருகை பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நோயானது இரத்தப் புற்றுநோய், தோல் புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என ஆரம்பித்து மனித உடம்பில் எதையும் விட்டு வைக்காமல் ஈரல், நுரையீரல், கணையம், சிறுநீரகம், மூளை, வாய்/பல் ஈறுகள், வயிறு(குடல்), ப்ரெஸ்ட், கருப்பை, கருப்பை வாய், உணவுக்குழாய், புரோஸ்டேட் என அநேக உறுப்புகளையும் தாக்குவதாக உள்ள‌து. இவற்றில் சிலவகை புற்றுநோய் முன் அறிகுறியே இல்லாமல் முற்றிவிட்ட‌ நிலையில் தாக்குவதும் உண்டு. அதனால் எந்த மருந்து புற்றுநோய்க்கென அறிமுகப்படுத்தப்பட்டாலும் அதை மனித நேயமுள்ள அனைவரும் உடனுக்குடன் பகிர்ந்துக் கொண்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது இன்றைய காலக்கட்டத்தில் மிக அவசியமான ஒன்றாகும்.


Tuesday, 6 December 2011

பாபரி மஸ்ஜித் உண்மை வரலாறு! ("டிசம்பர் 6")

பிரச்சினை உருவான விதம்1949 ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸ்லிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.

Friday, 11 November 2011

ஹகீம் பொரியல் (காட்டுக்கறி)

தற்போது எல்லா இஸ்லாமிய இல்லங்களிலும் குர்பானி கறி பகிரப்பட்டு பலவிதமான சமையல்களும் செய்த வண்ணமிருக்கும் இந்த நேரத்தில், பீஃபில் செய்யும் இந்த ரெசிபி உதவியாக இருக்கலாம். இது மிகவும் வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். எந்தவித மசாலா பொடிகளும் கிடையாது. மசாலா வாசனை இல்லாமல் சமைக்க விரும்பும் நேரங்களில்கூட இதுபோன்று செய்யலாம். ரொம்ப சிம்பிளும்கூட!
பெயர்க் காரணம்: ஹகீம் = டாக்டர் (வைத்தியர்). மசாலா இன்றி செய்வதற்கு ஏதோ ஒரு காலத்தில் வைத்தியர்கள் சொல்லித்தந்த முறை என்பதால் இதற்கு 'ஹகீம் பொரியல்' என்ற இந்த பெயர் வந்ததாக சொல்வார்கள். அதுபோல் இந்த முறையில் செய்வது 4, 5 நாட்களுக்கு வீணாகாமல் இருக்கும் என்பதற்காக‌, காடுகளில் வேட்டையாட செல்பவர்கள் இதுபோன்று எடுத்துச் செல்வார்கள் என்பதால் 'காட்டுக்கறி' என்றும் சொல்வார்கள்.

Saturday, 5 November 2011

இனிய ஹஜ் பெருநாள் நல்வாழ்த்துக்கள்! (2011)


இறைக் கட்டளையேற்று, பல்லாண்டு கேட்டுப்பெற்ற தன் இனிய மகனை இறைவனுக்காக பலியிட தயாரான‌, அந்த மாபெரும் தியாக சரித்திரம் படைத்தார்கள் இப்ராஹீம் நபியவர்கள்! அவர்களின் இறையச்சத்தை சோதிக்கவே இந்த பரீட்சை, படைத்த இரட்சக‌னுக்கு நரபலி நோக்கமில்லை என்பதை உணர்த்தி, அந்த‌ தியாகத்தை ஏற்றுக் கொள்ளும் விதமாக‌ ஒரு ஆட்டை குர்பானி கொடுக்கச் செய்தான் இறைவன்! ஹஜ் கிரியைகளில் ஒவ்வொன்றும் அவர்களின் வாழ்வை பிரதிபலிக்கும், மாஷா அல்லாஹ்!

Saturday, 29 October 2011

அரஃபா நோன்பு


ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தவிர, வருடத்தின் மற்ற சில நாட்களில் நோன்பு வைப்பதும் இஸ்லாத்தில் வரவேற்கத்தக்க, வலியுறுத்தப்பட்ட வணக்கங்களாக உள்ளன. அவற்றில் மிக முக்கியமான நோன்புதான் 'அரஃபா நோன்பு' என்று சொல்லக்கூடிய நோன்பாகும்.

Monday, 17 October 2011

தமிழ்மணத்திற்கு பொதுவில் ஓர் அறிவிப்பு!


நம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக!

தமிழ்மணத்தின் பார்வைக்காக மட்டுமே இந்தப் பதிவு தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பட்டையும் தற்காலிகமாகவே நீக்கப்படாமல் உள்ளது.

கட் பண்ணிடுவோமா? வேண்டாமா? பொறுத்திருந்து முடிவு செய்வோம்.

Saturday, 8 October 2011

மரணத்தை நோக்கும் மலர்கள்!

குளிர் பிரதேசமான இங்கு(ஃபிரான்ஸில்), கோடை காலம்தான் "வசந்த காலம்" என போற்றப்படும். வசந்தமான அந்த கோடை காலத்தில் நான்கைந்து மாதங்களாக வீட்டைச்சுற்றி முகம் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த மலர்கள், குளிர்காலத்தின் வருகையால் மரணத்தை எதிர்நோக்கியுள்ளன. குளிர் காற்றிலும், பனிப் பொழிவிலும் வாடி, வதங்கி இறக்கும் முன் மாநகராட்சி ஆட்களே முன்கூட்டி வந்து அவற்றையெல்லாம் பிடுங்கிவிடுவார்கள். (கருணைக் கொலையோ, என்னவோ..?) அதனால் அவர்களை நாம் முந்திக் கொள்வோம் என்று நம் கேமராவுக்குள் அந்த மலர்களைக் குடியேற்றி, இணையத்தில் வாழவைக்க எடுத்த முயற்சி இது :)

இறைவனின் படைப்பில்தான் எத்தனை, எத்தனை கோடிகள்! அந்த கோடியில் ஒன்றான மலரில்தான் எத்தனை, எத்தனை வண்ணங்கள், வகைகள்!! அதன் நறுமணத்திலும் பலப்பல விதங்கள்!!! இவற்றில் நீங்கள் ஏற்கனவே பார்த்த வகைகளும் இருக்கலாம். நீங்கள் பார்க்காதவைகளும் இருக்கலாம். இறைவன் ஏற்படுத்தித் தந்துள்ள‌ இவற்றின் அழகை நாம் மட்டும் ரசிக்காமல் மற்றவர்களுடனும் பகிர்ந்துக் கொண்டால், அவற்றைப் படைத்த அந்த‌ ஏக வல்லோனை புகழ மேலும் ஒரு வாய்ப்பல்லவா? :) நீங்களும் பாருங்கள்!


Friday, 16 September 2011

ஸ்டார் ஒயர் கூடை பின்னுவது எப்படி? (பாகம் - 4)

முதல் பாகத்தைக் காண 
இரண்டாவது பாகத்தைக் காண
மூன்றாவது பாகத்தைக் காண


ஸ்டார் ஒயர் கூடை பின்னும் முறைகள் முழுவதும் முதல் 3 பாகங்களில் படங்களுடன் விளக்கப்பட்டுள்ளது. மேலே கொடுத்திருக்கும் இணைப்புகளை க்ளிக் பண்ணிப் பார்க்கவும். இப்போது கூடைக்கான 'கைப்பிடி' பின்னும் முறையை இந்த 4 ஆவது பாகத்திலே காணலாம்! இதில் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவு விளக்கமாக கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஸ்டெப்பையும் கவனமாகவும் பொறுமையாகவும் படிக்கவும். அதற்கு மேலும் புரியாதவர்கள் தாராளமாக பின்னூட்டத்தில் கேட்கலாம் :)

Thursday, 1 September 2011

ஷவ்வால் மாத (ஆறு) நோன்புகள்

ரமலான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரக்கூடிய மாதமான‌ ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகிறோம். இந்த ஷவ்வால் மாதத்தில் உபரியாக ஆறு நோன்புகள் நோற்பது நபி(ஸல்)அவர்கள் காட்டிய வழிமுறைகளில் ஒன்றாகும். இந்த ஆறு நோன்புகளையும் நோற்பதினால் வருடமெல்லாம் நோன்பு நோற்ற நன்மை நமக்கு கிடைக்கும். ஆனால், நம்மில் அநேகமானோர் இந்த ஷவ்வால் மாத ஆறு நோன்பைப் பற்றி முழுமையாக அறியாத நிலையில் இருக்கிறோம். இன்னும் சிலர் இந்த‌ நோன்பின் சிறப்பை அறிந்தும் அதைக் கடைப்பிடிப்பதில் அலட்சியம் செய்கின்றனர். இன்னும் சிலரோ அறியாமையால், பெண்கள் விடுபட்ட நோன்பை நிறைவேற்றுவதற்காக‌ இது அவர்களுக்கு மட்டும் உரியது என்று கருதுகின்றனர்.

Monday, 29 August 2011

பட்டர் பிஸ்கட்சுவையும் மணமும் கொண்ட‌ இந்த பட்டர் பிஸ்கட்டை மாலை நேர ஸ்நேக்ஸாக குழந்தைகளுக்கு கொடுக்கலாம். விசேஷ காலங்களில் செய்யப்படும் பலகாரங்களில் ஒன்றாகவும் செய்யலாம். வெளியூர் செல்லும்போதுகூட இதை செய்து எடுத்துச்செல்ல‌லாம்.

Saturday, 27 August 2011

பெருநாள் தொழுகையின் சட்டங்கள் (பகுதி 1, 2, 3)

இஸ்லாமிய மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்டுள்ள‌ வருடத்தின் இரண்டு பெருநாட்களும் மிகவும் சிறப்பு வாய்ந்தவையாகும். அண்ணல் நபி(ஸல்) அவர்களும் இந்த நாட்களைப் பற்றி சிலாகித்துக் கூறியுள்ளார்கள்.

"நபி(ஸல்)அவர்கள் மதீனா நகருக்கு வருகைத் தந்தபோது மதீனாவாழ் மக்களுக்கு இரண்டு (திரு)நாட்கள் இருந்தன. அவ்விரண்டு நாட்களிலே மக்கள் விளையாட்டு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவார்கள். அப்போது நபி(ஸல்)அவர்கள் "இவ்விரண்டு நாட்களைவிடச் சிறந்த (இரண்டு) நாட்களை உங்களுக்கு இறைவன் ஏற்படுத்தியுள்ளான். அவை குர்பானிப் பெருநாள், மற்றும் ஃபித்ரு பெருநாளாகும்" என்றார்கள். 
                   அறிவிப்பவர்: அனஸ்(ரலி; நூல்: அபூதாவூத், நஸாயீ

இந்தப் பெருநாட்களை நாம் கொண்டாடத் துவங்குவதே தொழுகையைக் கொண்டுதான்! பருவமடைந்த ஒவ்வொரு ஆண், பெண்ணும் பெருநாள் தொழுகைத் தொழுவது அவசியமானதாகும்.

பெண்களுக்கும் அவசியமான பெருநாள் தொழுகை

Tuesday, 23 August 2011

குஜராத்தி கஞ்சிரமலான் மாதம் முழுவதும் நோன்புக் கஞ்சியை பல விதங்களில் தயார் பண்ணிப் பார்த்திருப்போம். ஆனால் அத்தனையும் சுவையிலும் சத்துக்களிலும் குறையில்லாதவையாக இருந்தாலும், தமிழ்நாட்டு பாரம்பரிய முறைகளில் மட்டுமே இருந்திருக்கும். இப்போது குஜராத்தி முறையில் செய்யப்படும், அரிசி சேர்க்கப்படாத இந்தக் கஞ்சியையும் செய்து பாருங்கள். செய்வதற்கு மிகவும் சுலபம்தான். அத்துடன் சுவையும் வித்தியாச‌மாகவும், அருமையாகவும் இருக்கும்.

Saturday, 20 August 2011

கடைசிப் பத்தும் 'இஃதிகாஃப்' என்ற வணக்கமும்

ஒருசில நாட்களுக்கு முன்புதான் ரமலான் பிறையைக் கண்டதுபோல் வெகு விரைவாக ரமலானின் 2 பத்துகளும் கடந்துவிட்டன. 20 நாட்களின் நோன்புக‌ளையும் வழக்கம்போல் சிறப்பாகவும், சந்தோஷமானதாகவும், உற்சாகம் மிக்கதாகவும் ஆக்கித்தந்த வல்ல நாயன் அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்! இந்த ரமலானிலேயே அதிமுக்கியத்துவம் வாய்ந்த (மீதியுள்ள 10 நாட்களான) கடைசிப் பத்து நாட்களையும் அதன் மகத்துவமிக்க இரவுகளையும் மேலும் அதிகமதிகமான நல்ல அமல்களோடு சிறப்பித்து, நன்மைகளை வாரிக் கொள்வதற்கு அல்லாஹுதஆலா நம்மனைவருக்கும் உதவி செய்தருள்வானாக!

கடைசிப் பத்து நாட்களின் சிறப்பையும் மகத்துவத்தையும் அறிய "ரப்புல் ஆலமீன் தரும் ரமலான் பரிசு" என்ற இடுகையைப் பார்க்கவும். இப்போது இந்த கடைசிப் பத்தில் செய்யவேண்டிய இன்னொரு சிறப்பு வணக்கமான "இஃதிகாப்" பற்றிப் பார்ப்போம்.


"இஃதிகாஃப்" என்ற பொதுவான அரபி சொல்லுக்கு "தங்குவது" என்று சொல்லப்படும். மார்க்க அடிப்படையில் நாம் சொல்வதானால், அல்லாஹ்வுக்காக சில நாட்களை ஒதுக்கி, பள்ளிவாசலில் சென்று தங்கி, இறைவனிடம் நன்மைகளை எதிர்ப்பார்த்த நிலையில் இயன்றவரை அதிகமாக வணக்கங்கள் புரிவதை "இஃதிகாஃப்" என்கிறோம்.

Wednesday, 10 August 2011

நோன்புக் கஞ்சி
இந்தியாவைப் பொறுத்தவரை வீட்டில் தயாரிக்க தேவையில்லாத அளவுக்கு பள்ளிவாசல்களிலிருந்து வரக்கூடிய நோன்புக் கஞ்சியே போதுமானதாகவும், சில சமயங்களில் அதிகமாகவும் கூட இருக்கும். ஆனால் வெளிநாடுவாழ் இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் இந்திய (தமிழக) நோன்புக் கஞ்சியை வீட்டில்தான் தயார் செய்துக் கொள்ளவேண்டும். அவர்களுக்காக இந்த நோன்புக் கஞ்சி ரெசிபியை பகிர்ந்துக் கொள்கிறேன். நாமே தயார் செய்யும் ஒரு ஸ்பெஷல் உணவு சுவையாக அமையும்போது கூடுதல் சந்தோஷமும் கிடைக்கும் :) அதனால் இந்த செய்முறையை ட்ரை பண்ணிப் பாருங்கள்.

Saturday, 6 August 2011

நோன்பா? வெறும் பட்டினியா? (சுய பரிசோதனை)


அல்லாஹ்வின் மாபெரும் கருணையால் சிறப்புமிக்க ரமளான் மாதத்தை அடைந்து நோன்பு நோற்றிருக்கும் அனைவர் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும், சமாதானமும் என்றும் நிலவட்டுமாக! இந்த ரமளான் மாதம் நம் உள்ளங்களை தூய்மைப் படுத்தக்கூடியதாகவும், சிறு சிறு தவறுகளையும்கூட களைந்து உண்மையான/முழுமையான‌ இஸ்லாமியர்களாக வாழ நம்மை தயார் படுத்தக்கூடியதாகவும் உள்ளது. அது எப்போது..? ரமளானில் நோற்கும் நோன்பின் நோக்கத்தை சரியான முறையில் நாம் நிறைவேற்றும்போது! அப்படியானால் நோன்பின் நோக்கத்தை நாம் எவ்வாறு நிறைவேற்றுவது? முதலில் நோன்பின் நோக்கம் இதுதான் என்று நாம் அறிந்துக் கொண்டால்தான் அதன் நோக்கத்தை நாம் நிறைவேற்ற‌ இயலும்.

Wednesday, 13 July 2011

எங்க ஊரு நல்ல ஊரு!

எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஒவ்வொருவருக்கும் அவங்க அவங்க சொந்த ஊரைப்போல வராது (ஒரு சிலருக்கே தவிர) . அது ஒரு குக்கிராமமே ஆனாலும் தங்கள் ஊரைப் பற்றிக் கேட்டால் சந்தோஷமாக, சுவாரஸ்யமான பல விஷயங்களைச் சொல்வார்கள் என்பதால், ஸாதிகா அக்கா அவர்கள் இந்த தொடர் பதிவைத் தொடங்கி பல ஊர்களைப் பற்றி அறியும் வாய்ப்பை நமக்குத் தந்துள்ளார்கள். இந்த தொடர் பதிவுக்கு என்னையும் அழைத்த அருமை அக்கா ஸாதிகா அவர்களுக்கு என் நன்றிகள்!

'இந்தியா' என்றாலே (எங்கள்) நினைவில் முன்வந்து நிற்கும் கலகலப்பான, அதேசமயம் அமைதியான, அழகிய ஒரு நகரமான நான் பிறந்து, வளர்ந்து, பணிபுரிந்த காரைக்கால் என்ற எங்கள் ஊரைப் பற்றி எழுதுவதில் ஆனந்தமும், பெருமிதமும் கொள்கிறேன் :) :) ஃபிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களான‌ பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனம் ஆகியவற்றில் பாண்டிச்சேரியும் காரைக்காலும் தமிழகத்தின் எல்லையோடும், மாஹே கேரள எல்லையிலும், ஏனம் ஆந்திர எல்லையிலும் அமைந்துள்ளன.

Sunday, 10 July 2011

கோடை விடுமுறைக் கொண்டாட்டம்!


சென்ற வாரம் பள்ளிகளில் குழந்தைகளுக்கு கோடை விடுமுறை ஆரம்பமானது. வருடம் முழுவதிலும் இரண்டு மாதத்துக்கு ஒருமுறை 15 நாட்கள் என இங்கே பள்ளி விடுமுறை விடப்பட்டாலும், இந்த கோடை விடுமுறை என்றால் குழந்தைகளுக்கு அது ஸ்பெஷல் கொண்டாட்டம்தான்!

Saturday, 2 July 2011

நண்டு முருங்கைக்காய் குருமா
தேவையான பொருட்கள்:


நண்டு - 1/2 கிலோ
அரைத்த தேங்காய் ‍- ஒரு பிடியளவு
இஞ்சி பூண்டு - 3 ஸ்பூன்
மிளகாய்த் தூள் ‍- 4 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்
மிளகு ஜீரகத்தூள் - 3 ஸ்பூன்
கறி மசாலாத்தூள் - 2 ஸ்பூன்
மல்லித்தூள் ‍ - 6 ஸ்பூன்
உப்பு - தேவையானது

Thursday, 30 June 2011

'மிஃராஜ்' இரவும் பித்அத்களும்நபி(ஸல்) அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த‌தற்கு பிறகு, அவர்களின் மக்கா வாழ்க்கையில் நடந்த மாபெரும் ஒரு அற்புதமான‌ விண்ணுலகப் பயணம்தான் 'மிஃராஜ்' என்பதாகும். இதைப்பற்றி வரக்கூடிய ஆதாரப்பூர்வமான செய்திகளை விரிவாக அடுத்தடுத்த‌ பதிவுகளில் பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்! அதற்கு முன்பாக, இந்த மிஃராஜ் சம்பவத்தை மையமாக வைத்துக்கொண்டு இஸ்லாமிய மக்களில் சிலர் செய்யும் வணக்கங்கள் 'பித்அத்' என்னும் வழிகேடுகளின் பட்டியலில் உள்ளவைதானா, அல்லது அதற்கு குர்ஆன் - ஹதீஸ்களில் எதுவும் ஆதாரம் உள்ளதா என்பதைப் பார்ப்போம்.

Friday, 17 June 2011

அன்று நீ...!அன்று இவ்வுலகில் உனக்கு இறுதி நாள் !
அதுதான் உன் மரணநாள்

அன்று நீ நினைத்திருக்கமாட்டாய்
உன் முந்திய வேளை உணவு உனக்கு கடைசியென்று!

Thursday, 2 June 2011

சின்ன ப்ரேக்...!இங்கு வருகைத் தரும் உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும், அளவில்லா அருளும் உண்டாகட்டுமாக!

சில காரணங்களால் ஏற்கனவே எந்த இடுகையும் கொடுக்க இயல‌வில்லை. இந்த நிலை இன்னும் சில நாட்களோ அல்லது ஓரிரு வாரங்களோகூட‌ தொடரலாம். எனவே இறைவன் நாடினால், நாம் பயணிக்கும் இந்த பாதையில் மீண்டும் (விரைவில்) சந்திப்போம். அதுவரை இதிலுள்ள மற்ற இடுகைகள் உங்களுக்கு பயனளிக்கலாம்.

Saturday, 21 May 2011

விளையும் பயிர்களே! உங்களுக்காக... (பாடம் 2)

குழந்தைகளுக்கான இஸ்லாமிய பொது அறிவு

அன்புத் தாய்மார்களே! உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக! சென்ற‌ பாடத்தில் நாம் பார்த்த கேள்வி-பதில்களை இதுவரை உங்கள் குழந்தைகளின் கவனத்திற்கு கொண்டுச்சென்று, அவர்களுக்கு சொல்லித் தந்திருப்பீர்கள். அல்ஹம்துலில்லாஹ்! இப்போது இரண்டாவது பாடத்திற்கு செல்வோம்.

Monday, 16 May 2011

தேங்காய்ப்பூ சோமாஸ்

இந்த தேங்காய்ப்பூ சோமாஸ் தஞ்சை மாவட்ட இஸ்லாமிய இல்லங்களில் மிகவும் பிரபலமானது. ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும், மீண்டும் சாப்பிடத் தூண்டும் சுவைக் கொண்டது. (முறையாக பாதுகாத்தால்) 1 வாரம் வரைகூட வைத்து சாப்பிடலாம்.

Saturday, 14 May 2011

மாணவர்களே! சலுகைகளைப் பெறத் தவறாதீர்கள்!


கல்லூரி மாணவர்களுக்கு தமிழக அரசு பல்வேறு வகையான உதவி தொகைகள், இலவசக் கல்வி மற்றும் இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள் போன்றவற்றை வழங்கியுள்ளது. மேலும் பட்டதாரிகள் யாரும் இல்லாத குடும்பத்திலிருந்து வரக்கூடிய‌, தொழிற்கல்வி படிப்புகளில் சேர சீட்டு கிடைக்கும் மாணவர்களின் கல்விக் கட்டணம் முழுவதையும் அரசே ஏற்கும் திட்டமும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாணவ சமுதாயத்தை ஊக்கப்படுத்தும் வகையில் சில வருடங்களாகக் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டங்கள், சரியான அளவில் எல்லா மக்களின் கவனத்திற்கும் இன்னும் சென்றடையவில்லை என்பது வருத்தமான ஒரு உண்மை! எனவே இந்தக் கல்வியாண்டிலாவது நம‌க்கு இயன்றவரை நம் உறவினர்கள், நண்பர்கள், அண்டை வீட்டார்கள் மற்றும் அனைத்து தரப்பு மக்களிடமும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அரசின் சலுகைகளுக்கும் திட்டங்களுக்கும் தகுதியுடைய மாணவர்களை பயனடையச் செய்வோம்.

Monday, 9 May 2011

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை!

சென்ற வருடம் செப்டம்பர் 30ம் தேதி அயோத்தியில் உள்ள பாபர் மசூதி/ராமஜென்ம பூமி நிலப் பிரச்சனையில், நிலத்தை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியை இஸ்லாமியர்களுக்கும் மற்ற இரண்டு பகுதிகளை இந்துக்களுக்கும் வழங்கவேண்டும் என்றும், இதில் ராமர் சிலை வைக்கப்பட்டுள்ள இடத்தில் கோவில் கட்டிக் கொள்ளலாம் என்றும் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ கிளை வழங்கிய அநியாயத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இன்று (திங்கள் கிழமை) காலை விசாரணைக்கு வந்தது.


வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அஃப்தாப் ஆலம் மற்றும் ஆர்.எம். லோதா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முதல் கட்டமாக இந்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது.

Sunday, 8 May 2011

ஸ்டார் (ஒயர்)கூடை பின்னுவது எப்படி? (பாகம் - 3)

முதல் பாகத்தைக் காண இங்கே க்ளிக் பண்ணவும்.
இரண்டாம் பாகத்தை இங்கே காணவும்.
1. இப்போது நடு பாகத்தில் இரட்டை கலரில் வரும் 20 வரிகள் கொண்ட பின்னல்களின் சரி பாதி நடுவிலுள்ள 2 வரிகளின் ஓர சோவிகளை எடுத்து இணைத்து ஒரு சோவி போடவும். அதாவது அந்த 2 வரிகளுக்கு ஒவ்வொரு பக்கமும் தலா 9, 9 வரிகள் இருக்கும்படி விட்டுவிட்டு நடுவிலுள்ள சோவிகள் இரண்டையும் இணைக்கவேண்டும்.(புரியாவிட்டால் மீண்டும் படிக்கவும் அல்லது பின்னூட்டத்தில் கேட்கலாம்)

Saturday, 30 April 2011

விளையும் பயிர்களே! உங்களுக்காக... (பாடம் 1)

குழந்தைகளுக்கான இஸ்லாமிய பொது அறிவு

நம் அன்பான குழந்தைச் செல்வங்களுக்கு உலகக் கல்வியைக் கற்றுத் தருவதோடு, சரியான முறையில் வாழத் தேவையான அடிப்படை மார்க்க அறிவையும் வளரும் பருவத்திலேயே நாம் சொல்லிக் கொடுப்பது அவசியமாகும். நாளைய சமுதாயத்தின் ஆணிவேர், இன்றைய குழந்தைகளே! எனவே குழந்தைகள் தெரிந்திருக்கவேண்டிய, (குர்ஆனிலிருந்தும் நபி(ஸல்)அவர்களின் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலிருந்தும் எடுக்கப்பட்ட) அடிப்படை விஷயங்களைத் தொகுத்து, பகுதி பகுதிகளாக பிரித்துக் கொடுக்கும் சிறிய முயற்சி இது. ஒவ்வொரு நாளும் இவற்றை நம் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுப்பதற்கு ஏதுவாக, ஒவ்வொரு பகுதியும் சிறு சிறு பகுதிகளாக கேள்வி-பதில் வடிவத்தில் கொடுக்கப்படும் இன்ஷா அல்லாஹ்!

Sunday, 24 April 2011

பெண் எழுத்து (தொடர் பதிவு)


முன்னுரை: "பெண் எழுத்து" பற்றிய தொடர் பதிவுக்கு என்னை அழைத்த தோழி ஆயிஷா அபுல் அவர்களுக்கு முதலில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதை எழுதி முடித்து நாமும் சிலரை அழைக்கலாமே என்று பதிவர்களைத் தேடியபோதுதான் தோழி அனிஷா(அன்னு)வும் இந்த தொடர்பதிவுக்கு என்னை அழைக்காமல் அழைத்திருந்தது தெரிந்தது :) அவர்களுக்கும் எனது நன்றிகள்!

Tuesday, 12 April 2011

முகத்திரைக்கு தடைவிதித்த ஃபிரான்ஸ்: தடை கூறும் சட்டமென்ன?


ஃபிரான்ஸில் முகத்திரை அணிவதற்கான தடை நேற்று (11.04.2011) முதல் அமுலுக்கு வந்துள்ளதை செய்திகள் உறுதிபடுத்தியுள்ளன. சென்ற வருடம் 14.09.10 அன்று ஃபிரான்ஸ் செனேட் சபையில் முகத்திரை அணிவதற்கு தடைவிதிக்கும் சட்டம் பெரும்பான்மையுடன் நிறைவேறினாலும், அதை முழுமையாக எங்கும் அமுலில் கொண்டுவர இயலாமல் சிறிய அளவில் எதிர்ப்புகள் இருந்துவந்தன. இந்த நிலையில் அந்த சட்டம் இன்று முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Thursday, 7 April 2011

மீன் பிரியாணி (Fish Biryani)


பிரியாணி பல வகையாக செய்யலாம் என்பது நாம் அறிந்ததே! இதில் மீன் பிரியாணி செய்வது கொஞ்சம் மெனக்கெட்ட வேலை என்பதால், அவசரமில்லாமல் சமைக்கும் நேரங்களில் செய்வதே நல்லது. இதை முறையாக செய்தால் ரொம்ப அருமையாக இருக்கும்! இதில் கொடுக்கப்பட்டுள்ள முறை, என்ன‌ருமை தாயார் பல விருந்துகளில் செய்துக் கொடுத்து பலரையும் அசத்திய செய்முறை. பெரும்பாலான சமையல்கள் என் தாயாரிடமிருந்து கற்றுக்கொண்டதுதான் என்றாலும், சின்ன மாற்றம்கூட செய்து பார்க்காமல் அவர்களிடம் கற்றதை நான் அப்படியே செய்யக்கூடிய பல‌ ரெசிபிகளில் இதுவும் ஒன்று :) நீங்களும் இதுபோல் செய்துப் பார்த்து சொல்லுங்கள்.

Saturday, 2 April 2011

ஸ்டார் (ஒயர்)கூடை பின்னுவது எப்படி? (பாகம் - 2)

முதல் பாகத்தைக் காண இங்கே க்ளிக் பண்ணவும்.

சென்ற பாகத்தில் ஸ்டார் (ஒயர்)கூடை பின்னலின் இரண்டாவது லைன் ஆரம்பிப்பது வரை பார்த்தோம். தொடர்ந்து அந்த வரியைப் பின்னி முடித்த பிறகு எவ்வாறு மூன்றாவது லைனுக்கு செல்வது என்பதிலிருந்து, அடுத்தடுத்து வரக்கூடிய வரிகளை எப்படி பின்னவேண்டும் என்பதை சற்று நிதான‌மாக பார்ப்போம். ஏனெனில் இந்த ஸ்டார் கூடை பின்னலில் முதல் 3 வரிகள் முடியும்வரை ஒவ்வொரு முனை திருப்பும்போதும் வித்தியாசமான இணைப்புகள் வரும். (இந்த பாகத்தில் கூடைக்கு 'அடி போடுவது' நிறைவடையும்.)


இரண்டாவது லைனைப் பின்னி முடித்த பிறகு அதே சுற்று ஒயரைக் கொண்டு , (வளைத்து) முதல் லைனின் ஒயரோடு இணைத்து சோவி போடவும்.

Sunday, 27 March 2011

பயனுள்ள பல‌ தகவல்கள்


1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள் அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.


2) குறிப்பிட்ட இரத்த வகையைத் தேடி அலைந்து கஷ்டப்படுபவர்கள் 
http://www.bharatbloodbank.com/ இந்த இணையத்தில் தேடினால் ஆயிரமாயிரம் இரத்த தானம் அளிப்பவர்களின் முகவரிகள் நமக்குக் கிட்டும்.

Friday, 25 March 2011

மஞ்சள் காமாலைக்கு பத்தியமில்லா மருந்து!

கோடை காலம் துவங்கிவிட்ட நிலையில் குளிர்காலத்தில் மக்கள் அனுபவித்த நோய்கள் குறைந்து, வழக்கம்போல் வேறுபல நோய்கள் உண்டாகும். நீர்க்கடுப்பு/எரிச்சல், அம்மை, மஞ்சள் காமாலை, வயிற்றுப் போக்கு என்று குறிப்பிட்ட சில நோய்கள் வருடாவருடம் வந்து மக்களை வாட்டி எடுக்கும். இதில் மஞ்சள் காமாலை என்பது உடலில் ஏற்படும் நோய்க்கான அறிகுறி என்றும் அதுவே ஒரு நோய் அல்ல என்றும் இயற்கை முறை மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த மஞ்சள் காமாலையை ஆரம்ப‌ நிலையிலேயே கண்டுபிடித்து தகுந்த‌ சிகிச்சை எடுத்தால் சுலபமாக குணப்படுத்திவிடலாம். அதற்கு இயற்கை முறையில் வீட்டிலேயே செய்துக்கொள்ளும் வைத்தியம் உள்ளது.  இதுபோல் ஆரம்ப நிலையில் சாப்பிட்டு பலரும் பலன் அடைந்துள்ளதால், எல்லோருக்கும் பயன்பட‌ அந்த வைத்திய முறையை இங்கு பகிர்ந்துக் கொள்கிறேன்.

மஞ்சள் காமலையின் அறிகுறிகள்:

மஞ்சள் காமாலை ஏற்பட்ட‌வருக்கு ஆரம்பத்தில் பசியின்மை, குமட்டல், வாந்தி, உடல் சோர்வு, வயிறு உப்புசம் ஆகியவை இருக்கும். அதுபோன்று இருக்கும்போது அது சாதாரண செரிமான கோளாறுதான் என்று அலட்சியப்படுத்தினால்

Wednesday, 16 March 2011

இயற்கைச் சீற்றங்கள் சொல்லும் செய்தி!

உலகின் தொழில் நுட்பங்களில் முன்னேறிவரும் நாடுகளில் முக்கியமான நாடு ஜப்பான். சுமார் 20, 25 ஆண்டுகளுக்கு முன்பே ஒரு முழ நீள‌முள்ள குட்டி விமானத்தை ரிமோட் மூலம் பறக்கச் செய்து லாவகமாக தரையிறங்கும் விளையாட்டுப் பொருளை, தானே கண்டுபிடித்து விளையாடிப் பார்த்து நம்மை வியப்பில் ஆழ்த்திய சின்னஞ்சிறு சிறுவர்கள் ஜப்பான் மண்ணின் மைந்தர்களே! எந்தவொரு வெளிநாட்டுப் பொருட்களும், குறிப்பாக எலக்ட்ரானிக் பொருட்கள் நமக்கு அறிமுகம் ஆனபோது, அது "Made in Japan" என்றால் அதற்குதான் முதலிடம். அந்தளவுக்கு தரமும், நுட்பமும் நிறைந்த உற்பத்திகளுக்கு சொந்தக்காரர்கள் ஜப்பானியர்கள். உயரத்தால் குறைந்தவர்கள் என்றாலும் இறைவன் அவர்களுக்கு கொடுத்திருக்கும் அறிவினால் நிறைந்தவர்கள்! அவர்களின் நாடெங்கிலும் அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்களிலும், சாலை அமைப்புகளிலும் மின்னும் தொழில் நுட்பங்கள்,  நாளுக்கு நாள் வளர்ந்து வரும் அவர்களின் நவீன கண்டுபிடிப்புகளுக்கு சாட்சி சொல்லும்!Monday, 7 March 2011

ஸ்டார் (ஒயர்)கூடை பின்னுவது எப்படி? (பாகம் - 1)

க்ராஃப்ட் வேலைகள் செய்வதற்கு எப்போதுமே கொஞ்சம் பொறுமை வேண்டும். அதிலும் ஒயர்களில் பின்னி ஒரு பொருளை செய்து முடிப்பதற்கு பொறுமை இன்னும் அதிகமாகவே தேவைப்படும் :) அதனால் இந்த ஒயர் கூடையைக் கற்றுக்கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் பொறுமையோடு பார்த்து கற்றுக் கொள்ளுங்கள். பெண்களுக்கு இது ஒரு நல்ல கைத்தொழிலாகக் கூட உதவும்.

ஒயரில் பின்னும் கூடைகளில் வகை வகையான மாடல்கள் உண்டு. இப்போது நாம் பார்க்கப் போவது ஸ்டார் மாடல் கூடை. பொதுவாகவே இந்த ஒயர் பின்னல்களின் அடிப்படையான செய்முறைகள் பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என்றாலும், அறவே பின்னத் தெரியாதவர்களும் அடிப்படையிலிருந்து தெரிந்துக் கொள்ளும் ஒரு அரிச்சுவடியாக இந்த முதல் பாகத்தை கொடுத்துள்ளேன். சந்தேகம் இருந்தால் கண்டிப்பாக கேளுங்கள்.

தேவையான பொருட்கள்:Monday, 28 February 2011

கொழுப்பைக் கரைக்கும் பசலைக் கீரை!பசலைக் கீரையில் பச்சைப் பசலை, சிகப்புத் தண்டு பசலை, கத்திப் பசலை என பல வகைகள் உள்ளன. அவை அனைத்தும் சத்துக்களில் குறையில்லாதவை. பசலைக் கீரைக்கு சமமான‌ அளவுக்கு உடலுக்கு நன்மை தரும் காய்கறி வேறெதுவும் இல்லை என சொல்லலாம். அந்தளவுக்கு இரும்புச் சத்து, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம், கால்சியம் எல்லாமே இதில் அதிகம். இதிலுள்ள‌ ஃபோலாசின் நோய்த் தடுப்புக்கு முக்கியம் என்பதால் இதயநோய் வராமல் தடுக்க உதவுகிறது. ஆனால் இதயநோய் வந்தவர்கள் இந்தக் கீரையை அளவுக்கு மீறி சாப்பிடக் கூடாது.

Tuesday, 22 February 2011

கேரட் அல்வாமிகவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த கேரட் அல்வா சுவையும் சத்தும் நிறைந்தது. குழந்தைகளுக்கு அடிக்கடி செய்துக் கொடுக்கலாம். விருந்துகளில் பிரியாணி, நெய் சோறு வைக்கும்போது (பச்சடி போன்று) பக்க உணவாகவும் இதை வைப்பார்கள்.

Sunday, 20 February 2011

ஃபாஸ்ட் ஃபுட் உணவினால் குழந்தைகளை நோய் தாக்கும் அபாயம்!

அவரசகால இவ்வுலகில் எதிலும் உடனடியாக தீர்வு வேண்டும் என்பதால் மக்களும் அவசர பழக்க வழக்கங்களை பெரும்பாலும் பின்பற்றி வருகின்றனர். அவற்றில் ஒன்றான இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவுமுறை குழந்தைகளையும் கூட ஆபத்தான நோய்களின் தாக்கத்திற்கு ஆளாக்குகிறது. இந்த‌ உணவு வகைகளை இன்றைய இளம் தலைமுறையினர் பெரிதும் விரும்பி உண்ணுகின்றனர். நவீன வரவான இந்த ஃபாஸ்ட் ஃபுட் உணவு பழக்க வழக்கத்தால் உடல்நலன் மிக விரைவில் பாதிக்கப்பட்டுவிடுகிறது.

இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இளம் தலைமுறையினர் தொடர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் உணவு வகைகளை சாப்பிட்டு வருவதால் சுமார் 50 வயது வரும்போது கேன்சர் உள்ளிட்ட ஆபத்தான‌ நோய்களால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கின்றனர். மேலும் குழந்தைகளுக்கும் இரண்டாம்தர ரீதியிலான நீரிழிவு நோய் ஏற்படலாம் என்றும் பெண்களுக்கு எலும்புருக்கி நோய், இரத்த சோகை ஏற்படலாம் என்றும் மருத்துவக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பிரிட்டனில் நடந்த சர்வேயில் ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தால் அங்கு பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 75% வரை அதிகரித்துள்ளதாக‌ குறிப்பிடப்பட்டுள்ள‌து. 

Thursday, 17 February 2011

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பும் அவச‌ர‌ கோரிக்கையும்!

அரசாங்கத்திற்கு அவசரத் தந்தியனுப்பி சமூக நலனுக்காக‌ உதவுங்க‌ள்!

இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி சென்ற மாதம் முதல் தொடங்கப்பட்டது. 120 கோடிக்கு மேற்பட்ட மக்களை தனித்தனியாக கணக்கெடுத்து, அவர்களுக்கு அடையாள அட்டையும் வழங்குவது உலகிலேயே இதுதான் முதல் முறை. எந்தவொரு கிராமமும் விட்டுப்போகாத அளவுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கணக்கெடுப்புடன், முதல் முறையாக தேசிய மக்கள் தொகை பதிவேடும் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய திட்டமாக இது வகுக்கப்பட்டு மிக நுட்பமாக நிறைவேற்றப்படுகிறது.குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் பதிவு செய்வதன் மூலம் இப்பணி தொடங்கப்பட்டது.

'மீலாதுந்நபி' எனும் மீலாது விழா: வழிபாடா? வழிகேடா?

இஸ்லாமிய மாதங்களில் மூன்றாவது மாதம் 'ரபீஉல் அவ்வல்' மாதம். இந்த மாதத்தில் இஸ்லாமியர்களில் சிலர் அத‌ற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து 'மீலாது விழா' என்ற பெயரில் நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளை ஒரு விழாவாக‌க் கொண்டாடி வருகின்றனர். நேற்று (16/02/11) உட்பட பல இடங்களில் இது கொண்டாடப்பட்டுள்ள‌து.

Tuesday, 8 February 2011

ஹேர்பின் பூ செய்வது எப்படி?

ஹேர்பின் பூக்கள் பல டிசைன்களில் செய்யலாம். இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் டிசைன், சைனீஸ் மாடல் ஹேர்பின் பூக்களில் ஒன்றாகும். 

சென்னை போராட்டக் காட்சிகள் (முழு வீடியோ)அலகாபாத் உயர் (அ)நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து ஜனவரி 27 ந்தேதி நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் வீடியோக் காட்சிகள்:

Monday, 7 February 2011

மீனவர்களின் உயிர்காக்க இணைவோம் இணையத்தில்!

தமிழக மீனவர்களின் உயிர்காக்க இணையத்தில் நடக்கும் போராட்டத்தில் சிறு பங்களிக்கவே இந்த இடுகை! ஏற்கனவே நிறைய சகோதர சகோதரிகள் இதில் பங்கெடுத்துக் கொண்டாலும் இதுவரை வாய்ப்பில்லாத‌ ஒவ்வொருவரும் இதில் கண்டிப்பாக‌ கலந்துக் கொள்ளவேண்டும்.

நம் இந்திய திருநாட்டில் சில காலங்களாகவே திட்டமிட்டு செயல்படுத்தப்படும் இனக் கலவரங்கள், குண்டு வெடிப்புகள், வன்முறை வெறியாட்டங்கள் போன்றவற்றால் அப்பாவி பொது மக்களின் விலைமதிக்க முடியாத உயிர்கள் பறிக்கப்படுகின்றன. அந்த பட்டியலில் இப்போது ஒன்றுமறியா மீனவர்களின் உயிர்களும் துச்சமாக மதிக்கப்பட்டு இலங்கை இராணுவத்தின் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கப்படுகின்றன. இவற்றிற்கு பதில் சொல்லவேண்டிய முழு பொறுப்பும் இந்திய அரசாங்கத்திற்கு உள்ளது.

Wednesday, 2 February 2011

அவித்த முட்டை செய்வது எப்படி?! (எச்சரிக்கை!)

தேவையான பொருட்கள்:

முட்டை - 1
அலைபேசிகள் - 2

செய்முறை:

முதலில் இரண்டு அலைபேசிகளுக்கிடையே 65 நிமிடம் தொடர்பு ஏற்படுத்தவேண்டும். பிறகு...  


தொடர்ந்து வரும் செய்தியைப் பார்க்கவும்.

கீழே உள்ள படத்தில் காட்டியது போல இரண்டு அலைபேசிகளுக்கு டையே ஒரு இணைப்பு உருவாக்கப்பட்டது.


Friday, 28 January 2011

சுறும்பு மீன் பத்திய ஆனம்புளி சேர்க்காத பத்தியத்தில் உள்ளவர்கள் மற்றும் குழந்தைப் பெற்றவர்களுக்கு 'பத்திய மீன் ஆனம்' ஆக்குவதற்கு என்றே நம்மூரில் சில மீன்களைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படிப்பட்ட மீன்க‌ள் சாப்பிடும்போது பாலூட்டும் தாய்மார்களுக்கும் பிறந்த குழந்தைக்கும் (சிலவேளை மீன் சாப்பிடுவதால் ஏற்படும்) வாயுக் கோளாறுகள், மாந்தம், வயிற்றுப் பிரச்சனைகள் என்று எந்தவித பிரச்சனையும் வராது. அதுபோன்ற மீன்களில் ஒன்றுதான் இந்த‌ சுறும்பு மீன். பாரம்பரிய முறையில் செய்யப்படும் இந்த 'பத்திய ஆனம்' குழந்தைப் பெற்றவர்களுக்கு நன்கு பால் சுரக்கவும் உதவுகிறது. சத்துக்கள் நிறைந்தது! எனவே திட உணவு சாப்பிட ஆரம்பித்த குழந்தைகள் முதல் அனைவரும் சாப்பிடலாம்.

Thursday, 27 January 2011

சென்னையை ஸ்தம்பிக்க வைத்த ஆர்ப்பாட்டம்!

'பாபர் மஸ்ஜித்' இடிக்கப்பட்டது சம்பந்தமாக அலகாபாத் உயர்நீதி மன்றம் அளித்த சட்ட விரோத தீர்ப்பை எதிர்த்தும், முஸ்லிம்களுக்கு முழு சொந்தமான அவர்களின் பள்ளியை அவர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் இன்று காலை 11 மணிக்கு சென்னையில், 'சென்ட்ரல் மெமோரியல் ஹால்' அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) தலைமையில் ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் சென்னை மாநகரை ஸ்தம்பிக்க வைத்தது! எல்லாப் புகழும் இறைவனுக்கே!


மதுரை ஆர்ப்பாட்டம்

Tuesday, 25 January 2011

தமிழகம் தழுவிய மாபெரும் பேரணி & ஆர்ப்பாட்டம்!'பாபர் மஸ்ஜித்' இடிக்கப்பட்டது முதல் அதை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் பாபர் மஸ்ஜிதை இடித்த பாவிகளை சட்டத்தின்படி தண்டிக்க வலியுறுத்தியும் TNTJ உள்பட பல்வேறு இயக்கங்கள் டிசம்பர் ஆறாம் நாளில் போராட்டங்களை விடாமல் நடத்தி வந்தனர். நீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்கக் கோரி நடத்திய அனைத்து போராட்டங்களையும் அலகாபாத் உயர் நீதிமன்றம் அர்த்தமற்றதாக்கிவிட்டது. சொத்துரிமைக்கும், மத உரிமைக்கும் விரோதமாக அமைந்த தீர்ப்பு உலக மக்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியது. பாபர் மஸ்ஜிதை இடித்த குற்றமும் நியாயப் படுத்தப்பட்டு விட்டது.

Friday, 21 January 2011

பெட்ரோல் விலையுயர்வு குறித்த சிறப்பு ஆய்வுக் கட்டுரை!


இலவசப் பொருட்கள் வழங்குவதில் கவனம் செலுத்தும் தமிழக அரசு பெட்ரோல்/டீசல் விலை உயர்வில் கவனம் செலுத்தாமல் இருப்பதே, எல்லா விலைவாசி உயர்வுக்கும் மிக முக்கிய காரணமாகும்! இதற்கு மத்திய அரசுக்கு மட்டுமில்லாமல் மாநில அரசுக்கும் மிகப் பெரிய பொறுப்புள்ளது. இதைப் பற்றிய ஒரு ஆய்வுக் கட்டுரைதான் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வுக் கட்டுரை TNTJ  இணைய தளத்தில் மக்களின் விழிப்புணர்வுக்காக 'அபூ நபீலா' அவர்களால் ஆய்வு செய்து எழுதப்பட்ட அருமையான ஒரு கட்டுரையாகும்! உங்கள் பார்வைக்காக இங்கே பகிர்ந்துக் கொள்கிறேன்.


பொதுமக்களை ஏமாற்றி பணத்தை கொள்ளையடிக்கும் மத்திய மாநில அரசுகள்! 
மோட்டார் வாகனம் பயன்படுத்துவோர் மட்டுமல்லாது இன்றைக்கு நாட்டில் உள்ள அடித்தட்டு மக்கள் முதல் மேல் தட்டு மக்கள் வரை அனைவரும் பணத்தை பறிகொடுத்தவர்கள் போன்று புலம்புவது "டப்பாவிங்களா! கேக்குரதுக்கு ஆள் இல்லன்னு பெட்ரோல் விலைய இஷ்டம் போல அளவே இல்லாம இப்படி கூட்டிக்கிட்டே போரானுங்களே" என்று தான். இதில் நாமும் விதிவிலக்கல்ல..

Thursday, 13 January 2011

பேரீத்தம்பழப் பச்சடி


இந்த பேரீத்தம்பழப் பச்சடி கீழத் தஞ்சை பகுதிகளின் ஊர்களில், குறிப்பாக நாகூர், நாகப்பட்டிணம், காரைக்கால், மயிலாடுதுறை போன்ற ஊர்களின் இஸ்லாமிய இல்லத் திருமணங்களில் பிரியாணி மற்றும் நெய்ச் சோறுடன் பக்க உணவாக வைப்பார்கள். ஊறுகாய்க்கு பதிலாக பயன்படுத்தப்படும் இந்த ப‌ச்சடிக்கு செல்லப் பெயர் 'தள்ளு வண்டி' :) சாப்பாட்டை உள்ளே தள்ளிக் கொண்டு போகும் என்பதால் அந்தப் பெயர்! :) வினிகருக்கு 'சுக்கா' என்ற பெயரும் உள்ளதால் வினிகர் சேர்த்து செய்யப்படும் இதற்கு 'சுக்கா பச்சடி' என்றும் சொல்வார்கள். அலாதியான சுவைக் கொண்ட இந்த பச்சடி சத்தானதும் கூட!

அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!